சத்யபாமா கல்லூரியில் ராகிங்; ‘இந்து தாலிபான்’; இலங்கைப் பெண்ணுக்கு சாகும்வரை கசையடி தண்டனை

எவ்வளவுதான் கடுமையான சட்டங்கள் வந்தாலும் கல்விச் சாலையின் கறைபடிந்த குற்றமாக இருக்கிற ராகிங் குறைந்தபாடில்லை. அவ்வவ்போது அப்பாவி இளைஞர்களின் உயிரை இந்த ராகிங் கொடூரம் பறித்துக் கொண்டிருக்கிறது. அதற்கொரு சமீபத்திய உதாரணமாகியிருக்கிறார் வெங்கட கிருஷ்ணா சைதன்யா(19).

வெங்கட கிருஷ்ண சைதன்யா
வெங்கட கிருஷ்ண சைதன்யா

ஹைதராபாத்தின் நிஜாம்பேட்டைச் சேர்ந்த சைதன்யா, சென்னை சத்யபாமா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.டெக் மாணவர். லால் பாபு என்ற வர்த்தகரின் இளைய மகன்.

முதலாம் ஆண்டு சத்யபாமா கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த சைதன்யா, இந்த ஆண்டு தன்னைப் போல மூன்று மாணவர்களுடன் சேர்ந்து கல்லூரிக்கு அருகில் வீடு எடுத்து தங்கிப் படித்தார்.

தன்னுடன் தங்கியிருந்த சேகர் என்ற மாணவர், தினமும் தன்னை பணம் கேட்டு தொல்லை கொடுத்ததாகவும் இதுப் பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் தன் டைரியில் எழுதி வைத்திருக்கிறார் சைதன்யா. சைதன்யா, கல்லூரிக்கு இனி திரும்பக்கூடாது என்ற முடிவுடன் இந்த தற்கொலை முடிவு எடுத்தே ஹைதராபாத்துக்கு வந்திருக்கிறார் என சைதன்யாவின் அப்பா பாபு தி ஹிந்துவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், சைதன்யா ராகிங் செய்யப்பட்டது குறித்து எந்தவித புகாரும் தங்களுக்கு வரவில்லை என கல்லூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சவுதியில் பணிபுரிந்த இலங்கைப் பெண் ஒருவர் திருமணம் ஆன ஆணுடன் உறவு வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். இலங்கையைச் சேர்ந்த அந்த ஆணுடன் உறவு வைத்திருந்ததை அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். இதனடிப்படையில் ஷரியா சட்டத்தின்படி அவரை கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது சவுதி அரசு.இந்தப் பெண்ணுடன் தொடர்புடைய ஆணுக்கு நூறு கசையடிகள் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய-பிரிட்டன் சிற்பக் கலைஞரான அனிஷ் கபூர், கடந்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ‘இந்தியாவில் இந்து தாலிபான்’ ஆட்சி நடக்கிறது என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நரேந்திர மோடி இங்கிலாந்து சென்றிருந்த நேரத்தில் இந்தக் கட்டுரை பிரிட்டனின் பிரபல நாளிதழான கார்டியனில் வெளியாகி பரபரப்பானது.

“இந்தியாவில் உள்ள 500 மில்லியன் சமூக, மத சிறுபான்மையினர் வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. மோடியின் அரசாங்கம் சகிப்பின்மையை ஆதரித்துக்குக் கொண்டிருக்கிறது. யார் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்பதையும் சாதி படிநிலைகளை யார் மீறுகிறார்கள் என்பதையும் இந்து தேசத்துக்கு எதிராக யார் பேசுகிறார்கள் என்பதையும் காவிப் படை கண்காணித்துக் கொண்டிருக்கிறது” என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கட்டுரை வெளியானதற்குப் பின் ராஜஸ்தான் அரசின் கலாச்சார மையத்தின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து அனிஷ் கபூர் நீக்கப்பட்டுள்ளார். வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசு ராஜஸ்தான் மாநிலத்தை ஆள்கிறது என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் அரசின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.