’பேசாம நீங்கள்லாம் இஸ்ரேலுக்குப் போயிடுங்க’

இந்துமதவாதம் குறித்து யார் என்ன பேசினாலும் இந்துமதவாதிகள் எடுத்த உடனே பாகிஸ்தானுக்குப் போ என்று சொல்லிவிடுகிறார்கள். ஷாரூக் கான், சல்மான் கான் வரிசையில் சமீபத்தில் இவர்கள் அமீர்கானையும் பாகிஸ்தானுக்குப் போ என்று சொல்லியிருக்கிறார்கள். பாகிஸ்தான் எதிர்ப்பு அரசியல்லுக்குப் புகழ்பெற்ற சிவ சேனாவின் அமைச்சர் ஒருவர் இப்படி பேசியிருக்கிறார்.

எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப அளித்துக் கொண்டிருப்பது குறித்து பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், நாட்டில் சகிப்பின்மை சூழல் உள்ளது உண்மைதான் என்று தெரிவித்தார். அதே கருத்தை டெல்லியில் நடைபெற்ற சிறந்த பத்திரிக்கையாளர்களுக்கான ரான்நாத் கொயங்கா விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமீர்கானும் இப்போது தெரிவித்திருக்கிறார்.

“உத்தரபிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக முதியவர் அக்லக் அடித்துக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களை படிக்கும்போது அது எனக்கு எச்சரிக்கையூட்டுவது போல் தோன்றுகிறது. நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை எடுத்துரைக்கும் விதமாக நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் என் மனைவி கிரண் ராவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி நாட்டைவிட்டே வெளியேறி விடலாமா என்றுகூட என்னிடம் பேசினார்” என்று விழா மேடையில் பேசிய அமீர்கான்,

“நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த தங்களின் அதிருப்தியை படைப்பாளர்கள் வெளிப்படுத்த விருதுகளை திருப்பி அளிப்பதும் ஒரு வழிதான்” என்று தெரிவித்தார். அமீர்கானின் இந்தப் பேச்சுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்தனர். ஆதரவு போலவே, பாஜகவும் பாஜக ஆதரவு இயக்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். உத்தர பிரதேச பாஜகவினர் அமீர்கானின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்து மகா சபை என்கிற அமைப்பு அமீர்கானும் ஷாரூக் கானும் பாகிஸ்தானுக்குப் போகட்டும் என்று சொன்னது. அதுபோல சிவ சேனாவுக்கு இப்போது அமீர்கானுக்கு எதிராக கொடி தூக்கியுள்ளது.

“அமீர்கான் இந்தியாவில் கொண்டாடப்படும் கலைஞர். ஆனால் இப்போதுதான் தெரிந்திருக்கிறது, நாம் இத்தனை நாளும் பாம்புக்கு பால் வார்த்திருக்கிறோம் என்று. அவர் இந்தியாவில் இருப்பது ஆபத்து என நினைத்தால் தாராளமாக பாகிஸ்தானுக்குப் போகட்டும்” என்று பேசியிருக்கிறார் மகாராஷ்டிராவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் சிவ சேனாவின் தலைவருமான ராம்தாஸ் கடம்.

 

நான் மாட்டிறைச்சி பற்றி எழுதிய ஒரு பதிவுக்கு சிலர் நீயெல்லாம் பாகிஸ்தானுக்குப் போக வேண்டிய ஆள் என்று பின்னூட்டமிட்டார்கள்.

‘நாங்க ஏங்க பாகிஸ்தானுக்குப் போகணும் வரலாற்று ரீதியில் பார்க்கப்போனா இது எங்க ஊரு, நீங்கதான் வந்தேறிகள்(!). ஸோ…நீங்கள்லாம் இஸ்ரேலுக்கு பக்கத்துல தனி நாட்டை அமைச்சுட்டு அங்க போயிடுங்க’ என்று தோழர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்து தொலைக்கிறது. எழுதிவிட்டேன்.

பாகிஸ்தானுக்குத்தான் போக வேண்டுமா?

அண்மைக் காலமாக மாட்டிறைச்சி தடை, யோகா இவற்றை விமர்சித்து பேசினால், எழுதினால் பாஜக எம் பிக்கள் முதல் கொண்டு இந்துத்துவ அடிபொடிகள் வரை ‘எதிர்த்து பேசினா பாகிஸ்தான் போங்க, மாட்டுக்கறி திங்கனும்னா பாகிஸ்தான் போங்க’ என்று கோஷம் போடுவது அதிகமாக நடக்கிறது.   இன்று ஒரு சைக்கோ ‘தாயின் மாமிசம் உண்பாயா?’ என்று என்னை முகநூலில் கேட்கிறது. ஒத்த கருத்துடன் எல்லோரும் எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. அப்படி எதிர்ப்பார்ப்பதும் இயற்கைக்கு முரணானது.  கடுமையான கருத்தை கடுமையாக எதிர்க்கலாம்.  தாயின் கறி தின்பாயா என்பதெல்லாம் மனநோய் பிடித்தவர்களால் மட்டும்தான் சொல்ல முடியும்.

10 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களைத் தவிர்த்து உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் மாட்டிறைச்சி உண்ணப்படுகிறது. மாட்டிறைச்சியை வேதங்கள் தோன்றிய காலத்தில் பார்ப்பனியர்களும் உண்டிருக்கிறார்கள் இந்தக் கருத்துக்களை முன்வைத்து ஆதாரத்தோடு நூல்கள், கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இருந்தும் கண்ணை மூடிக் கொண்டிருக்கும் இந்தப் பூனைகள் அதையெல்லாம் கருத்தில் கொள்வதே இல்லை.

கோபுரத் தற்கொலைகள் என்கிற நூலி(பரிசல் பதிப்பக வெளியீடு)ல் ஆய்வாளர் ஆ. சிவசுப்ரமணியன், பிராமணர்கள் செய்யும் யாகங்களில் பசுக்கள் பலியிடுவதைப் பற்றியும் அப்படி பலியிடப்படும் பசுக்களின் இறைச்சியை எப்படி உண்ண வேண்டும் என்பது குறித்தும் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி, தெய்வத்தின் குரல் என்ற நூலில் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டுகிறார்.

‘‘லோகத்தில் பல பேருக்குப் புரிய ஷேமத்தைத் தேவர்கள் செய்ய வேண்டுமென்ற உசந்த நோக்கத்தில் பசு ஹோமம் பண்ணுவதில் தப்பேயில்லை” என்கிறார் சங்கராச்சாரியார்.

உலக நலன் என்கிற பெயரில் கொன்றால் தவறில்லை, அதுவே எளிய மக்களின் ஆதாரமான உணவுக்காக கொல்லப்பட்டால் தவறா? தவறு என்றுகூட சொல்வதில்லை, மாட்டிறைச்சி உண்பவர்களை நரமாமிசம் உண்ணும் மனநோயாளிகளுடன் ஒப்பிடுவதும் பாகிஸ்தானுக்கு போ என்று பாசிச குணத்துடத்துடன் கட்டளை இடுவதும் இந்துத்துவ குண்டர்களின் வேலையாகிவிட்டது.

பசு என்னும் புனிதம் எப்படி கட்டமைக்கப்பட்டது என்று இந்திய வரலாற்று அறிஞர் டி. என். ஜா தனி புத்தகமே (the myth of the holy cow-D.N.Jha)எழுதியிருக்கிறார். இதுகுறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். முழுமையான வரலாற்று தகவல்கள் அடங்கிய நூல். அதிலிருந்து இரண்டு ஆதாரங்களை பகிர்கிறேன்.

இந்தியாவின் (முதன்முதலாக குடியிருப்புகள் உருவான இடங்கள்) ஆற்றோரங்களில்  நடந்த தொல்லியல் ஆய்வுகளில் மற்ற விலங்குகளைக் காட்டிலும் பசு, எருது போன்றவற்றில் எலும்புகளே அதிகளவில் கிடைக்கப் பெற்றுள்ளன. எலும்புகளுடன் வேட்டையாடப் பயன்பட்ட கற்கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

painted grey ware sites எனப்படும் ஆரிய குடியேறிகளின் வாழிடப் பகுதிகளில் வீட்டு விலங்குகளின் எலும்புகள் அவை, வெட்டப்பட்டு கொல்லப்பட்ட அடையாளங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இதில் சிறப்பம்சம் என்னவென்றால் கால்நடைகளின் பாதுகாவலனாக இந்துக்களால் போற்றப்படும் கிருஷ்ணனுடன் தொடர்புபடுத்தப்படும் மதுராவில்தான் இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலத்தை கிமு 400-200 என்கிறார்கள் தொல். அறிஞர்கள்.

இப்படி வரலாற்று காலம் தொட்டே மாட்டிறைச்சி இந்துக்களாலும் இந்துக்களாக குறிப்பிடப்படும் பூர்வ குடி இந்தியர்களாலும் உண்ணப் பட்ட ஒன்றுதான். புத்த, சமண மதங்களின் தாக்கத்தால் கொல்லாமை, புலால் உண்ணாமையை இந்து மதமும் அதை சுவீகரித்துக் கொண்டது. அண்ணல் அம்பேத்கரும்  இந்திய வரலாற்று அறிஞர் டி. என். ஜா போன்றோரும் இதை ஆதாரத்துடன் சுட்டுக்காட்டியுள்ளனர்.

வரலாற்றை முழுவதுமாக மறைத்துவிட்டு, ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. சாப்பிடக்கூடாதுன்னா சாப்பிடக் கூடாது. இல்லைன்னா பாகிஸ்தான் போங்க’ என்று கட்டளை இடுவது பித்துப் பிடித்த பாசிசம். இதையெல்லாம் குணப்படுத்த முடியாது, தெளிவு படுத்த முடியாது!

மாட்டிறைச்சியை அதிகமாக உண்பவர்களைக் கொண்ட அமெரிக்காவில் மரக்கறி உண்ணும் நீங்கள் சகல வசதிகளுடன் செட்டில் ஆகலாம்,  நாளும் உயிர் பயத்துடன் வாழ நேரும் பாகிஸ்தானுக்கு நாங்கள் போக வேண்டுமா?