நான் மாட்டிறைச்சி விரும்பி…

மாட்டிறைச்சி உண்பேன் என்று சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை.  மாட்டிறைச்சி உண்பது கீரையும் காயும் சாப்பிடுவதுபோல அவரவர் உணவுப் பழக்கம் சார்ந்தது.  உணவுப் பழக்கம் சார்ந்து ஒதுக்குவது, ஒடுக்குவது நெடும்காலமாக இருந்து வந்தாலும் அதை சட்டத்தின் பிடிக்குள் நிறுத்துவது தற்போதைய மதவாத ஆட்சியின் செயல்திட்டமாக உள்ளது.  இது அப்பட்டமான உரிமை மீறல் செயல்.  வரலாற்று முந்தைய காலம் தொட்டே இருந்துவரும் ஒரு உணவுப் பழக்கத்தை மதத்தின் பெயரால் சட்டம் இயற்றி தடுப்பது பாசிசத்தின் உச்சம். மாட்டிறைச்சி விலை மலிவானது, அதே நேரத்தில் சத்தும் குறைவில்லாதது. சத்துக் குறைவால் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் அவதியுறும் நாட்டில் மாட்டிறைச்சி தடை போன்ற சட்டம் எவ்வளவு பிற்போக்குத்தனமானது? உலக நாடுகளில் எங்கேயும் இதுபோன்ற அடிப்படை உரிமையை பறிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்திருக்காது. இப்படியொரு சட்டம் தமிழகத்தில் வந்தால் நிச்சயம் நான் குடும்பத்தோடு தெருவில் இறங்கிப் போராடுவேன்.

jhapost

பசு என்னும் புனிதம் எப்படி கட்டமைக்கப்பட்டது என்று இந்திய வரலாற்று அறிஞர் டி. என். ஜா தனி புத்தகமே எழுதியிருக்கிறார். அதில் இந்து அமைப்புகள், இந்து அரசுகளால் புனிதங்களாக மதிக்கப்படும் புராண நூல்களில் பசுமாட்டின் இறைச்சி எத்தகைய ருசியுடையது என்று சிலாகித்திருப்பதாக எழுதியிருக்கிறார். நூலின் விலை ரூ. 200தான். கோழி, ஆட்டின் இறைச்சியை மட்டும் உண்ணும், மாட்டிறைச்சி உண்பவர்களை, உண்பதை ‘அய்யே’ என்கிற பார்வை பார்க்கும் அன்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். என்னுடைய பரிந்துரை…

எனக்குத் தெரிந்த ஒரு பெண், என்னைப் போல மாட்டிறைச்சி உண்பவர்தான், நாங்கள் ஒருமுறை பேசிக் கொண்டோம். இத்தனை பத்திரிகைகளில் ஏன் ஒன்றில் கூட மாட்டிறைச்சி ரெசிபி ஒன்றுகூட வருவதில்லை என்று நான் கேட்க, ‘நாம் போடுவோம்’ என்றார். இறுதியில் அவருக்கான வாய்ப்பு வந்தது. ஆனால், தன் லட்ச ரூபாய் மாத சம்பளம் காரணமாக மாட்டிறைச்சி ரெசிபி பிரசுரத்தை அவர் நிறுத்திவிட்டதாகக் கேள்வி.

ஆமாம் ஊடகங்கள் எல்லாம் ஒற்றை விழுக்காடில் இருக்கும் பார்பனர்களால், பார்ப்பனர்களுக்காக நடத்தப்படுபவைதான். மாட்டிறைச்சி உண்பவர்கள் இன்னமும் பத்திரிகைகளை காசு கொடுத்து வாங்கும் அளவுக்குக்கூட பொருளாதார வளர்ச்சி பெறமுடியவில்லை. அப்படியே பெற்றாலும் மேலே சொன்ன பெண் பத்திரிகையாளர் போல ‘கர்வாப்ஸி’ பெற்று புனிதமடைந்து விடுகின்றனர். போகட்டும் நான் மாட்டிறைச்சி ரெசிபி நிறைய வைத்திருக்கிறேன். நேரமின்மை காரணமாகவே எழுதவில்லை. நான்கு பெண்கள் தளத்தில் எழுதுவேன்.

எழுதாமல் போன இரண்டு வருடங்கள்…

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வலை தளத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்… பெரிய இடைவெளியாகத்தான் தெரிகிறது. கடுமையான வேலைபளு ஏற்பட்டதே. எழுதாமல் போனதற்கு முக்கிய காரணம். எழுதாமல் விட்ட விஷயங்கள் ஏராளம், எழுதியிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது.
இந்த இரண்டு வருட இடைவெளியில் நான் நிறைய கற்றிருக்கிறேன். மிக மிக மோசமான அனுபவங்கள் மூலம். வெகுளித்தனமான, மேம்போக்கான சிந்தனையோடு இருந்த எனக்கு, இந்தக் காலம் நிதர்சனத்தை புரிய வைத்திருக்கிறது. மிக மிக மோசமான அனுபவங்களுக்கு நன்றி!
ஆங்.. நான் சொல்ல வந்த விஷயமே வேறு… எழுதாமல் விட்டாலும் என்னுடைய தளத்திற்கு நிறைய பேர் வருகை தந்து, படித்து மறுமொழி இட்டுக் கொண்டிருந்தீர்கள். உங்களின் வருகைதான் என்னை மீண்டும் எழுத வைத்திருக்கிறது. முகம் தெரியா அந்த நண்பர்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

அரசு மருத்துவமனை… என் அனுபவம்!

இன்றைக்கு எத்தனை பேர் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்கிறீர்கள் என்று தெரியாது. அரசு மருத்துவமனைகள் என்றாலே நாற்றமடிக்கும், சரியான சிகிச்சை தர மாட்டார்கள் என்கிற மேம்போக்கான நினைப்பு நடுத்தர வர்க்கத்துக்கு நிறையவே இருக்கிறது என்பது மட்டும் தெரியும். எனக்கும்கூட அப்படியொரு நினைப்புதான் இருந்தது.

 

சென்ற வருடம் 8 மாத கர்ப்பிணியாக இருந்தநேரத்தில்தான் முதன்முதலில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி வந்தது. முதல் மாதம் தொடங்கி, 7 மாத காலம்வரை தனியார் மருத்துவமனையில்தான் மாத பரிசோதனைக்குச் சென்றுகொண்டிருந்தேன். ஒரு முறை டாக்டரை சந்தித்து பிரஷர், வெயிட், குழந்தையின் இதய துடிப்பு, அசைவுகள் தெரிகிறதா என்று பரிசோதிக்க ரூபாய் 250 பீஸ். இதுதவிர விட்டமின், புரோட்டின், கால்சியம் மாத்திரைகளுக்கு என்று மாதம் ஆயிரம் ரூபாய் செலவானது. இதில் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும். பொதுவாக இவர்கள் தரும் விட்டமின் மாத்திரைகள் குழந்தை, தாயின் உடல் எடையை அதிகப்படியாக கூட்டக்கூடியவை. ஒரு நல்ல டாக்டர் உணவுகளின் மூலமே சத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லுவார். அப்படி எந்த டாக்டரும் சொல்ல மாட்டார். காரணம் சிசேரியன்..குழந்தையின் எடையை காரணம் காட்டியே இன்றைக்கு பெரும்பாலான சிசேரியன் பிரசவங்கள் நடக்கின்றன. எனக்கும் இப்படி சிசேரியன் இருக்குமோ என்கிற லேசாக தலைக்காட்டியது. அதற்கு முன்…எந்த பிரசவத்துக்கு எவ்வளவு செலவாகும் என்று அந்த மருத்துவமனையில் விசாரித்தோம். சுகப் பிரசவத்துக்கு 50 அல்லது 60 ஆயிரம் ஆகும், சிசேரியனுக்கு 70லிருந்து 80 ஆயிரம் ஆகும் என்றார்கள். உண்மையில் இந்த விலை விசாரிப்புக்குப் பிறகு, அந்த மருத்துவமனை பக்கமே போகவில்லை.
கணவரின் பணியிடத்தில் கொடுத்த இஎஸ்ஐ கார்டு பயன்படுத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று அக்கம்பக்கத்தவர்கள் சொன்னார்கள். அதன்படியே சென்றோம், பதிவு செய்து கொண்டோம்.
பொதுவாக கர்ப்பம் தரித்த இரண்டாவது மாதத்திலேயே பதிவு செய்துவிட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் உள்ளதுபோலவே ஸ்கேனிங் வசதியும், கர்ப்பிணிகள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்துமாத்திரைகளையும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே வழங்குகிறார்கள். கூடவே, அங்கன்வாடிகள் மூலம் சத்துமாவையும் வாரம் ஒரு முறை வழங்குகிறார்கள். எல்லாமே அரசு நமக்காக காசு வாங்காமல் கொடுப்பது.
எட்டாவது மாதம் பதிவு செய்ய சென்றபோது, ஏன் இவ்வளவு தாமதம் என்றார் அந்தப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த டாக்டர். வெளியூரிலிருந்து வந்ததாக காரணத்தை புனைந்தோம். 5வது மாதத்தில் ஸ்கேனிங் எடுத்தீர்களாக என்றார். நாங்கள் எடுத்த ஸ்கேனிங் ரிப்போர்ட்டை சில நொடிகள் கீழ்பார்வையால் பார்த்தார். பிறகு, என்னிடம் நீட்டி, ‘‘ஸ்கேன் செய்ய வேண்டும்’’ என்றார். வரிசையில் நின்றேன். சில நூறுகள் கொடுத்துச் செல்லும் தனியார் ஸ்கேன் சென்டர்களில் உள்ள கவனிப்பு எதுவும் இங்கே கிடையாது. டாக்டரேதான் இங்கே ஸ்கேனிங்கும் செய்வார். வந்திருக்கும் கர்ப்பிணிகளே ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள வேண்டும். 40 வயதைத் தொடும் நிலையில் இருந்த அந்த டாக்டர், பொதுவாக எல்லோரையும் ‘நீ, வா, போ’ என ஒருமையில்தான் அழைத்தார். கர்ப்பிணிகளின் வயிற்றில் களிம்பைத் தடவி, மவுஸ் போல ஒரு கருவியை வைத்து முன்னும் பின்னும் அசைத்தார். வயிற்றில் இருக்கும் எதுவும் அந்த கம்ப்யூட்டர் திரையில் சரியாக பதிவாகவில்லை அல்லது சரியாக அவர் பதிவு செய்யவில்லை. ஒருவேளை அவருக்கு சரியாக ஸ்கேனிங் செய்ய தெரியாமல்கூட இருந்திருக்கலாம். இந்த முன் பின் அசைவுகளுக்குப் பிறகு, கர்ப்பிணிகளை அழைத்து ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்துக்கொண்டிருந்தார் அந்த டாக்டர். எனக்கும் ஒரு துண்டுச் சீட்டுக் கொடுத்தார்…அதில் அந்தப் பகுதியில் இருந்த ஒரு தனியார் ஸ்கேனிங் சென்டரின் முகவரி இருந்தது. ‘‘ஏற்கனவே நான் ஸ்கேனிங் செய்துவிட்டேன். குழந்தை நலமாக இருப்பதாக ரிப்போர்ட் வந்துவிட்டது. திரும்பவும் நான் ஏன் செய்யணும்?’’ என்று கேட்டதற்கு, என் முகத்தைப் பார்த்துவிட்டு, ‘‘சரியா பேபியோட அசைவு தெரியல…அதான் சொல்றேன். இந்த மெஷின்ல சரியா தெரியலை. அடுத்தமுறை வரும்போது எடுத்துட்டு வாங்க’’ என்றார். எனக்கு நன்றாகப் புரிய வைத்தது அவருடைய தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த அந்த தனியார் ஸ்கேனிங் சென்டரின் காலண்டர்.
(இந்தக் காட்சியைக் கண்டது சென்னை வில்லிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், இதே காட்சி, கிட்டத்தட்ட இதே போன்ற உரையாடலை சென்னை அயனாவரம் மகப்பேறு மருத்துவமனையிலும் பார்க்க கேட்க முடிந்தது. அங்கிருக்கும் ஒரு மருத்துவரும் இதேபோல குறிப்பிட்ட ஸ்கேனிங் சென்டரின் துண்டுச் சீட்டை பரிசோதனைக்கு வருகிற பெண்களிடம் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.)
நான் எதுவும் சொல்லாமல் ‘ஐயோ அப்படியா’ என்று பதறாமல் கணவரிடம் வந்து விஷயத்தைச் சொல்லி ‘கண்டிப்பாக நான் மீண்டும் ஒரு ஸ்கேனிங் செல்ல மாட்டேன்’ என்பதைப் புரியவைத்தேன். உடனே, எங்கள் பகுதி மருத்துவ பணியாளரைக் கூப்பிட்டு அந்த டாக்டர் ஏன் அவசியமே இல்லாமல் ஸ்கேன் செய்யச் சொல்கிறார்? அந்த டாக்டரின் பெயர் என்ன என்று கேட்டோம். பதறியவர்…‘‘ஸ்கேன் எல்லாம் வேண்டாம், தெரியாமல் சொல்லிவிட்டார். இனி இங்கே வரத்தேவையில்லை. நேரா அயனாவரம் மருத்துவமனைக்கே சென்று பரிசோதித்துக்கொள்ளுங்கள். நான் எழுதித்தருகிறேன்’’ என்று வழிகாட்டினார். இவரைப்போலவே, மகப்பேறு மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் சிறப்பாகவே தங்களுடைய பணிகளை செய்தார்கள். (நாங்கள் பத்திரிகையாளர்கள் என்று எந்த இடத்திலும் சலுகை கோரவில்லை) உண்மையான மருத்துவ சேவை செய்வது கடைநிலையில் இருக்கும் இந்த ஊழியர்கள்தான். வீடு வீடாகத்தேடிச் சென்று, எந்தவித மருத்து அறிவும் இல்லாத பெண்களுக்கு அரசின் உதவிகளை ஓரளவுக்காவது கிடைக்கச் செய்வது இவர்கள்தான்!
பிரசவ நாளும் வந்தது, வயிற்று வலியோடு அனுமதிக்கப்பட்டு, ஒரு நாள் கழித்து எனக்கு மகன் பிறந்தான். எனக்கு பிரசவம் பார்த்தது முழுக்க, முழுக்க அந்த மருத்துவமனை செவிலியர்களே…ஒருமுறைகூட நான் மருத்துவரை பார்க்கவில்லை. குழந்தை மூன்றரை கிலோவுடன் பிறந்தான். சற்றே சிரமப்பட்ட சுகப் பிரசவம். தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருந்தால், நிச்சயமாக சிசேரியன்தான். எனக்கு பிரசவம் ஆன நேரத்தில் என்னுடன் நான்கைந்து பேர் பிரசவித்தார்கள். மூன்று செவிலியர் அனாயசமாக அடுத்த கேஸ், அடுத்த கேஸ் என்று ஒவ்வொருவருக்கும் பிரசவம் பார்த்து முடித்தார்கள்.
சினிமாக்களில், ஊடகங்களில் வருவதுபோல் பிரசவம் மறுஜென்மம் என்கிற கதை விடுதல் எல்லாமே இங்கே இல்லை… பிரசவித்த குழந்தையை முதன்முதலில் பார்த்ததும் ஆனந்த கண்ணீர் விடும் செண்டிமெண்ட் காட்சியையும் நான் பார்க்கவே இல்லை. எல்லாமே இயல்பாகத்தான் இருந்தது.
சுகப்பிரசவம் ஆனவர்கள் மூன்று நாட்களும், சிசேரியன் செய்த பெண்கள் ஒரு வார காலமும் மருத்துவமனையில் தங்கிவிட்டுச் செல்ல வேண்டும். அந்த நாட்களில் பிரசவித்த பெண்களுக்கு குறை சொல்ல முடியாத சுவையில் உணவையும் வழங்குகிறது அரசு.
ஆயாக்களுக்கு சில பத்து ரூபாய்களும், நர்சுகளுக்கு சில நூறு ரூபாயும் தரவேண்டி இருக்கிறது. அவர்களாகவே கேட்கிறார்கள். கொடுக்க முடிந்தவர்கள் கொடுக்கலாம், கொடுக்கவே முடியாதவர்களின் நிலைமை?
அடுத்து முக்கியமான விஷயம் அரசு மருத்துவமனைகளின் சுகாதார சீர்கெடு பற்றியது… அரசு மருத்துவமனைகள் மீது உள்ள மாபெரும் குற்றச்சாட்டும் இதுதான். இது உண்மையும்கூட. ஆனால் மருத்துவமனை சுகாதாரம் இல்லாமல் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளும் நம்முடைய பங்கு நிறையவே இருக்கிறது.
தனியார் மருத்துவமனைகளைவிட, அரசு மருத்துமனைகளில் கூட்டம் எப்போதும் அதிகமாகத்தான் இருக்கும். நான் பார்த்தவரை துப்புரவுப் பணியாளர்கள் அடிக்கடி சுத்தம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் வருகிற மக்கள் கூட்டத்துக்கு அது போதவே போதாது. அதேபோலத்தான் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பழக்கமும் அறவே நமக்குக் கிடையாது. காலை ஏழரை மணிக்கு துப்புரவுப் பணியாளர் கழிவறைகளை சுத்தப்படுத்திவிட்டு சென்றிருப்பார். அடுத்த அரை மணி நேரத்தில் பயன்படுத்திய நாப்கின்கள், காலையில் உண்டு முடித்த உணவின் மிச்சங்கள் என கழிவறையின் வாசல்வரை சிதறிக்கிடக்கும். இத்தனைக்கும் குப்பைகள் போடுவதற்கென்று குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். இதில் யாரைக் குற்றம் சொல்வீர்கள்?
அப்போதைய தேவை முடிந்துவிட்டது என்று குப்பைகளை விசீவிட்டு செல்லும்போது, ஒரு நிமிடம் அதை சுத்தம் செய்யப்போவது நம்மைப் போல ஒருவர்தானே என்ற நினைப்பு ஏன் வரமாட்டேன் என்கிறது?
இந்த விழிப்புணர்வுகூட இல்லாததால்தான் அரசு தரும் மருத்துவ திட்டங்கள் முழுமையாக நமக்கு வந்துசேரவில்லை. அதுபற்றி யாரும் கவலைப்படப் போவதும் இல்லை…