மூடிஸ் அறிக்கையை கொச்சைப்படுத்திய பாஜக

மாட்டிறைச்சி விவகாரம், எழுத்தாளர் படுகொலைகள் குறித்து சிறுபான்மையினரை அச்சப்படுத்தும் வகையில் பாஜக-அதனுடன் தொடர்புடைய இந்துத்துவ அமைப்பினரின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை பிரதமர் மோடி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கடந்த வாரம் எச்சரித்தது. இந்த அசாதாரண சூழல் நீடித்தால் தனது மதிப்பை உள்நாட்டு அளவிலும் உலக அளவிலும் இந்தியா இழக்க நேரிடும் என்றும் அது கூறியது. மேலும் இந்த அறிக்கை,

“ஒரு நாடு, வளர்ச்சியடைய வேண்டுமென்றால், அதை ஆளும் அரசு, தான் அளித்த வாக்குறுதிகளின்படி சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும்.இந்தியாவில் ஆளும் பாஜக அரசுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் முக்கியமான சீர்திருத்த மசோதாக்களை நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.

கடந்த காலங்களாக, சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் பாஜக பிரமுகர்கள் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜகவினரின் சர்ச்சைக்குரிய கருத்துகளிலிருந்து மோடி ஒதுங்கியே இருக்கிறார். எனினும், இந்தியாவில் உள்ள பல்வேறு வகையிலான சிறுபான்மையினரை ஆத்திரமூட்டும் வகையிலான கருத்துக்கள் தொடர்ந்து கூறப்படுவதால் மதரீதியிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளன.

இந்தியாவில் ஒரு புறம் மதரீதியிலான வன்முறை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதோடு, மாநிலங்களவையில் பொருளாதாரக் கொள்கை குறித்த விவாதம் திசைமாறி, வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அரசுக்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பும். எனவே, சர்ச்சைக்குரிய வகையில் பேசும் கன் கட்சியினரை மோடி கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உள்நாட்டிலும், உலக அளவிலும் தனது நம்பகத்தன்மையை அவர் இழந்து விடுவதற்கான அபாயம் உள்ளது” என்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் நிதி நிலை வளர்ச்சிக்கு சாதகமாக உறுதியான நிலையில் உள்ளதாக மூடிஸ் நிதி ஆய்வு நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது. அப்போது மத்தியில் பதவியேற்றிருந்த பாஜக அரசு, இதை வரவேற்றுப் பேசியது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள மூடிஸின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசு, இது உதவி பொருளாதார நிபுணரால் எழுதப்பட்டுள்ள அறிக்கை, இதை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.

தங்களுக்குச் சாதகமாக சொன்னபோதெல்லாம் கொண்டாடிய மத்தியில் ஆளும் பாஜக அரசு, தாங்கள் சார்ந்த கட்சியினரே நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாக நடந்துகொள்கிறார்கள்; அவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் வளர்ச்சியில் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று சொன்ன மூடிஸ் அறிக்கையை நிராகரிக்கிறது. இதோடு விட்டார்களா என்றால் அதுதான் இல்லை.

இந்தியாவின் பிரபல வரலாற்று அறிஞர் இர்ஃபான் ஹபீப். இவர் சமீபத்தில் இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸை, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஐஎஸ்ஸுடன் ஒப்பிட்டுப் பேசினார். இவருடைய மகள்தான் மூடிஸ் அறிக்கை எழுதிய உதவி பொருளாதார நிபுணர் ஃபராஸ் சயீத்தை மணந்திருக்கிறார். அதனால் மூடிஸ் அறிக்கை மத்திய அரசை குறைசொல்லித்தான் இருக்கும் என்று பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பிவந்தனர். இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் இர்ஃபான் ஹபீபின் மகள் சமன் ஹபீப், நான் மணந்தது மூடிஸின் பொருளாதார நிபுணரை அல்ல, அமித் மிஸ்ராவை என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

சமூக வலைத்தளங்களின் மூலம் எதை வேண்டுமானாலும் சொல்லி நம்ப வைத்துவிடலாம் என்று பாஜக அதனுடைய தொடர்புடைய சங் பரிவார அமைப்புகள் தீவிரமாகச் செயல்படுகின்றன. அருந்ததி ராய் சொன்னதுபோல, இந்தியாவை முட்டாள்களின் தேசமாக்குவதற்கான அறிகுறிகளாகத்தான் இவற்றைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

 

Advertisements