மோடி ஃபார்முலாவில் சமூக ஊடகங்களில் தமிழகக் கட்சிகளின் பிரச்சாரம்!

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார உத்தியில் தெரு முனைக் கூட்டங்கள் எல்லாம் பழங்கதைகளாகிக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்களில் பிரச்சாரம்தான் இனி தங்களுடைய வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போகின்றன என்பதை தமிழக கட்சிகளும் உணர ஆரம்பித்துவிட்டன. 2014-ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலின் போது இந்த டிரெண்டை இந்தியாவில் தொடங்கி வைத்த பெருமைக் குரியவர் நரேந்திர மோடி.  பாஜக பெரும்பான்மை இடங்களைப் பெற சமூக ஊடங்களின் பங்களிப்பு முக்கியமானது. மோடியின் வெற்றிக்காக சமூக ஊடக உழைக்க வைத்தது ஒரு நிறுவனம். மேலை நாடுகளில் பிரபலமான தகவல் தொடர்பு நிறுவனங்கள் நடத்தி தரும் தேர்தல் போல, மோடியும் நடத்திக் காட்டினார். அதில் வெற்றியும் பெற்றார்.

மோடி ஃபார்முலா என்று உருவாகிவிட்ட அதைத்தான் இந்திய அரசியல்வாதிகள் பலரும் பின்பற்ற நினைக்கிறார்கள். நிதிஷ்-லாலு-காங்கிரஸின் மெகா கூட்டணி வெற்றி பெற கிஷோர் என்ற தகவல் தொடர்பு நிபுணரின் உதவி முக்கியமானது என்று ஆங்கில ஊடகங்கள் எழுதின. கிஷோர் மோடிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தவர். இந்தியாவில் இந்த ஆண்டு வரவிருக்கிற தேர்தலுக்காக கிஷோரை வலைவீசி பல மாநில அரசியல்வாதிகள் காத்துக்கொண்டிருக்கிறார்களாம். அதில், திமுகவும் அதிமுகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டின் தேர்தலின் வெற்றி தோல்வியை இளம் வாக்காளர்கள்தான் நிர்ணயிக்க இருக்கிறார்கள் என்பதால் தமிழகத்தின் கட்சிகள் அவர்களை குறிவைத்து சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கின்றன. இந்த பிரச்சாரத்தை முதலில் தொடங்கியது பாமக. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த கையோடு, சமூக ஊடக பிரச்சாரத்தையும் தொடங்கியது பாமக. இந்த பிரச்சாரத்தை கவனித்துக் கொள்ள தனி பிரிவே இருக்கிறது.

அடுத்து, திமுக ’நமக்கு நாமே’ பயணத்தை மு.க. ஸ்டாலின் தொடங்கிய வேளையில் தனி வலைத்தளம், ஃபேஸ்புக், ட்விட்டரில் ஸ்டாலின் பயணம் பற்றிய தகவல்கள் உடனடியாக பதியப்பட்டன. திமுக தலைவர் கருணாநிதிக்கென்றும் தனி வலைத்தளம் திறக்கப்பட்டது. அதிமுகவும் தன்னுடைய சமூக ஊடக பிரச்சாரத்துக்கென்று தனி பிரிவை அமைத்திருக்கிறது. அதிமுக அரசின் விடியோக்கள், ஆடியோக்கள் என வெளியிட்டு தாங்களும் கடமையாற்றுகிறார்கள்.

மக்கள் நலக் கூட்டணி சளைத்ததா என்ன? மதிமுகவுக்கு என்று தனி வலைத்தளம் இருக்கிறது. மக்கள் நலக் கூட்டணிக்கு பிரத்யேகமாக வலைத்தளம் அமைத்திருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், ஃபேஸ்புக்கில் ஆர்வமாக பங்கெடுக்கிறார். இவர் திங்கள்கிழமை பதிவிட்ட மக்கள் நலக் கூட்டணி செல்ஃபி வைரல் ஆனது! மதுரை மாநாட்டுக்குப் பிறகு, மக்கள் நலக் கூட்டணிக்கு மவுசு கூடியிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதற்கு முன்பு வரை ஜி. ராமகிருஷ்ணன் பக்கத்தை கட்சித் தோழர்கள் மட்டும்தான் பார்த்து வந்தார்கள். இன்று அவர் போடும் ஒவ்வொரு பதிவும் பலரால் பகிரப்படுகிறது.

இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக உள்ள அரசியல்வாதி கருணாநிதிதான். ஃபேஸ்புக்கில் தினமும் பதிவிடக்கூடியவராகவும் அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்பவராகவும் கருணாநிதி இருக்கிறார்.

இளைஞர்களுக்காக அரசியல்வாதிகளும் தங்களை நவீனப்படுத்திக் கொண்டது சரிதான். ஆனால், கொள்கைகள் இளைஞர்களைக் கவரும் விதமாக இருக்க வேண்டுமே!

தினச்செய்தி(10-02-2016) நாளிதழில் வெளியானது.

தேர்தலில் வெல்ல கருணாநிதி கையில் சிறப்பு பூஜை செய்த கடிகாரம்?!

“வேலூரில் உள்ள பிரபல மடாதிபதி அறிவுரையைக் கேட்டு, சிவப்பு நிற பட்டையுடன் கூடிய, கைக்கடிகாரத்தை கருணாநிதி அணிந்துள்ளார். இக் கடிகாரத்தை சிறப்பு பூஜை செய்து அணிந்துள்ளார்”  என தினமலர் நாளிதழ்(13-12-2015) செய்தி வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து விளக்க அளித்திருக்கிறார் திமுக தலைவர் மு. கருணாநிதி…
‘தினமலர்’ புளுகுகளில் இதுவும் ஒன்று! 13-12-2015 அன்று “வேலூரில் உள்ள பிரபல மடாதிபதி அறிவுரையைக் கேட்டு, சிவப்பு நிற பட்டையுடன் கூடிய, கைக்கடிகாரத்தை கருணாநிதி அணிந்துள்ளார். இக் கடிகாரத்தை சிறப்பு பூஜை செய்து அணிந்துள்ளார்” என்று வெளியிட்டதோடு, யார் யாரையோ ஜோதிடர்களை யெல்லாம் சந்தித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றெல்லாம் வெளியிட்டிருந்தது. அதே நாளேடு, இன்று அந்தச் செய்தியில் மாற்றம் செய்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தன் இடது கையில் ஒரு வாரமாக சிவப்பு பட்டையுடன் கூடிய கைக்கடிகாரத்துடன், ஆந்திர மாநில தர்காவில் இருந்து வந்த மந்திரிக்கப்பட்ட சிவப்பு கயிறையும் சேர்த்துக் கட்டியிருப்பதாகவும், அதைப் பற்றி தி.மு.க. வட்டாரங்கள் கருத்து கூறியதாகவும் வெளியிட்டுள்ளது.

என் கையில் எந்தக் சிவப்பு கயிறும் கிடையாது. கையிலே உள்ள சிவப்பு நிறப் பட்டையுடன் கூடிய கைக்கடிகாரம் நான் ஓராண்டிற்கு மேலாக கையிலே அணிந்திருக்கும் அதே கடிகாரம் தான்! அதற்கும் எந்த முக்கியத்துவம் கிடையாது. யாரோ ஒரு சிலர் இதனை நம்பக் கூடும் என்பதற்காக ‘தினமலர்’ இப்படிப்பட்ட செய்தியை வெளியிடுகிறதோ, என்னவோ? ‘தினமலர்’ ஆசிரியர், திரு. கிருஷ்ணமூர்த்திக்குத் தெரியாமல் இப்படிப்பட்ட செய்தி வெளி வந்திருக்காது என நினைக்கிறேன். ‘நமது நிருபர்’ என்ற பெயரால் இப்படிப்பட்ட‘தப்பிலித்தனமாக’ செய்திகளை வெளியிடுவோர் மீது இனியாவது ‘தினமலர்’ ஆசிரியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கோவன் அப்படியென்ன தவறு செய்துவிட்டார்?

may-day-kovilpatti-kalai-2

மக்கள் பாடகர் கோவன் அரசியல்வாதிகளைப் போய் சந்தித்தது குறித்து நிறைய விமர்சனங்கள் வருகின்றன. சில முற்போக்காளர்களும்கூட சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார்கள். நாகரிகமாக எதிரியிடம் கைக்குலுக்குவதைக்கூட விரும்பாத எல்லா நேரத்திலும் பகைமை தோலில் தூக்கி சுமக்க வேண்டும் என்பது இவர்களுடைய எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. மனிதத்தை வலியுறுத்தும் பலரும் இதைச் சொல்வது முரணாக இருக்கிறது.

சாதாரணமாக வயதான ஒரு பெரியவரிடம் பேசும்போது குனிந்து வளைந்துதான் பேசமுடியும். அதுதான் பணிவு. அந்தப் பணிவு 90 வயதுகளில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியைப் பார்க்கும்போது வருவது இயல்பானதே. அதற்கெல்லாம் ஒரு சாயம் பூசப்பார்ப்பது அநாகரிகம். கருணாநிதியைப் பார்த்ததுபோலத்தான் மற்ற தலைவர்களையும் கோவன் சந்தித்திருக்கிறார்.  மரியாதை நிமித்தமாகத்தான் இந்தச் சந்திப்பு நடந்ததாக கோவன் சார்ந்த மகஇக அமைப்பு சொல்லிவிட்டது.

எதிர்நிலையில் நின்று பேசக்கூடியவர்கள் ஆனால், தன்னுடைய கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல்கொடுத்தவர்களைச் சந்திப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இன்னமும் வினவு தளத்தில் கருணாநிதியை, ஸ்டாலினையும் திருமாவளவனையும் விஜயகாந்தையும் கடுமையாக விமர்சித்து எழுதிய கட்டுரை அப்படியேதான் உள்ளன. வினவு தளத்தில் ஆட்சியாளர்களின் தவறு விமர்சித்து எப்போதும் எழுதப்பட்டுதான் வந்திருக்கிறது. நாளை இந்த அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா செய்ததையே செய்தாலும் அவர்கள் விமர்சிக்கத்தான் போகிறார்கள்.

எனவே, எல்லா செயலுக்கும் முடிச்சுகள் போடாமல் கொஞ்சம் நாகரிகக் கண்கொண்டு பாருங்கள் நண்பர்களே!

 

திராவிட முன்னேற்றக் கழகம் குடும்பச் சொத்தானது எப்படி?

மு.க. ஸ்டாலின் கட்சிக்காக சிறைச் சென்றார், உழைத்தார் என குடும்பத்தின் தலைவர் சொல்கிறார். அழகிரியின் கண்ணோட்டத்தில் மு.க.ஸ்டாலின் மட்டும்தான் சிறைச் சென்றாரா? என்கிற கேள்வியை முன்வைக்கலாம். தலைவரின் கூற்றுப்படி சிறைச் சென்றவர்தான் முன்னிறுத்தப்பட வேண்டும் என்றால் பல முறை சிறைச் சென்ற க. அன்பழகனை முன்னிறுத்துவார்களா? ஏன் அவரை துணை முதல்வராகக் கூட முன்னிறுத்தவில்லை?

இப்போது.காமில் முழுக் கட்டுரை…

அம்பேத்கரின் 125வது பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாடியது யார்?

நாங்கள் மனித மாண்பு காக்கவும், சுயமரியாதைக்காகவுமே போராடுகிறோம். மனிதனை ஒரு முழு மனிதனாக மாற்றுவதற்காக, நாங்கள் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்தப் பத்திரிகையாளர்கள், கடந்த நாற்பதாண்டுகளாக என்னை வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்றுவரை என்னை எவ்வளவு மோசமாக சித்தரிக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் இனியாவது இந்த முட்டாள்தனத்தைக் கைவிட்டு, நேர்மையுடன் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி அம்பேத்கர் ஆற்றிய உரை…

ambedkar_340 ஏப்ரல் 14, அம்பேத்கரின் 125வது பிறந்த நாள். இந்திய சமூகத்தின் மிகச் சிறந்த புரட்சியாரை, அறிவிஜீவியை நாம் எப்படி கொண்டாடி இருக்க வேண்டும்? ஆனால் எப்படி கொண்டாடிக் கொண்டாடி இருக்கிறோம்? திராவிடர் கழகத்திலிருந்து வரும் உண்மை இதழ் தவிர, வெகுஜென, சிறுபத்திரிகை எதுவும் சிறப்பு மலர் அல்லது சிறப்பு கட்டுரையைக்கூட வெளியிட்டதாகத் தெரியவில்லை. முதல் இந்துத்துவ அரசு(!) தவிர்க்க இயலாமல் முழுபக்க விளம்பரத்தில் மங்கிய புகைப்படத்தை வெளியிடுகிறது, அதுவும் அம்பேத்கர் பவுண்டேஷன் என்ற பெயரில்… பார்ப்பன  ஊடகங்கள் அம்பேத்கர் பிறந்த நாளை வழக்கம்போல ’ஒதுங்கியிருந்தே’ கொண்டாடின. ‘ஒதுங்கியிருந்தே’ என்பதை ‘ஒதுக்கி’ என்றும் கொள்ளலாம். முத்துராமலிங்க தேவர், சர்தார் பட்டேல்களை மிகைப்படுத்தி, திரித்து நாயக பிம்பங்களாக நிறுத்தும் பணியை செய்யும் ஊடகங்கள் உண்மையான மக்கள் நாயகனை வெறுமனே மறைந்த அரசியல்வாதியாக, அரசியல் கட்சிகளின் வருடாந்திர நிகழ்வாக பிறந்த நாளில் மாலையிட்டு நினைவுகொள்ளும் சிலையான தலைவராக மட்டுமே முன்நிறுத்துகின்றன. இன்றைய தலைமுறைக்கு அம்பேத்கரை இரட்டடிப்பு செய்து ஊடகங்கள் அறிமுகப்படுத்துகின்றன.

தேவர் ஜெயந்திக்கு வண்ண புகைப்படங்களுடன் மூன்று பக்கங்களில் கவரேஜ் தந்த தினமணி, அம்பேத்கரின் பிறந்த நாளில் புகைப்படத்தைக்கூட பெரியதாக பிரசுரிக்கவில்லை. தலைவர்கள் செலுத்திய அஞ்சலி கருப்பு/வெள்ளையில் செய்தியாகிறது. பாஜக செலுத்திய சம்பிரதாய அஞ்சலி தலித்துகளின் ஓட்டுகளுக்காகத்தான் என்கிற காங்கிரஸின் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. தி இந்து (ஆங்கிலம்) அரசியல் கட்சித் தலைவர் செலுத்திய சம்பிரதாய அஞ்சலியைக்கூட கண்டித்து ஓட்டுக்காக ஏன் மாலை போடுகிறீர்கள் என கார்ட்டூன் போட்டு கண்டிக்கிறது. காங்கிரஸ்காரரான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பாஜக அரசு  ரூ. 600 கோடி செலவில் உலகிலேயே மிகப் பெரிய சிலையை நிறுவ அடிக்கல் நாட்டுகிறது. இந்த விலை பட்டேலின் இந்துத்துவ முகத்துக்கு என்பதை மக்கள் அறிவார்கள் என நம்புகிறேன்.

ஆட்சிப் பிடிப்பதில் அடுத்தடுத்த திட்டங்களோடு தயாராக இருக்கும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி, அம்பேத்கரின் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை! அவருக்கு இப்போது தேவைப்படுவது ராமானுஜரே, அம்பேத்கர் அல்ல என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. கிரேக்கத்து சிங்கம் வைகோ, கலிங்கப்பட்டியில் அம்பேத்கர் சிலை மாலை அணிவிக்கவில்லை, இதே சிங்கம் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி வண்ணப்படங்களுடன் பத்திரிகையில் வெளியானது. திருமாவளவனாவது அம்பேத்கரை நினைவுபடுத்தி ஒரு அறிக்கையாவது விடுவார் என நினைத்தால், மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு தனக்கும் அம்பேத்கருக்கும் யாதொரும் பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டார்.  காங்கிரஸ்காரர்கள் அம்பேத்கரின் 125வது பிறந்த நாளை கொண்டாட பல்வேறு போட்டிகளை நடத்துவோம் என்று அறிக்கை விட்டார்கள். எதிர் நிலையில் நின்று அரசியல் பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ்கூட தைலாபுரம் தோட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.  யாரெல்லாம் அம்பேத்கரை நினைக்கிறார்கள், பாருங்கள்!

முற்போக்கு  கட்சிகளாக முன்னிறுத்தி முன்னேறியவர்களுக்கு இன்று தேவைப்படுவது சாதி, மதத்தின் அடிப்படையிலான அரசியல் அதிகாரம். தமது அதிகார நலன்களுக்காக இவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள். தற்போதைய அரசு தலையில்லாத அரசு, ஊழல் அரசு என்பதையும் இது அகற்றப்பட வேண்டும் என்பதையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் போது கடந்த கால அரசுகளின் ஆட்சி பற்றியும் முன்னாள் ஆட்சியாளர்களான அவர்கள் ஆட்சியைப் பிடிக்க எப்படிப்பட்ட வேடங்களை தறித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும்தான் சொல்ல வேண்டும். இதுவே அவராக இருந்தால் எப்படி இருந்திருக்கும்? அவர் எப்போதும் அவர்தான் என்று நிறுவுவதன் மூலம் அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மீண்டும் ஒரு சோதனையை தமிழக மக்கள் மீது திணிக்கப்பார்க்கிறார்கள். உண்மையில் யார்தான் ஆபத்தானவர்கள்…ஊடகங்களா? அரசியல்வாதிகளா? அறிவுஜீவிகளா?