அவர் ஒரு நல்லாசிரியர்!

நாம் காலம் முழுக்க கற்றுக்கொள்ளலாம் என்றாலும் ஒரு மனிதரை செதுக்குவது அவரின் குழந்தை பருவம் முதல் பதின்பருவம் வரையான காலகட்டமே. இந்தக் காலக்கட்டத்தில் என் அம்மாவின் அரசுப் பணி காரணமாக எங்களுடைய குடும்பம் வெவ்வேறு ஊர்களில் வசிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஒவ்வொரு ஊரின் பழக்கமும் கலாச்சாரச் சூழலும் படித்த பள்ளிகளும் ஏராளமான விசயங்களைக் கற்றுக்கொடுத்தன. துரதிருஷ்டவசமாக ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் என்னை ஊக்கப்படுத்தினார் என சொல்வதற்கு வாய்ப்பே அமையவில்லை.

நம்மை கண்டுபிடித்து நம்மை ஏற்றிவிடும் ஆசிரியர்கள் பள்ளி கல்லூரி காலத்தில் கிடைக்கவில்லை என்றபோது, பதின்பருவத்தின் இறுதியில் என் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் ஆசிரியரை சந்தித்தேன். அவர் பத்திரிகையாளர் லோகநாயகி.

ஆசிரியர் தன்னளவில் ஓர் உதாரண மனிதராக இருக்க வேண்டும் என பெரியோர் கூறுவதுண்டு. என்னுடைய ஆசிரியர் தன்னளவில் ஓர் உதாரண மனுசி. இன்றளவும்கூட பெண்களுக்குத் திருமணம் ஆகிவிட்டால் பணிக்குச் செல்வது சிக்கலான விசயமாக உள்ளது. திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின், பத்திரிகையில் பணியாற்ற வேண்டும் என பெரும் விருப்பம் கொண்டு, (விருப்பம் என்பதைவிட லட்சியம் என்றுதான் சொல்ல வேண்டும்) குடும்பத்தோடு சென்னைக்கு வந்தவர்.

இரண்டு குழந்தைகள் உள்ள பெண்ணுக்கு லட்சியம், விருப்பம், ஆசை, கனவெல்லாம் இந்திய சமூகத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அப்படி விடாப்பிடியாக உங்கள் லட்சியத்தில் நீங்கள் உறுதியோடு இருந்தால், அதற்கான ‘விலை’யை நீங்கள் கொடுத்தே அக வேண்டும். குடும்பம் முதல் சமூகம் வரை உங்களுக்கு தடையாக உள்ளவற்றை எதிர்க்கொண்டாக வேண்டும். இதையெல்லாம் அவர் எதிர்கொண்டிருக்கிறார். சாவி’ பத்திரிகையில் ஆரம்பக் கட்டத்தில் பணியாற்றி, பின் ஆனந்த விகடன் இதழில் தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு, குமுதம் நிறுவனம் ‘சிநேகிதி’ என்ற பெண்கள் இதழைத் தொடங்கியபோது அதன் ஆசிரியராக பொறுப்பேற்றார்.

படிப்பதற்கு எளிதானதாக இருக்கலாம், ஆனால் என்னுடைய ஆசிரியர் கடந்துவந்த பாதையை, முப்பதுகளில் இருக்கும் ஒரு குழந்தையின் தாயாக உள்ள என்னாலும் அதே சூழலில் உள்ளவர்களாலும் மட்டுமே அது எத்தகைய போராட்டம் மிக்க பயணமாக இருந்திருக்கும் என புரிந்துகொள்ள முடியும்.

நான் ஏன் அவரை எனது ஆசிரியர் என்கிறேன்? பெரும்பாலும் தான் கடந்து வந்த பாதையை மறந்து தனது வளர்ச்சியில் மட்டுமே வெற்றி பெற்றவர்கள் கவனம் செலுத்துவார்கள். எனது ஆசிரியர் உண்மையாக கற்றுக்கொள்ள ஆர்வமுடன் வருகிறவர்களை ஏற்றிவிடக்கூடியவர்.

என்னையும் அப்படித்தான் ஏற்றிவிட்டார். கல்லூரி படிப்பு முடித்து தேர்வு எழுதிய கையோடு ஊருக்குச் செல்லாமல் வேலைத் தேடிக்கொண்டிருந்தேன். நான் படித்தது காட்சி தகவல் தொடர்பியல். சில தொலைக்காட்சிகளில்கூட அப்போது பணிக்கு முயற்சித்தேன். பத்திரிகைகளிலும் முயற்சித்துக்கொண்டிருந்தேன். நண்பர் ஒருவர் மூலமாக குமுதம் சிநேகிதியில் பணி இருப்பதாக அறிந்தேன்.

விண்ணப்பித்து அவர்கள் அழைக்கும் வரை காத்திருக்கும் பொறுமையான சூழலில் நான் இல்லை. உடனடியாக வேலை கிடைக்கவில்லை என்றாலும் கையிலிருக்கும் கொஞ்ச பணமும் போய்விடும். ஊருக்குத் திரும்பிச் செல்வதன்றி வேறு வழியில்லாத சூழல் ஏற்படும். எனவே, உடனடியாக பத்திரிகை அலுவலகத்துக்கு தொலைபேசி செய்தேன்.

ஆசிரியருடன் இணைப்பைக் கொடுத்தார்கள். ஆசிரியரிடம்தான் பேசுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. எடுத்த எடுப்பிலேயே ‘எனக்கு வேலை வேண்டும்’ என்று கேட்டேன். உடனடியாக ஒரு கட்டுரையை எழுதிக்கொண்டு சந்திக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. எழுதிக்கொண்டு போனேன்; எழுத்தையும் எனது உத்வேகத்தையும் பார்த்து உடனடியாக சில பணிகளைக் கொடுத்தார். அதில் தேர்ச்சி பெற்றதால் அடுத்த ஒரு வாரத்தில் எனக்கு பணியும் கிடைத்தது.

வாழ்க்கையில் என்னவாகப்போகிறோம் என்கிற கேள்வி இருந்த காலக்கட்டத்தில் பத்திரிகையில் எழுதுவதான உன்னுடைய பணி என கைக்காட்டிய திருப்புமுனை சம்பவமாக அது அமைந்தது. போலவே, என்னுடைய எளிமையாக எழுதுவதையும் ஒரு இதழை எப்படி நடத்துவது என்பதற்கான நுட்பங்களை அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தார்.

இதைத்தான் கற்றுக்கொடுக்க வேண்டும், இது கூடாது என ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. தன் பிள்ளைக்கு அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத்தந்துவிட வேண்டும் என விரும்புகிற தாயின் அன்பு அதில் இருந்தது.

தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும்கூட அவரிடமிருந்து கற்றுக்கொண்டது ஏராளம். உண்மையாக இருப்பது, நேர்மையாக நடப்பது, சுய ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் தருவது எனபனவற்றையும் அவரிடமிருந்தே கற்றுக்கொண்டேன்.

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் இருக்கிறேன். கற்பிப்பதை அர்ப்பணிப்போடு செய்யும் அவரைப் போன்ற ஒரு ஆசிரியரை நான் மீண்டும் சந்திக்கவே இல்லை. எங்கோ ஒரு பின் தங்கிய மாவட்டத்திலிருந்து பணிக்கு வருகிற பெண்களை கற்றுக்கொடுத்து கைத் தூக்கி விடுகிற எண்ணம் ஒரு சிலருக்குத்தான் அவர். அது என் ஆசிரியரி லோகநாயகி அவர்களுக்கு இருந்தது!

இத்தனைக்கு நானோ அவரோ ஒரே சாதியை சேர்ந்தவர்களோ, ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களோகூட அல்ல. சித்தாந்த அடிப்படையிலும்கூட வேறுபட்டவர்களே. அவர் கண்ணன் மீது அளவுகடந்த பக்தி கொண்டர். இந்துமத கட்டுப்பாடுகள், சடங்குகள் மீது நம்பிக்கை கொண்டவர். நான் அப்படியே நேரெதிர். நாத்திகம் பேசக்கூடியவள். ஆனாலும், ஒருபோதும் என் மீது தனது கருத்துக்களை அவர் திணித்ததில்லை. மேலதிகாரி, ஆசிரியர் என்பதைக் கடந்து அம்மா-மகள் உறவைப் போலத்தான் இருந்தது.

ஒரு கட்டத்தில் அலுவல் ரீதியாக முரண்பட்டு, அவரிடம் சொல்லாமல் பணியை விட்டு நின்றுவிட்டேன். அது ஒரு நெருக்கடியான காலக்கட்டம். அவர் என்னிடம் பேச முயற்சித்தபோதும் நான் பேசவில்லை. அந்தக் கோபம் ஓரிரு மாதங்கள்தான் நீடித்தது என்றபோதும், இதுவரை அவரை தொடர்பு கொண்டு பேசவில்லை. என்னை அவ்வவ்போது அழுத்துகிற விசயமாக இது இருந்து வருகிறது. இந்த தருணத்தில் எனக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியரிடம் பேசாமல் நிராகரித்ததற்காக மன்னிப்புக் கேட்கிறேன்.

கற்றுத்தருவது மட்டுமல்ல, மன்னிப்பும்கூட ஒரு நல்லாசிரியரின் ஆகச்சிறந்த குணம்தான். என்னுடைய ஆசிரியர் ஒரு நல்லாசிரியர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை!

ஜோதிராவ் புலே: அதிகார மையங்களால் மறக்கப்பட்ட வணக்கத்துக்குரிய ஆசிரியர்!

ஏப்ரல் 11, 1827ஆம் ஆண்டு காய்கறி விற்பரின் மகனாகப் பிறந்த ஜோதிராவ் புலே, இந்தியர்களால் மறக்கப்பட்ட, வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட முன்னோடி ஆசிரியர். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிற்படுத்தப்பட்ட மாலி சமூகத்தில் பிறந்த ஜோதிராவ், ஆரம்பக் கல்விப் படிப்பை முடித்ததும் அப்பாவுக்குத் துணையாக விவசாயம் செய்ய வேண்டியிருந்தது. ஜோதிராவுக்கு பயில்வதில் இருந்த ஆர்வத்தைப் பார்த்த இஸ்லாமிய, கிறித்துவ அண்டை வீட்டார் அவருடைய தந்தையிடம் மேற்கொண்டு படிக்க வைக்க பரிந்துரைத்தனர். புனித ஸ்காட்டிஸ் பள்ளியில் உயர்நிலை பள்ளிப் படிப்பை படித்து முடித்த ஜோதிராவுக்கு அரசாங்க வேலை கிடைத்தது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. பொருளாதார நிலையில் பின்தங்கி இருந்த அவருடைய குடும்பத்துக்கு உதவும் வகையில் ஏன் அவர் பணியை ஏற்கவில்லை?

தன்னுடன் படித்த பல பார்ப்பனர்கள் ஜோதிராவுக்கு நல்ல நண்பர்களாக இருந்தனர். அப்படியான ஒரு நண்பரின் குடும்ப திருமண நிகழ்வு ஒன்றுக்கு ஜோதிராவ் அழைக்கப்பட்டிருந்தார். அங்கு சாதியைக் காரணம் காட்டி, ஜோதிராவ் அவமானப்படுத்தப்பட்டார், கண்ணீருடன் அங்கிருந்து வெளியேறினார். இந்த சம்பவமே ஜோதிராவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தன்னுடைய மிகப்பெரிய பணி சமூகத்தின் சாதி படிநிலைகளை அகற்றுவது என முடிவு செய்தார். கல்வி ஒன்றே சாதி படிநிலைகளை அகற்றும் என்ற முடிவுக்கு வந்தார். சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி அளிப்பதன் மூலம் அதைச் செய்ய முடியும் என நம்பினார். அதன் முதற்படியாக தன் மனைவி சாவித்ரி பாய்க்கு கல்வி அளிக்க ஆரம்பித்தார்.

பெண்களுக்கென முதல் பள்ளி!

பெண்களுக்கென முதல் பள்ளியை தொடங்கினார் ஜோதிராவ் புலே. இது நடந்தது 1848ஆம் ஆண்டில். தாழ்த்தப்பட்ட பெண்கள் படித்த பள்ளி மாணவிகளுக்கு கல்வியைத் தர எவரும் முன்வராத காரணத்தினால், தன் மனைவி சாவித்ரியிடம் அவர்களுக்குக் கல்வியை போதிக்கும்படி சொன்னார். தன் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் சாவித்ரி மீது உயர்சாதியினர் கற்களை வீசினர். பள்ளியை இழுத்து மூட ஜோதிராவுக்குச் சொல்லும்படி அவருடைய தந்தையை அவர்கள் நிர்ப்பந்தித்தனர். இதனால் ஜோதிராவும் சாவித்ரியும் தந்தையின் வீட்டிலிருந்து செல்ல வேண்டியிருந்தும் அவர்கள் தங்கள் பணியிலிருந்து பின்வாங்கவில்லை. போதிய நிதி இன்மையால் சிறிது காலம் இந்தப் பள்ளி செயல்படவில்லை. நிதி திரட்டி மீண்டும் செயல்படுத்தினார், பெண்களுக்கென மேலும் இரண்டு பள்ளிகளைத் திறந்தார். தாழ்த்தப்பட்ட மஹர், மங் சமூகத்தினருக்கென்றும் பள்ளிகளைத் திறந்தார்.

வரலாறு அதிகார மையங்களால் எழுதப்படுகிறது

கல்வியும் அதிகாரமும் பார்ப்பனர்களுக்கே என்கிற நிலை இருந்த காலக்கட்டத்தில் கல்வியின் மூலம் சமத்துவத்தை நிலைநாட்டும் முயற்சியைத் தொடங்கி வைத்த ஜோதிராவ் புலே குறித்து எத்தனை இந்தியர்களுக்குத் தெரியும்? கல்வியோடு நின்றுவிடாமல் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தும் விதவைகள் திருமணத்தை ஆதரித்தும் தொடர்ந்து களப்பணிச் செய்த சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தவர் ஜோதிராவ். அவர் இந்திய வரலாற்றில் நினைக்கப்படாமல் போனது எதனால்? அவர் மனிதர்களுக்கிடையேயான சமத்துவத்தை மறுத்த இந்து மரபை எதிர்த்தார் என்பதே காரணம். சுதந்திரப் போராட்டம் தொடங்கிய காலத்தில் இந்து ஞான மரபை முன்னிறுத்தி போலி சமத்துவத்தையும் போலியான சீர்திருத்தத்தையும் பரிந்துரைத்த பிரம்ம ஞான சபை போன்றவற்றை அவர் கடுமையாக விமர்சித்தார். பார்ப்பனர்களை வேடதாரிகள் என்றார். பார்ப்பன விதவைப் பெண்கள், பார்ப்பன பணக்காரர்களால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாவதைக் கடுமையாக எதிர்த்தார். பார்ப்பன விதவைகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். எனவே பின்னாளில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய பார்ப்பனர்களாலும் சுதந்திரத்திற்குப் பிறகு உயர் பதவிகளை அலங்கரித்த உயர்சாதி இந்துக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவராக மஹாத்மா புலே ஆனார்.

வரலாறு எப்போதுமே அதிகார மையங்களாலே எழுதப்படுகிறது. இந்துப் பெண்கள் சதி என்கிற பெயரின் உடன்கட்டை ஏறுவதை தடுத்த அவுரங்கசீப், வரலாற்றுப் பாடங்களில் மிக மோசமான மொகலாய மன்னனாக குறிப்பிடப்படுகிறார். அவருடைய பெயர் தாங்கிய சாலைக்கு, இந்து சனாதன கருத்துகோளில் செயல்பட்ட அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படுகிறது. பன்முகப்பட்ட இந்திய சமூகம், இந்து சமூகமாக கட்டமைக்கும் பணியைக் காலம்தோறும் அதிகார மையம் செய்துகொண்டே இருக்கிறது. சாமானியர்களின் நாயகர்கள் இப்படித்தான் மறக்கடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.

நவம்பர் 28 மகாத்மா புலேவின் நினைவுநாள் 

ராதாகிருஷ்ணன் நினைவாகத்தான் ஆசிரியர் தினம் கொண்டாட வேண்டுமா?

முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நல்ல ஆசிரியர் என்பதற்கான இலக்கணம் குறித்தும் அவர் மாணவர் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அவரவர் பாணியில் கருத்துக்களை அள்ளித் தெளிக்கிறார்கள். முகப்புத்தகம் நிரம்பி வழிகிறது, தொலைக்காட்சிகள் பிரைம் டைம் விவாதங்களை நேற்றே முடித்துவிட்டன. வானொலிகள் வாய் வலிக்க இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன. எந்த ஊடகமும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் சமுதாயத்துக்கும் மாணவர் சமுதாயத்தும் என்ன செய்தார் என்று எப்போதுமே சொல்வதில்லை.

ராதாகிருஷ்ணன் யார்? ஆசிரியர் தினம் கொண்டாடும் பெருமை வாய்ந்த ஒருவர் இருக்கிறார். அவர் எப்படி இந்திய வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டார் என்று என்னுடைய அறிதலை எழுதியிருக்கிறேன். அவரை ஏன் மறந்தோம் என்கிற குற்றவுணர்வு எனக்கு உண்டு. உங்களுக்கும் ஏற்படும்.

சாவித்ரிபாய் புலெ – இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண்ணிய போராளி!

மேட்டுக்குடியில் பிறந்த சீமாட்டிகளின் பொழுதுபோக்குகள் புரட்சிகளாக இந்திய வரலாற்றில் தொடர்ந்து எழுதப்படுகின்றன. அவர்கள்தான் புனித பிம்பங்களாக ஒளிவட்டங்களுடன் ஆட்சியாளர்களால் சிலை வடிக்கப்படுகின்றனர். இவர்களுக்குக் கிடையே இருக்கும் மெல்லிய இழை பொதுப்பார்வைக்குத் தெரியாது. துதிக்கப்படுகிறவர்கள், வணங்கப்படுபவர்கள், புரட்சியாளர்கள், மகாத்மாக்கள், கல்வியாளர்கள், சீர்திருத்தவாதிகள் என எல்லோரும் நம்மவர்களாக இருக்க வேண்டும் என்பதே அந்த இழையை இணைப்பது. இல்லையெனில் பிற்போக்குத்தனமான சிந்தனையுடன் அரசியல்வாதியாகவும் மேட்டுக்குடியினரின் சிநேகிதனாகவும் கல்விக்கென எவ்வித முன்னெடுத்தலையும் செய்யாத சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுவதின் நோக்கம் என்னவாக இருக்கும்? Savitribai Phule இந்திய வரலாற்றில் கொண்டாட்டத்திற்குரிய ஒரு ஆசிரியர் உண்டெனில் அவர், சாவித்ரிபாய் புலெ ஒருவராகத்தான் இருக்க முடியும். அவரே கல்வி சார்ந்த அனைத்துக்கும் முன்னோடி. என்னுடைய 30 ஆண்டு கால வாழ்நாளில் நேற்றுதான் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. இது என் அறியாமை அல்ல, எனக்கு சொல்லித்தந்த புரட்சியாளர்கள் வரிசையில் சாவித்ரிபாயின் பெயர் என்றுமே இருந்ததில்லை. அவர் ஏன் மறைக்கப்பட்டார்? ஏனெனில், அவர் வீட்டுக்குள்ளே பெண்கள் பூட்டிக்கிடந்த காலத்தில் முதல் பெண் ஆசிரியை ஆனார், மேட்டிக்குடி ஆண்களால் கல்லடி, சொல்லடி பட்டு முதன் முதலில் பெண்களுக்கான கல்விக்கூடத்தை நடத்தினார். முதன் முதலில் முதியோருக்கு கல்விக் கற்றுக் கொடுத்தார், முதன் முதலில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வர்க்கத்துக்கு கல்வி போதித்தார்.  இப்போது சொல்லுங்கள் யாருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று!

1831ஆம் ஆண்டு, ஜனவரி 3ம் நாள் மகாராஷ்டிர மாநிலத்தில் நய்கொன் என்ற ஊரில் பிறந்தவர் சாவித்ரிபாய். தன்னுடைய 9 வயதில் மகாத்மா ஜோதிபா புலெவின் துணைவியானார். ஜோதிபா புலெதான் சாவித்ரிக்கு ஆசிரியர். அடிப்படை கல்வியை தன் கணவரிடம் கற்ற சாவித்ரி, பிறகு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஆசிரியை ஆனார். முதல் பெண்களுக்கான பள்ளியை 1848ல் தொடங்கினார். பெண்களுக்காக மட்டுமல்லாமல் முந்தைய பத்தியில் சொன்னதுபோல அனைவருக்கும் கல்வி கிடைக்க பாடுபட்டார். (அந்தக் காலக்கட்டத்தில் பார்ப்பனர்கள் நடத்திய பள்ளிகளில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன்!)

கல்விக்காக மட்டுமல்லாமல் நவீன இந்திய பெண்ணிய இயக்கத்தின் முன்னோடியாக சாவித்ரிபாய் புலெவை சொல்லலாம். 1800களில் வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடிப்பது, பிறகு முடி வளர்ந்தாலும் தொடர்ந்து மொட்டையடிப்பது மேட்டிக்குடியினரிடம் வழக்கத்தில் இருந்த ஒரு மூடப்பழக்கம். இதை எதிர்த்து சாவித்ரி, தன் இயக்கத்தின் மூலம் போராடினார். மொட்டையடிக்கும் தொழிலில் இருந்தவர்களுடன் பேசி, இந்த மூடப்பழக்கத்துக்கு துணைபோகாமல் இருக்கும்படி கைவிடச் செய்தார்.

கணவனை இழந்த இளம்பெண்களை மேட்டுக்குடி ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வது அந்தக் காலத்தில் சமூக அங்கீகாரம் பெற்ற கொடூரங்களில் ஒன்று. சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கைம்பெண்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதும் நடந்தது.  இப்படி பாலியல் சுரண்டல்களால் சில பெண்கள் கருவுற்று, அது வெளியே தெரியவந்தால் என்னவாகும் என பயந்து தற்கொலை செய்வதும் அதிகமாக இருந்தது.  இப்படி பாதிக்கப்பட்ட ஒரு பிராமணப் பெண்ணை தற்கொலையிலிருந்து மீட்டு அவருடைய குழந்தையை தத்தெடுத்துக் கொண்டனர். முதன் முதலில் இப்படி பிறக்கும் சிசுக்களுக்கென்று தனி இல்லத்தையும் புலே தம்பதி ஆரம்பித்தனர்.

இதோடு, சாவித்ரி நவீன பெண்ணிய கவிதைகளின்  முன்னோடியாகவும் கருதப்படுபவர். இன்னும் இவரைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. பெண்கள் தினத்தில் ஒரு உண்மையான பெண்ணிய போராளியைப் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.

சரி…இத்தனை சமூக மாற்றங்களுக்கு முதன்மையானவராக முன்னோடியாக இருந்தவரை ஏன் இந்திய வரலாறு மறைக்கிறது? ஏனெனில் இந்திய வரலாறு மேட்டிக்குடி ஆண்களால் எழுதப்படுகிறது. அதில், பெண்களுக்கு கல்வி வேண்டும், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வேண்டும், பாலியல் சுரண்டல்களிலிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும், கட்டுப்பெட்டித்தனமான பழங்கலாச்சாரத்திலிருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்று இறுதிகாலம்வரை குரல் கொடுத்த சாவித்ரிபாயின் வரலாறு மறைக்கப்படுவதில் ஆச்சரியமில்லை. இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.. அவர் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திலிருந்து வந்த விடிவெள்ளி என்பதே அது!