வெளிர் சிவப்பு ஓவியம்!

அண்ணாமலைச்சேரி…! சென்னை பழவேற்காடு சாலையோரம், கடல் நீர் கால் தழுவும் கழிமுகப் பகுதி. காடு, நிலம், கடல், கழிமுக நீர் என நாலா பக்கமும் விதவிதமாக விரிந்துகிடக்கிறது இயற்கை. குட்டிக் குட்டி மணல் திட்டுகள் நிறைந்த நீர்ப்பரப்பு இதன் சிறப்பு. இதுதான் பூநாரைகளைக் கூட்டம்கூட்டமாக வசீகரித்து வரவழைக்கிறது. அமாவாசை, பௌர்ணமி நேரங்கள் தவிர்த்து கழிமுகப் பகுதிக்குக் கடல் நீர் குறைவாக வரும் நேரங்களில் பூநாரைகள் நூற்றுக்கணக்கில் இரை தேடுவதைப் பார்க்கலாம்.

வெள்ளை கேன்வாஸில் வெளிர் சிவப்பு நிறத்தில் வரைந்த ஓவியத்தில், திருஷ்டிக்காகக் கறுப்பு மை இட்டது போல அத்தனை அழகாக இருக்கிறது ஃபிளெமிங்கோ எனப்படும் பூநாரை!

தமிழகத்துக்கு ஏப்ரல் மாத விருந்தாளிகள் இந்தப் பூநாரைகள். ”இங்கே வரக்கூடிய பறவைகளிலேயே ரொம்ப அழகானது பூநாரைகள்தான். மொத்தம் ஐந்து வகையான இனங்கள் இருக்கு. நம்ம ஊருக்கு கிரேட்டர், லெஸ்ஸர்னு இரண்டு இனங்கள் வரும்.

பரிணாம வளர்ச்சியில் நாரைக்கும் வாத்துக்கும் இடைப்பட்ட இனம் இது. நாலரை அடி வரைக்கும் வளரும். ஒரே இரவில் 600 கி.மீ தூரம் பயணப்படும். இன்னொரு சுவாரஸ்யமான சங்கதிமனிதர்களுக்கு முன்பே பூமியில பிறந்தவை பூநாரைகள். அதாவது, 50 மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில இருப்பவை!” என பூநாரைப் பற்றிய தகவல்களை அடுக்கிக்கொண்டே போகிறார் திருநாரணன். சூழலியல் ஆர்வலரான இவர், சென்னைக்கு வருகை தரும் பறவைகளைத் தொடர்ந்து கவனித்து வருபவர்.பெரும்பாலும் உப்புநீர் உள்ள பகுதிகளில்தான் பூநாரைகள் வசிக்கும். குஜராத்திலிருந்து குளிர் காலத்தில் கிளம்பி வரும் பறவைகள், வெயில் காலம் முடியும் நேரத்தில் முட்டை வைப்பதற்காக மீண்டும் குஜராத் போகும். களிமண்ணில் உருளையான கூடு செய்து, அதில்தான் முட்டை வைக்கும். அதிகபட்சம் ரெண்டு முட்டைகள் வைக்கும். குஞ்சு பொரித்து, வளர்ந்து, பறக்க ஆரம்பிக்கிற நேரத்தில் அங்கேயிருந்து கிளம்பிடும். தமிழ்நாட்டில் பழவேற்காடு, கழிவெளி, கோடியக்கரை, சாத்தான்குளம், செய்யூர் போன்ற பகுதிகளில் பூநாரைகளைப் பார்க்கலாம்.பறக்கத் துவங்கும் காலத்தில் வெள்ளையும் கறுப்புமாக இருக்கும். வளர வளரத்தான் வெளிர் சிவப்பு நிறமாக மாறும். ‘பீடா கரோட்டின்உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதுதான் இதன் வெளிர் சிவப்பு நிறத்துக்குக் காரணம். பாசி, இறாலை விரும்பிச் சாப்பிடும். குச்சிக் கால்களுடன் ஆழம் குறைவான இடத்தில் மணிக்கணக்காக நின்று இரை தேடும். எப்போதும் கூட்டமாகத்தான் இருக்கும். ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு வரிசையாக அத்தனை அழகாக நடந்து போகும். இவை கூட்டமாகப் பறப்பதைப் பார்த்தால், வானத்தில் கோலம் போட்டது மாதிரியே இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு வரை லட்சக்கணக்கில் வந்து கொண்டு இருந்த பூநாரைகள் இப் போது பத்தாயிரமாகக் குறைந்து விட்டதாக சொல்கிறார்கள். இந்தப் பகுதியில் விற்பனைக்காக இறால் பிடிப்பது அதிகரித்து வருகிறது. அளவுக்கு மீறி பூநாரைகளின் உணவில் நாம் கை வைக்கிறோம். பகிர்ந்து உண்ணுதல் வேண்டும் என்று சொல்கிற நாமே இப்படிச் செய்தால் என்ன நியாயம்?” என்கிறார் திரு நாரணன்.புலிகள் இருக்கும் காடுதான் நல்ல வளமான காட்டின் அடையாளம் என்று சொல்வதைப் போல, பூநாரைகள் வசிக்கும் இடத்தை வளமான கழிமுகப்பகுதிக்கு அடையாளமாகச் சொல்கிறார்கள் சூழலியல் அறிஞர்கள். பூநாரைகள் வசிக்கும் இடத்தில் மற்ற பறவையினங்களும் அதிகமாக இருக்குமாம். அண்ணாமலைச்சேரி பகுதியில் இருநூறுக்கும் அதிகமான பறவையினங்கள் இருப்பதாகப் பதிவு செய்திருக்கிறது மும்பை இயற்கை வரலாறு அறக்கட்டளை. நீர்க்காகம், கூழைக்கடா, நத்தைகொத்தி நாரை, கடல் ஆலா, அரிவாள் மூக்கன், உப்பு உல்லான், நாரை, கொக்கு இனங்கள் என நிறைய வகைகளை இங்கே பார்க்க முடிகிறது. பழவேற்காட்டிலிருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கிறது அண்ணாமலைச்சேரி. அங்கிருந்து படகுப் போக்குவரத்து வசதி உள்ளது. சில இடங்களில் மட்டுமே ஆழம் அதிகமாக இருக்கும். ஆழம் குறைவான இடங்களில் படகிலிருந்து இறங்கி, பறவைகள் உள்ள இடத்தின் அருகில் சென்றும் பார்க்கலாம். சித்திரை வெயிலைத் தவிர்க்க அதி காலையிலேயே விசிட் அடிப்பது நல்லது.

பறவைகளே! எங்கு இருக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்குஇங்கே இருக்கிறோம்!’ என்று கோரஸாகப் பதில் சொல்கின்றன இந்தப் பறவைகள். அண்ணாமலைச்சேரிக்கு ஒரு தடவைபறந்துதான் பாருங்களேன்!