சோனியாவும் இந்திராவும்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் சொத்துகளை முறைகேடாக அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும் வருகிற 19-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என தில்லியில் உள்ள விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸும் சட்டம் தன் கடமையைச் செய்வதாக பாஜகவும் செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. இதுகுறித்து ஊடகங்களில் பேசிய சோனியா காந்தி, “நான் ஏன் பயப்பட வேண்டும்? நான் இந்திரா காந்தியின் மருமகள், நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்” எனக் கடுமையாகப் பேசினார்.

அமைதியான சுபாவமுடையவராக அரசியல் நடத்திக் கொண்டிருந்த சோனியாவை நேஷனல் ஹெரால்டு விவகாரம் கோபத்தைத் தூண்டியிருக்கிறது. பாஜகவின் சுப்ரமணியம் சுவாமி போன்றோரின் பழிவாங்கும் நடவடிக்கை என்றே காங்கிரஸ் ஆரம்பம் முதல் சொல்லிவருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை சோனியா காந்தியின் பிறந்த நாளை சமூக வலைத்தளங்களில் கொண்டாடினர் காங்கிரஸ் அபிமானிகள். ஃபேஸ்புக்கில் ட்விட்டரிலும் புதன்கிழமை #LongLiveSoniaGandhi  என்பது ட்ரெண்டானது.

இத்தாலியில் பிறந்த இந்தியாவின் முதன்மையான அரசியல் குடும்பத்தில் மருமகளாக நுழைந்த சோனியா, இந்திய பிரதமராகியிருக்க வேண்டியவர். உள்கட்சி அரசியல் காரணமாக அந்த வாய்ப்பைத் தவறவிட்டவர். அவருடைய வாழ்க்கை புகைப்படங்கள் வழியே..

This slideshow requires JavaScript.

 

 

இந்திரா காந்தியை நினைவு கூற 10 காரணங்கள்

Indira Gandhi

இந்திரா காந்தியின் 98-வது பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. 1966-ஆம் ஆண்டு முதல் 1977-ஆம் ஆண்டு வரை மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பெண் இந்திரா காந்தி. அவருடைய பிறந்த நாளில் அவரை நினைவுகூர 10 காரணங்கள் இருக்கின்றன. அவை…

1. 1971-ஆம் ஆண்டு இரண்டு பகுதியாக பிரிந்திருந்த பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியை வங்காள தேசமாக உருவாக்கக் காரணமாக இருந்தவர் இந்திரா காந்தி.

2. பஞ்சாபில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தை அடுத்து விளைச்சலை அதிகரிக்கும் பொருட்டு
‘பசுமை புரட்சி’ என்ற பெயரில் வீரிய விதைகளையும் செயற்கை உரங்களின் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியவர் இந்திரா. பசுமை புரட்சி, ஆரம்ப ஆண்டுகளில் சாதகமான பலன்களை ஏற்படுத்தினாலும், 50 ஆண்டுகால நோக்கில் பல பாதகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

3. சீனாவின் அணு ஆயுத சோதனைக்கு 1967-ஆம் ஆண்டு அணு ஆயுத தயாரிப்பை அங்கீகரித்தவர் இந்திரா. 1974-ஆம் ஆண்டு பொக்ரானில் ‘சிரிக்கும் புத்தர்’ என பெயரிட்ட அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தியவர் இந்திரா.

4. இந்திய அரசியலைப்புச் சட்டம் 1950-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டபோது, ஹிந்தி தேசிய மொழியாக ஆனது. ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டிராத பல மாநிலங்களுக்கு இது மிகப் பெரும் சிக்கலாக இருந்தது. இதைப் போக்க ஆங்கிலத்தையும் 1967-ஆம் ஆண்டு தேசிய அலுவல் மொழியாக்கினார்.

5. இந்தியாவிலிருக்கும் ஏழ்மையை அகற்றும் பொருட்டு வங்கிகளை தேசிய மயமாக்குவதாக அறிவித்தார் இந்திரா. 1967-ஆம் ஆண்டு வங்கிகள் தேசியமயமாகின. இந்திரா காந்தியின் திட்டங்கள், செயல்பாடுகளில் மக்களிடம் பெரும் ஆதரவு பெற்றது இது.

6. அரபு-இஸ்ரேலிய பிரச்சினையில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக செயல்பட்டார் இந்திரா. காஷ்மீரில் பிரச்சினை செய்யும் பாகிஸ்தானை எதிர்கொள்ள தனக்கு அரபு நாடுகள் உதவியை நாடினார் இந்திரா. இதன் அடிப்படையில் அவர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்தார்.

7. 1971-ஆம் ஆண்டின் போது பாகிஸ்தானுடன் போர் உருவானது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தது அமெரிக்கா. சோவியத் ரஷ்யாவுடன் வர்த்தக உறவில் மட்டுமல்லாது பெருமளவில் ஆயுதங்களை வாங்கும் நிலையில் நெருங்கி இருந்தது இந்தியா. இதனால் கடுப்பான அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் இந்திராவை சூனியாக்காரி என்று பொருள்பட பேசினார். ‘புத்திசாலி நரி’ என்றும் வர்ணித்தார். இந்தப் போரில் வென்றதற்காக வாஜ்பாஜ், ‘துர்கா தேவி’ என்று வர்ணித்தார்.

8. இன்றைக்கு தமிழக மீனவர்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ள, கச்சத் தீவை இலங்கைக்கு 1974-ஆம் ஆண்டு தந்தவர் இந்திரா.

9. இந்திராவை நினைவுபடுத்தும் முதன்மையான விஷயம் 18 மாதங்கள் இந்தியாவை அவசர நிலையில் வைத்திருந்தவர் என்பதே. தன்னுடைய அரசியல் எதிரிகளை ஒடுக்கும்பொருட்டு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் இந்திரா. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது அழியாத கரும்புள்ளியாக அமைந்துவிட்டது.

10. ‘ஆபரேஷன் ப்ளு ஸ்டார்’ இந்திராவை நினைவு படுத்தும் முக்கிய விஷயங்களில் ஒன்று. 1984-ஆம் ஆண்டில் பஞ்சாபில் பிரிவினையைத் தூண்டிய பிந்தரன்வாலாவை ஒடுக்கும் முயற்சியில் சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயிலுக்கு ராணுவத்தை அனுப்பினார் இந்திரா. இது அவர் உயிரைப் பறிக்கும் சம்பவத்தில் போய் முடிந்தது. தன்னுடைய சீக்கிய மெய்க்காவலர்களாலேயே 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

பெண்ணியவாதிகள், பகத்சிங், கபீர் கலா மஞ்சில்…

இதுநாள்வரையில் எனக்குள் இருந்த பெண்கள் பற்றிய மிகை மதிப்பீடுகளை சமீப காலமாக உடைத்தெறிந்து வருகிறேன்.  இரும்பு பெண்களாகவும் பெண்ணியவாதிகளாகவும் அடைமொழிகளுக்குள் அடங்கிக் கொண்டிருந்தவர்களின் உண்மையான முகம் முதலாளித்துவத்தையும் சர்வாதிகாரத்தையும் ஒன்றாக கலந்தத் தன்மை  உடையது. இவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை… சீமாட்டிகளாகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பின்னணி கொண்டவர்களாகவும் இருப்பது.  சிந்தனையும் செயல்பாடும் அவரவர் வளர்ந்த வர்க்க பின்னணியுடன் பிணைக்கப்பட்டுள்ளது.  நிலப்புரத்துவ பின்னணியில் வளர்ந்த பெண்ணியவாதி, ஆணுக்கு நிகரான ஊதியத்தை பெண்ணுக்கும் நிர்ணயிப்பார் என எதிர்பார்க்க முடியாது(சொந்த அனுபவம்!). இப்போதெல்லாம் பெண்ணியவாதிகள் என்றாலே கையில் மதுக்கோப்பையும் சிகரெட்டும் ஏந்திய பெண்களே நினைவுக்கு வருகிறார்கள். இது பொதுபுத்தி அல்ல, மேட்டிக்குடி சிந்தனையாளர்களின்  பெண்ணியவாதிகள் பற்றிய கட்டமைப்பு இத்தகையதுதான். தீர்மானிப்பதற்குரிய அதிகாரம் தனக்கிருந்தும் சமத்துவத்தை விரும்பாத இத்தகையவர்கள் போற்றப்படுவதை ஆண்மைய சமூகம் விரும்புகிறது, அவர்கள் வரலாற்றில் போற்றப்படுகிறார்கள். இந்திரா காந்தி, மார்க்கெரட் தாச்சர், தெரஸா வகையறா முதல் ஜெயலலிதா போன்ற பெண்களை சில உதாரணங்களாகக் கொள்ளலாம். இவர்கள் மட்டுமல்ல அதிகாரத்தில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான்.

……………………………………………………………………………………….

பகத்சிங் ஆய்வாளர் Chaman Lal  பகத் சிங் உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவின் லெனினாக வந்திருப்பார் என்கிறார். லெனின், மாவோ, பிடல், சே குவேரா போல பகத் சிங்கும் மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் என்கிறார் லால். புதிய ஜனநாயகம் மே இதழில் இவருடைய நேர்காணல் இடம்பெற்றிருக்கிறது. படிக்க வேண்டிய ஒன்று. வினவு தளத்தில் புதிய ஜனநாயகம் இதழை டவுன்லோடு செய்து படிக்கலாம்.. http://www.vinavu.com/…/05/puthiya-jananayagam-may-20151.pdf

பேராசிரியர் சமன் லாலில் வலைத்தளத்தில் பகத் சிங்கிற்கு ஆதரவாக ஜின்னாவின் பேச்சு குறித்த கட்டுரை இன்று வாசித்ததில் முக்கியமான ஒன்று. சமன் லால் குறித்த தேடலில் இணையத்தில் கிடைத்த வலைத்தளம் கபீர் கலா மஞ்சில் . sheetal மகாராஷ்டிராத்தில் செயல்படும் மக்கள் கலைக் குழு இது. இந்த கலைக் குழுவைச் சேர்ந்த பல கவிஞர்கள், இசைக் கலைஞர்கள்  அரசின் தீவிரவாத ஒழிப்பு படையினரால் அரசியல் குற்றவாளிகளாக சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் மராத்தியில் பாடி சில பாடல் https://soundcloud.com/kractivist/devhar-bajula-sarle-poetகளின் மொழிபெயர்ப்பைப் படித்தேன். அந்த வரிகளில் சாதீய, சமூக விமர்சனங்கள் தவிர வேறொன்றும் இல்லை. கர சேவகர்களின் கை ஓங்கியிருக்கும் மகாராஷ்டிரா போன்ற மாநிலத்தில் சமூக விமர்சனங்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். அதனால்தான் மக்கள் கலைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்கூட நக்ஸலைட்டுகளாகத் தெரிகிறார்கள்.

இந்தக் குழுவைச் சேர்ந்த ஷீத்தல் தலித் படுகொலைகள், பெண்சிசுக் கொலை, சாதியம், விவசாயிகள் தற்கொலை குறித்தும் புலே, ஷானு, அம்பேத்கர் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறார். இதற்காக இவர் கைதும் செய்யப்பட்டார். இவருக்கு தற்போது கிடைத்திருப்பது தலைமறைவு வாழ்க்கை!

மேற்சொன்ன அதே கருப் பொருட்களில் போலியாக சில பெண்கள் பேசியும் எழுதியும் வருகிறார்கள். அவர்களுக்கு ஆகச் சிறந்த அங்கீகாரம் கிடைக்கிறது எனில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சமூகம் கண்டுகொள்ளட்டும்!