“ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்!” – அசோகமித்திரன்

அப்போது எனக்கு இலக்கியத்தின் மீது பேரார்வம். தேடித்தேடி இலக்கியங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். பத்திரிகை தொழில் காரணமாக இலக்கியத்தின் மீது ஆர்வம் வந்ததா? அல்லது இலக்கிய ஆர்வத்தை என் தொழிலுக்கு பயன்படுத்திக் கொண்டேனா? எனத் தெரியவில்லை. ஆனால் இலக்கியம் படிப்பதையும், அதைப் பற்றி எழுதுவதையும் மிகவும் விரும்பியே செய்தேன். ஆரம்ப நிலை வாசகி என்பதால் எழுத்தாளர்களைத் தேடிப் போவதும் விருப்பமாய் இருந்தது. எழுத்துக்கும் நிஜத்துக்கும் நிறைய வித்தியாசங்களை பலரிடம் கண்டேன். உடைந்த பிம்பங்கள் குறித்து எனக்கு வருத்தமும் இல்லை, வியப்பும் இல்லை! நானும் என்னுடன் வந்திருந்த புகைப்படக்காரரும் என்ன ஜாதி என்று அசோகமித்திரன் கேட்டதையும் அதே மனநிலையில் தான் எதிர்கொண்டேன். சில கட்டுரைகள், சில சிறுகதைகள் தவிர அசோகமித்திரனை அதிகம் படித்ததில்லை. கட்டாயம் படிக்கவேண்டும் என்று வாங்கி வைத்திருக்கும் அவருடைய நாவல்கள், சிறுகதைகள் தொகுப்புகள் புரட்டப்படாமல் கிடக்கின்றன. அந்த புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் நான் பிறந்த கிராமத்தில் வீட்டுக்குள் எங்களை அனுமதிக்காத லிங்காயத்து ‘சாமி’களை, அசோகமித்திரன் நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறார். பிரபல பத்திரிகை ஒன்றில் பணியாற்றியபோது எடுத்த பேட்டி இது. சுவாரஸ்ய குறைவு காரணமாக பேட்டி பிரசுரமாகவில்லை. பேட்டியில் சுவாரஸ்யத்தைக் கூட்டச் சொல்லி ஆசிரியர் குழு பலமுறை சொல்லியும் அதை செயல்படுத்த முடியாமைக்கான காரணங்களில் என் ஜாதி குறித்த அசோகமித்திரனின் கேள்விக்கு நிச்சயம் இடம் உண்டு. பழைய காகிதங்களுக்கு நடுவே இருந்த இந்த பேட்டியை கீழித்துப் போட மனம் வரவில்லை. பிரசுரிக்கிறேன்…

”முதுமையை என்னால் கொண்டாட முடியவில்லை. இறக்கி வைக்க முடியாத மாபெரும் சுமையாக இருக்கிறது. அதை இறக்கி வைக்கும் காலத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் அசோகமித்திரன். அறிமுகம் தேவையில்லாத தமிழ் இலக்கிய உலகின் மூத்த ஆளுமை.

”என்னுடைய இளமை பருவத்தில் செகந்திராபாத்திலிருந்து சென்னை வந்தேன். ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக வேலை. அப்போதிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘நாடகத்தின் முடிவு’ நான் எழுதிய முதல் சிறுகதை. அந்த வேலையிலிருந்து விலகி முழு நேர எழுத்தாளனாகி அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. இடையே இருபத்தி மூன்று ஆண்டுகள் கணையாழி ஆசிரியராக இருந்தேன். எல்லாமே அனுபவம்தான். வாழ்க்கையில் எல்லாவிதமான அனுபவங்களையும் கடந்துவர வேண்டியிருக்கிறது. அந்த அனுபவங்களே படைப்புகளாகின்றன”

”தமிழ் இலக்கிய சூழல் தற்போது எப்படியுள்ளது?”

”தமிழ் ஜொலிக்கிற காலம் இது. நிறைய படைப்பாளிகள் எழுத வந்திருக்கிறார்கள். நிறைய புத்தகங்கள் வெளிவருகின்றன. என்னால் முடிந்தவரை எல்லா படைப்பாளிகளையும் படைப்புகளையும் வாசிக்கிறேன். ஒரு காலத்தில் தீவிர எழுத்தை சிற்றிதழ்களில்தான் பார்க்க முடியும். இன்று வெகுஜன பத்திரிகைளே தீவிர எழுத்துக்களை தேடிப்பிடித்து பிரசுரிக்கின்றன. சிற்றிதழ்களின் தேவையும் குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. நிறைய படைப்புகள் வெளிவந்தாலும் சமகாலத்தில் ஒரு படைப்பு சிறந்தது என்று சொல்லிவிட முடியாது. அப்படி கொண்டாடப்பட்ட எத்தனையோ படைப்புகள் காலப்போக்கில் காணாமல் போயிருக்கின்றன. கல்கி எழுதிய போது இதெல்லாம் எழுத்தா என்ற கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று அவருடைய எழுத்து கொண்டாடப்படுகிறது. அதனால் ஒரு படைப்பு சிறந்ததா? இல்லையா? என்பதை பத்து, இருபது வருடங்கள் கழித்துதான் தெரிந்துகொள்ள முடியும்”

”சமீப காலங்களில் நீங்கள் எதைப்பற்றி பேசினாலும் அது சர்ச்சைக்குரியதாகிறதே?”

”நிஜத்தை பதிவு செய்வதில் எனக்கு விருப்பம் அதிகம். எழுத்தைப் போலவே தான் நானும் நிஜமாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு இறை நம்பிக்கை உண்டு. மனிதர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத மனக்கஷ்டங்களை கடவுளிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும் என்று திடமாக நம்புகிறேன். இதில் எந்தவித போலித்தனத்தையும் காட்டவில்லை. அதுபோலவே சில சமயம் எதார்த்தமாக சொல்லிப்போகிற வார்த்தைகள் சர்ச்சைகள் ஆகிவிடுகின்றன. ஒரு கலைஞன் மீது சொல்லப்படுகிற இப்படிப்பட்ட அவதூறுகள் எவ்வளவு தூரம் அந்த கலைஞனையும் அவனுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆனாலும் இந்த அவதூறுகள் எல்லாம் உண்மையான வாசகனையோ, படைப்பையோ ஒருபோதும் பாதிப்பதில்லை.”

”ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தவர் நீங்கள். அதை விட்டுவிட்டு தமிழிலேயே தொடர்ந்து இயங்குவது பற்றி வருத்தம் உண்டா?”

”தமிழின் வசீகரம் என்னை ஆட்கொண்டதால் ஆங்கிலத்தில் எழுதுவதை விட்டுவிட்டேன். ஒரு முறை வி.எஸ்.நைபால் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதியிருந்தீர்களானால் நிச்சயமாக உங்களுக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்றார். ஆனால் எனக்கு தமிழில் எழுதுவதில் வருத்தம் ஒன்றும் இல்லை. எழுத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்ததால் குடும்பத்தை சரியாக கவனிக்க முடியவில்லை என்கிற மனக்குறை இப்போது அழுத்துகிறது. சில தீர்க்கமான முடிவுகளை நான் எந்தவித பலாபலன்களையும் எதிர்பார்க்காமல்தான் எடுக்கிறேன்.”

படங்கள் நன்றி : அவுட்லுக்

“நாங்கள் (பார்ப்பனர்கள்) யூதர்களைப் போல் வாழ்கிறோம்” என்கிற அசோகமித்திரனின் அவுட்லுக் கட்டுரைக்காக போடப்பட்ட சித்திரங்கள் இவை.