2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் காங்கிரஸுக்கு பின்னடைவைத் தரும் என்பது அனைவரும் எதிர்ப்பார்த்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் தவிர, மற்ற கட்சிகள் மத்தியில் பெரும்பான்மைப் பெற்றதில்லை. அந்த வகையில் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிருப்தி காரணமாக காங்கிரஸும் பெரும்பான்மை பெறாது; மற்ற கட்சிகளும் பெரும்பான்மை பெற முடியாது என்றே அரசியல் ஆரூடங்கள் சொல்லிவந்தன. பாரதிய ஜனதா கட்சியை பெரும்பான்மை பெறக்கூடிய கட்சியாக எவரும் கணிக்கவில்லை.
பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் திட்டம் ’சிறப்பானதாக’ நடைமுறைப்படுத்தக்கூடியதாக மாற்றி அமைக்கப்பட்டது. இதை மாற்றி அமைத்தது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம்! கூட்டணி ஆட்சி மத்தியில் அமையலாம், அப்படி அமைந்தால் பிரதமர் ஆக்கப்படலாம் என்கிற கனவில் இருந்த எல்.கே. அத்வானியை புறம்தள்ளிவிட்டு, நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்பட்டார். அத்வானியும் ஆர் எஸ் எஸ்ஸின் தீவிர தொண்டர்தான், ஆனால் அவருடைய ‘அரசியல்’ காலாவதியாகிவிட்டதாகக் கருதியது ஆர். எஸ். எஸ்.
போலியை மறைக்கும் பொலிவான வளர்ச்சி முகமாகத் தெரிந்தார் மோடி. குஜராத்தில் அவர் முன்வைத்த ‘மத அரசியல்’, ‘வளர்ச்சி’ என்ற பூச்சால் அழகாக பூசி மெழுகப்பட்டிருந்தது. இதை குஜராத் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்; அதுபோல இந்த பூச்சை நாடு முழுவதிலும் பரப்புவதற்கு நரேந்திர மோடியைத் தேர்ந்தெடுத்தது ஆர்.எஸ்.எஸ்.
இல்லாததை இருப்பதென காட்ட தொழில்முறை காப்பொரேட் நிறுவனங்கள் தேர்தல் பணியாற்ற அமர்த்தப்பட்டார்கள். வெற்றி எதிர்பாராததாக அமைந்தது. மிகப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியில் ஏறியது. முதல் ஆறு மாதங்கள் ஆரம்பக் கட்ட அதிகார டாம்பீகங்களைக் காட்டிக் கொள்வதுமாக சென்றது. இந்துத்துவ அமைப்புகள் இந்தக் காலத்தில் எதிர்காலத்திட்டங்களை கூர்தீட்டிக் கொண்டார்கள்.
வழக்கமாக பாஜகவின் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் இந்து சாமியார்கள் ‘சர்ச்சைக்குரிய’ கருத்துக்களை சொல்ல ஆரம்பித்திருந்தார்கள். அவற்றை ஆரம்பம் முதலே அது அவர்களுடைய சொந்தக் கருத்து என்று தப்பித்துக்கொள்ளும் வழிமுறையை பாஜக சொல்லக் கற்று வைத்திருந்தது. டெல்லியில் கர்வாப்ஸி(தாய் மதத்துக்கு திரும்புதல்) என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் இந்து மதத்துக்கு திருப்பிக் கொண்டிருந்தன இந்துத்துவ அமைப்புகள். அதன் அடுத்த கட்டமாக 2015 ஜனவரியில் டெல்லியில் கிறித்துவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடந்தது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஒபாமா, அமெரிக்காவுக்குச் சென்று தேவாலய தாக்குதல்கள் குறித்து கண்டித்தார்.
“மதமாற்றத்தை மத்திய அரசு முழுமையாக தடை செய்யும் வரை தாய் மதம் திரும்பும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும்” என விசுவ இந்து பரிஷத் தலைவர் ப்ரவீன் தொகாடியா பேசினார். ஆனால் அரசு தரப்பில் இருந்து கண்டிப்புக்கு பதிலாக கண்டுகொள்ளாத தன்மை வெளிப்பட்டது. இந்த கண்டுகொள்ளாத தன்மையை இந்த அமைப்புகளுக்கு பாஜக அரசு தரும் க்ரீன் சிக்னலாக புரிந்து கொள்ள வேண்டும்.
நாடுமுழுவதும் அடுத்த மூன்று மாதங்கள் கர்வாப்ஸி நிகழ்வுகள் ஜரூராக நடந்தன. தமிழகத்திலும் ஆங்காங்க ஒரு சிலர் இந்துக்களாக மதம் மாறினர். இந்துக்களாக மதம் மாற இந்து அமைப்புகள் பணம் கொடுத்ததாக பத்திரிகைகள் துப்பு துலக்கிய நேரத்தில், இந்து அமைப்புகள் அடுத்த விவகாரத்துக்கு தாவின. இந்த முறை அவர்களின் கவனம் பகுத்தறிவாளர்கள் பக்கம் திரும்பியது.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கோவிந்த் பன்சாரே, சமகாலச் சூழலில் இந்துத்துவ மோசடிகளை, மூடநம்பிக்கைகளை கேள்வி கேட்டவர். கோயில்களில் தலித்துகள், பெண்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமைகளுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்தார்; இயக்கம் நடத்தினார். சிவாஜியை முன்னிறுத்தி சிவ சேனாவும் மற்ற இந்து அமைப்புகளும் மத அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில் பன்சாரே எழுதிய ‘சிவாஜி யார்?’ என்கிற புத்தகம் சிவாஜியின் உண்மையான வரலாற்றைச் சொன்னது. ஏற்கனவே தங்களின் ‘எதிரி’கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த அவரை, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒழிப்பது இந்துத்துவ அமைப்புகளுக்கு மிக எளிதான செயலாகத்தான் இருந்தது. அதிகாலையில் நடைபயிற்சிக்குச் சென்றிருந்த பன்சாரே நெற்றிப் பொட்டில் சுடப்பட்டார்.
நாடு முழுவதும் இந்துத்துவ அமைப்புகளின் எழுச்சி ஆரம்பித்த அதே காலக்கட்டத்தில் தமிழகத்தில் அந்த எழுச்சியானது எழுத்தாளர் பெருமாள் முருகனை முன்வைத்து நடந்தேறியது. பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் வெளியானபோது வராத விமர்சனம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது. தங்கள் சாதி மக்களை தவறாக சித்தரிப்பதாக ஒரு குறிப்பிட்ட சாதி சங்கங்கள் போராட்டங்கள் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்துக்களை நடத்தின. அதற்கு இந்துத்துவ அமைப்புகள் முழு ஆதரவும் கொடுத்தனர். இறுதியில் பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் இறந்துவிட்டார் என்று அவரையே எழுத வைத்தார்கள்.
இந்துத்துவம் முன்வைக்கும் ‘புனித’ பிம்பங்களுக்கு எதிராக எழுதுவதையோ, விமர்சிப்பதையோ வேரறுக்க வேண்டும் என்பதை முதல் பணியாக இந்துத்துவ அமைப்புகள் கொண்டன. அடுத்த ‘பலி’யை அவர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். எம். எம். கல்புர்கி, பசவண்ணரின் தத்துவ சாரத்தை மீண்டும் மக்கள் முன்வைத்த சிந்தனையாளர், பேராசிரியர். கர்நாடகத்தில் இந்து மதம் முன்வைத்த சாதி தீண்டாமையை ஒழிக்க புதிய மதத்தை தோற்றுவித்தவர் பசவண்ணர்.
காலப் போக்கில் பசவண்ணரை இந்துத்துவ சக்திகள் இந்து மத ஞானியாக மாற்றினர், அவருடைய கொள்கைகளை மழுங்கடித்தனர். இதனை மீண்டும் கர்நாடக மக்களுக்கு நினைவுபடுத்தும் பணியைச் செய்து வந்தார் கல்புர்கி. இந்து மதம் உருவ வழிபாட்டை முன்வைத்த போது, அதை மறுத்த பசவண்ணிரின் கருத்துக்களை கல்வி மேடைகளில் பேசினார். இதுதான் இந்துத்துவ அமைப்புகளுக்கு பிரச்சினையாக இருந்தது. கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்ட அதே பாணியில் கல்புர்கியும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கல்புர்கியின் மரணம்தான் இந்தியாவின் மனசாட்சியை எழுப்பி விட்டது. சமூகத்தின் மனசாட்சிகளாக கருதப்படும் எழுத்தாளர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இந்தியாவின் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பி அளித்தார்கள். அரசியல் சார்பற்று தன்னெழுச்சியாக நடந்தது இந்தப் போராட்டம். தமிழ் எழுத்தாளர்களைத் தவிர, அனைத்து இந்திய மொழிகளில் எழுதும் விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்களுடைய விருதைத் திருப்பி அளிப்பதன் மூலம் இந்துத்துவ அமைப்புகளின் ‘தாலிபான்’ கலாச்சாரத்தைக் கண்டித்தார்கள்.
ஒருபுறம் எழுத்தாளர்களின் விருதைத் திருப்பி அளிக்கும் போராட்டம் வலுக்க ஆரம்பித்த அதே நேரத்தில், மாட்டிறைச்சி அரசியலை பாஜகவும் இந்துத்துவ அமைப்புகளும் கையில் எடுத்தன. ‘புனித பசு’ என்னும் முன்னிறுத்தி இவர்கள் செய்து வந்த ‘வெறுப்பு’ அரசியலின் விளைவாக உத்திர பிரதேசத்தில் முகமது அக்லக் என்னும் அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டது. ‘அடித்துக் கொல்லுதலை’ நியாயப்படுத்த புராணங்களை துணைக்கு வரவழைத்துக் கொண்டார்கள் இந்துத்துவ சக்திகள். முகமது அக்லக்கின் கொலையில் உள்ளூர் பாஜகவினரே குற்றவாளிகளாக இருந்தார்கள்.
‘300 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து ஆட்சி’ அமைந்ததில் 300 ஆண்டுகாலமாக செய்ய மறுக்கப்பட்ட அத்தனை விஷயங்களையும் பாஜகவின் ஐந்தாண்டுகால ஆட்சியில் செய்து விடலாம் என்கிற முனைப்பில் பாஜகவின் மறைமுக அஜெண்டாவாக இருக்கிறது என்பதும் அதற்கான முன்னோட்டமாக இந்த ஆண்டின் அடுத்தடுத்த நிகழ்வுகளை அரங்கேற்றின இந்து அமைப்புகள். முஸ்லிம், கிறித்துவர் உள்ளிட்ட சிறுபான்மையினரை தாய் மதம் திரும்ப அழைப்பது, மறுப்பவர்களை பாகிஸ்தானுக்குப் போ என்று சொல்வது, உணவை முன்வைத்து மக்களைப் பிரிப்பது, கல்வி அமைப்புகளில் இந்துத்துவ ஆட்களை நியமிப்பது, அறிவியலுக்குப் புறம்பான புராண கதைகளை உண்மையென நிறுவ முயல்வது, பகுத்தறிவாளர்களை அச்சுறுத்துவது என இந்த ஆண்டு இந்துத்துவத்தின் ‘எழுச்சி’ ஆண்டாகவே அமைந்துவிட்டது.
மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு என்கிற முத்திரையுடன் பாஜக அரசு மிக நுணுக்கமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த நுணுக்கங்கள் வெளிப்படையாக அரசிடமிருந்தே வெளிப்படலாம். ராமர் கோயில் கட்டுவது உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை வைத்து பிரித்தாளக் காத்திருக்கிற இந்துத்துவ சக்திகளிடமிருந்து மக்கள் எப்படி தங்களைக் காத்துக்கொள்ளப் போகிறார்கள்? புத்தாண்டை வரவேற்கும் வேளையில் இந்தக் கேள்விக்கான பதிலையும் தேடுவோம்…
தினச்செய்தி(1-1-2016) நாளிதழில் வந்த கட்டுரை.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...