நாங்கள் எந்த ஊடக அறத்தோடும் செயல்படவில்லை..!

 
ஒரு ஊடகத்துக்கு எல்லாமே செய்திதான்; வெல்வெட் கேக் செய்தி, செய்தியாகட்டும், பத்திரிகையாளர் சுந்தரவல்லி தொடர்பான செய்தியாகட்டும். சமூக ஊடகங்களில் நடப்பதை அப்படியே தருகிறோம். சில நேரங்களில் எடிட் செய்கிறோம்.
 
தமிழ் ஊடகங்களில் சாதி பெயரைச் சொல்லக்கூடாது, சில சொற்களை சொல்லக்கூடாது என்று எழுதப்படாத அறம் இருக்கிறது. ஆங்கில ஊடங்களில் அப்படி இல்லை. ஒரே ஊடகத்தின் தமிழ் பதிப்பு வேறு மாதிரியும் ஆங்கில பதிப்பு வேறு மாதிரி செய்தி வரும். அப்போ யார் அறத்தை மீறுகிறார்கள் என்கிற கேள்வியை யாரும் எழுப்புவதில்லை.
 
தினத்தந்தி தமிழகத்தின் நம்பர் ஒன் நாளிதழ், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் செய்தியை நீதிமன்ற அறிவுறுத்தலுக்குப் பிறகு கற்பழிப்பு என்ற சொல் போட்டுதான் எழுதுகிறது. அவர்கள் மீது எந்த கேள்விக்கணையும் பாய்வதில்லை. அவர்கள் ஊடக அறம் குறித்து கைடு போட்டவர்கள்.
 
ஒரு அத்துமீறலை, சமூக ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்துகிற பதிவுகளில் உள்ள வார்த்தைகளை தாக்கத்திற்காக அப்படியே பயன்படுத்தினால் அதுகுறித்து நண்பர்கள் இதெல்லாம் அறமா என கேள்வி எழுப்புகிறார்கள்.
 
தனியார் பள்ளிகள் தனியார் கல்லூரி, தனியார் மருத்துவமனை என எழுதி இந்தத் தனியார்களின் குற்றங்களை மூடிமறைக்க சதா ஊடக அறம் பேசித் திரியும் இவர்கள்தான் எம்மைப் போன்றவர்களுக்கு அற வகுப்பு எடுக்கிறார்கள்.
 
எங்களைப் பொறுத்தவரை இந்தக் கோடுகளை உடைப்பதையே அறமாக வைத்திருக்கிறோம். அதனால் வருங்காலத்திலும் இப்படியெல்லாமா தலைப்பு வைப்பாங்க எனும்படியான தலைப்புகளோடும் இதெல்லாம் செய்தியாக்கலாமா என்று உங்கள் ஊடக அறைகளில் விவாதம் நடத்தும்படியான பதிவுகளையும் இடுவோம் என்பதை அறிவித்துக் கொள்கிறோம்.
 
எனிவே லவ் யூ ஃபிரெண்ட்ஸ்..நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை! 🙂

செய்தி தொலைக்காட்சிகளில் வாய்ப்பு மறுக்கப்படும் பெண்கள்!

tv news readers

ஊடகத்துறையில் பெண்களுக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று வேண்டுமென்றே சில ஆணாதிக்க சக்திகள் பரப்புகின்றன (ஆனால் பிராமண பெண்கள் இதில் வரமாட்டார்கள்). உதாரணத்திற்கு எனக்கு நடந்தவைகளைச் சொல்கிறேன்.கடந்த 12 வருடங்களாக ஊடகத்துறையில் இருக்கிறேன். பள்ளியில் படிக்கும்போதே உள்ளூர் தொலைக்காட்சியில் பகுதி சேர செய்திவாசிப்பாளர். இப்படிப் படியாக உயர்ந்து தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றுகிறேன். சிறுவயதில் இருந்தே பல்வேறு பேச்சு போட்டியில் பங்கேற்று பேசியதால் எந்த தலைப்பு கொடுத்தாலும் சரளமாக தொடர்ந்து பேசுவேன். நான் தொலைக்காட்சியில் சேர்ந்தபோது சமூக பிரச்சனைகள் சார்ந்த ஒரு விவாத நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது.ஆண்கள் மட்டுமே தொடர்ந்து நடத்தி வந்த நிகழ்ச்சி. நான் இந்த நிகழ்ச்சியை ஒரு நாள் நடத்துகிறேன் என்று கேட்டதற்கு உங்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று மறுத்துவிட்டார்கள். ஒரு நாள் சம்பந்தபட்ட தொகுப்பாளர் வரவில்லை. அப்போது காலையிலேயே அலுவலகத்திற்கு வந்து விட்டதால் வேறு வழியே இல்லாமல் எனக்கு அந்த நிகழ்ச்சியை நடத்தச் சொன்னார்கள். நன்றாக நடத்தினேன்.

ஒரு செய்தி வாசிப்பாளரின் உள்ளக் குமுறலைக் கேளுங்கள் இப்போது.காமில் பின்னணியில் இருக்கும் காரணங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.