’அது பிரபாகரனே அல்ல’

prabha

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தில் உள்ள சர்ச்சை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இம்முறை இந்தச் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் ஓய்வுபெற்ற இந்திய கடற்படை கமாண்டோவாகப் பணியாற்றிய கார்கில் எம்.சுப்ரமணியம். இவர் கிளப்பியிருக்கும் சர்ச்சை, கொல்லப்பட்டதாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் அவருடையதே அல்ல என்பதே. இலங்கை இணைய பத்திரிகையான லங்கா டுடேவுக்கு அளித்த பேட்டியில் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார். இதுகுறித்து மேலதிக விவரங்களை அறிந்துகொள்ள இப்போது.காம், கார்கில் எம்.சுப்ரமணியம் உடன் பேசியது.

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பட்டியலில் உள்ள பிரபாகரன் பற்றிய தகவல்களை புதுப்பிக்கும் அடிப்படையில் இந்தியா, இலங்கையிடம் இறப்பு சான்றிதழ் கேட்டது. இலங்கை வழங்கியது இறப்பு சான்றிதழே பல ஓட்டைகளுடன் இருக்கிறது” என்கிறார் சுப்ரமணியம். இறப்பு சான்றிதழில் உள்ள ஓட்டைகள் குறித்து அவர் விவரித்தார்…

இந்தியா அரசோ அல்லது இலங்கை அரசோ இதுவரையிலும் பிரபாகரனின் சரியான இறப்பு சான்றிதழ் மற்றும் மரபணு பரிசோதனை சான்றிதழ்களை வழங்கவில்லை. இறப்பு சான்றிதழ் என்று வழங்கப்பட்டது இலங்கை நீதிமன்றம் வழங்கிய பிரபாகரின் இறப்பு குறித்த அறிக்கை மட்டுமே. பிரபாகரன் இறந்திருக்காலம் என யூகிக்கப்படும் சான்றிதழ். இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009-ஆம் ஆண்டு மே 17 அன்று நந்திக்கடல் முள்ளிவாய்க்காலில் ஈழப் போர் கடைசி நாளில் கொல்லப்பட்டுள்ளார் என்று கருதப்படுகின்றது என்று கூறுகிறது. அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதனால் அவர் இறந்திருக்க கூடும் எனவும் இந்திய அரசு தெரிவித்தது.

அதோடு மரபணு பரிசோதனைகளை செய்ய ஏழு நாட்கள் குறைந்தபட்சம் ஆகும். ஆனால் இலங்கை அரசோ மே 19-ந் தேதியே பிரபாகரன் இறந்துவிட்டார் என்று அறிவித்தது இலங்கை அரசு. இலங்கையில் மரபணு பரிசோதனை செய்வதற்கான வசதிகள் இல்லாத சூழ்நிலையில் இரண்டே நாளில் எப்படி மரபணு சோதனை செய்திருக்க முடியும்?

பிரபாகரனின் உடலில் இருந்து இராணுவத்தினர் மாதிரிகள் எடுத்ததை பொது மக்கள் பார்த்தார்கள், பின்னர் அது பிரபாகரன்தான் என உறுதி செய்தார்கள், இந்தியா அந்த மரபணுக்களை மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கு இலங்கையிடம் கேட்ட போது இலங்கை அதை செய்யவில்லை.

இந்தியா மரபணு பரிசோதனைகளை செய்யவில்லை என்றால் யார் அதனை செய்திருப்பார்கள், எந்தப் பரிசோதனை கூடத்தில் செய்யப்பட்டிருக்கும்? ஏன் கைரேகை மற்றும் மரபணு பரிசோதனை முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை?” இறந்தவராக இலங்கை அரசு காட்டியது பிரபாகரன் அல்ல என்பதை அடுக்கடுக்கான தனது சந்தேகத்தைக் கேட்கிறார் சுப்ரமணியம். மேலும் அவர்,

“பிரபாகரனின் மரணத்திற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை, அத்துடன் மரணித்ததற்கான சான்றிதழ்களும் இல்லை.
இந்த உண்மைகள் அது பிரபாகரனின் உடலாக இல்லாமல் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றன. அவர் தாக்குதல்களினால் கொல்லப்படுவதற்கான எந்த தடயமும் அவரது உடம்பில் இல்லை. மக்களை சமாதானப்படுத்த பிரபாகரன் தோற்றமுள்ள மற்றொரு மனிதனின் உடல் காட்டியிருக்கலாம்” என்கிறார் சுப்ரமணியம். சுப்ரமணியம் ஆறு ஆண்டுகாலம் இலங்கையில் பணியாற்றியிருக்கிறார். இந்தத் தொடர்பில் தனக்கு கிடைத்த தகவல்களை வைத்து இந்த சந்தேகங்களை எழுப்புவதாகச் சொல்கிறார்.

அவரிடம் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று கேட்டோம், அதற்கு அவர் ‘நேதாஜி மரணத்தைப் போலத்தான், பிரபாகரனின் மரணமும் மர்மத்துக்குரியது. அந்த மர்மத்தின் முடிச்சு எப்போது அவிழும் என்று சொல்லமுடியாது’ என்று தெரிவித்தார்.