ரூ. 7 கோடியில் தெலுங்கானா முதல்வர் வளர்த்த யாகம்!

அவரவர் மதநம்பிக்கைகளை பின்பற்ற முழுசுதந்திரத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியிருக்கிறது. அதே நேரத்தில் தனிப்பட்ட நபர், அரசின் பிரதிநிதியாக வரும்போது அவர் மதசார்பற்றவராக, மதத்தை முன்னிறுத்தாதவராக இருக்க வேண்டும் என்கிறது அதே அரசியலமைப்புச் சட்டம். ஆனால் பல நேரங்களில் இந்திய அரசியல்வாதிகள், அரசின் பிரதிநிதிகளாக அமரும்போது தங்களுடைய மதத்தை முன்னிறுத்திக் கொள்கிறார்கள். இதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். சமீபத்திய உதாரணம், தெலுங்கானா மாநில முதல்வர், மிக பிரமாண்டமாக நடத்திய யாகத்தைச் சொல்லலாம்.

தெலுங்கானா என்ற தனி மாநிலம் அமைந்ததற்காக மகா சண்டி யாகத்தை ஐந்து நாட்களுக்கு நடத்தினார்  சந்திர சேகர ராவ். ரூ. 7 கோடி செலவில் பிரமாண்ட யாக சாலை இதற்காக அமைக்கப்பட்டது. தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், தமிழகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இரண்டாயிரம் வேத பண்டிதர்கள் இந்த யாகத்தை நடத்தினர்.
ஹைதராபாதை அடுத்துள்ள மேடக் மாவட்டம், எர்ரவள்ளி கிராமத்தில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் நடந்த இந்த யாகத்தில் தமிழக ஆளுநர் ரோசைய்யா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பண்டாரு தத்தாத்ரேயா, காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்பராமி ரெட்டி, மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் சிவபிரசாத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்பதாக இருந்தார்.

ஆட்சியாளர்கள் ஏதோ ஒரு மதத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.  இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் அப்படித்தான் தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இங்கு நடப்பதைப் போல தனிப்பட்ட மத உணர்வுகளை பொதுமைப் படுத்துவதில்லை. மதத்தை அடிப்படையாக நாடுகளில் இது நடக்கலாம். ஆனால், மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் ஒரு மாநில அரசே முன்நின்று யாகம் நடத்துவது நிச்சயம் தவறான முன்னுதாரணமே. அதில் கட்சி பாகுபாடு இல்லாமல், அனைத்து கட்சியினர் கலந்து கொள்வது, குடியரசுத் தலைவர் கலந்துகொள்வது மக்கள் மத்தியில் ஆட்சியாளர்களின் மதச்சார்பின்மை மீது கேள்வியைத்தான் எழுப்பும்.

புது வீடு கட்டினால் யாகம் ஒருவருடைய தனிப்பட்ட விவகாரம், ஆனால் புது மாநிலம் அமைந்திருக்கிறது என்று ஒரு மாநில அரசு  யாகம் செய்கிறோம் என்று சொல்வது அரசே ஒரு குறிப்பிட்ட மதச்சார்புக்கு தன்னை உட்படுத்திக் கொள்வதாக மாறுகிறது. இது அரசியலமைப்பு எதிரான செயல்.  கிறித்துவ, முஸ்லிம் விழாக்களில் பங்கேற்பதுபோல இந்து மத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எந்தவிதத்திலும் கேள்வியாவதில்லை. ஒரு மதக் கருத்தை விதைக்கும் யாகம் வளர்ப்பது போன்ற பிரமாண்ட நிகழ்வுகளை அரசே நடத்துவது வளர்ந்து வரும் இந்துத்துவ கருத்து பரவலுக்கு மெருகூட்டுவதாக அமையும் என்பதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

தினச்செய்தி(28-12-2015) நாளிதழில் வெளியானது.

இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த யாகக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.