கலப்பின விதைகள் விநியோகம்: தமிழக வேளாண் துறையின் அக்கறை மக்கள் மீதா? விதை கம்பெனிகள் மீதா?

விதைகளே பேராயுதம்
– இயற்கை உழவாண்மை முன்னாடி கோ.நம்மாழ்வார்

மாடித்தோட்டம் போடுவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறை, சென்னையில் மலிவுவிலையில் தோட்டப் பொருட்களை விற்பனை செய்தது. முற்றிலும் இயற்கை சார்ந்த உரங்கள்,வளர்ச்சி ஊக்கிகள் என இயற்கை வழியில் வீட்டுத் தோட்டம் அமைக்கும் வகையில் பொருட்களை ஒரு தொகுப்பாக விற்பனை செய்தது. ஆனால் இந்தத் தொகுப்பில் தரப்பட்ட கீரை, காய்கறி விதைகள் குறித்து பெரும் சர்ச்சை சமூக ஊடகங்களில் உருவானது.

காய்கறி விதை பாக்கெட்டுகளில் விஷமேற்றப்பட்ட விதைகள் ஜாக்கிரதை என்கிற வாசகம் பலரை இந்த விதைகள் எத்தகையவை என்ற கேள்வியை எழுப்பின. விற்கப்பட்டவை மரபணு மாற்றப்பட்ட விதைகளா? என்கிற ரீதியிலும் விவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்கள் அரசு தரப்பில் எட்டவே, அவர்கள் இந்த விதைகள் மரபணு மாற்றப்பட்ட விதைகள் அல்ல, ஹைபீரிட் விதைகள் எனப்படும் கலப்பின விதைகள் என்று விளக்கம் கொடுத்தார்கள்.

மரபணு மாற்றப்பட்ட விதைக்கும் கலப்பின விதைக்கும் என்ன வேறுபாடு? தக்காளியின் மரபணுவுடன் தவளையின் மரபணுவை  சேர்த்து ‘புஷ்டி’யான தக்காளியை உருவாக்குவது மரபணு மாற்றம். சிவப்பான தக்காளி வகையுடன் சதைப்பற்றான தக்காளி வகையைச் சேர்த்து சிவப்பான, சதைப்பற்றான தக்காளி இனத்தை உருவாக்குவது கலப்பினம். இவை இரண்டுமே செயற்கையாக உருவாக்கப்படுபவை.

பசுமைப் புரட்சியின் போது, ரசாயன உரங்களுக்கு அடுத்தபடியாக, கலப்பின விதைகள்தான் இந்திய விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய பாரம்பரிய விவசாயத்தை, பாரம்பரியம் மிக்க பயிர்களை எப்படி ரசாயனங்கள் அழித்தனவோ, அதே அளவுக்கு கலப்பின விதைகளும் அழித்தன. இயற்கை விவசாயத்தை முன்னெடுத்த நம்மாழ்வார், மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் போன்றோரின் பிரச்சாரமும் களப்பணியும் இவற்றை முன்வைத்தே அமைந்தன.

சென்ற தலைமுறை வரை, ருசியான அரிசியை பக்கத்து ஊரிலோ, பக்கத்து வீட்டினரின் விளைச்சலிலோ வாங்கி ருசித்திருப்போம். ஆனால், இன்று எந்த விவசாயியும் தான் விளைவித்த அரிசியை தனக்காகப் பயன்படுத்துவதில்லை. அது ஒரு வணிகமாக மாற்றப்பட்டுவிட்டது. சத்தில்லாத, ருசியில்லாத அரிசியைத்தான் இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். சீரக சம்பாவும் பொன்னியும் விளைந்த காலம் போய், ’ஏதோ ஒன்னு விளையுது’ என்று விவசாயிகளே சலித்துக்கொள்ளும் வகையில் பாரம்பரியம் அழிக்கப்பட்டுவிட்டது. காரணம் கலப்பின விதைகள்.

ஐ.ஆர். 8, ஐ.ஆர்.20, ஐ.ஆர்.50 என இந்திய வேளாண் அமைச்சகம் வனொலி, தொலைக்காட்சி வழியாக கூவிக் கூவி கலப்பின நெல் ரகங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தியது.  இந்திய நெல் ரகத்தோடு, ஜப்பானின் குட்டை ரக நெல் ரகத்தை இணைத்து உருவாக்கப்பட்ட நெல் ரகங்கள் இவை. அதிக விளைச்சல், பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிக்கும் திறன், குறைந்த நீர் இருந்தால் போதும் என கவர்ச்சியான வார்த்தைகள் போட்டு இந்திய விவசாயிகளிடம் திணிக்கப்பட்டன.

நெல்லுக்கு நடந்ததுதான் காய்கறி, பழவகைகள், கீரை வரை கலப்பின ரகங்கள் புகுத்தப்பட்டன. இந்திய விவசாயப் பல்கலைக்கழகங்கள் இந்த கலப்பின ரகங்களை, செயற்கை உரங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவே பயன்பட்டவே தவிர, பாரம்பரிய விவசாயத்தையும், தொழிற்நுட்பத்தைக் காப்பாற்றவும் அதை மேம்படுத்தவும் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இயற்கை விவசாய விஞ்ஞானிகளால் கடுமையாக வைக்கப்படுகிறது.

பாரம்பரியமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் அழிந்ததை பொறுக்கமுடியாமல்தான் நம்மாழ்வார் இனி விதைகளே பேராயுதமாக மாற வேண்டும் என முழங்கினார். நாட்டு ரக பயிர்களின் விதைகளை சேமித்து அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்றார்.

கலப்பின விதைகள், செயற்கை உரங்கள் இந்திய விவசாயிகளை எத்தகைய இக்கட்டான நிலைக்குத் தள்ளியிருக்கின்றன என்பதை விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைகளை வைத்து அறிந்துகொள்ளலாம். எங்கெல்லாம் விவசாயிகள் தற்கொலை நடக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் கலப்பின விதைகள் – செயற்கை விதைகள் கொடுத்த ஏமாற்றம் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை ஊடகவியலாளரும் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து தொடர் பதிவுகளை செய்பவருமான பி.சாய்நாத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். இந்தியாவில் அதிகமாக தற்கொலைகள் நடக்கும் விதர்பாவில் மட்டுமல்ல, சென்ற ஆண்டு ஆகஸ்டில் தற்கொலை செய்துகொண்ட திருச்சி விவசாயி பயிரிட்டதும் மரபணு மாற்றப்பட்ட பருத்தியால்தான்.

விவசாயிகளின் இத்தகைய முடிவுகளும் செயற்கை உரங்கள் இட்ட வளர்த்த உணவுகளை உண்பதால் அதிகரித்துவரும் உடல் நோய்களும் மக்களை இயற்கையின் பால் திருப்பின. இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது. அரசாங்கமே இயற்கை வழி விவசாயத்தை ஏற்றுக்கொண்டது. அதன் விளைவே வேளாண் பல்கலைக்கழகம் மக்களுக்கு இயற்கை வழி, வேளாண் பொருட்களை வழங்குவதும் இயற்கை வழி வேளாண்மை குறித்த பயிற்சிகளை தருவதுமான செயல்பாடுகள்.

பக்கத்து மாநிலமான கேரளம், தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படும் காய்கறிகளை தவிர்க்கச் சொல்லி வீட்டிலேயே காய்கறிகளை இயற்கை வழியில் வளர்த்துக்கொள்ளுங்கள் என்று வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்து வீட்டுத் தோட்டத்தினை ஊக்கப்படுத்தி வருகிறது.

தமிழக வேளாண் துறையும் இயற்கை வழி வேளாண்மையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இயற்கை வழி வேளாண் பயிலரங்கங்களை தோட்டக்கலைத் துறை நகர்ப் புறங்களில் முனைப்பாகச் செய்துவருகிறது. மண்புழு வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், இயற்கை பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு என இந்தத் துறை மூலம் பலர் பயன்பெற்று தொழில் தொடங்கியும் இருக்கிறார்கள்.

ஆனால், தமிழக வேளாண் பல்கலைக் கழகம் சொல்வது ஒன்று செயல்படுவது ஒன்றாக இருக்கிறது என்பதே இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது.  இயற்கை உரங்கள், இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், இயற்கை பூச்சிகள் என கொடுத்துவிட்டு விதைகள் மட்டும் கலப்பின விதைகளாகக் கொடுப்பது எந்த வகையில் இயற்கை வழி வேளாண்மை ஆகும் என்பதே இவர்களுடைய கேள்வி. கலப்பின விதைகள் என்றால் மலட்டு விதைகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு முறை இந்த விதைகளை விதைத்தால், செடி வளர்ந்து, காய்த்து, அதோடு தன் இனத்தையே முடித்துக்கொள்ளும். இந்த விதைகளை சேகரித்து மீண்டும் வளர்த்தால் அவை பூத்தாலும் காய்க்காது. மீண்டும் விளைச்சலுக்கு அந்த குறிப்பிட்ட விதையை விற்ற நிறுவனத்திடம்தான் போய் நிற்க வேண்டும்.

சுருக்கமாக, விதை வியாபாரம் என்று புரிந்துகொள்க. கலப்பின விதையை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு கர்நாடகத்தின் பெங்களூரு, இந்திய அளவில் புகழ்பெற்ற இடம்.  வேளாண் விதை உற்பத்தி நிலையமாகட்டும் தனியார் நர்சரிகளாகட்டும் அனைத்திலும் இந்த விதைகள் மட்டுமே விற்கப்படுகின்றன. இந்த விதைகளின் விதைகள் காய்க்காது என்பதைப் போல, இந்த விதைகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதைத்துவிட வேண்டும் என்கிற காலக்கெடு வைத்தே விதைகள் விற்கப்படுகின்றன.

இத்தகைய ‘சிக்கல்’களுக்கிடையேதான் வீட்டிலேயே ரசாயன பூச்சிக்கொல்லி அற்ற, இயற்கை வழியில் காய்கறிகளை விளைவித்துக்கொள்ளுங்கள் என்ற விளம்பரத்துடன் ‘பழைய சரக்கை’ புதிய அடையாளத்துடன் தந்துகொண்டிருக்கிறது தமிழக வேளாண் துறை. உண்மையில் இவர்களுக்கு யார் மீது அக்கறை… மக்கள் மீதா? விதை கம்பெனிகள் மீதா? என்பதைத்தான் சமூக ஊடகங்களில் மக்கள் விவாதம் ஆக்கி வருகிறார்கள்.

இந்தக் கட்டுரையின் ‘எடிட்’ செய்யப்பட்ட வடிவம் தினச்செய்தி(30-01-2016) நாளிதழில் வெளியாகியுள்ளது.