ஜெயலலிதா அரசின் ஊழல் புகார்களை திரட்டி(இவர்களாக கண்டுபிடித்து அல்ல) அவ்வவ்போது அறிக்கையாக வெளியிட்டு ‘ஊழலுக்கு எதிரான’ இமேஜை கட்டியமைத்துக் கொண்டிருக்கிறது பாமக. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாள் பாமகவினர் தமிழக ஆளுநரை சந்தித்து ஊழல் பட்டியலை அளிப்பது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்க முடியாது. இடைத்தேர்தலில் நிற்காவிட்டாலும் ஆளுநரிடம் அளித்த பட்டியலை தங்கள் கூட்டணியில் உள்ள (இன்னமும் கூட்டணியில்தான் இருக்கிறார்களாம்) பாஜகவினருக்கு கொடுத்திருக்கலாம். அல்லது இடைத்தேர்தல் நேரத்தின்போதாவது அறிக்கையாக வெளியிட்டிருக்கலாம்.
மக்களவையில் அன்புமணி வெற்றி பாமகவுக்கு புது தெம்பைக் கொடுத்திருக்கிறது. அதற்குப் பிறகான பாமகவின் நகர்வுகள் ஒவ்வொன்றும் திட்டமிடப்படுகின்றன. ஆம் ஆத்மியின் டெல்லி வெற்றி மேலும் அவர்களுக்கு உற்சாகமூட்டியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டுகள் உள்ள நிலையில், சேலம் மாநாட்டில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கும் அறிவிப்புக்குக் காரணம் டெல்லியின் உற்சாகமே. அறிவித்த கையோடு ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருக்கிறது பாமக.
ஜெயலலிதா அரசின் ஊழல் வெளிவந்தது பாமகவால் அல்ல, ஆனால் அதை தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்கிறது பாமக. ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகளாக பாமக வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு வாய்ப்பையும் மக்கள் பல முறை அளித்துவிட்டார்கள். இவர்களால் என்ன மாற்றத்தை மக்கள் அடைந்தார்கள் என்பதற்கும் வழமையாக மற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என்ன செய்தார்களோ அதைத்தான் செய்தார்கள் என்பதே பதில்.
‘ஊழலுக்கு எதிரானவர்கள்’, திராவிட கட்சிகளுக்கு மாற்று என்பதெல்லாம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மாயையான வார்த்தைகள்தான். பாமகவின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் மறந்துவிடமாட்டார்கள். முக்கியமாக ஒரு சாதிக் கட்சியாக உள்ள பாமகவுக்கு எப்படி தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை அரசியல் அதிகாரத்துக்கு திட்டமிடும் கட்சியின் தலைமை சிந்திப்பதாகத் தெரியவில்லை. தலித்துகள் மீது நேரடியான வன்மத்துடன் அறிக்கை வெளியிட்ட பாமக, இன்று வாக்குக்கு கையேந்தி ‘ஊழலுக்கு எதிரானவன்’ என்ற நல்லவனை முன்னிறுத்துகிறது. ஊழல் பெரியதா, உயிர் பெரியதா என்கிற நிலையில் காலம்காலமாக ஒடுக்கப்பட்ட சாமானியனுக்கு உயிரோடு இருப்பதே பெரியது!
மூன்றே ஆண்டுகளில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கிறது, நம்மால் முடியவில்லையே என்கிற ஆதங்கம் மக்களை சாதிய ரீதியாக துண்டாட நினைக்கும் ஒரு சாதிக் கட்சிக்கு வரக்கூடாது. இதை ஆதங்கம் என்று சொல்வதைவிட அரசியல் அதிகாரத்திற்கான ஆசை என்று கூறலாம். இந்த ஆசை காரணமாக பாமக தன் வலதுசாரி ஊடகங்களின் ஆதரவை இழந்துவருவதை இனி உணரக்கூடும். வலதுசாரி ஊடகங்களின் ஏகபோக முதன்மையாளரான ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த செய்தியும் வெளியிடப்படக்கூடாது என்று தங்களுக்குள் எழுதப்படாத விதியுடன் இவை செயல்படுகின்றன. சாலை சரியில்லை என்பது தொடர்பாக ஏதோ வழமையான மனுவை பாமக அளித்தது போன்றே தமிழக அரசுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணை மனு குறித்த செய்தியும் இரண்டு வரிகளில் வெளியாகியுள்ளது. அதிலும் தினமணி தமிழக அரசின் ஊழல்கள் என்பதற்கு பதிலாக, ‘தமிழக அரசு மீதான புகார்களை’ என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறது. தினத்தந்தி மட்டும் பாமகவின் முழு அறிக்கையில், எடிட் செய்யப்பட்ட பகுதியை வெளியிட்டிருக்கிறது. இணைய ஊடகங்களில்கூட முழு அறிக்கையும் வெளியாகவில்லை. ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த இந்திய கருப்பு முதலாளிகளின் பட்டியலை வெளியிட்ட எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்துதான் தமிழக அரசின் ஊழல் தொடர்பான செய்திகளைக்கூட வெளியிடக் கூடாது என்கிற கொள்கையை வைத்திருக்கும் தினமணியும் வெளிவருகிறது!
இத்தனை காலமும்(பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல்) பாமகவின் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள், முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்குப் பின், மிகுந்த கவனத்துடன் பாமகவை தவிர்க்கின்றன, அல்லது அறிக்கைகளை மட்டுப்படுத்துகின்றன. பாமகவும் ஊழலுக்கு எதிரானது அல்ல, வலதுசாரி தமிழ் ஊடகங்களும் ஊழலுக்கு எதிரானவை அல்ல. உண்மையில் தமிழக மக்கள் மாறி மாறி ஊழல் அரசுகளால் ஆளப்பட்ட இந்த ஊடகங்கள்தான் காரணம். இவர்கள் கட்டியெழுப்பும் பிம்பங்களே மாறிமாறி ஆண்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் முதலில் புறக்கணிக்க வேண்டியது இந்த ஊடகங்களைத்தான். வாக்குக்கு கையூட்டு வாங்குவதை நியாயப்படுத்துவதும், மக்களை ஊழலுக்கு பழக்குவதும் இந்த ஊடகங்கள்தாம். ஆகவே நாம் 2015திலும் ஏமாறுவோம் என்பதில் மாற்று இருக்க முடியாது!
(நண்பர் ஒருவர் தினமலரை ஏன் குறிப்பிடவில்லை என இந்தப் பதிவில் கேட்டிருந்தார். இரண்டாம் தரமான மொழி நடையில் எழுதப்படும் பிரபல தினசரிகளை நான் படிப்பதில்லை. முக்கியமாக பெண்கள் தொடர்பான செய்திகளை இவர்கள் எழுதும்விதம் அருவருக்கத்தக்கது. அதனால் மலர், தந்திகளை நான் படிப்பதில்லை. ஒரு வகையில் தினமணி எனக்கு தமிழைக் கற்றுக் கொடுத்த இதழ், என்றாலும் அதன் வலதுசாரி தனத்தை என்னால் இனம்காண முடியும். தினமணியுடன் தி இந்து தமிழை சில ஊடகவியலாளர்கள்கூட ஒப்பிட்டு சொல்கிறார்கள். நிச்சயம், தினமணியின் தமிழ் நடையுடன் தி இந்துவை ஒப்பிட முடியாது. தி இந்து, ஆ.வி. பாணி தமிழின் தினசரி வடிவம் என்பதே சரி)