இந்தியாவின் நம்பர்-1 தீவிரவாத அமைப்பு ஆர்எஸ்எஸ்தான்!

இந்தியாவின் நம்பர் ஒன் தீவிரவாத அமைப்பு ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்புதான் என்கிறார் மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் ஐஜி முசரிஃப் தெரிவித்திருக்கிறார். டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஆர் எஸ் எஸின் குற்றச்செயல்களை குற்றச்செயல்கள் மீதான நடவடிக்கைகளை பட்டியலிட்டிருக்கிறார்.

* ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்களைப் பயன்படுத்தி 13 தீவிரவாத குற்றச்செயல்களில் ஆர்எஸ்எஸ் ஈடுப்பட்டிருக்கிறது.

* பஜ்ரங் தள் செய்த குற்றங்களையும் சேர்த்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை 17-ஆக உயரும்.

* 2007-ஆம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மசூதி குண்டுவெடிப்பு

* 2006 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் மாலேகான் குண்டுவெடிப்பு

* 2007 -ஆம் ஆண்டு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்ளிட்டவை ஆர் எஸ் எஸ் மீது குற்றம்சாட்டு நிரூபணமாகி குற்றப்பத்திரிக்கை தாக்குதலான 17 வழக்குகளில் முக்கியமானவை.

* ஆர்எஸ்எஸ் ஒரு தீவிரவாத அமைப்பு, அரசியல் அதிகாரத்தால் அது ஒன்றும் சாதிக்கப் போவதில்லை.அவர்கள் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தங்களுடைய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

* ஆர்எஸ்எஸ், சாதீய படிநிலைகளுடன் இயங்குகிறது. அதாவது அவர்களுடைய இயங்குதல் என்பது ஒடுக்குதல், அடிமைப்படுத்துதல் என்பதாக இருக்கிறது.

* இப்போதுதான் நாட்டில் சகிப்பின்மை அதிகரித்துவருவதாகச் சொல்வது தவறு, அந்த வேலைகள் எப்போதும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

* இந்து தீவிரவாதத்தைக் கண்டறிந்து சொன்ன ஹேமந்த் கார்கரே மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு காரணமாக இருந்தது இந்திய உளவுத்துறைதான்.

அணமையில் மும்பை தாக்குதல் நினைவு நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தாங்குதலில் உயிரிழந்த ஹேமந்த் கார்கரே உள்ளிட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முசரிஃப் இந்த விஷயங்களைப் பேசினார்.

‘ஹேமந்த் கார்கரேவைக் கொன்றது யார்?’ என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார் முசரிஃப்.

 

 

இலங்கையில் காலூன்றும் ஆர்எஸ்எஸ்

rss

தனது அகண்ட பாரதக் கனவை நிறைவேற்றும் முனைப்பில் இந்துத்துவ அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் முனைப்புடன் உள்ளதை செய்திகள் சொல்கின்றன. ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பல்கலைக்கழகத்தின் இந்து மாணவர் ஒன்றிய விழாவில் இராமகிருஷ்ணா மிஷன் சார்பில் கலந்துகொண்டார் இந்திய நாடாளுமன்ற எம்.பி. தருண் விஜய். ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய செயல்பாட்டாளராக இருக்கும் பாஜக எம்பியின் இந்தப் பயணம், இந்து மாணவர் அமைப்பின் மூலம் இலங்கை தமிழர்களிடையே இந்துத்துவத்தை நிலைநிறுத்தும் முயற்சி என்று இலங்கையைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

தருண் விஜய்யின் தமிழ் ஆர்வம்

தமிழை தாய்மொழியாகக் கொண்டிராத, தமிழ் நாட்டில் வாழ்ந்திராத, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டிராத உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி தருண் விஜய் கடந்த சில காலமாய் தமிழ் குறித்தும் தமிழர்கள் குறித்தும் மக்களவை வரை பேசிவருகிறார். திருவள்ளுவருக்கு ஹரித்துவாரில் சிலை எழுப்பும் முயற்சியிலும் இருக்கிறார். திருக்குறள் குறித்து தொடர்ந்து இந்தியாவெங்கும் பேசிவருவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள் இவருக்கு குறள்நெறிக் காவலர் விருது வழங்கியிருக்கின்றன.

ஆர்எஸ்எஸ் இதழான பஞ்சன்யாவின் ஆசிரியராக இருந்த தருண் விஜய், தமிழ் ஆர்வலராக காட்டிக் கொள்வது உள்நோக்கம் கொண்டது என்று அரசியல் நோக்கர்கள் ஏற்கனவே விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில் கொழும்பு பல்கலைகழகத்தின் இந்து மாணவர் அமைப்பின் விழாவுக்கு முக்கிய விருந்தாளியாக தருண் விஜய் அழைக்கப்பட்டிருப்பது இந்த விமர்சனத்தை இன்னும் கூர்மையாக்கியிருக்கிறது.

இலங்கை தமிழர்களிடம் ஆர்எஸ்எஸ்

2013-ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி, இலங்கை அரசு இலங்கை தமிழர்கள் மீது பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்திய கலாச்சாரத்துடம் பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்புள்ள இலங்கை தமிழரின் நலன் காக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

பிரபாகரனின் மரணம் தொடர்பான நேர்க்காணலின் போது, ஓய்வுபெற்ற இந்திய கடற்படை கமாண்டோவாகப் பணியாற்றிய கார்கில் எம்.சுப்ரமணியம் இலங்கையில் இறுதிப் போரின் போது நூற்றுக்கணக்கான கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் அவற்றைப் பார்வையிட ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்று வந்ததாகவும் இப்போது.காமிடம் தெரிவித்திருந்தார்.

அகண்ட பாரத கனவு

இலங்கை தமிழர்களிடையே ஆர்எஸ்எஸ் ஊடுருவல் குறித்து மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி இப்போது.காமிடம் பேசினார்.

“பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே ஈழத்தின் கிழக்குப் பகுதிகளில் விஸ்வ ஹிந்து பரிஷத் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கு இடையே முரண்பாட்டை உருவாக்கும் பணிகளைச் செய்து வந்தது இந்த அமைப்பு. போருக்குப் பிறகு, புனர்வாழ்வு பணிகளுக்காக இந்தியாவிலிருந்து தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் துணை அமைப்புகள் ஈழத் தமிழர்களிடம் ஊடுருவின” என்று சொன்ன அவர், தமிழர்களிடைய இந்துத்துவத்தை திணிப்பதும் இஸ்லாமியருக்கும் இந்துக்களுக்குமிடையே முரண்பாட்டை உருவாக்கி அதன் மூலம் அகண்ட் இந்து தேசத்தை உருவாக்குவதும்தான் இந்த அமைப்புகளின் நோக்கம் என்றார்.

இனவாதிகளின் கைகோர்ப்பு

ஆர்எஸ்எஸ் உடன் பவுத்த இனவாத அமைப்பான பொது பல சேனா இணைந்து இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக பொது பல சேனாவின் தலைவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார். பொது பல சேனா கடந்த ஆண்டு முஸ்லிகளுக்கு எதிரான கலவரத்தை நடத்தியதும், அதில் நான்கு பேர் பலியானதும் குறிப்பிடத்தகுந்தது.

இனவாதத்தை ஆர் எஸ் எஸுடன் கைகோர்த்து செய்ய விரும்பும் பொது பல சேனாவினர்
இனவாதத்தை ஆர் எஸ் எஸுடன் கைகோர்த்து செய்ய விரும்பும் பொது பல சேனாவினர்

“இந்துத்துவ அமைப்புகளின் அறிக்கைகளில் பிரதான எதிரிகளாக கிறித்தவர்களையும் முஸ்லிம்களையும் சொல்கிறார்களே தவிர, சிங்கள பவுத்த பேரினவாதம் குறித்து அவர்கள் வாய்த்திறப்பதில்லை. எனவே இந்து, முஸ்லீம் மக்களிடையே முரண்பாட்டை வளர்ப்பதுதான் அவர்களுடைய நோக்கம் என்பதை புரிந்துகொள்ளலாம்” என்கிறார் திருமுருகன் காந்தி.

30 ஆண்டுகால உள்நாட்டுப் போரிலிருந்து மீண்டு மூச்சுவிட ஆரம்பித்திருக்கும் இலங்கை தமிழர்களை இந்துத்துவ அமைப்புகள் மீண்டும் மற்றொரு அசாதாரண சூழலுக்கு தள்ளுகின்றனவோ என்கிற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.