தமிழில் உயிரியல் புத்தகங்கள் உண்டா?

சமீபகாலமாக சூழலியல் சார்ந்தும் புத்தகங்கள் வருகின்றன. பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றன. மொழிபெயர்ப்புகள் வருவதில்லை தவறு ஏதும் இல்லை. ஆனால் நம்முடைய சூழல் சார்ந்து, நம்முடைய வாழிடம் சார்ந்த அனுபவங்களை ஒட்டிய சூழலியல் பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே சூழலியல் எழுத்தாளர்கள் இங்கே எழுதுகிறார்கள்.  அப்படியெனில் இங்கே சூழலியல் சார்ந்து குறைவானவர்கள்தான் இயங்குகிறார்களா என்கிற கேள்வி எழலாம். ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்… சூழலியல் சார்ந்து இயங்கும் உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், ஆர்வலர்கள் போன்றோர் ஆங்கிலத்தின் ஊடாகவே எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள்.  அவர்கள் பயன்படுத்தும் ஆய்வு மாதிரிகள், கையேடு, மூலங்கள் என அனைத்தையும் ஆங்கிலத்தின் வழியாக பெறுகிறார்கள் . அந்தப் பாதையை ஒட்டியே ஆங்கிலத்தின் வழியாகவே தங்கள் பதிவுகளை செய்கிறார்கள். இறுதியில் பாடப் புத்தகங்களில் மட்டுமே மதிப்பெண்களுக்காக தாவரவியலையும் விலங்கியலையும் படிக்கிறோம். நம் வாழ்வியலை விட்டு அகன்றுவிடும் எதுவுமே இப்படி வழக்கொழிந்துதான் போகும். சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட சூழலியலின் தொடர்ச்சி எப்போது அறுபட்டது என்கிற கேள்வி இப்போது எனக்குத் தோன்றுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யும் நேரத்தில் இரண்டு சூழலியல் கட்டுரைகளை தமிழில் எழுதிவிடலாம் என்பதால் இதைக் கைவிடுவதே உசிதம்.

சமீபத்தில் ஒரு நண்பகல் வேளையில் எங்கள் வீட்டின் தொட்டிச் செடியில் வழக்கத்துக்கு மாறான சிலந்தியைக் கண்டேன்.  வெள்ளை உடலின் பழுப்பு ரேகை ஓடிய தடம் அந்தச் சிலந்தியை மிக அழகான சிலந்தியாகக் காட்டியது. அதை தொந்திரவுக்கு உள்ளாக்காமல் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு நண்பகல் வேளையில் அதே இடத்தில் அதே வகையான சிலந்தியைக் கண்டேன். அங்கே இதே வடிவத்தை ஒத்த, முழு உடலும் பழுப்பில் அமைந்த வேறொரு சிலந்தியைக் கண்டேன். அதியும் புகைப்படங்களில் பதிவு செய்து கொண்டேன்.

இந்த சிலந்திகள் வீட்டில், ஏற்கனவே தோட்டத்தில் பார்த்த சிலந்திகளைப் போன்று இல்லை என்பதால் அவற்றைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினேன். இணையத்தின் வழியாக தகவல்களைப் பெற முடியவில்லை. ஆங்கிலத்தில்கூட இந்திய சிலந்திகள் பற்றி போதிய பதிவுகள் இல்லை என தெரிந்தது. இதுவரை இந்திய சிலந்திகள் பற்றி ஒரே ஒரு புத்தகம்தான் வந்துள்ளது. அதுவும் 2009ல் தான் வெளியாகியிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் Spiders of India. இதற்கு முன் தொகுப்பு நூல்களில் சிலந்திகள் இடம்பெற்றிருந்திருக்கலாம். சிலந்தி பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றன, ஆனால் சிலந்திகள் பற்றிய முழுமையான நூல் இது ஒன்றுதான். நான் தேடியவரை இது ஒன்றுதான். இந்தப் புத்தகமும் அதைத்தான் சொல்கிறது.

spider of India

கொச்சின் சேக்ரட் ஹார்ட் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் P.A. Sebastian மற்றும் கேரள வேளாண்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் K.V. Peter எழுதிய இந்த நூல் இந்திய சிலந்திகள் குறித்த முழுமையான தகவல்களைத் தருகிறது. மொத்தம் 734 பக்கங்கள். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1520 வகையான சிலந்திகளின் விவரங்கள் இதில் பெறலாம். விவரங்கள் முழுமையானவை அல்ல, இந்திய சிலந்திகள் பற்றிய ஆரம்ப நூல் என்பதால் எல்லா விவரங்களையும் எதிர்பார்க்க முடியாதுதான். பின் இணைப்பில் பல சிலந்தி வகைகளின் வண்ணப்படங்கள் தரப்பட்டுள்ளன. சிலந்திகளின் பரிணாம வளர்ச்சியிலிருந்து சிலந்தி வலைப் பின்னல் அமைப்பு, சிலந்தி வலை நூலின் தொழிற்நுட்பம், உடல் அமைப்பு என அடிப்படைத் தகவல்களை இந்த நூலில் பெறலாம்.  சிலந்திகள் பற்றிய ஆய்வில் இருப்பவர்கள், ஆர்வலர்களுக்கு உகந்த நூல். விலை ரூ. 1000லிருந்து ரூ. 1500க்குள் அமேசானில் வாங்கலாம்.

DSCN2046

Oxyopes lineatipes

 

DSCN2098

Oxyopes shweta

 

நான் கண்ட சிலந்திகளின் பெயர்கள் Oxyopes shweta, Oxyopes sunandae, Oxyopes lineatipes. புல்வெளிகள், சிறிய புதர்களில் வாழும் இவை. இவற்றில் ஆணைவிட பெண் இனங்கள் சற்று பெரிதானவை. இந்தியா, சீனாவை வாழிடமாகக் கொண்டவை. இதில் Oxyopes sunandae  இந்தியாவை மட்டும் வாழிடமாகக் கொண்டது, அழிந்துவரும் உயிரினமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உடல் பகுதி வெளிர் பச்சை நிறத்தி அமைந்த Oxyopes lineatipes சிலந்தி இந்தியா, சீனாவிலிருந்து பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமத்ரா வரை பரவியுள்ளன என்கிறது இந்த நூல். ஒரு கிளையை அல்லது இலையை சுற்றி மெல்லிய வலைகளைப் பின்னி, தங்களுடைய இரைகளை இவை பிடிக்கின்றன. பகல் வேளைகளில் இந்த சிலந்திகள் இரை தேடும், அதனால் அந்த நேரங்களில் இவற்றைக் காணலாம்.

அழிந்துவரும் உயிரினம் ஒன்று எனக்கு அருகிலேயே உள்ளதை தெரிவித்தது இந்தப் புத்தகம். ஒரு சில தொட்டிச் செடிகள் இவற்றை வாழ வைத்திருக்கின்றன. செடிகள் வெட்டி, ஒழுங்கு செய்யும்போது இனி இவைகளைப் பற்றியும் கவனம் கொள்வேன்.