சத்யபாமா கல்லூரியில் ராகிங்; ‘இந்து தாலிபான்’; இலங்கைப் பெண்ணுக்கு சாகும்வரை கசையடி தண்டனை

எவ்வளவுதான் கடுமையான சட்டங்கள் வந்தாலும் கல்விச் சாலையின் கறைபடிந்த குற்றமாக இருக்கிற ராகிங் குறைந்தபாடில்லை. அவ்வவ்போது அப்பாவி இளைஞர்களின் உயிரை இந்த ராகிங் கொடூரம் பறித்துக் கொண்டிருக்கிறது. அதற்கொரு சமீபத்திய உதாரணமாகியிருக்கிறார் வெங்கட கிருஷ்ணா சைதன்யா(19).

வெங்கட கிருஷ்ண சைதன்யா
வெங்கட கிருஷ்ண சைதன்யா

ஹைதராபாத்தின் நிஜாம்பேட்டைச் சேர்ந்த சைதன்யா, சென்னை சத்யபாமா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.டெக் மாணவர். லால் பாபு என்ற வர்த்தகரின் இளைய மகன்.

முதலாம் ஆண்டு சத்யபாமா கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த சைதன்யா, இந்த ஆண்டு தன்னைப் போல மூன்று மாணவர்களுடன் சேர்ந்து கல்லூரிக்கு அருகில் வீடு எடுத்து தங்கிப் படித்தார்.

தன்னுடன் தங்கியிருந்த சேகர் என்ற மாணவர், தினமும் தன்னை பணம் கேட்டு தொல்லை கொடுத்ததாகவும் இதுப் பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் தன் டைரியில் எழுதி வைத்திருக்கிறார் சைதன்யா. சைதன்யா, கல்லூரிக்கு இனி திரும்பக்கூடாது என்ற முடிவுடன் இந்த தற்கொலை முடிவு எடுத்தே ஹைதராபாத்துக்கு வந்திருக்கிறார் என சைதன்யாவின் அப்பா பாபு தி ஹிந்துவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், சைதன்யா ராகிங் செய்யப்பட்டது குறித்து எந்தவித புகாரும் தங்களுக்கு வரவில்லை என கல்லூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சவுதியில் பணிபுரிந்த இலங்கைப் பெண் ஒருவர் திருமணம் ஆன ஆணுடன் உறவு வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். இலங்கையைச் சேர்ந்த அந்த ஆணுடன் உறவு வைத்திருந்ததை அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். இதனடிப்படையில் ஷரியா சட்டத்தின்படி அவரை கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது சவுதி அரசு.இந்தப் பெண்ணுடன் தொடர்புடைய ஆணுக்கு நூறு கசையடிகள் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய-பிரிட்டன் சிற்பக் கலைஞரான அனிஷ் கபூர், கடந்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ‘இந்தியாவில் இந்து தாலிபான்’ ஆட்சி நடக்கிறது என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நரேந்திர மோடி இங்கிலாந்து சென்றிருந்த நேரத்தில் இந்தக் கட்டுரை பிரிட்டனின் பிரபல நாளிதழான கார்டியனில் வெளியாகி பரபரப்பானது.

“இந்தியாவில் உள்ள 500 மில்லியன் சமூக, மத சிறுபான்மையினர் வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. மோடியின் அரசாங்கம் சகிப்பின்மையை ஆதரித்துக்குக் கொண்டிருக்கிறது. யார் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்பதையும் சாதி படிநிலைகளை யார் மீறுகிறார்கள் என்பதையும் இந்து தேசத்துக்கு எதிராக யார் பேசுகிறார்கள் என்பதையும் காவிப் படை கண்காணித்துக் கொண்டிருக்கிறது” என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கட்டுரை வெளியானதற்குப் பின் ராஜஸ்தான் அரசின் கலாச்சார மையத்தின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து அனிஷ் கபூர் நீக்கப்பட்டுள்ளார். வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசு ராஜஸ்தான் மாநிலத்தை ஆள்கிறது என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் அரசின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

பிளவை ஏற்படுத்தி உலகைக் கவர்ந்த நரேந்திர மோடி!

pankajmishra

சமீபகாலங்களில் நான் படித்த மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று. இங்கிலாந்திலிருந்து வெளியாகும் பிரபல கார்டியன் இதழில் எழுத்தாளர் பங்கஜ் மிஸ்ரா எழுதிய கட்டுரையை வெளியிட்டுள்ளது. மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் மோடி எப்படி உலகத்தைக் கவர்ந்து வருகிறார் என்பது குறித்து எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரை ஆன் லைனில் அதிகம் பகிரப்பட்ட கட்டுரையாக இருக்கிறது. பங்கஜ் மிஸ்ரா தன்னுடைய கட்டுரையில் என்ன எழுதியிருக்கிறார்?

“இந்த வாரம் வெற்றிகரமாக தன்னுடைய இங்கிலாந்து பயணத்தை மேற்கொள்கிறார் இந்திய பிரதமர் மோடி. படுகொலை மீதும் மத பயங்கரவாதத்தின் மீதும் கட்டியெழுப்பப்பட்ட அடையாளத்துடன் அவர் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டார்? எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் போராடும் நிலைமைக்குத் தள்ளிய அவர், அதுகுறித்து ஏன் கண்டுகொள்ளவில்லை?

2005ஆம் ஆண்டு, முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் செல்வம் மிக்க குஜராத் மாநில காவல்துறையால் கிரிமினலான ஷேக் சொராபுதீன் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டார். குஜராத்தில் 2007ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது சொராபுதீனுக்கு அத்தகைய சாவு தேவையான ஒன்றுதான் என்றார். குழுமிருந்த கூட்டத்தைப் பார்த்து சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருக்கும் ஒருவனை நீங்கள் என்ன செய்வீர்கள் என்றார். கூட்டம், அடித்துக் கொல், அடித்துக் கொல் என்று ஆர்ப்பரித்தது.

ஆர்ப்பரித்த இப்படியொரு கூட்டத்தினரால்தான் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற வதந்தியைப் பரப்பி முஸ்லிம் முதியவரை அடித்துக் கொன்றது. இந்திய பிரதமராக நரேந்திர மோடி கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்ட நிலையில் இங்கிலாந்துக்கு வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்கள். முகுல் கேசவன் போன்ற இந்து மேலாதிக்கவாதிகளின் மொழியில் சொல்வதானால் ‘முழுவேகத்துடன் மோடி வேட்டையாடக் கிளம்பிவிட்டார்’.

இந்து வெறியர்களால் நடுநிலையாளர்கள், மேற்கத்திய சிந்தனையுள்ள பெண்கள், முஸ்லிம் அல்லது கிறித்துவ பெயர் கொண்ட பிரபலங்கள், கிரீன் பீஸ் போன்ற மேற்கத்திய தொண்டு நிறுவனங்கள் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். எழுத்தாளர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். இதனால் தன்னெழுச்சியாக கடந்த ஒரு மாதமாக நாடு தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஷாரூக்கான் போன்ற சினிமா பிரபலங்கள், ரகுராம் ராஜன் போன்ற பொருளாதார வல்லுநர்கள் சமூகத்தில் அலையாகத் திரண்டுகொண்டிருக்கும் வெறுப்புப் பிரசாரத்தைக் கண்டித்திருக்கிறார்கள்.

40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளித்திருக்கிறார்கள். அதே வழியில் சினிமா துறைச் சார்ந்த கலைஞர்கள், ஓவியர்கள், கல்வியாளர்கள், அறிவியலாளர்கள் என அறிவுஜீவிகள் பலரும் மத அரசியலை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகிறார்கள். மாட்டிறைச்சியைத் தொடர்புபடுத்தி நான்கு பேர் அடித்துக்கொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களுக்கு அடுத்து இது உச்சநிலையை அடைந்திருக்கிறது என்று சொல்லலாம்.

மோடி தன்னுடைய அரசியல் அதிகாரத்துக்காக மாட்டிறைச்சியைப் பதற்றத்தை உண்டாக்கும் விவகாரமாக மாற்றினார். கடந்த பீகார் தேர்தலில் அவரும், அவருடைய கட்சி சகாக்களும் சிறுபான்மையினருக்கு எதிரான விஷத்தைப் பரப்பினர். இந்தியாவின் செல்வம் மிக்க மாநிலம் ஒன்றை ஆளும் பாஜக முதல்வர், மாட்டிறைச்சி உண்பதை நிறுத்தினால் மட்டுமே முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ முடியும் என்று பகிரங்கமாகப் பேசினார். ஆர்எஸ்எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடு மாடுகளைக் கொல்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள், அவர்களைக் கொல்வது சரி என்று புராணங்கள் சொல்வதாக எழுதியது.
மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா, ‘எழுத்தாளர்களுக்கு மிரட்டல் வந்தால், எழுதுவதை நிறுத்திவிடுவதே நல்லது’ என்றார். கடந்த சனிக்கிழமை சகிப்பின்மைக்கு எதிராக விருதுகளை திரும்ப அளித்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பேரணி நடந்தது. அந்தப் போராட்டத்தில், ‘மோசடி எழுத்தாளர்களை செருப்பால் அடியுங்கள்’ ‘ஐரோப்பியர்களை கவர பத்திரிகை விபச்சாரம்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்தப் போராட்டங்கள் மூலம் மோடி, தன்னுடைய கருத்தைச் சொல்லவருகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது நாடு, சுதந்திரத்துக்குப் பிறகு ஒருவித சபிக்கப்பட்ட சூழலுக்கு செல்கிறது என்று எழுதியிருந்தேன். மோடி பதவியேற்றதிலிருந்து அவரை கூர்ந்துநோக்கும் எவருக்கும் அவருடைய பேச்சு, செயல்பாடு எதை நோக்கிப் போகிறது என்று அவதானித்திருக்க முடியும்.

ராணுவம் போல செயல்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முதன்மையான நபர் நரேந்திர மோடி. ஐரோப்பிய பாசிச அமைப்புகளின் வழியில் உருவாக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த நபர்கள் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களில் குற்றம்சாட்டப்படுபவர்கள். 2002-ஆம் ஆண்டில் குஜராத்தில் மோடி ஆட்சியின்போது இந்த அமைப்புகளால் வடிவமைக்கப்பட்ட கலவரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்று குவித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழிடங்களைவிட்டு வெளியேறினர். இதை முன்வைத்தே அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள் மோடி தங்கள் நாட்டுக்குள் வர விசா மறுத்தன.

கொலைகளிலும் பாலியல் வன்கொடுமைகளிலும் நேரடியாக மோடிக்கு தொடர்பில்லை என்றாலும் இந்தக் கலவரம் திட்டமிட்டு காவல் அதிகாரிகள், அரசு அதிகாரிகளின் துணையுடன் நடத்தப்பட்டது என்பதை மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் சுட்டிக்காட்டின. மோடியின் அமைச்சரவையில் இருந்த மாயா கோத்னானி, பயங்கரவாதி பாபு பஜ்ரங்ஜி போன்றோருக்கு இந்தக் கலவரத்தில் முக்கிய பங்குண்டு. நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை வாளால் பிளந்த பாபு பஜ்ரங்ஜிக்கு மோடி பாதுகாப்பு அளித்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த இருவரும் இப்போது பிணையில் வெளிவந்துவிட்டனர். தற்போது சுதந்திரமாக உலா வருகிறார்கள்.

குஜராத் கலவரத்தின் பின்னணியில் சிபிஐ-ஆல் குற்றம்சாட்டப்பட்ட அமீத் ஷா, இன்று குற்றம் நீக்கம் செய்யப்பட்டவராக பாஜகவின் தலைவராக இருக்கிறார். அதேவேளையில் குஜராத்தில் மோடி தலைமையிலான ஆட்சியில் நடந்த படுகொலைகள் குறித்து வெளியுலகத்துக்கு தெரியப்படுத்திய தீஸ்தா செதல்வாட் போன்றோர், சிறைக்கு அனுப்படும் சூழலில் இருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் மட்டுமே அவர்களை இதுவரைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறது.

பதவி விழாவுக்காக குஜராத்திலிருந்து தன்னுடைய நெருங்கிய சகாவின் ஜெட்டில் டெல்லி வந்து தன்னுடைய படோபடமான, ரசனைக் குறைவான ஆடம்பரத்தைக் காட்டினார். ஜனவரி மாதம் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் கைக் குலுக்குவதற்காக 15 ஆயிரம் டாலர் மதிப்பிலான சூட் அணிந்தார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தை சிலிக்கான் வேலியில் தொடங்கிய நிகழ்ச்சியின்போது மார்க்குடன் கைக் குலுக்கும்போது தான் ஊடகங்களில் தெரிய வேண்டும் என்பதற்காக அவரை பின் தள்ளினார். இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுக்கும் பலர், புதிதாகத் திருமணமான பெண், தன்னுடைய புகுந்தவீட்டினரைக் கவர முயல்வதைப் போல மோடியின் செயல்பாடு இருப்பதாக இப்போது விமர்சிக்கிறார்கள்!

எதிர்பாராதவிதமாக மோடியின் சொந்தக் குடும்பமே அவரை நிராகரித்துவிட்டது. மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றியைக் கொடுத்த பீகார் மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரை முற்றாக நிராகரித்திருக்கிறார்கள். ஆனால் கவர்ச்சி மிக்க மோடியின் செயல்பாடுகள் மேற்கத்தியர்களை கவர்ந்திருக்கிறது. சமீபத்தில் மோடியை சந்தித்த ரூபர்ட் முர்டொச், ‘சுதந்திரத்துக்குப் பிறகு, சிறந்த கொள்கைகளுடன் இருக்கும் சிறந்த அரசியல்வாதி’ என்று புகழ்ந்திருக்கிறார். ஷெரில் சாண்ட்பர்க், மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மெச்சும் வகையில் தன்னுடைய படத்தை மூவர்ணகொடியின் பின்னணியில் மாற்றுவதாக அறிவித்தார்.

காஷ்மீரில் ஃபேஸ்புக் முடக்கப்படுவது குறித்தும் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் எழுதினார்கள் என்பதற்காக காவலர்களால் பொதுமக்கள் சிறைக்குள் அனுப்பப்படுகிறார்கள் என்பதும் டிஜிட்டல் இந்தியாவைப் போற்றும் இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மோடியின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் ஒரு சில தொழிலதிபர்களை உய்விக்கத்தான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

மோடியின் பேச்சுக்கள் இந்தியாவில் ஒலிப்பதில்லை, அரங்கம் நிறைந்த வெளிநாட்டு கூட்டங்களில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் களிப்பூட்டும் உற்சாகத்துக்கிடையேதான் அது இப்போது ஒலிக்கிறது. இந்த வார இறுதியில் இங்கிலாந்தின் விம்பேளேவில் ‘மோடி, மோடி’ என்ற அரங்கேறும் கூச்சல்கள், வரலாற்றில் அவர்களை கூனிக்குறுகச் செய்யலாம்.

21ஆம் நூற்றாண்டில் இந்தியாவை வழிநடத்த நரேந்திரமோடி சரியான நபர் அல்ல. சமூக உளவியலாளர் ஆஷிஷ் நந்தி, மோடி குறித்து இப்படிச் சொன்னார். ‘முரண்டுபிடித்த மனிதர், சர்வாதிகார மனோபாவம் உள்ளவர்’. குஜராத் படுகொலைகள் குறித்து ஆஷிஷ் நந்தி கேட்டபோது, மழுப்பலான பதிலைக் கூறிக்கொண்டிருந்த மோடி, இறுதியாக காரில் அடிப்பட்ட நாயின் மரணத்துக்கு காரில் அமர்ந்து வருபவர் எப்படி பொறுப்பாக முடியும் என்று சொல்லியிருக்கிறார்.

முதலாளித்துவத்தை முன்னெடுத்த ஐரோப்பிய, ஆசிய முன்னோடிகளின் தோல்வியின் அறிகுறியாக மோடி தெரிகிறார். சந்தர்ப்பம் கிடைத்தால் சிறுபான்மையினரையும் அடித்தள மக்களையும் பிளவுபடுத்தப் பார்க்கும் மோடி, போலி முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதன் மூலம்
‘வளர்ச்சி’யைக் கொண்டுவருவதாக வாக்குறுதி தருகிறார். இளம் இந்தியர்கள் முன் தன்னை சமூக சீர்திருத்தவாதியாகவும் டீக் கடைக்காரரின் மகன் பேரரசுகளுக்கு சவால் விடுவதாகவும் பொருளாதார சீர்திருத்தவாதியாகவும் தன்னை காட்டிக் கொள்கிறார் மோடி.

இளம் தலைமுறையை வளர்ச்சி என்ற வார்த்தை ஜாலத்தின் மூலம் ஏமாற்றி பதவியில் அமர்ந்திருக்கிறார்கள், மோடியும் அவருடைய இந்து பயங்கரவாதத்தை முன்னெடுக்கும் சகாக்களும்.சிறிதளவேனும் வெட்கமும் அவமானமும் கொள்ளாமல் ஆட்சி அதிகாரத்தின் கொடூரத்தை முன்னெடுக்கிறார்கள் என்பதே சரி. இந்தியாவின் பன்முகத்தன்மை மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் சமூகக் கட்டமைப்பைப் பிளவுபடுத்தவும் மனிதம் சார்ந்த அரசியல் கலாச்சாரத்தைக் கெடுக்கவும் இவர்கள் முயற்சிக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் மனிதம் வளர்ந்த இந்தியாவில் ஒரு கூட்டத்தினர் தங்கள் தலைவன் வழியில் சமீபகாலமாக ‘அடித்துக் கொல், அடித்துக் கொல்’ என்று கூச்சல் இடுகிறார்கள்.