தமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்?

metoo இயக்கத்தை பலரும் வெவ்வேறு விதமாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் எழுதும் பலரின் புரிதல் அதிகாரம் உள்ள ஆண், ஒரு பெண்ணை உடல்ரீதியாக துன்புறுத்துவது என்பதாக உள்ளது. இன்னும் சிலர் இதை ஆண்கள் பெண்களை வளைத்த கதையாக எழுதுகிறார்கள். பெயரை குறிப்பிடுதல் – அவமானப்படுத்துதல் என்பதைத் தாண்டியும் metoo இயக்கம், பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கான சம உரிமையை நிலை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். 2004-மே மாதம் முதல் ஊடகங்களில் பணியாற்றி வருகிறேன். உண்மையில் உடல்ரீதியிலான பாலியல் அத்துமீறல்களை எதையும் நானோ, என் உடன் பணியாற்றிய பெண்களோ எதிர்கொள்ளவில்லை. ஆனால், அதைவிட கொடுமையான மனரீதியான ஒடுக்குமுறைகளை நானும் உடன் பணியாற்றிய பெண்களும் எதிர்கொண்டிருக்கிறோம். இந்த ஒடுக்குமுறை சூழல் மாற வேண்டும் என்கிற சிந்தனையில்தான் தொடர்ந்து இதுகுறித்து எழுதிவருகிறேன். metoo இயக்கம் உருவாகும் முன்பே ஒடுக்குமுறைகளை சந்திக்கும்போதெல்லாம் துணிச்சலாக எழுதி வருகிறேன். அதற்கான விளைவுகளையும் சந்தித்து வருகிறேன். என்வழியாக ஊடகங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசி, தீர்வு காண முற்படுகிறேன்.

என்னுடைய அம்மா சத்துணவு மேற்பார்வையாளராக இருந்தவர்; அப்பா பேருந்து நடத்துனராக இருந்து, உடல்நிலை காரணமாக அந்த பணியை விட்டவர். என் அம்மாதான் குடும்பத்தின் ஆதாரம். விவசாய குடும்பப் பின்னணியில் பெண்ணை படிக்க வைப்பதில் எங்கள் உறவினர்கள் எவருக்கும் பிடிக்கவில்லை. என் அம்மா, என்னை கல்லூரிக்கு அனுப்புவதில் உறுதியாக இருந்தார். அம்மாவுக்கு என்னை ஆசிரியர் அல்லது ஏதேனும் அரசு வேலைக்கு அனுப்புவதில் விருப்பம் இருந்தது. எனக்கு சினிமா இயக்குநராக வேண்டும் என்கிற விருப்பம். ஒரு பெண் சினிமா துறையில் பணியாற்றப்போகிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. எனவே, விஸ்காம் படித்துவிட்டு விளம்பரம் அல்லது கிராபிக்ஸ் துறையில் பணியாற்றலாம் என அம்மாவை சமாதானம் செய்துவிட்டு சென்னை வந்தேன்.

முதல் இரண்டு ஆண்டுகள் ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். மூன்றாம் ஆண்டு வீட்டில் பொருளாதார நெருக்கடி. நீண்ட தூரம் பயணிக்க முடியவில்லை என்கிற காரணத்தால் சென்னையின் மையப்பகுதியில் இருந்து சோழிங்கநல்லூர் கல்லூரி ஹாஸ்டலில் தங்கியிருந்தார் சீனியர் அக்கா ஒருவர். அவர் மீண்டும் வீட்டிலிருந்தே கல்லூரிக்கு வரப்போவதாக சொன்னார், என்னையும் அவருடன் தங்கிக்கொள்ள அழைத்தார். என்னுடைய பொருளாதார சூழலை அறிந்த அவர், மூன்றாம் ஆண்டு படித்து முடிக்கும்வரை அவருடைய அறையில் என்னை அனுமதித்தார். அவருடைய வீட்டாரும் என்னை பெருந்தன்மையோடு அனுமதித்தனர்.

மூன்றாம் ஆண்டு இறுதி தேர்வு எழுதியதும் வேலைத் தேட ஆரம்பித்தேன். சினிமா உதவி இயக்குநராகும் முயற்சியும் செய்தேன். சினிமா துறையில் பெண்களுக்கு இருந்த பிரச்சினைகள் என்னை பயமுறுத்தின. எப்படி, யாரை அணுகுவது என்கிற தெளிவில்லாத பாதையாக அது எனக்குப் பட்டது. எனக்கு எழுத வரும், பத்திரிகை பணி செய்யலாம் என முடிவெடுத்தேன். நான்கைந்து பத்திரிகை அலுவலகங்களில் பயிற்சியாளர் வாய்ப்பு கேட்டு அலைந்தேன். பணிமுடித்தபின், அம்மாவிடமிருந்து நிச்சயம் எந்தவித பொருளாதார உதவியும் கேட்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அடுத்த மாத செலவுக்கு என்ன செய்ய என்கிற சூழலில், அண்ணாநகரில் ஒரு ஸ்டுடியோவில் வேலை கிடைத்தது. போட்டோஷாப் வேலை என்றுதான் விளம்பரத்தில் அழைத்திருந்தார்கள். ஆனால், நாள் முழுக்க ரிசப்ஷனில் நின்று வருகிறவர்களிடம் கேமராக்களை விற்பது, விளக்கம் சொல்வது என்றபடியாக அந்த வேலை போனது. அயற்சியான பணி. காலையில் சாப்பிட மாட்டேன். மதியம், இரவு மட்டும்தான் உணவு. எப்படி நாள் முழுக்க நின்றுகொண்டு வேலை பார்க்க முடியும்? எப்போது தப்புவோம் என இருந்தது. நல்லவேளையாக தினமணி நாளிதழில் இண்டன்ஷிப் கிடைத்தது. அப்போது அங்கு என்னைப் போல இண்டன்ஷிப் வந்திருந்த எழுத்தாளர் ஜா. தீபா, நான் தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருந்ததை அறிந்து குமுதம் சிநேகிதியில் பணி வாய்ப்பு இருப்பதை சொன்னார்.

குமுதல் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி, என்னுடைய எழுத்தைப் பார்த்து எனக்கு வாய்ப்புக்கொடுத்தார். அடுத்த மாதமே நான் பணிக்குச் சேர்ந்தேன். என்னைப் போல எளிய பின்னணியில் வந்தவர் அவர், என் ஆர்வத்தை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. என்னை ஊக்கப்படுத்தினார், வளர்த்தெடுத்தார். இரண்டு ஆண்டுகளில் உதவி ஆசிரியர் ஆனேன். பெண்கள் பத்திரிகை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக ஒரு குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் பேசுகிறது. எனக்கு அதையும் கடந்து எழுதும் விருப்பமும் தேடலும் இருந்தது. அரசியல்-சமூகம் குறித்து எழுதுவதில் எப்போதும் தீவிரமான ஆர்வம் இருந்தது. ஆனால், வேறு வேலை தேடாமல் இந்தப் பணியை விட்டுவிட்டேன். பணி கிடைக்க ஐந்து மாதங்கள் ஆனாது.

‘குங்குமம்’ இதழில் நிருபராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பு என்னை பலவிதங்களிலும் மேம்படுத்தியது. சூழலியல், இலக்கியம், சமூகம் சார்ந்து எழுதினேன். வடதமிழகத்தின் பல பகுதிகளுக்கு பயணித்து கட்டுரைகள் எழுதினேன். அப்போது தினகரன் இணைப்பிதழின் ஆசிரியராக இருந்த கே. என். சிவராமன், என்னை ஊக்கப்படுத்தினார். என்னுடைய கட்டுரைகள் பார்த்துதான் ஆனந்த விகடன் இதழிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. முதலில் ஆனந்த விகடன் உதவி ஆசிரியர் பேசிவிட்டு, பிறகு ஆசிரியரிடம் பேசச் சொன்னார். ஆசிரியர், ‘நம்மைப் போல பிந்தங்கிய சூழலில் இருந்து வருகிறவர்கள் வெற்றி பெறுவது முக்கியம்’ என்கிற அர்த்தத்தில் பேசினார். அந்தப் பேச்சு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. அதோடு, ஆனந்த விகடன் இதழில் (உள்குத்துகளை தெரியாதவரை) பணியாற்ற யாருக்குத்தான் விருப்பம் இருக்காது?

தொடக்கத்தில் எல்லாமே மிகச் சிறப்பாகத்தான் இருந்தது. அரசியல் பேட்டிகள் எடுக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள். இதற்காகத்தானே இத்தனை நாளும் காத்திருந்தோம் என விரும்பிச் செய்தேன். ஆனால் ஆனந்த விகடன் குழு ஒரு Boys’ club போலத்தான் செயல்பட்டது. எங்கள் குழுவில் மற்றொரு பெண் நிருபர் இருந்தார். அவர் பெரும்பாலும் வெளி அசைன்மெண்டுக்குச் சென்றுவிடுவார். மற்றவர்கள் இயல்பாக பேசமாட்டார்கள், அதிகார தொனியிலேயே நடந்துகொள்வார்கள். அவர்கள் அப்படி இருக்கவே ஆசிரியரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். ஆசிரியரின் அதிகாரத் தொனியை அலுவலகம் அறிந்தது. அரசனைப் போல அல்லது அதிகாரம் மிக்க குடும்பத்தலைவனைப் போல. தலைமையில் இருப்பவர் அதிகார தொனியில் இயங்கினால் எப்படி அங்கே இயல்பாக பணிபுரிய முடியும்? அருகில் இருந்தாலும்கூட நேரடியாக ஆசிரியர் பேசமாட்டார், உதவி ஆசிரியரை விட்டுத்தான் கேட்க வைப்பார். இதைத்தான் ஆண்-அதிகார திமிர் என்கிறார்கள்.

இந்த Boys’ club சொற்றொடருக்கு ஓர் உதாரண சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். நான் தமிழ் வழியில் படித்தவள். அப்போது ஆங்கிலத்தை ஓரளவில் புரிந்துகொள்ள முடியும். பேச வராது. ஆனாலும் பிரபல எழுத்தாளர்கள் அமிதவ் கோஷ், ஷோபா டே நேர்காணல்களை எடுத்தேன். இதுகுறித்து ஆசிரியர் குழுவில் இருந்தவர்களுக்கு பலத்த சந்தேகம். குறிப்பாக, மூத்த சினிமா நிருபருக்கு ஆங்கிலம் தெரியாத நான் எப்படி பேட்டியெடுத்திருக்க முடியும் என சந்தேகம். பல முறை கூடிப்பேசி சிரித்த பின், நேரடியாக என்னிடமே கேட்டார். அலுவலகத்தில் இருந்த நண்பரின் உதவியுடன் ஆங்கில கேள்விகளை தயாரித்து கேட்டேன், என்னுடைய பேட்டியை பதிவு செய்திருக்கிறேன், கேட்கிறீர்களா என்றவுடன் அமைதியானார். அந்த அலுவலகத்தில் தமிழ் வழியில் படித்து வந்தவர்கள் ஏராளமாக இருந்தார்கள். ஆனால், ஒரு பெண் தமிழ் வழியில் படித்து கொஞ்சம் அறிவுப்பூர்வமாக செயல்பட்டால் ஆண்கள் மனம் தாங்குவதில்லை.

ஆனந்த விகடன் இதழில் நான் மற்றொரு எதிர்கொண்ட பிரச்சினை. வேலை நேரம். ஆசிரியர் குழு நண்பகல் 12 மணிக்கு மேல்தான் பணியாற்றத் தொடங்கும். இரவு எட்டு மணிக்கு மேல் தான் இறுதிகட்டப் பணிகள் தொடங்கும். குமுதம் சிநேகிதி இதழில் இரவு 11 மணி மரைக்கும்கூட பணியாற்றிவிட்டு திரும்பியிருக்கிறேன். அது உதவி ஆசிரியரின் பணி தன்மை அப்படி. ஆனால், இங்கே நான் நிருபர். இதழ் முடிக்கும் நேரங்களில் காலையில் 9.30 மணிக்கு வந்து, இரவு 9, 10 மணி வரைக்கும் கட்டாயம் இருந்ததாக வேண்டிய நிர்பந்தம் இல்லை. ஆனால், நிர்பந்தித்தார்கள். ஆனந்த விகடன் இதழின் வடிவமைப்பு மாற்றப்பட்டபோது, இரவு முழுக்க அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழல். விடியகாலை 3 மணிக்கு எங்களுடைய கட்டுரை திருத்தம் செய்யப்பட்டு அச்சுக்கு போகும் அதுவரை அங்கேயே இருக்க வேண்டும். இடையில் நமக்கு வேறு எந்த வேலையும் இருக்காது. சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும். Boys’ club-க்கு மிகச் சிறந்த உதாரணம்.

இத்தகைய பணிச்சூழலுக்கிடையே தொடர்ந்தபோதும், என்னுடைய கட்டுரைகள் கவர் ஸ்டோரியாக வந்தபோதும் என்னுடைய ப்ரோபேஷன் காலம் நீட்டிக்கப்பட்டது. எனக்கு பணி நிரந்தரம் தரப்படவில்லை. சில வாரங்களில் என்னுடைய கட்டுரைகள் அச்சேறுவது குறைக்கப்பட்டது. இரவு 10 மணி வரை அலுவலகத்தில் இருந்து பணியாற்றியபோது, அடுத்த நாள் காலை அலுவலக நேரத்துக்கு சரியாக வந்துவிட வேண்டும் என்கிற கண்டிப்பு எனக்கு மட்டும் இருந்தது. ஒருவிதமான ஒதுக்கல் சூழல் ஆசிரியர் குழு மூலம் செய்யப்பட்டது. என்னுடைய ஒதுக்கலை தாங்க முடியாமல் வெடித்து அழும்போது, ஆறுதல் பார்வையைக்கூட அந்த ஆசிரியர் குழு பார்க்கவில்லை. அவர்கள் எப்போது தங்களை ஆண்களாகவே நினைத்தார்கள். அடுத்த சில நாட்களில் ஆசிரியர் என்னை பணியிலிருந்து நீக்கத் திட்டமிட்டிருப்பதும், அதற்கு நான் தனி தீவாக இருக்கிறேன் என்கிற காரணத்தை நிர்வாகத்திடம் சொன்னதும் தெரியவந்தது. அங்கேயே இருந்து போராடுவதெல்லாம் முடியாத காரியம். ஆண்-அதிகாரத்தை இயல்பாக கருதுகிற ஒரு பணிச்சூழலில் நிச்சயம் என்னால் பணியாற்ற முடியாது என்கிற தீர்மானத்துடன் நானே ராஜினாமா கடித்தத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

“நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள், நம்மைப் போன்ற முதல் தலைமுறையாக படித்து பணிபுரிய வருகிறவர்கள் வெற்றி பெற வேண்டும்” என சொன்ன அதே ஆசிரியர், என்னை ஒரே நாளில் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்தார். தனி தீவாக இயங்குவது என்பது என்ன பொருளில் சொல்லப்பட்டது எனத் தெரியவில்லை. பத்திரிகை துறைக்கு வந்திருக்கும் நான் எப்படி தனி தீவாக இயங்க முடியும்? வெளியூர்களுக்கு பயணித்து கட்டுரைகள் எழுதும் பெண், ரிசர்வ் டைப்-ஆக இருக்க முடியுமா? ஏற்கனவே இரண்டு இடங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ள பெண், தனி தீவாக எப்படி இயங்க முடியும்? யாருக்கு அட்டியூட் பிரச்சினை? எனக்கா ஆசிரியருக்கா? அல்லது ஆசிரியர் என்னிடம் எதிர்ப்பார்த்தது என்ன? சமீபத்தில் அந்த ஆசிரியர் பணியிலிருந்து விடுபட்டார். அவருக்கு பல பத்திரிகையாளர் சமூக ஊடகங்களில் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு நன்றி சொன்னார்கள். பல சினிமா பிரபலங்களை, எழுத்தாளர்களை, ஊடகவியலாளர்களை ‘தூக்கி’விட்ட அந்த ஆசிரியருக்கு ஏன் ஒரே ஒரு பெண்ணிடமிருந்துகூட இப்படியொரு நெகிழ்ச்சியான பதிவு வரவில்லை? இப்போது ஓய்வில் இருக்கும் ஆசிரியர் இதற்கான பதிலை அசை போடட்டும்.

இரண்டு மாத இடைவெளியில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் சிறப்பு நிருபர் பணிக்குச் சேர்ந்தேன். சிறப்பு நிருபர் என்றால், சிறப்பு செய்தி தொகுப்புகளை செய்வார்கள். ஆனால், பணியாற்றிய ஒரு வருடத்தில் ஒரு முறைகூட அந்த வேலை செய்யவில்லை. என்னுடைய பத்திரிகை அனுபவத்தில் மிக மிக கசப்பான அனுபவம் இங்கேதான் ஏற்பட்டது. சிறப்பு நிருபராக பணியில் சேர்க்கப்பட்ட நான், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பணியே தரப்படாமல் உட்கார வைக்கப்பட்டேன். சும்மா உட்கார்ந்திருக்கிறோமே என்கிற ஆதங்கத்தில் நானாக ஏதேனும் செய்தி எழுதி கொண்டுபோனால் அந்த ஆசிரியர் அந்த தாளை வாங்கி ஓரமாக வைத்துவிடுவார். பிற சிறப்பு நிருபர்களுக்கு சிறப்பு செய்திகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுப்பேன். அதை ஆசிரியரும் பார்ப்பார். அது தொலைக்காட்சியிலும் வரும். ஆனால், எனக்கு அப்படியொரு வாய்ப்பு தரப்படாது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஸ்க்ராலிங் எழுத பணிக்கப்பட்டேன். அதுவும்கூட ஃபிளாஷ் நியூஸ் எழுத விடமாட்டார். அவர் எதையோ எதிர்பார்த்தார் என்று மட்டும் புரிந்தது. அவருடைய சமிக்ஞைகளை என்னால் புரிந்தகொள்ள முடியாதபடியால் என்னை எழுதவே வராத, தண்டச் சம்பளம் வாங்கும் பெண் என்பதைப்போலவே ஆசிரியர் அறையில் அவமானப்படுத்துவார். நான் எழுதிய கவர் ஸ்டோரி ஒன்று பெயர் போடாமல், ஆனந்தவிகடனில் பணியிலிருந்து விலகியபின் வெளியாகியிருந்தது. சிறுபிள்ளைத்தனமாக ஆசிரியரிடம் ‘சார், இந்த கட்டுரையை எழுதியது நான்” என காட்டினேன். திரும்பவும் என்னை எதற்கும் லாயக்கில்லாதவள் போலவே பார்த்தார். என்னுடைய கனவுகள் தேய்ந்து, எதற்கும் லாயக்கில்லாதவள் என்கிற எண்ணம் எனக்குள்ளே ஓட ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகால பத்திரிகை சூழலில் எனக்குக் கிடைத்த வாய்ப்பில் சிறப்பாகவே எழுதியிருக்கிறேன். ஆனால், இங்கே இப்படி இருக்கிறோமே என்கிற எண்ணம் என்னை அலைகழித்தது.

என்னைப்போல, அவருடைய விருப்பத்துக்கு இணங்காத பெண்களை அவர் இப்படித்தால் அலைகழிக்க வைத்தார். பணியிடங்களில் நான் பார்த்த செக்ஸிஸ்ட் ஆண்கள் மிக மோசமானவர் அவர். அங்கிருந்து விலகிய சில ஆண்டுகளில் அவர் மீது ஒரு பெண் செய்தி வாசிப்பாளர் பாலியல் புகார் கொடுத்தார். கைதாகி சிறை சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து பணிக்கு அழைத்துக்கொண்டது சன் நிர்வாகம். metoo குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்களை பணிநீக்கம் செய்வதும் அவர்களுடம் பணிபுரிய மாட்டோம் என அறிவிப்பதும் உலகம் முழுக்க முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்ச்சூழலில் அதெல்லாம் நிகழ வாய்ப்பில்லை.

பெண்கள் படிக்கிறார்கள்; பணிபுரியும் கனவும் லட்சியமும் அவர்களிடம் இருக்கிறது. சிறு நகரங்களிலிருந்து கிராமங்களிலிருந்து பெருநகரை நோக்கி வருகிறார்கள். பெரும்பாலும் முதல் தலைமுறையாக முன்னேறி வருகிறது, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள்…இவர்களை ஆணாதிக்க பணிச்சூழல் பெரும்பாலும் விழுங்கிவிடுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகை பணிச்சூழலில் ஆணாதிக்க சூழலை தகர்த்திருந்தாலும் தமிழ் ஊடகங்களின் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. பின்புலத்துடன் இருக்கிறவர்கள் மட்டுமே ஊடகங்களில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்கிற சூழல் இருக்கிறது. பெண்களைப் பொறுத்தவரை திறமை என்பது இரண்டாம் பட்சமானது. பணியைப் பொறுத்தவரை 25 வயது வரைக்குமுள்ள பெண்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். தமிழ் ஊடகங்களில் பெண்கள் என சர்வே எடுத்தால் ஊடகங்களில் செக்ஸிஸ்ட் தன்மை வெட்ட வெளிச்சமாகத் தெரியும். வேளாண் பத்திரிகையில் பெண்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்காது. புலனாய்வு இதழ்களில் பணி வாய்ப்பு கிடைக்காது. ‘ஆண்பால்-பெண்பால்’ என தலைப்பிட்டு பெண் உரிமை பேசிய விகடன் குழுமத்தில்தான் இந்த நிலை. இன்னும் சொல்லப்போனால் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ‘அவள் விகடன்’ இதழின் ஆசிரியர் ‘ஸ்ரீ’ என்ற முகமூடியுடன் இயங்கும் ஒரு ஆண். இது எத்தனை பெரிய அயோக்கியத்தனம். விகடன் விருதுக்காக வாயைப் பிளக்கு எத்தனை பெண்ணுரிமை போராளிகள் இதைப் பற்றி கேள்வி எழுப்புவார்கள்?

ஆனந்த விகடன், சன் நியூஸ் தொலைக்காட்சியில் எனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையிலிருந்து மீண்டு வர எனக்கு காலம் பிடித்தது. குங்குமம் இதழில் எழுதிய கட்டுரைகள் குறித்து இப்போதும் நினைவு கூரும் நண்பர்கள் இருக்கிறார்கள். முகம் தெரியாதபோதும்கூட நீங்கள் எழுதுங்கள் என வாய்ப்பு தருகிறவர்கள் இருக்கிறார்கள். அவநம்பிக்கைகளின் ஊடாக நம்பிக்கையை வெளிப்படுத்தியபடி எப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இது எத்தனை பெண்களுக்கு சாத்தியமாகக்கூடும். பணியிட ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய கனவுகள் நசுக்கப்படுவதை எப்படி தடுத்து நிறுத்துவது? பெண் என்பதாலேயே எங்களுக்கு எந்தவித லட்சியங்களும் இருக்கக்கூடாதா? இத்தகைய சூழலில் metoo இயக்கம் பாலின சமத்துவம் கோரலில் ஒரு புதிய உரையாடலை தொடங்கியிருக்கிறது. அதனால்தான் அதை நான் நிபந்தனை இல்லாமல் ஆதரிக்கிறேன்.

கருப்பு இணையதளத்தில் வெளியான எனது கட்டுரை.

”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!”

”தெருவுக்கு ஒரு டீக்கடை இருப்பது போல பெண்கள் அமைப்புகளும் இன்று பெருகிவிட்டன. ஆனால், பெண்கள் தினத்தன்று கோலப் போட்டிகளும் சமையல் போட்டிகளுமே கோலாகலமான கொண்டாட்டமாக இருக்கும் அளவுக்குத்தான் சமூகத்தின் ‘பரந்து விரிந்த’ பார்வை இருக்கிறது. ஆண்களுக்குச் சமமான ஊதியமும் வேலையும் தரப்பட வேண்டும் என்பதற்காக கிளாரா ஜெட்கின் தலைமையில் மார்ச்- 8-ல் நடந்த புரட்சியை நினைவுகூரும் தினம்தான் பெண்கள் தினம். ஆனால், அதை தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்தலுக்குரிய தினமாக்கி, பெண்களை இன்னமும் பின்னுக்கு இழுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

33 சதவிகித இடஒதுக்கீட்டைக்கூடப் பெற்றுத் தர முடியாத ஓட்டுக் கட்சிகளால் ஒருபோதும் பெண் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.

பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை
புரட்சி இல்லையேல் பெண் விடுதலை இல்லை!’

இதுதான் எங்களின் முழக்கம். சமூகத்தில் சுரண்டப்பட்டுக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உறைந்துபோயிருக்கும் போர்க் குணத்தைத் தட்டி எழுப்புவதுதான் எங்கள் முதல் பணி. இதன் சாத்திய சதவிகிதத்தை வரும்காலம்தான் தீர்மானிக்கும்!” புரட்சி முழக்கமிடுகிறார்கள் பத்மாவதி, ரீட்டா, கீதா.

நக்ஸலைட்டுகள் என்ற முத்திரையோடு ‘பொடா’ சட்டத்தில் கைதாகி, இரண்டரை வருட சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தவர்கள் ‘புரட்சிகரப் பெண்கள் விடுதலை மையம்’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். அமைப்பின் செயலாளராக இருக்கும் பத்மாவதி அடித்தட்டு பெண்களிடையே அடிப்படைப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

‘எனக்குப் பூர்வீகம் ஆந்திரா. சென்னையில் என் பெரியப்பா வீட்டுக்கு படிப்பதற்காக வந்தேன். பெரியப்பாவுக்கு கம்யூனிஸ சிந்தனைகளில் ஆர்வம். அவரது இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டேன். ஐ.டி.ஐ. படிக்கும்போதிருந்து நேரடியான இயக்கப் போராட்டங்களில் கலந்துகொண்டேன். கம்யூனிஸத்தை, சோஷலிசத்தைச் சொல்கிற இயக்கங்களில்கூட பெண்களுக்குச் சமமான உரிமைகள் கிடைப்பதில்லை. இயக்கத்தில் உள்ளவர்கள் அவரவர்களுடைய வேலையை அவரவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஆண்கள் மட்டும் ஆணாதிக்கச் சிந்தனையில் இருந்து விடுபடாதவர்களாக புலம்பலோடுதான் அவர்களுடைய வேலைகளைச் செய்வார்கள். செயல்பட வேண்டிய தளங்களிலேயே மாற்றம் தேவை என்று சிந்தித்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான் நக்ஸலைட்கள் என்ற நற்சான்றிதழ்!

பொடா சட்டத்தின் அகோர வெறியை அத்தனை நெருக்கத்தில் எதிர்கொண்டது தகிக்க முடியாததாக இருந்தது. சிறையில் இருந்த காலங்களிலும் எங்கள் சிந்தனையை மழுங்கவிடாமல் இருந்ததன் விளைவாகத்தான் பெண்களுக்காகப் போராடும் இந்த அமைப்பை உருவாக்கினோம்” என்கிறார் பத்மாவதி.

கணவருடைய கம்யூனிஸ சிந்தனையில் ஈர்க்கப்பட்டு இயக்கச் செயல்பாடுகளில் இணைந்தவர் வாழப்பாடியைச் சேர்ந்த ரீட்டா. திருமணமான சில மாதங்களிலேயே பொடா வாசம்!

”கைதாகிச் சிறைக்குப் போன பல மாதங்களுக்குப் பிறகுதான் நாங்கள் ஏன் கைது செய்யப்பட்டோம் என்ற விவரத்தையே எங்களுக்குத் தெரியப்படுத்தினார். எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் சிறை நல்லதொரு ஆசான். அது எங்களுக்குப் பல விஷயங்களைக்கற்றுக் கொடுத்தது. தளராத தன்னம்பிக்கையையும், உலராத ஊக்கத்தையும் எங்களுக்குள் ஊட்டின பொடா நாட்கள்!” என்கிறார் ரீட்டா.

சேலத்தைச் சேர்ந்த கீதாவும் தன் கணவர் மூலம் இயக்கத்தில் இணைந்தவர். ”தலித் என்பதால் தனிக் கோப்பையில் தேநீர் வழங்கியவர்களிடம் சின்ன வயதிலேயே நான் சண்டைக்குப் போனதுண்டு. கலப்புத் திருமணம் செய்துகொள்வதை லட்சியமாகவே வைத்திருந்து, அப்படியே செய்தும் காட்டினேன். எனக்குப் போராடும் துணிவு இருந்தது. போராடினேன். போராடிக்கொண்டு இருக்கிறேன். துணிவு இருந்தும் அறியாமையில் தவிக்கும் பெண்களை விழிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் இப்போதைய லட்சியம்!” எனும் கீதா, இரண்டு குழந்தைகளுக்குத் தாய்.

”பெண்களின் சமூகச் சமத்துவத்துக்காகப் போராட வந்த எங்களுக்குப் பெண்களின் உரிமைகளை மீட்டுத் தருவது முதன்மையான விஷயமாகப்பட்டது. அதை உரக்கச் சொல்லத்தான் பெண்கள் தினத்தில் புரட்சிப் பாடகர் கத்தார் தலைமையில் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். ஒன்றுமே இல்லாத விஷயத்துக்காகப் பத்திரிகை அலுவலகத்தைக் கொளுத்தியவர்களால் கெட்டுப் போகாத சட்டம் – ஒழுங்கு எங்களால் கெட்டுப்போய்விடும் எனப் பயந்து, பொதுக் கூட்டத்துக்குத் தடை விதித்தது தமிழக அரசு.

ஆணாதிக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலே, ‘நாங்கள் ஆண்களுக்கு எதிரானவர்கள்’ என்று குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் பெண்ணியவாதிகளும் அல்ல, ஆண்களுக்கு எதிரானவர்களும் அல்ல, நாங்கள் கோருவது எல்லாம் ஆண்களுக்குச் சமமான வாழ்க்கையை, சுதந்திரத்தை. அதை முன்னெடுக்கத்தான் தோழர்களாகிய ஆண்களையும் துணைக்கு அழைக்கிறோம்!” – ஒரே குரலில் முழங்குகிறார்கள் மூவரும்!

ஆனந்த விகடன் 01-10-08 இதழில் நான் எழுதி வெளியானது

இலக்கிய உலகின் மர்ம யோகி!

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

ன் கவிதையைப் போலவே காற்றின் திசை வழி பறந்து, எங்கெங்கெல்லாமோ வாழ்ந்து, எப்படியோ முடிந்துபோன வாழ்க்கை கவிஞர் பிரமிளுடையது. இலக்கிய உலகின் மர்மயோகி. சுடும் விமர்சனங்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய விமர்சனங்களின் தாக்கத்தைத் தாக்குப்பிடிக்கமுடி யாமல் பிரமிளின் படைப்பாற்றல் குறித்து இலக்கியப் பரப்பில் போதுமான விவாதங்கள் நிகழாமலேயே இருக்கின்றன. ஏப்ரல் 20ல் தொடங்கும் பிரமிளின் 70வது பிறந்த தினத்தைக் கொஞ்சம் விமரிசையாகக் கொண்டாட இருக்கிறார் அவரது நண்பர் காலசுப்ரமணியம். பிரமிளின் புத்தகங்களை மறுபதிப்பு செய்யவும் அவரது ஓவியங்களைக் கண்காட்சிப்படுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன.

Piramil

அதுவரை தமிழில் வந்துகொண்டு இருந்த கவிதைகளிலிருந்து மாறுபட்டு, பல பரிமாணங்களைக் கொண்டதாக இருந்தன பிரமிளின் கவிதைகள். நெருப்பைத் தீண்ட அஞ்சுவதைப் போல இலக்கியவாதிகள் அவரை நெருங்கத் தயங்கினார்கள்என்கிறார் காலசுப்ரமணியம்.

 

இலங்கை திரிகோணமலையின் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவருக்குப் பள்ளி இறுதி வரைதான் படிப்பு சாத்தியப்பட்டது. ஆனால், அங்கிருந்தபடியே அவர் தமிழ்நாட்டு இலக்கிய நடப்புகளை அறிந்துகொண்டு இருக்கிறார். 19 வயதிலேயே இலக்கிய இதழ்களில் அவர் படைப்புகள் பிரசுரமாகத் தொடங்கின. ஓவியத்தின் மீதிருந்த ஆர்வத்தால், ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்ல் ஓவியம் கற்றிருக்கிறார். ஒரே உறவான அம்மாவும் இறந்த பிறகு, இந்தியா வந்த பிரமிள், மதுரை, சென்னை, டெல்லி எனச் சுற்றியலைந்துவிட்டு சென்னையிலேயே தங்கிவிட்டார். பிரான்சுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியா வந்தவருக்கு அது இறப்பு வரை சாத்தியப்படவில்லை.

’’காசுக்காக எழுதமாட்டேன்’’ என்று பிடிவாதமாக இருந்தார். நண்பர்களின் உதவியில்தான் வாழ்ந்தார். ஜோதிடத்திலும் நியூமராலஜியிலும் அதிகமான நம்பிக்கை. அடிக்கடி பெயரை நியூமராலஜிப்படி மாற்றிக்கொண்டே இருப்பார். தர்மு சிவராம், டி.அஜித்ராம் பிரேமிள், பிரமிள் என அவர் மாற்றிக்கொண்ட பெயர்களின் பட்டியல் நீளமானது

 

 Piramil's painting

அபாரமான விமர்சனப் பார்வை உடையவர். போலித்தனமான இலக்கியவாதிகளை எப்போதும் விமர்சித்தபடியே இருப்பார். பலருக்கும் புரிபடாமல் இருந்த மௌனியின் எழுத்து எப்படிப்பட்டது என்று இவர் எழுதிய கட்டுரைதான், மௌனியைப் பலருடைய வாசிப்புக்குக் கொண்டுசென்றது. இவருடைய ‘கடலும் வண்ணத்துப்பூச்சியும்’, ‘கண்ணாடியுள்ளிருந்து’ கவிதைகள் அபாரமான வீச்சு உடையவை. ஒரு மாத காலம் காய்ச்சலால் அவதிப்பட்டவரை நண்பர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போதுதான் அவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. வீரியமான பிரமிள் விரலசைக்க முடியாமல் செயலிழந்து கிடந்தார். எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் தனது 56வது வயதில் இறந்தார். இறப்புக்குப் பிறகும் கவனிக்கப்படாத கலைஞன் பிரமிள்!” வருத்தத்தோடு முடித்தார் காலசுப்ரமணியம்.

ஆனந்த விகடன் 23-04-08 இதழில் நான் எழுதிய கட்டுரை…

 

 

 

 

மெட்ரோபாலிடன் நகரங்களில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஆண்களின் சகிப்பின்மைதான் காரணம்!

ஷோபா டே… இந்தியாவின் ‘பெஸ்ட் செல்லர்’ எழுத்தாளர். ‘சூப்பர் ஸ்டார் இந்தியா’ என்கிற புத்தகத்தை சென்னையில் வெளியிட வந்திருந்த ஷோபாவைச் சந்தித்தோம்…
”ஒரு பக்கம் பெண்களுக்கு அதீதமான சுதந்திரம் கிடைக்குது. இன்னொரு பக்கம் டெல்லி, மும்பை போன்ற மெட்ரோபாலிடன் நகரங்களில்கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாயிட்டே வருது. இதற்கு என்ன காரணம்?”
”இத்தனை ஆயிரம் வருடங்களாக வீட்டுக்குள் முடக்கப்பட்டு இருந்த பெண்கள் வெளியே வர ஆரம்பித்திருப்பதில் ஆண்களுக்கு நிறைய வருத்தம். பெண்கள் தங்களோட எல்லா வேலை களையும் பறிச்சுக்கிறாங்க என்கிற எண்ணம் ஆண்கள் மனசில் கசப்பா படிஞ்சுபோயிருக்கு. பெண்களோட சுதந்திரமான சிந்தனை அவங்க உடை விஷயத்திலும் வெளிப்படுது. வேலைக்குப் போகிறதால பொருளாதார ரீதியாகவும் வலுவா இருக்காங்க. தங்கள் அம்மா போலவோ, பாட்டி போலவோ நடத்தப்படுவதை எதிர்க்கிறாங்க. ஆண்களால இதைச் சகிச்சுக்க முடியலை. பெண்களைவிட இயல்பிலேயே உடலால் பலப்பட்டிருக்கிற ஆண்கள் தங்களோட கோபத்தை, பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வது மூலமாகத் தீர்த்துக்கிறாங்கன்னுதான் நான் நினைக்கிறேன். மும்பையில புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது இரண்டு பெண்கள்கிட்ட அத்துமீறி நடந்துக்கிட்ட அந்த கும்பலோட மனநிலையும் இதுதான். மற்ற பல விஷயங்களோடு ஆண்களின் இந்த மனநிலையைச் சமாளிக்கவும் பெண்கள் கத்துக்கணும்.”
”நகர்ப்புறம் சார்ந்த பிரச்னைகளையே நாம் அதிக அளவுல பேசிக்கிட்டிருக்கோம். கிராமங்களில் தீர்க்க முடியாமல் நாளுக்கு நாள் சாதிப் பிரச்னைகள் வளர்ந்துக்கிட்டே இருக்கு. அதற்கு சமீபத்திய உதாரணம் உத்தப்புரம். இதுபோன்ற பிரச்னைகளை நீங்கள் கவனிக்கிறதுண்டா?”
”கிராமங்களில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் சாதி வேற வேற பேரோட இருந்துக்கிட்டு இருக்கு. நம்மோட தேசிய அரசியலே சாதியை அடிப்படையா வெச்சு தானே இருக்கு? சாதி அடிப்படையில்தானே தேர்தல்ல வேட்பாளர்களுக்கு சீட் கொடுக்குறாங்க? இப்போ இருக்கிற இளம் தலைமுறைகூட சாதியை விரும்புதே! இந்தச் சாதியில், இன்ன உட்பிரிவுல உள்ள வரன் தான் வேணும்னு சாதியை வெளிப்படையா போட்டுக் காட்டுற எத்தனை விளம்பரங்களைத் தினமும் நாம் பார்க்கிறோம்! கலப்புத் திருமணங்கள் மூலமாதான் சாதி ஒழியும். ஆனா, எத்தனை இளைஞர்கள் சாதியை மறுத்து திருமணம் செய்ய முன்வருவார்கள்? சமூகத்தோட முன்னேற்றதுக்கு சாதி என்பது பெரிய தடைக்கல் என்பதை சாதியைத் தூக்கிப் பிடிக்கிறவங்க உணரணும்!”
”நீங்க மகாராஷ்டிரத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். ‘வடமாநிலத்தைச் சேர்ந்தவங்க மும்பையைவிட்டு வெளியேற வேண்டும்’னு தொடர்ந்து ராஜ் தாக்கரே சொல்கிறாரே உங்களுக்கு இதில் உடன்பாடு உண்டா?”
”எனக்கு ராஜ் தாக்கரேவை நன்றாகத் தெரியும். ரொம்ப ரொம்பப் புத்திசாலியானவர். அவரோட புத்திசாலித்தனத்தை அரசியல்ல காட்ட நினைக்கிறார். புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்கிற அவர் மாநில, தேசிய அளவுல தன்னை நிலைப்படுத்திக்கிறதுக்காகச் செய்த தந்திரம் இது. ஆனா, அதுக்கு மகாராஷ்டிரத்துல ஒரு சதவிகித ஆதரவுகூடக் கிடைக்கலை. மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவங்க மீது எந்தவிதமான தாக்குதலும் இதுவரைக்கும் நடக்கலை. இனிமேலும் நடக்காதுங்கிறதுதான் உண்மை!”
”நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்கும்னு நம்பறீங்களா?”
”எனக்கு இட ஒதுக்கீட்டில் சுத்தமா நம்பிக்கையில்லை. அது பெண்களுக்கான ஒதுக்கீட்டுக்கு மட்டுமல்ல, சாதி ரீதியான ஒதுக் கீட்டுக்கும் பொருந்தும். நாடாளுமன்றத்தில் அந்த இடத்துக்குப் பொருத்தமான பெண்கள்தான் போகணும். இட ஒதுக்கீடு கொண்டு வந்தா, ஏற்கெனவே அந்த இடத்துல இருந்துட்டிருக்கிற ஆண் தன் மனைவியையோ, மகளையோ கொண்டு வருவான். பின்னாடி இருந்து அவளை இயக்குவான். ஜனநாயகத்துக்கு இது ஆரோக்கியமான விஷயமா இருக்காது!”
”உங்கள் குடும்பம் பற்றி..?”
”கணவர் திலிப். அன்பா, அறிவா ஆறு குழந்தைகள். ஆறு பேரும் அவங்களுக்குப் பிடிச்ச வேலைகள்ல செட்டிலாகிட்டாங்க. மூத்தவனுக்கு 34 வயசாகுது. ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகிடுச்சு. அடுத்தடுத்து ரெண்டு பேருக்குத் திருமணம் ஆகப்போகுது. உலகத்திலேயே எனக்குப் பிடிச்சது என் குழந்தைகளுக்கு அம்மாவா இருக்கிறதுதான்!’’
2008ல் நான் பணியாற்றிய ஆனந்த விகடன் இதழுக்காக எடுத்த நேர்காணல் இது.
நன்றி: ஆனந்த விகடன்

“கோர்வையாக எழுதுகிறவர்களெல்லாம் பத்திரிகையாளர் ஆகிவிட முடியாது!” – ஜெயராணி

நான் ஜர்னலிஸம் மாணவி. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் படித்தேன். பேசுவதும் பழகுவதும் எழுதுவதும் பள்ளி நாட்களிலேயே எனக்கு இயல்பாகவே வந்தது. பட்டப்படிப்பு முடித்ததுமே நாளிதழ் ஒன்றில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது என்றாலும் ஜர்னலிஸம் படித்துவிட்டுதான் பத்திரிகையாளராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். வாழ்வில் இதுவரையிலும் எடுத்த மிகச் சரியான முடிவுகளில் அதுவும் ஒன்றென தோன்றுகிறது. எனக்கான எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்துவிட்டது ஜர்னலிஸம் படிப்புதான். புகைப்படக்கலையையும் அங்குதான் கற்றுக் கொண்டேன்.

தூக்குவதற்கு சிரமமான நிக்கான் மெட்டல் பாடி கேமராவை வைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றிய நாட்கள் தான் என் எல்லா பயணங்களுக்கும் மூலம்.

உலகமென்றால் அது வீட்டின் நான்கு சுவர்தான் என்று கற்றுக்கொடுத்த மிக கட்டுப்பாடானக் குடும்பத்திலிருந்து கற்பிதத்திலிருந்து விடுபட்டு என் கால்களையும் சிந்தனையையும் சுதந்திரப்படுத்திக் கொண்டேன்.

நடந்து நடந்து இவ்வுலகைக் கடந்துவிடும் பேராவலில் சுற்றிய நாட்கள் அவை.     பயணமும் அதில் கிடைத்த அனுபவங்களும்தான் என்னை செதுக்கியது.

கோர்வையாக எழுத வருகிறவர்கள் யாரும் செய்தியாளராகிவிட முடியும் என்றாலும்.. பத்திரிகை அறம், சுதந்திரம் போன்ற அடிப்படை விஷயங்களை கற்றுத் தேர்ந்தது ஜர்னலிஸம் படித்த அந்த இரண்டாண்டுகளில்தான். என்ன மாதிரியான செய்தியாளராக இயங்கப் போகிறோம் என்று புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக என் கற்றல் காலம் அமைந்தது. அதற்காக, ஜர்னலிஸம் படித்தவர்கள் எல்லோருமே பத்திரிகை அறத்தை மீறாதவர்களாக இருப்பார்கள் என்றோ படிக்காதவர்கள் எல்லோரும் அறத்தை புறக்கணிக்கிறவர்கள் என்றோ சொல்ல வரவில்லை.

பத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் இன்று இருக்கிற நிலையில், ஊடக அறம் பற்றின புரிதலோ விழிப்புணர்வோ இல்லையென்றால் நிச்சயம் சுரணையற்ற செய்தியாளராகிவிட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் புதியவர் ஒருவருக்கு செய்தி எழுத கற்றுத் தரும் ஊடகங்கள் ஒருபோதும் அறத்தை போதிப்பதில்லை. அதனால்தான் பெரும்பாலும் உரிமைகளை பாதிக்கிற செய்திகளாகவே நாம் படிக்கவும் பார்க்கவும் கிடைக்கின்றன. ஜர்னலிஸம் படிக்கிறவர்களுக்கு பத்திரிகை அறம் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு இயல்பாக அமைகிறது. பின்னர் பணி காலத்தில் அதை செயல் படுத்த வேண்டுமா வேண்டாமா என்ற முடிவு அவரவர் கைகளில். கற்றல் வழி நடத்தல் என்பது என் பிடிவாதம் என்பதால் இந்த பத்தாண்டுகளில் பத்திரிகை அறத்தை கேள்விக்குள்ளாக்குகிற எந்த செய்தியையுமே நான் எழுதவில்லை.

எழுத்து மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தேன் என்று சொல்வதற்கில்லை. அதனால்தான் பத்திரிகை துறையை தேர்ந்தெடுத்தேன் என்று சொன்னால் அது பொய். தனிப்பட்ட முறையில் என் எல்லா உணர்வுகளுக்கும் உகந்ததாக இந்த துறை அமைந்தது. ஒவ்வொருவருக்கும் அவரவரரின் திறமைக்கும் குணத்திற்கும் ஏற்ற வேலை என்று ஏதாவது இருக்குமில்லையா? என் குணத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்தியது பத்திரிகைத் துறை. காரணம் எழுத்து, புகைப்படம், பயணம் என்ற மூன்று அற்புதமான விஷயங்களையும் என்னால் இங்கு செயல்படுத்த முடிந்தது.  விரும்பியதையே தொழிலாக, வேலையாக செய்வது எத்தனை சுகம்! எத்தனையோ இன்னல்களுக்கிடையில் அந்த சுகத்தை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

எல்லா நவீன துறைகளைப் போலவும், பெண்கள் ஊடகப் பணிக்கு வருவதற்கு குடும்பங்கள் தடை போடுகின்றன என்பது உண்மைதான். சில ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே வசிக்கக்கூடிய கிராமம் ஒன்றிலிருந்து சென்னை நோக்கிய என் பயணம் அத்தனை எளிதானதாக அமைந்துவிடவில்லை. பெரும்பாலான பெண்களுக்கு இந்த சவால் இருக்கிறது. இந்த சவால்களை ஏதாவது இயக்கங்கள் வந்துதான் எதிர்கொள்ள வேண்டும் என்றில்லை. தடைகளைத் தாண்டும் மனப் பக்குவத்தை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது. ஊடகத் துறையில் பெண்கள் முதல் தலைமுறையாக காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த கட்டுப்பாடுகளோ அடக்குமுறைகளோ இன்று பெருமளவில் தளர்த்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றும் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கு என்று பேசிக் கொண்டிருப்பது அபத்தம். இந்த மாதிரியான குறுகிய விவாதங்களை நாம் கடந்தாக வேண்டும்.

பெண்களுக்கிருக்கும் சவால் என்பது எல்லாத் துறைகளுக்கும் பொதுவான ஒன்று. கல்வியறிவு பெற்று பணிபுரியத் தொடங்கிய காலகட்டத்தில் பெண்களுக்கான பிரத்யேக வேலைகளில் ஒன்றாக ஒதுக்கப்பட்டது ஸ்டெனோகிராபர் பணி. அந்த காலக் கட்டத்தில் வந்த திரைப்படங்களில் பார்த்தால் ஸ்டெனோகிராஃபர்கள் எப்போதும் மேனேஜர்களின் மடியிலேயே உட்கார்ந்திருப்பதைப் போலவேதான் காட்சிகளை அமைத்தார்கள். அன்றைய தேதிக்கு நவீன துறையாக இருந்த ஸ்டெனோகிராஃபி பணிக்கு பெண்கள் அதிகளவில் வரத் தொடங்கினார்கள். திறமையால் வந்தார்கள் என்பதை விடவும் வயதையும் அழகையும் முன்னிறுத்தி பாலினத்தை தவறாக பயன்படுத்தியதாலே பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக அப்போது நம்பப்பட்டது. அதை தான் திரைப்படங்களில் காட்சிபடுத்தினார்கள்.

வெற்றிகரமான செயல்படும் ஒரு பெண் திறமையால் அதை சாதித்திருக்கமாட்டார் என்று நம்புவது இந்த சமூகத்தின் பொது புத்தி. இந்த பொது புத்திதான் இன்று ஊடகங்களிலும் நிலை கொண்டிருக்கிறது.

பெண்களின் திறமையை புறக்கணிப்பதிலும் சாதனைகளை இழிவுபடுத்துவதிலும் ஆண்கள் அளவிற்கு (கூடுதலாகவே கூட) பெண்களும் ஈடுபடுகிறார்கள்.
ஊடகத் துறையில் பணிபுரியும் பெண்கள் சம அளவில் பெண்களாலும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். போட்டியும் பொறாமைகளும் இருக்கிற வரை இந்த நிலை நிலையானது என்றே தோன்றுகிறது. அதனால் அதிகபட்ச மன உறுதியை வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இன்று பெண்களுக்கிருக்கும் சவால்களுக்கு ஒத்த அளவிலான பிரச்சனைகள் ஆண்களுக்கும் இருக்கிறது. அதற்கு காரணம் ஊடகத்துறையில் மேலோங்கி இருக்கும் பண்ணையார்த்தனம். ஆண்களும் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்களா என்று  மிக உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் மன உளைச்சலை தரக் கூடிய மற்ற எல்லா துயரங்களையும் ஆண்களும் எதிர்கொள்கிறார்கள். பிரச்சனை ஆண் பெண் என்ற அடிப்படையில் வருகிற பாலின பாகுபாடு அல்ல. புரொபஷனலிஸம் என்று சொல்லக்கூடிய தொழில் நேர்த்திக்கு இருக்கும் தட்டுப்பாடு. ஒரு ஊழியரை எப்படி நடத்துவது அல்லது கையாள்வது என்ற அடிப்படை நாகரிகம் தெரியாத மேலதிகாரிகள் எல்லா துறையிலும் இருக்கிறார்கள். ஊடகத்துறையிலும் இருக்கிறார்கள். ஒரு அலுவலகத்தில் 10 பேர் பணிபுரிகிறார்கள் என்றால் அந்த 10 பேரும் ஒரே மாதிரியான அல்லது சம அளவிலான திறமைகளை கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. யார் யாருக்கு என்னென்ன திறமை இருக்கிறது என்று கண்டறிவதும் அவரை குறிப்பிட்ட அந்த வேலைக்கு பயன்படுத்துவதும் தலைமைப் பண்பின் முக்கிய அம்சம். ஊழியர்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகளை வழங்குவதால் மட்டுமே எந்த ஒரு நிறுவனமுமே அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்.

ஊடகங்களில் ஆண்களின் கை மேலோங்கி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. அதனால் செய்திகளில் மிக மோசமாக வெளிப்படும் ஆண் நெடி குமட்டலை உண்டாக்குவதாக இருக்கிறது!. தப்பித் தவறி கூட ஒரு பெண் செய்திகளில் அடிபட்டுவிடக் கூடாது. குற்றச்செய்திகள் என்றால் நிலைமை மிக மோசம். ஆண் நிருபர்களின் அதிகபட்ச கற்பனைத் திறனும் வக்கிரங்களும் வெளிப்படுவது பெண்கள் சம்பந்தப்பட்ட செய்திகளில்தான்.

பெரும்பாலான செய்திகள் இப்படி அந்த நேர கிளுகிளுப்பிற்கும் பரபரப்பிற்காக மட்டுமே எழுதப்படுகின்றன. பத்திரிகைகளில் நிலைகொண்டிருக்கும் ஆண் மொழியும், மேலோங்கியிருக்கும் ஆண் மனோபாவமும் மிகவும் மோசமான பாதிப்புகளை சமூகத்தில் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. எவ்வளவோ விமர்சனங்களுக்கு உள்ளான போதும் இன்னும் அந்த பிரபல நாளிதழ் செய்திகளில் அடிபடும் பெண்களை அழகி என்று குறிப்பிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. பெருமளவில் பெண்கள் ஊடகப்பணிக்கு வந்தால் இந்த அவலம் மாறுமா என்று கேட்டால் அதுவும் சந்தேகம்தான். ஏனென்றால் வருகிற எல்லோருமே ஆண் பெண் பாரபட்சமில்லாமல் கண்மூடித்தனமாக வழக்கமான இந்த எழுத்துமுறைக்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் சில பத்திரிகைகளில் பெண்களும் ஆண் மொழியில் ஆண் மனோபாவத்துடன் எழுதுவதை பார்க்க முடிகிறது. தன்னளவில் மிக நேர்த்தியான மொழியாற்றலையும், சமூகப் பார்வையையும் செய்தி எழுதும் நுணுக்கத்தையும்  கொண்டிருந்தாலே ஒழிய இதுபோன்ற வக்கிரங்களில் இருந்து தப்பிப்பது கடினம். ஜாதி, மத, பாலின அடையாளங்களைக் கடந்த சமத்துவ மொழி ஊடகங்களின் இன்றைய மிகப் பெரியத் தேவையாக இருக்கிறது.   வேண்டும் க்ண்க்இன்னும் அந்த பிரபல நாளிதழ் செய்தி பலரை ஏமாற்றி பணம் பறித்தார் அதனால் அவர் செத்துப் போக்

திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவது போலவோ அல்லது இந்த சமூகம் நம்பிக் கொண்டிருப்பதைப் போலவோ ஜர்னலிஸ்ட்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல.
துப்புரவுப் பணியைப் போலத் தான் ஊடகத்துறையும். ஒரு துப்புரவுப் பணியாளருக்கு இருக்கும் பொறுப்பை விடவும் அதிகமாக ஜர்னலிஸ்ட்களுக்கு பொறுப்புணர்வு இருப்பதாக நான் நம்பவில்லை. முன்னவர் புற சுகாதாரத்திற்கும் பின்னவர் அக சுகாதாரத்திற்காகவும் பணி புரிகிறார்கள் அவ்வளவே வித்தியாசம். ஆனால் இங்கு நிறைய பேர் ஜர்னலிஸ்ட் என்று மார்தட்டிக் கொள்வதில் ஒரு வறட்டு கவுரவத்தைப் பார்க்க முடிகிறது. இது தேவையில்லாதது. வேறெந்தத் துறையில் வேலை செய்கிறவர்களைப் போல பத்திரிகையாளர்களும் தங்களை சாதாரண மனிதர்களாக முதலில் கருதத் துவங்க வேண்டும். யாரும் ஜர்னலிஸ்ட்டாகவே பிறப்பதில்லை. மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் போல பத்திரிகையாளர்களுக்கு கல்வி தகுதி கட்டாயமாகத் தேவைப்படாத நிலையில் எழுதத் தெரிகிறவர்களும் பேச முடிகிறவர்களும் பத்திரிகையாளராகிவிட முடிகிறது. கல்வித் தகுதி அவசியமில்லாத ஊடகத் துறைக்குத் தேவைப்படுவது மனித நேயமும், சமூக அறிவும் பொறுப்புணர்வும் மட்டுமே! செய்தி எழுதுதலின் நுணுக்கங்கள் அரசியல் நிகழ்வுகள், பொது அறிவு விஷயங்களை எல்லாம் களத்தில் இறங்கியவுடன் காலப் போக்கில் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மேலே குறிப்பிட்ட மூன்று விஷயங்களும் உள்ளார்ந்தவை. எல்லா தனி நபர்களுக்கும் அது இருக்க வேண்டும் என்றாலும் பல தரப்பினரையும் சென்று பறைசாற்றுகிற பணியைச் செய்கிற ஊடகவியலாளர்களுக்கு கூடுதலாக இருந்தாக வேண்டும்.

மனித நேயத்திற்கும், உரிமைகளுக்கும் சமத்துவத்திற்கு எதிரான வார்த்தைகளை இதுவரையும் நான் எழுதவில்லை. இனிமேலும் எழுதமாட்டேன்.  என் எழுத்துக்களும் கருத்துக்களும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். அது அன்பு. எல்லோருக்குமான அன்பு. குழந்தைகள், திருநங்கைகள் ஆண், பெண், இன்ன மொழி பேசுபவர், இந்த ஊர்க்காரர், நாட்டுக்காரர், சாதி, மதம் என எந்த பாகுபாடுமின்றி வரக்கூடிய இயல்பான அன்பு. இந்த உலகத்தின் அதிகபட்சத் தேவை அதுதான். கூட்டம் போட்டு, மேடையில் முழங்கினால்தான் என்றில்லை, தன்னளவில் எல்லோரும் அன்பானவர்களாக, உரிமை மீறல்களை அனுமதிக்காதவர்களாக இயங்கிக் கொண்டிருந்தாலே போதும். இவ்வுலகத்தின் அவலங்கள் முடிவுக்கு வந்துவிடும். சமூகப் பொறுப்புணர்வோடு பணிபுரியும் எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.
அன்பும் உண்மையும் நேர்மையும் நிச்சயம் வெற்றி பெறும். அவை அதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ளுமே தவிர ஒருபோதும் தோற்றுப்போவதில்லை.

ஜெயராணி…
ஆறாம்திணை என்ற இணையதளப் பத்திரிகையில் பணியைத் தொடங்கி, குமுதம், விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளில் புகைப்பட நிருபராகவும், உதவி ஆசிரியராகவும் சுமார் ஏழாண்டுகள் வேலை பார்த்தவர். தற்போது சன் செய்திப் பிரிவில் சிறப்பு செய்தியாளாராக பணியாற்றும் ஜெயராணி, நிஜம் நிகழ்ச்சியில் செய்தியாளராகவும் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் இருக்கிறார். மெயின் ஸ்ட்ரீம் ஊடகத்தில் இயங்கினாலும் பெண்கள், குழந்தைகள் திருநங்கைகள், தலித் மக்கள், சிறுபான்மையினருக்காகத் தொடர்ந்து எழுதி வருகிறார். தலித் முரசு போன்ற மாற்று இதழ்களிலும் தொடர்ந்து எழுதுகிறார். ஆனந்த விகடன், அவள் விகடன், தீராநதி, புது விசை, முற்றுகை ஆகிய இதழ்களில் கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்திருக்கின்றன.

‘இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ஜர்னலிஸ்ட்’ அமைப்பு ‘ஆனந்த விகடனில் விகடனில’ வெளியான ”இளைப்பாற விரும்புகிறோம்” கட்டுரைக்காக சிறப்புப் பாராட்டுச் சான்றிதழை வழங்கியது. (2004 )

‘இந்தியா டுடே’ பத்திரிகை ‘இந்தியாவின் 38 முக்கியமான பெண்களில்’ ஒருவராக தேர்ந்தெடுத்தது (2005)

ஊடகத்துறையில் தொடர்ந்து ஆற்றி வரும் பங்கிற்காக ‘அன்னைத் தெரஸா பல்கலைக்கழக’த்தால் ‘சிறந்த பத்திரிகையாளரா’க கவுரவிக்கப்பட்டார். (2009)

பின்குறிப்பு : எனக்குப் பிடித்த பத்திரிகையாளர் என்ற வகையில் ஜெயராணியிடம்  நேர்காணல் எடுக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அது நிறைவேற காலம் இன்னும் கணியவில்லை. பிடித்த பத்திரிகையாளர் என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அது நேர்காணலை எழுதும்போது சொல்லுவேன்.
இங்கே பிரசுமாகியிருக்கும் கட்டுரை நான் எழுதியது அல்ல. பெண்ணே நீ மாத இதழுக்காக ஜெயராணி எழுதியது. மார்ச் பெண்ணே நீ இதழில் எடிட் செய்யப்பட்டு வெளியான கட்டுரையின் முழுவடிவத்தை இங்கே கொடுத்திருக்கிறேன்.
பெண்ணே நீ இதழுக்கு எழுதிய கட்டுரையை இங்கே பிரசுரித்தமைக்காக பெண்ணே நீ க்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டுரையில் வெளியாகியிருக்கும் கருத்துக்களை ஒட்டி ஜெயராணி, சுகிதா, நான் மூவருமாக நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம்.   அதனாலே இந்தக் கட்டுரையை பிரசுரிப்பதில் ஆர்வம் கொண்டேன். ஜெயராணியும் அனுப்பித் தந்தார். விஷயமுள்ள கட்டுரை எல்லாதரப்பையும் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்.