சென்னை எழும்பூரில் இருக்கும் லலித் கலா அகாடமி எனக்குப் பிடித்த இடங்களில் ஒன்று. அதன் அமைதியான சூழல், அங்கிருக்கும் மரங்கள் மீது பிரியம் அதிகம். சில மாதங்கள் நான் க்ரீம்ஸ் சாலையில் இருந்த பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றியபோது அந்த வழியாகத்தான் சாலையிலுள்ள மரங்களை ரசித்தபடி நடந்து செல்வேன். நான் தனிமை விரும்பி, பணிகளற்ற நேரத்தில் லலித்கலா அகாடமி மர நிழலில், சில சமயம் காட்சி கூடத்தில் இருப்பேன்.
சில வருட இடைவெளிக்குப் பிறகு இந்தோ கொரியன் கலைஞர்களின் செராமிக் கலைப் பொருட்களை காணும் பொருட்டு லலித் கலா அகாடமிக்குச் சென்றேன். வெயில் மண்டையைப் பிளந்த நேரம் ஜெமினி பாலத்திலிருந்து க்ரீம்ஸ் சாலைக்கு நடக்க வேண்டி இருந்தது. முன்பு போல என்னால் இருந்து, உணர்ந்து ரசிப்பதற்கெல்லாம் நேரமில்லை. இங்கு வர நேரம் கிடைத்ததே பெரிய விஷயமாயிற்றே…காட்சிக் கூடத்துக்குள் நுழைந்ததும் கேமராவைக் கையில் எடுத்து புகைப்படங்கள் வழியே கலைப் பொருட்களை பதிவு செய்ய ஆரம்பித்தேன். மதிய வேளை காட்சிக்கூடத்துக்குள் ஒரு ஈ கூட இல்லாதது வசதியாக இருந்தது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள், ரசித்து எடுத்தேன், புகைப்படங்கள் இருப்பதால் இப்போதும் ரசிக்க முடிகிறது.