அம்பேத்கரின் 125வது பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாடியது யார்?

நாங்கள் மனித மாண்பு காக்கவும், சுயமரியாதைக்காகவுமே போராடுகிறோம். மனிதனை ஒரு முழு மனிதனாக மாற்றுவதற்காக, நாங்கள் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்தப் பத்திரிகையாளர்கள், கடந்த நாற்பதாண்டுகளாக என்னை வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்றுவரை என்னை எவ்வளவு மோசமாக சித்தரிக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் இனியாவது இந்த முட்டாள்தனத்தைக் கைவிட்டு, நேர்மையுடன் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி அம்பேத்கர் ஆற்றிய உரை…

ambedkar_340 ஏப்ரல் 14, அம்பேத்கரின் 125வது பிறந்த நாள். இந்திய சமூகத்தின் மிகச் சிறந்த புரட்சியாரை, அறிவிஜீவியை நாம் எப்படி கொண்டாடி இருக்க வேண்டும்? ஆனால் எப்படி கொண்டாடிக் கொண்டாடி இருக்கிறோம்? திராவிடர் கழகத்திலிருந்து வரும் உண்மை இதழ் தவிர, வெகுஜென, சிறுபத்திரிகை எதுவும் சிறப்பு மலர் அல்லது சிறப்பு கட்டுரையைக்கூட வெளியிட்டதாகத் தெரியவில்லை. முதல் இந்துத்துவ அரசு(!) தவிர்க்க இயலாமல் முழுபக்க விளம்பரத்தில் மங்கிய புகைப்படத்தை வெளியிடுகிறது, அதுவும் அம்பேத்கர் பவுண்டேஷன் என்ற பெயரில்… பார்ப்பன  ஊடகங்கள் அம்பேத்கர் பிறந்த நாளை வழக்கம்போல ’ஒதுங்கியிருந்தே’ கொண்டாடின. ‘ஒதுங்கியிருந்தே’ என்பதை ‘ஒதுக்கி’ என்றும் கொள்ளலாம். முத்துராமலிங்க தேவர், சர்தார் பட்டேல்களை மிகைப்படுத்தி, திரித்து நாயக பிம்பங்களாக நிறுத்தும் பணியை செய்யும் ஊடகங்கள் உண்மையான மக்கள் நாயகனை வெறுமனே மறைந்த அரசியல்வாதியாக, அரசியல் கட்சிகளின் வருடாந்திர நிகழ்வாக பிறந்த நாளில் மாலையிட்டு நினைவுகொள்ளும் சிலையான தலைவராக மட்டுமே முன்நிறுத்துகின்றன. இன்றைய தலைமுறைக்கு அம்பேத்கரை இரட்டடிப்பு செய்து ஊடகங்கள் அறிமுகப்படுத்துகின்றன.

தேவர் ஜெயந்திக்கு வண்ண புகைப்படங்களுடன் மூன்று பக்கங்களில் கவரேஜ் தந்த தினமணி, அம்பேத்கரின் பிறந்த நாளில் புகைப்படத்தைக்கூட பெரியதாக பிரசுரிக்கவில்லை. தலைவர்கள் செலுத்திய அஞ்சலி கருப்பு/வெள்ளையில் செய்தியாகிறது. பாஜக செலுத்திய சம்பிரதாய அஞ்சலி தலித்துகளின் ஓட்டுகளுக்காகத்தான் என்கிற காங்கிரஸின் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. தி இந்து (ஆங்கிலம்) அரசியல் கட்சித் தலைவர் செலுத்திய சம்பிரதாய அஞ்சலியைக்கூட கண்டித்து ஓட்டுக்காக ஏன் மாலை போடுகிறீர்கள் என கார்ட்டூன் போட்டு கண்டிக்கிறது. காங்கிரஸ்காரரான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பாஜக அரசு  ரூ. 600 கோடி செலவில் உலகிலேயே மிகப் பெரிய சிலையை நிறுவ அடிக்கல் நாட்டுகிறது. இந்த விலை பட்டேலின் இந்துத்துவ முகத்துக்கு என்பதை மக்கள் அறிவார்கள் என நம்புகிறேன்.

ஆட்சிப் பிடிப்பதில் அடுத்தடுத்த திட்டங்களோடு தயாராக இருக்கும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி, அம்பேத்கரின் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை! அவருக்கு இப்போது தேவைப்படுவது ராமானுஜரே, அம்பேத்கர் அல்ல என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. கிரேக்கத்து சிங்கம் வைகோ, கலிங்கப்பட்டியில் அம்பேத்கர் சிலை மாலை அணிவிக்கவில்லை, இதே சிங்கம் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி வண்ணப்படங்களுடன் பத்திரிகையில் வெளியானது. திருமாவளவனாவது அம்பேத்கரை நினைவுபடுத்தி ஒரு அறிக்கையாவது விடுவார் என நினைத்தால், மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு தனக்கும் அம்பேத்கருக்கும் யாதொரும் பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டார்.  காங்கிரஸ்காரர்கள் அம்பேத்கரின் 125வது பிறந்த நாளை கொண்டாட பல்வேறு போட்டிகளை நடத்துவோம் என்று அறிக்கை விட்டார்கள். எதிர் நிலையில் நின்று அரசியல் பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ்கூட தைலாபுரம் தோட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.  யாரெல்லாம் அம்பேத்கரை நினைக்கிறார்கள், பாருங்கள்!

முற்போக்கு  கட்சிகளாக முன்னிறுத்தி முன்னேறியவர்களுக்கு இன்று தேவைப்படுவது சாதி, மதத்தின் அடிப்படையிலான அரசியல் அதிகாரம். தமது அதிகார நலன்களுக்காக இவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள். தற்போதைய அரசு தலையில்லாத அரசு, ஊழல் அரசு என்பதையும் இது அகற்றப்பட வேண்டும் என்பதையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் போது கடந்த கால அரசுகளின் ஆட்சி பற்றியும் முன்னாள் ஆட்சியாளர்களான அவர்கள் ஆட்சியைப் பிடிக்க எப்படிப்பட்ட வேடங்களை தறித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும்தான் சொல்ல வேண்டும். இதுவே அவராக இருந்தால் எப்படி இருந்திருக்கும்? அவர் எப்போதும் அவர்தான் என்று நிறுவுவதன் மூலம் அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மீண்டும் ஒரு சோதனையை தமிழக மக்கள் மீது திணிக்கப்பார்க்கிறார்கள். உண்மையில் யார்தான் ஆபத்தானவர்கள்…ஊடகங்களா? அரசியல்வாதிகளா? அறிவுஜீவிகளா?

கற்பழிப்பு நியூஸ் எழுதுவது எப்படி?

கற்பழிப்பு என்கிற சொல் பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பி, சில ஊடகங்கள் அந்தச் சொல்லை பாலியல் வல்லுறவு, பாலியல் வன்செயல் என மாற்றுச் சொற்களோடு பயன்படுத்தி வருகின்றன. ஆனால் தமிழ் மக்கள் அதிகம் படிப்பதாக சொல்லப்படும் தினத்தந்தி, தினமலர் போன்றவை இன்னமும் கற்பழிப்பு என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றன. கற்பழிப்பு என்ற சொல்லில் இவர்கள் கொண்டுள்ள தனிப்பட்ட ஈர்ப்பை புரிந்து கொள்ள, இவர்கள் எழுதும் கற்பழிப்பு செய்திகளை படிப்பது அவசியம். இன்றைய தினத் தந்தியில் நாமக்கல்லில் ஒரு மாணவி பாலியல் வன்செயலுக்கு உள்ளாக்கப் பட்டு கொல்லப்பட்ட செய்தி வந்துள்ளது. செய்தியின் தொடக்கத்தில் மூன்று பேர் அந்தப் பெண்ணை பாலியல் வன்செயலுக்கு உட்படுத்தி கொன்றதாக எழுதப்பட்டுள்ளது. செய்தியின் அடுத்தடுத்த பத்திகளில் மாணவியின் காதலன் குற்றத்தில் ஈடுபடாததும் மற்ற இருவருமே குற்றவாளிகள் என்பதும் தெரிகிறது. மாணவியுடன் பேசிக் கொண்டிருந்த அவள் காதலனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய நிருபரின் இதழியல் தர்மம் இங்கே சுட்டிக் காட்ட வேண்டிய ஒன்று.

மாணவியும் காதலனும் ஜாலியாக இருந்தார்கள் என்று எழுதுகிறது தந்தி. அதாவது இவர்களின் இதழியல் தர்மத்தில் தமிழ் அல்லது இந்திய கலாச்சாரத்துக்கு மாறாக ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன் உறவு கொள்வதற்குப் பெயர் ஜாலியாக இருப்பது! இது இதழியல் தர்மமா? இந்து தர்மமா?

டெல்லியில் கூட்டு பாலியல் வன்செயலுக்கு உள்ளாகி, இறந்துபோன அந்தப் பெண்ணின் அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்று ‘நிர்பயா’ எனப் பெயர் சூட்டி, உலக பரப்பில் முக்காடு போட்டி தங்கள் மானத்தை காப்பாற்றிக் கொண்டது இந்து அரசாங்கம், அதை காப்பாற்றின இந்து ஊடகங்கள். ஆனால் தமிழகத்தில் பாலியல் வன்செயலுக்கு உள்ளான ஒரு பெண்ணின் பெயர், முகவரி, புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கின்றன தினத்தந்தி குழும ஊடகங்கள். இது என்ன ஊடக தர்மம்? ஊருக்கு ஊர் ஒரு நியாயமா அல்லது தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா? ஏன் எந்த தமிழக பெண்ணியவாதியும் இதைப் பற்றி கேள்வி எழுப்புவதில்லை?

செய்தி எழுதும்போதே ஒரு ஃபோர்னோ படத்துக்குரிய திரைக்கதையுடன் செய்தி எழுதும் போக்கை இந்த ஊடகக்காரர்கள் எப்போது மாற்றிக் கொள்வார்கள். சமீபத்தில் இந்தியாவின் மகள் கட்டுரையில் எழுத்தாளர் ஜெயமோகன், இந்தியாவின் மகன்களின் மனநிலையை தெளிவாகச் சொல்லியிருந்தார். அதாவது இந்திய ஆண் மகன்கள் பாலியல் வன்செயல்களில் ஈடுபடுவது இயல்பான செயல் என்று உளவியல் ரீதியாக விளக்கியிருந்தார். தந்தி வகையறா செய்திகளைப் படிக்கும் எந்தவொரு இந்திய, தமிழக மகனும் நிச்சயம் பாலியல் வன்செயல் செய்ய நேரம் பார்த்துக் கொண்டிருப்பான் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை!