சிட்டுக்குருவிகளுக்கு நன்றி

DSCN2547

நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் பறவை சிட்டுக்குருவி. நூறாண்டு பழமையான அரை உருளை ஓடுகள் வேயப்பட்ட நாங்கள் வசித்த வீட்டின் வாசலருகே மெல்லிய புற்களால் கூடு கட்டியிருந்தன அந்தக் குருவிகள். அந்தத் தெருவில் இருந்த அத்தனை வீட்டிக்குள்ளும் சிட்டுக்குருவிகளின் கீச்கீச் சத்தம் ஏதோ ஒரு வேளையில் கேட்டுக்கொண்டிருக்கும். குழந்தைகளான எங்களோடு அவையும் கூக்குரல் இட்டு விளையாடிக் கொண்டிருக்கும். அவற்றை நாங்கள் ஒருபோதும் துன்புறுத்தும் நோக்கத்தில் அணுகியதில்லை. அவற்றின் உணவுக்கு குறையே வந்ததில்லை. கேழ்வரகு, கம்பு, சோளம்தான் அந்நிலத்தின் பிரதான பயிர்களாக இருந்தன. நிலத்தில், வீடுகளில் சிதறிய ஏன் மாடுகள் உண்டு சிதறிய கேழ்வரகு, சோள தட்டைகளிலிருக்கும் தானியங்களையும் கொத்தித் தின்னும் சிட்டுக்குருவிகள்.

பிறகு, வெவ்வேறு ஊர்களுக்கு பயணப்பட்டோம். கிராமத்தை விட்டு பேரூரில் குடியேறினோம். பள்ளிக்குச் செல்லும்போது தேன்கனிக்கோட்டை பேருந்து நிலைய நடைபாதைகளில் சில சிட்டுக்குருவிகளைப் பார்த்ததாக நினைவு. பெரிய ஊரின் வாழ்க்கை கவனத்தை வெவ்வேறு திசைகளில் திருப்பி விடுகிறது. கட்டடங்களினூடே மக்கள் நிறைந்திருந்த அந்த ஊரிலும் சிட்டுக்குருவிகள் ஜீவித்திருக்கும், நான்தான் அவற்றை கவனத்தில் நிறுத்தும் சூழலில் இல்லை.

பிறகு சேலத்திற்கு குடிபெயர்ந்தபோது தோட்டத்தை ஒட்டியிருந்த அந்த ஓட்டு வீட்டினுள் சிட்டுக்குருவிகள் கூடு கட்டியிருந்தன. ஒற்றை அறையான அதில் எங்களுடன் சில காலம் இருந்தன. பிறகு பென்னாகரம் சந்தை வெளியில் சிதறிய தானியங்களை தின்று கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை கடந்து போயிருக்கிறேன். சென்னையின் கல்லூரி நாட்களில் கான்கிரீட் காடாக மாற்றப்படாத சோளிங்கநல்லூரில் ஹாஸ்டல் பால்கனியில் சிட்டுக்குருவிகள் வந்ததுண்டு.

பணியில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் முழுக்க பணியிலே இருந்தது கவனம். பிறகு வெறுமை சூழ்ந்திருந்த அந்த நாட்களில் சூளைமேட்டின் சந்தடிமிக்க தெருவில் சிட்டுக்குருவிகள் மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். எனக்கென ஒரு குடும்பம் அமைந்துவிட்ட பிறகு, இப்போது சிட்டுக்குருவிகளும் அதில். தினம் தினம் என்னோடும் என் குழந்தையோடும் அவை உறவாடுகின்றன. ஒரே ஒரு முருங்கை மரம் காணாமல் போன சிட்டுக்குருவிகளை வரவழைத்திருக்கிறது. என் இனிமையான நாட்களை திரும்பிருக்கின்றன. சிட்டுக்குருவிகளுக்கு நன்றி. இன்று உங்களை நினைவுகூரும் நாள், சிட்டுக்குருவிகள் நாள்!

வறட்சி பொங்கிவழிகிறது!

சென்ற மாதம் என் பூர்விக கிராமமான தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆதனூருக்குச் சென்றிருந்தேன். தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்துகொண்டிருந்தது. காவிரி  நீர் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் மேட்டூர் அணை நிரம்பி, அதிகப்படியான நீரை திறந்துவிட்டிருப்பதாகவும் அறிந்தேன். காவிரி  அழகு முகமான ஓகேனக்கல்லில் புதுநீர் பாய்ந்தோடியதை தொலைக்காட்சியில் பார்த்தேன். மழை உற்சாக மனநிலையைக் கொடுத்தது. அதே மனநிலையுடன் எங்கள் ஊரும் மழையால் செழித்திருக்கும் என்று கனவுகளோடு சென்றேன். வானம் பார்த்த பூமியான எங்களூர் வறண்டு கிடந்தது. சிறு மழையை நம்பி விதைக்கப்பட்டிருந்த கேழ்வரகு, கம்பு, சோளம்,அவரை, துவரை, எள், காராமணி செடிகள் முளைத்து வளர போதிய தண்ணீர் இல்லாமல் வாடிக்கிடந்தன.

DSCN0136

DSCN0137

DSCN0125

உழுத நிலத்தில் பூச்சி புழுக்களைத் தேடும் தவிட்டுக் குருவிகள்

தமிழக அளவிலான சிறுதானிய உற்பத்தியில் 40% தருமபுரி  மாவட்டத்தில்தான் உற்பத்தியாகிறது. கிணறுகளிலும் நீர் இல்லை. தென்னைமரங்கள் காய்ந்துபோய், பட்டுப்போகும் நிலையில் இருந்தன. காலம்காலமாக இங்கே குடிநீர் பிரச்னை, காலை 6 மணிக்கு பொதுக்குழாயில் வரும் தண்ணீருக்காக, நாலரை, ஐந்து மணிக்கெல்லாம் காலி குடங்களுடன் காத்திருக்கிறார்கள். இந்த பொதுக்குழாய்கூட ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்துதான். அதற்கு முன்பு கையடி பம்புகளில்தான் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நீர் குடிப்பதற்கு ரொம்பவும் உவர்ப்பாக(ஃப்ளோரைடு அதிகம்) இருக்கும்.

நூறாண்டுகாலமாக இந்த மாவட்ட மக்களின் குறைந்தபட்ச குடிநீர் தேவையைக்கூட இதுவரை ஆண்ட அரசாங்கங்களால் நிறைவேற்ற முடியவில்லை. தருமபுரி, கிருஷ்ணகிரி  மாவட்டங்களில் 145 கி.மீ.தொலைவுக்கு 6755 குடும்பங்களின் தண்ணீர் தேவையை தீர்க்கும் வகையில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் இன்னும் முழுமையாக முடிந்தபாடில்லை. திட்டத்தை இன்றைய முதல்வர் ஜெயலலிதா இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கிவைத்தார். தண்ணீரே வராத குழாய்களை எதற்காக அவர் இவ்வளவு அவசரத்துடன் திறந்துவைத்தார் என்று தெரியவில்லை. வறட்சிக்குப் பெயர் போன தருமபுரி மாவட்டத்தில்தான் காவிரி  பொங்கிவழிகிறது!