“பெண் அரசியல்வாதிகளும் உள்வாங்கிக் கொண்டிருப்பது ஆணாதிக்க சிந்தனைகளைத்தான்”: பேரா. சரஸ்வதி

“பெரியோர்களே! தாய்மார்களே!”

வாக்குக் கேட்கும் அனைத்து கட்சிகளும் பேதம் பார்க்காமல் உச்சரிக்கும் சொற்கள் இவை. பெரியோர் என்றால் அதில் ஆண், பெண் எல்லோருமே வந்துவிடுவார்கள். அடுத்து வருகிற ‘தாய்மார்களே’ என்பது சிறப்பான சொல். தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் வாக்கு வங்கியை நேரடியாக ஓட்டுக் கேட்க இறைஞ்சும் சொல். பெண்கள், ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கிறார்கள் என்பது உண்மையா? மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கக் கூடிய பெண்கள் தேர்தலில் ஆண்களைவிட அதிக சதவீதத்தில் வாக்களிக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தேர்தல் முடிவின் போதும் நிரூபணமாகிறது.  தமிழக அரசியல் வரலாற்றில் பெண்களின் வாக்குகளைக் கவர்ந்த அரசியல்வாதியாக எம். ஜி. ராமச்சந்திரன் இருந்தார் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவருக்குப் பிறகு அவர் தலைமை தாங்கிய அஇஅதிமுகவுக்கு ஜெயலலிதா தலைமை தாங்கிய போது பெண்களை தக்க வைத்துக் கொண்டார். எம். ஜி. ஆரின் அரசியல் வெற்றியை முன்மாதிரியாகக் கொண்டு பெண்களைக் கவரும் திட்டங்களை முன்வைத்து களம் காணுகின்றன. குறிப்பாக, திமுக, அதிமுக அறிவிக்கும் இலவச அறிவிப்புகளைச் சொல்லலாம். கருணாநிதி தன்னுடைய ஆட்சியில் கேஸ் அடுப்பையும் தொலைக்காட்சிப் பெட்டியையும் தந்தார். அடுத்து வந்த அதிமுக மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகிய இலவசங்களை வழங்கினார். பெரும்பாலான பெண்களின் அன்றாட நடவடிக்கைகளில் தொடர்புடைய வீட்டு உபயோகப் பொருட்களை வழங்குவதன் மூலம் பெண் வாக்கு வங்கியை தனதாக்கிக் கொள்ள அனைத்து கட்சிகளும் போட்டி போடுகின்றன.

பெண்களை வெற்றிக்குரிய வாக்குவங்கியாகப் பார்க்கும் அரசியல் கட்சிகளின் தேர்தல் உத்திகள் எல்லாம் சரிதான். ஆனால், இதே பெண்கள், அரசியலில் பங்கெடுக்க வரும்போது கட்சிகள் அவர்களை எப்படி வரவேற்கின்றன? அவர்களை எப்படி பிரதிநிதித்துவப் படுத்துகின்றன? அரசியலில் பெண்களுக்கான இடம் என்ன?

சுதந்திரத்துக்குப் பிறகான தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவைத் தவிர மிகப் பெரும் அரசியல் சக்தியாக வேறு பெண் உருவாகவில்லை. சக்தி வாய்ந்த ஜெயலலிதாவின் தலைமைகூட அரசியலில் பெண்களின் பங்களிப்பை கூட்ட முடியவில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் 2748 ஆண் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? அதில் ஒரு சிறு துளி 134 பேர் மட்டுமே!  இந்த 134 பேரில்  அதிமுக சார்பில் 15 பேரும் திமுக 1, தேமுதிக 2, சிபிஎம் 1, காங்கிரஸ் 1 என மொத்தம் 17 பெண்கள் வெற்றி பெற்றார்கள்.

சமூக நீதி கொள்கைகளை பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லிக் கொள்ளும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் ஏன் சொல்லிக் கொள்ளும்படி இல்லை? பேராசிரியர் சரஸ்வதி ,

“பெண்களைப் பத்தி பொது புத்தி நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு குடும்பத்துக்கு தொண்டு செய்ய வேண்டும் என்கிற பொதுபுத்தி இருக்கிறதில்லை? அதைப் பிரதிபலிக்கிற ஆணாதிக்க அரசியல்வாதிகளும் பெண்களுக்கு உரிய நீதியை உரிமையைப் பத்தி கவலைப் படாதவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் வாக்கு வங்கிகள் தானே தவிர, அரசியல் அதிகாரத்தில் பங்கு செலுத்தும் உரிமை உள்ளவர்கள் என்கிற நினைவே கிடையாது  இந்த அரசியல்வாதிகளுக்கு. நிலவும் ஆணாதிக்க சமூக சூழல், ஆணாதிக்க அரசியல் சூழலுக்கும் காரணமாக உள்ளது. இந்த ஆணாதிக்க சமூக கலாச்சார சூழலை மாற்றியமைக்கும்போதுதான் ஆணாதிக்க அரசியல் சூழலையும் மாற்ற முடியும். ஆனால் அதற்கான முயற்சியை யாரும் எடுப்பது கிடையாது. ஏனென்றால், ஆணாதிக்கம் பெண்ணடிமை என்பதை ஏதோ போற்றிப் பாதுகாக்க வேண்டிய விஷயமாக, அதுதான் தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்று போற்றி புகழ்ந்துகொண்டு இருப்பதால் சமூகத்தின் பொது புத்தி மாறவில்லை, பொதுபுத்தியை பிரதிபலிக்கிற அரசியல்வாதிகளின் எண்ணங்களும் மாறவில்லை. எல்லாத் தலைமைகளும் ஆணாதிக்க தலைமைகள்தான். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். அது ஜெயலலிதாவாக இருக்கலாம்; ஜெயலலிதாவோ, சோனியோ காந்தியோ பெண்ணுரிமை சிந்தனைகளோட, பெண்களின் சமவாய்ப்புக்காக செயலாற்றுகிறவர்களாக இல்லை. ஏனென்றால் அவர்களும் உள்வாங்கிக் கொண்டிருப்பது ஆணாதிக்க சிந்தனைகளைத்தான்” என்கிறார்.

தன்னுடைய சொந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விரும்பி, அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்ட ஜோதிமணிக்கு அவருடைய கட்சித் தலைமை ஆணித்தரமான மறுப்பை தெரிவித்தது. கூட்டணியில் இருக்கும் முறைகேடு வழக்குகளில் சிக்குண்ட நபருக்கு சாதகமாக தன் கட்சி தலைமை செயல்படுவதாக பேசினார் ஜோதிமணி.  பெண் என்பதால்தான் இந்த வாய்ப்பு ஜோதிமணிக்கு மறுக்கப்பட்டதா?

“இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸின் மேல் மட்டும் வைக்கவில்லை. இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 41 இடங்களில் எத்தனை இளைஞர்கள்- பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது? இளைஞர்கள் – பெண்கள் பங்களிப்பை ஒழித்து கட்டும் முயற்சியைத்தான் பார்க்க முடிகிறது. 41 பேரில் மூவர் மட்டும் பெண்கள். பெண்களை ஊக்குவிக்காத நிலைமைதான் அரசியல் கட்சிகளிடத்தில் இருக்கிறது. ஆண் அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்று வெளிப்படையாகவே சொல்கிறேனே… பெண்கள் இந்த அரசியல்வாதிகளின் வீட்டு வாசலில் போய் நின்று எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று கெஞ்சிக் கேட்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். இப்படியான சிந்தனையுள்ள அரசியல்வாதிகளால் சுயமாக சிந்திக்கக் கூடிய, மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க பெண்கள் ஏற்றுக்கொள்ள முடியுவதில்லை.” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறார் ஜோதிமணி.

பெரும்பாலான அரசியல்வாதிகள் பெண்களை அடிமைகளாகப் பார்ப்பதாகச் சொல்லும் ஜோதிமணி, சில அரசியல்வாதிகள் பெண்களைப் பார்க்கிற பார்வை, அவர்களுடைய பேச்சு ஆகியவை ஆணாதிக்க மனோபாவத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது என்கிறார். சில தலைவர் ஆணாதிக்க சிந்தனை படிந்த சமூகத்தின் நீட்சியாக இருக்கிறார்கள் என்கிறார்.

தேர்தல் அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் விதமாக 33 சதவீத இடஒதுக்கீடு கட்டாயமாக்கப்படும் என்று அரசியல் அறிஞர்களும் எல்லா அரசியல் கட்சிகளும் பேசுகின்றன. ஆனால் உண்மையில் 33 சதவீத இடஒதுக்கீட்டை ஒரு வெற்று வாக்குறுதியாகத்தான் எல்லா கட்சிகளுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதைப் பேசினால் தேர்தல் நேரத்தில் பெண்களின் வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்ற நோக்கில் பேசுகிறார்கள். நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவருவோம் என்று சொன்ன பாஜக மகளிர் மசோதாவை நிறைவேற்றும் பேச்சையே விட்டுவிட்டது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒரு அவையில் நிறைவேற்றப்பட்டு இன்னொரு அவையில் முடங்கிப்போனது மகளிர் இடஒதுக்கீடு மசோதா.

தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண் தான் அதிகாரம் செலுத்துகிறவராக இருக்கிறார் என்கிற விமர்சனங்கள் வந்தாலும், வீட்டுக்குள் முடங்கிய பெண்களை கட்டாயத்தின் பேரிலாவது பொது வெளிக்கு இழுத்து வந்ததை பெரும் சாதனையாக சொல்லத்தான் வேண்டும். அதேபோல சமீபத்தில் இந்த இடஒதுக்கீடு விகிதத்தை 50 சதவீதத்துக்கு உயர்த்தி சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் இந்த இடஒதுக்கீட்டை வரவேற்றுள்ளன.

“இயற்கை நீதி என்று இருக்கிறது சமூகத்தில் சரிபாதியாய் பெண்கள் இருக்கிறார்கள். அந்த இயற்கை நீதிதான் எல்லா தளங்களிலும் பிரதிபலிக்க வேண்டும்.  பஞ்சாயத்துகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பஞ்சாயத்துகள் முடிவை எடுக்கிற அமைப்புகள் அல்ல, அவை கொடுக்கப்பட்ட வேலைத் திட்டத்தை  செயல்படுத்துகிற அமைப்புகள். கொள்கை ரீதியிலான முடிவுகளை இந்த அமைப்புகளால் எடுக்க முடியாது. சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு கேட்பது, அவை கொள்கை முடிவுகள் எடுக்கிற இடங்களாக இருப்பதால்தான்” என்கிற பேரா. சரஸ்வதி, இடஒதுக்கீடு என்பது சர்வரோக நிவாரணி அல்ல என்கிறார். இடஒதுக்கீடு கொடுத்த உடனேயே சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்கிற எல்லா வன்முறைகளும் மனித உரிமை மறுப்புகளும் போய்விடும் என்று சொல்லவில்லை. அரசியல் ரீதியாக வலிமைப் படுத்துகிற முயற்சி. பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு தீர்வு காண்கிற வழியாகப் பார்க்கிறார் பேராசிரியர்.

இடஒதுக்கீட்டில் பதவிக்கு வந்த பெண்களின் முடிவுகளின் ஆதிக்கம் செலுத்துகிறவர்களாக அவர்கள் வீட்டு ஆண்கள் இருக்கிறார்கள் என்கிற கருத்தையும் கடுமையாக விமர்சிக்கிறார் பேரா. சரஸ்வதி.  ஆண் அரசியல்வாதிகளாக இருக்கிற இடங்களில் அவருடைய குடும்பம் தாக்கம் செலுத்தவதில்லையா? என்று கேள்வி எழுப்புகிற அவர், சில இடங்களில் பெண்கள் பஞ்சாயத்து தலைவர்களாகவும் மற்ற பதவிகளிலும் அமரும்போது ஆண்களின் சிந்தனைகள் தாக்கம் செலுத்தலாம். அதற்காக எல்ல இடங்களிலும் அப்படித்தான் நடக்கும் என்பது யூகிப்பது அறிவியலற்ற தன்மை என்கிறார்.

“பெண்கள் பதவிக்கு வந்தாலும் அவர்கள் ஆண்களாகத்தான் இருப்பார்கள் என்பது சொத்தை வாதம்!இதையேதான் பட்டியல் சாதியினருக்கு இடஒதுக்கீடு கொடுத்தபோது அவர்கள் ஆண்டைகளின் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்றார்கள். ஆனால் இப்போது, அவர்கள் வலிமை பெற்றவர்களாக மாறவில்லையா?” என்பது பேர. சரஸ்வதியின் வாதம்.

இந்த வாதத்துக்கு வலிமை சேர்ப்பதுபோல, பஞ்சாயத்து அமைப்புகளில் கிடைத்த இடஒதுக்கீடே, அரசியல் பின்புலம் இல்லாத தன்னை அரசியல்வாதியாக்கியிருக்கிறது என்கிறார் ஜோதிமணி. அதுபோல பெரும்பாலான அரசியல்வாதிகளைப் போல அல்லாமல்  ராஜுவ்காந்தி, ராகுல் காந்தி போன்ற ஒருசிலர் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு ஊக்கம் கொடுக்கிறவர்களும் இருக்கிறார்கள் என்கிறார்.

யூத் காங்கிரஸ் தலைவராக ராகுல் இருந்தபோது தன்னைப் போன்ற பெண்கள் இளைஞர்களின் குரல்களுக்கு மதிப்பு கொடுத்தார். இவர்களால் முடியாது என்று ஒதுக்கப்பட்ட பணிகளைக் கொடுத்தார் என்கிற ஜோதிமணி முந்தைய தலைமுறை அரசியல்வாதிகளுக்கு இன்றைய அரசியல்வாதிகளுக்கு தலைமுறை இடைவெளி இருப்பதாகச் சொல்கிறார்.

பெண்களின் பிரதிநிதித்துவத்தை எப்படி அதிகரிப்பது என்பதற்கு ஜோதிமணி, “பஞ்சாயத்துகளில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட இந்த 15 ஆண்டுகளில் ஏராளமான பெண் நிர்வாகிகள் எல்லா அரசியல் கட்சிகளிலும் தோன்றிவிட்டார்கள். தகுதியான, திறமையான பெண்கள் இல்லையென்று இனி சொல்ல முடியாது” என்கிறார்.

பேராசிரியர் சரஸ்வதியோ, “பெண்களுக்கு சரியான பயிற்சி கொடுத்து, உரிய தெளிவைக் கொடுத்து பதவிக்கு அனுப்புகிற பொறுப்பு அரசியல் கட்சிகளுடையது. எந்தக் கட்சியுமே போராட்டங்களுக்கு முன்னால் நிற்க மக்களாக மட்டுமே பெண்களைப் பார்க்கின்றன.  எந்த கட்சி அரசியல் நுணுக்கத்தையும் ஆளுகைத் திறனையும் பெறுவதற்கான பயிற்சி கொடுக்கிறது? எல்லா கட்சிகளின் தலைமையிலும் ஆண்கள்தானே இருக்கிறார்கள். பெண்களை வெளியைக் கொடுக்காத, போராடி போராடி பெற வேண்டிய கட்டாயத்தில் பெண்களும் பெண்கள் அமைப்புகளும் இருக்கிறார்கள்” என்கிற வழிமுறைச் சொல்கிறார்.

ஜோதிமணி இறுதிக் கருத்தாக இதைச் சொன்னார், “அரசியலுக்கு வரும் பெண்களை ஆண் அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்வதுதான் சிக்கலே தவிர, மக்கள் எப்போது வரவேற்று கொண்டாடுகிறவர்களாக இருக்கிறார்கள். இதற்கு உதாரணங்களாக, சோனியா, மம்தா, ஷீலா, மாயாவதி, ஜெயலலிதா போன்றவர்களைச் சொல்லலாம். இதில் குறிப்பிட்டுச் சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது  இவர்களில் சிலர் மேல் ஊழல், சர்வாதிகார தன்மை என்கிற குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஆனால் அதை எல்லாம் மறந்து மக்கள் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்” என்றவர்,

“பயணத்தில் தடையாக இருக்கிற எல்லாவற்றையும் எதிர்கொண்டு போராடித்தான் ஆக வேண்டும். எதிர்த்து நிற்கத்தான் வேண்டும்; ஆண் அரசியல்வாதிகளின் அடையாள அழிப்பு முயற்சிகளுக்கு பயந்து பின்வாங்காமல் இருப்பதும் நம்பிக்கைகளை பிரதிபலித்துக்கொண்டே இருப்பதும் முக்கியம்!” என்கிறார்.

அந்திமழை மே 2016 இதழில் வெளியான கட்டுரை.

சாவித்ரிபாய் புலெ – இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண்ணிய போராளி!

மேட்டுக்குடியில் பிறந்த சீமாட்டிகளின் பொழுதுபோக்குகள் புரட்சிகளாக இந்திய வரலாற்றில் தொடர்ந்து எழுதப்படுகின்றன. அவர்கள்தான் புனித பிம்பங்களாக ஒளிவட்டங்களுடன் ஆட்சியாளர்களால் சிலை வடிக்கப்படுகின்றனர். இவர்களுக்குக் கிடையே இருக்கும் மெல்லிய இழை பொதுப்பார்வைக்குத் தெரியாது. துதிக்கப்படுகிறவர்கள், வணங்கப்படுபவர்கள், புரட்சியாளர்கள், மகாத்மாக்கள், கல்வியாளர்கள், சீர்திருத்தவாதிகள் என எல்லோரும் நம்மவர்களாக இருக்க வேண்டும் என்பதே அந்த இழையை இணைப்பது. இல்லையெனில் பிற்போக்குத்தனமான சிந்தனையுடன் அரசியல்வாதியாகவும் மேட்டுக்குடியினரின் சிநேகிதனாகவும் கல்விக்கென எவ்வித முன்னெடுத்தலையும் செய்யாத சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுவதின் நோக்கம் என்னவாக இருக்கும்? Savitribai Phule இந்திய வரலாற்றில் கொண்டாட்டத்திற்குரிய ஒரு ஆசிரியர் உண்டெனில் அவர், சாவித்ரிபாய் புலெ ஒருவராகத்தான் இருக்க முடியும். அவரே கல்வி சார்ந்த அனைத்துக்கும் முன்னோடி. என்னுடைய 30 ஆண்டு கால வாழ்நாளில் நேற்றுதான் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. இது என் அறியாமை அல்ல, எனக்கு சொல்லித்தந்த புரட்சியாளர்கள் வரிசையில் சாவித்ரிபாயின் பெயர் என்றுமே இருந்ததில்லை. அவர் ஏன் மறைக்கப்பட்டார்? ஏனெனில், அவர் வீட்டுக்குள்ளே பெண்கள் பூட்டிக்கிடந்த காலத்தில் முதல் பெண் ஆசிரியை ஆனார், மேட்டிக்குடி ஆண்களால் கல்லடி, சொல்லடி பட்டு முதன் முதலில் பெண்களுக்கான கல்விக்கூடத்தை நடத்தினார். முதன் முதலில் முதியோருக்கு கல்விக் கற்றுக் கொடுத்தார், முதன் முதலில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வர்க்கத்துக்கு கல்வி போதித்தார்.  இப்போது சொல்லுங்கள் யாருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று!

1831ஆம் ஆண்டு, ஜனவரி 3ம் நாள் மகாராஷ்டிர மாநிலத்தில் நய்கொன் என்ற ஊரில் பிறந்தவர் சாவித்ரிபாய். தன்னுடைய 9 வயதில் மகாத்மா ஜோதிபா புலெவின் துணைவியானார். ஜோதிபா புலெதான் சாவித்ரிக்கு ஆசிரியர். அடிப்படை கல்வியை தன் கணவரிடம் கற்ற சாவித்ரி, பிறகு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஆசிரியை ஆனார். முதல் பெண்களுக்கான பள்ளியை 1848ல் தொடங்கினார். பெண்களுக்காக மட்டுமல்லாமல் முந்தைய பத்தியில் சொன்னதுபோல அனைவருக்கும் கல்வி கிடைக்க பாடுபட்டார். (அந்தக் காலக்கட்டத்தில் பார்ப்பனர்கள் நடத்திய பள்ளிகளில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன்!)

கல்விக்காக மட்டுமல்லாமல் நவீன இந்திய பெண்ணிய இயக்கத்தின் முன்னோடியாக சாவித்ரிபாய் புலெவை சொல்லலாம். 1800களில் வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடிப்பது, பிறகு முடி வளர்ந்தாலும் தொடர்ந்து மொட்டையடிப்பது மேட்டிக்குடியினரிடம் வழக்கத்தில் இருந்த ஒரு மூடப்பழக்கம். இதை எதிர்த்து சாவித்ரி, தன் இயக்கத்தின் மூலம் போராடினார். மொட்டையடிக்கும் தொழிலில் இருந்தவர்களுடன் பேசி, இந்த மூடப்பழக்கத்துக்கு துணைபோகாமல் இருக்கும்படி கைவிடச் செய்தார்.

கணவனை இழந்த இளம்பெண்களை மேட்டுக்குடி ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வது அந்தக் காலத்தில் சமூக அங்கீகாரம் பெற்ற கொடூரங்களில் ஒன்று. சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கைம்பெண்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதும் நடந்தது.  இப்படி பாலியல் சுரண்டல்களால் சில பெண்கள் கருவுற்று, அது வெளியே தெரியவந்தால் என்னவாகும் என பயந்து தற்கொலை செய்வதும் அதிகமாக இருந்தது.  இப்படி பாதிக்கப்பட்ட ஒரு பிராமணப் பெண்ணை தற்கொலையிலிருந்து மீட்டு அவருடைய குழந்தையை தத்தெடுத்துக் கொண்டனர். முதன் முதலில் இப்படி பிறக்கும் சிசுக்களுக்கென்று தனி இல்லத்தையும் புலே தம்பதி ஆரம்பித்தனர்.

இதோடு, சாவித்ரி நவீன பெண்ணிய கவிதைகளின்  முன்னோடியாகவும் கருதப்படுபவர். இன்னும் இவரைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. பெண்கள் தினத்தில் ஒரு உண்மையான பெண்ணிய போராளியைப் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.

சரி…இத்தனை சமூக மாற்றங்களுக்கு முதன்மையானவராக முன்னோடியாக இருந்தவரை ஏன் இந்திய வரலாறு மறைக்கிறது? ஏனெனில் இந்திய வரலாறு மேட்டிக்குடி ஆண்களால் எழுதப்படுகிறது. அதில், பெண்களுக்கு கல்வி வேண்டும், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வேண்டும், பாலியல் சுரண்டல்களிலிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும், கட்டுப்பெட்டித்தனமான பழங்கலாச்சாரத்திலிருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்று இறுதிகாலம்வரை குரல் கொடுத்த சாவித்ரிபாயின் வரலாறு மறைக்கப்படுவதில் ஆச்சரியமில்லை. இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.. அவர் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திலிருந்து வந்த விடிவெள்ளி என்பதே அது!

பெண் இருப்பு எப்போதும் சூன்யப் புள்ளியில்…

பகுதி-1

Nawal El Saadawiருவரின் ஒழுக்க மீறலை அல்லது ஒழுக்க சீலத்தை சுட்டும்போது, அவர் சார்ந்துள்ள மதத்தோடு பொறுத்தி பேசுவது இயல்பான விஷயமாக இங்கே இருக்கிறது. ‘இஸ்லாமியதீவிரவாதி என்ற சொல்லாடலும் பார்ப்பான் உயர்ந்தவன்என்கிற எண்ணமும் இதற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். உயர்ந்த நல்லோழுக்கங்களையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் இன்னபிற நல்லனவற்றையும் வலியுறுத்துவதாக சொல்லப்படும் அனைத்து மதங்களைச் சேர்ந்த தீவிர பற்றாளர்களும்கூட அடிப்படையில் மனிதர்களே! மதங்களால் புனிதர்களாகப்படும் எல்லோருக்குமே புனிதத்திற்கு எதிரிடையான பக்கமும் இருக்கிறது என்பதற்கு வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் ஏராளமான உதாரணங்களை நாம் பார்த்துவருகிறோம். மதத்தால் புனிதராக்கப்பட்டவருக்குள் எப்படி சராசரியான மனித இயல்புகள் இருக்கிறதோ, அதுபோலவே இஸ்லாம், கிறித்துவம், இந்து என உலக மதங்கள் அத்தனையிலும் பெண் ஒடுக்குதலும் அவள் இரண்டாம் பாலினமாகக் கருதப்படுவதும் இருக்கிறது.

கருணையும் குரூரமும் மனித இயல்பானால், பெண் மீதான ஒடுக்குதல் என்பது ஆணாதிக்கச் சிந்தனை, இச்சமூகத்திற்கு இயல்பென செயற்கையாக உருவாக்கிக் கொடுத்திருக்கும் கொடை. அது வழிவழியாக இச்சமூகத்ததில் பெண் ஒடுக்கப்பட வேண்டியவள் என்பதை ஆணுக்கும் ஒடுக்கப்பட பிறந்தவர்கள் என்பதை பெண்ணுக்கும் போதிக்கிறது. இந்தியாவில், ஈரானில், அமெரிக்காவில் எங்கு பிறந்தாலும் காலச்சாரங்களும் நாடுகளும் வேறுபட்டிருந்தாலும் பெண், ஒடுக்குதலுக்கு ஆளாக வேண்டியவள் தான்! இது குறித்து பெண்ணிய சிந்தனையோடு கூடிய ஆய்வுகளும் கட்டுரைகளும் இலக்கிய பதிவுகளும் உலகம் முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் எகிப்து பெண்ணிய எழுத்தாளரான நவ்வல் எல் சதாவியின் எழுத்துகளை மதிப்பு மிக்க ஆவணங்களாக கருத முடியும்.

நீண்ட மாதங்களுக்கு முன் ஒரு இலக்கிய பத்திரிகையில் நவ்வல் எல் சதாவி குறித்த கட்டுரையை வாசித்தபோது, அவர் மீது ஒருவகை ஈர்ப்பு உண்டானது. நவ்வல் எல் சதாவி குறித்த மேலதிக விவரங்களை அவருடைய இணைய தளத்தில் படித்து அறிந்தேன். சில கட்டுரைகளையும் அங்கே படிக்க முடிந்தது. கட்டுரை, சிறுகதை, நாவல் என பன்முகத் தன்மையோடு ஏராளமாக எழுதியிருக்கும் அவருடைய எழுத்துகளைப் படிக்க ஆர்வம் மேலிட்டது. குறிப்பாக
Women at point zero

நாவலை படிக்க விரும்பினேன்
. புத்தகக் கடைகளில் விசாரித்தபோது அப்போதைக்கு இருப்பில் இல்லை என்று கூறி, வேண்டுமானால் தருவித்து தருவதாக பதில் வந்தது. அழைப்பு எண்ணை தந்துவிட்டு வந்த நேரம், எண்ணையே மாற்ற வேண்டியதாகிவிட்டது. நேரில் சென்றும் விசாரிக்கவில்லை. அதோடு வேறுவேறு வேலைகளில் கவனம் கொள்ள எதேச்சையாக தி.நகர் புக் லேண்டில் Women at point zero-ன் தமிழ் பெயர்ப்பாக சூன்யப் புள்ளியில் பெண்நாவலை புத்தகமாகப் பார்த்தேன். ஆங்கிலத்தில் படித்திருந்தால் ஒரே மூச்சில் படித்திருக்க முடியுமா என்று தெரியாது. தமிழில் கிடைத்ததால் விரைந்து முடித்தேன். லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு இது. மூல மொழியில் படிக்காததால் மொழிபெயர்ப்பு குறித்து பேசுவது சரியாக இருக்காது.

1974 ல் நவ்வல் எல் சதாவி அரசியல் கைதியாக சிறையில் இருந்தபோது அங்கு சந்தித்த ஃபிர்தவுஸ் என்ற பெண்ணின் வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. நாவல் குறித்து பேசுவதற்கு முன் நவ்வல் எல் சதாவி குறித்து சில குறிப்புகளைத் தர விரும்புகிறேன். நவ்வல் எல் சதாவியின் அப்பா சுதந்திரப் போராட்ட வீரர். கல்வி அமைச்சகத்தில் பணியாற்றியவர். பெண் இரண்டாம் பட்சமாக ஒதுக்கப்படுவதை தன் குடும்பத்திலிருந்தே ஆரம்பிக்கும் அனுபவத்தின் வாயிலாக உணர்கிறார் நவ்வால். தன் சகோதரனைவிட தான் படிப்பிலும் இன்னபிற விஷயங்களிலும் முதன்மையானவராக இருந்தபோதும் சகோதரனுக்கு தன் குடும்பத்தினரிடம் கிடைக்கும் சலுகையும் அன்பும் (இந்த விஷயம் நம்முடைய குடும்பங்களுக்கு இப்போதும் பொருந்திப்போவதை கவனிக்க) இவருக்கு கிடைப்பதில்லை. அடிப்படையில் ஒரு பெண் எதிர்கொள்ளும் குடும்ப, சமூக பிரச்சினைகளை நவ்வால் எதிர்கொண்டபோதிலும் உளவியல் மருத்துவம் படிக்க வைக்கும் அளவுக்கு அவருடைய குடும்பத்தினர் கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

உளவியல் மருத்துவராக குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட பெண்களை சந்திக்கும்போது அவருக்குள் பெண்ணிய சிந்தனை கிளர்ந்து எழுந்துள்ளது, எழுதத் தொடங்கியிருக்கிறார். ஆய்வு நோக்கில் அவர் எழுதிய கட்டுரைகள், நாவல்கள் மத அடிப்படைவாதத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் அரசுகளை விமர்சிப்பதாகவும் இருந்த காரணத்தினால் அரசியல் கைதியாக ஒரு வருடம் சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கே எழுதவதற்கு மறுக்கப்படுகிறது. கழிப்பறையில் பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பரில் ஐப்ரோ பென்சிலைக் கொண்டு எழுதுகிறார். சிறையிலிருந்து விடுதலையான பின்பும் அடிப்படைவாதிகளிடமிருந்தும் அரசிடமிருந்தும் தொடர்ந்துகொண்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார் நவ்வால். அவருடைய எழுத்துப் பயணம் சற்றே அசுவாசத்தோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.