ஃபீனிக்ஸாய் மீண்டெழுவாரா பெருமாள் முருகன்!

மாதொருபாகன் என்னும் பெயரைக்கேட்டதும் நண்பர் ஒருவர், சைவ நெடியடிக்கும் தலைப்பு என்றார். உண்மைதான். இது சிவனின் பெயர்களில் ஒன்று. பெண்ணுக்குத் தன் இடப்பாகத்தைக் கொடுத்து ஆண் பாதி பெண் பாதி எனக் காட்சி தரும் அர்த்தநாரீசுவர வடிவத்தை குறிக்கும் பெயர். அர்த்தநாரீசுவரன், அம்மையப்பன், மங்கைபங்கன் ஆகிய பெயர்களும் இதே பொருளைத் தருவன. எனினும் எனக்குள் ஒருவித மயக்கத்தை உண்டாக்கிய பெயர் ‘மாதொருபாகன்.’ பொதுவாக நாவலை முடித்த பிறகே தலைப்பை யோசிப்பது என் வழக்கம். ஆனால் இந்நாவலை எழுதத் தொடங்கும் முன்பே இத்தலைப்பு எனக்குள் தோன்றிவிட்டது. எனினும் அதை ஒத்திவைத்துவிட்டு பல தலைப்புகளை யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இதற்கு ஈடான நிறைவை வேறு எதுவும் தரவில்லை.

மூலவர் மாதொருபாகனாகச் சிவன் காட்சித் தருவது திருச்செங்கோட்டில் மட்டுமே. இவ்வுருவம் இக்கோயிலில் அமைய ஊகத்திற்கு உட்பட்டும் ஊகத்திற்கு அப்பாற்பட்டும் காரணங்கள் இருக்கலாம். சைவம், கோயிலின் பூர்வ வரலாறு ஆகியவற்றைவிட மக்களிடையே கோயில் பெற்றிருக்கும் மிதமிஞ்சிய செல்வாக்கே என்னை ஈர்த்த விஷயம். வாழ்வின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஏதோ ஒரு வடிவில் கோயில் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. மலைஅடி வாரம் முதல் உச்சி வரை மக்கள் குறை தீர்க்கும் படையாகத் தெய்வங்கள் அணிவகுத்திருக்கின்றன. அந்தந்தச் சமயத்திற்கு ஏற்றாற்போலத் தெய்வங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

திருச்செங்கோடு தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்ட போது எனக்குக் கிடைத்தவை பல. படைப்பு உந்துதல் கொடுத்த விஷயங்களில் ஒன்று இந்நாவல். நான் சேகரித்தவற்றை விரிவாகப் பயின்று கொண்டிருக்கிறேன். ஆய்வின்போது நான் பெற்ற பேரனுபவங்கள் சில என்னுள் ஊறிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் வரலாறு சார்ந்து விரிவாக எழுதும் தூண்டல் ஒன்றும் இருக்கிறது. அதற்குச் சில ஆண்டுகள் எனக்குத் தேவைப்படக்கூடும்.

– மாதொருபாகன் நாவல் முன்னுரையில் எழுத்தாளர் பெருமாள் முருகன்.

இப்படி பெருமிதத்துடன் எழுதிய நாவலோடு தன் எழுத்துப் பயணத்தை முடித்துக் கொள்வார் என எழுத்தாளர் பெருமாள் முருகனும்கூட நினைத்திருக்க மாட்டார்.

நாவலில் தங்கள் இனத்துப் பெண்கள் இழிவாகச் சித்தரிக்கப் பட்டுள்ளதாக சில சாதி அமைப்புகள் நாவல் எரிப்புப் போராட்டத்தை நடத்தின. பெருமாள் முருகன் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என அவரை நிர்பந்தித்தன. சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக மிகப்பெரும் எழுத்து வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. கட்ட பஞ்சாயத்துகளும் நடந்தன. அவர் மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தினரும் சாதி அமைப்புகளால் கடுமையான அவதூறுகளுக்கு உள்ளானார்கள்.

இறுதியில், ‘எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்’ என அறிவித்தார். சர்ச்சைகளும் ஓய்ந்தன.

இந்நிலையில் பத்து மாதங்களுக்குப் பிறகு, ‘மாதொருபாகன்’ நாவலுக்கு கிடைத்திருக்கும் சமன்வய் விருதையொட்டி பொதுவெளியில் அறிக்கை மூலம் பேசியிருக்கிறார்.

பெருமாள் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாதொருபாகன் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ள இவ்விருது நெடும் இலக்கியப் பாரம்பரியம் கொண்ட செம்மொழி ஆகிய தமிழுக்குக் கிடைத்திருக்கும் நவீன அங்கீகாரம் ஆகும். துரதிர்ஷ்டம் நிறைந்திருக்கும் இச்சூழலில் என் தாய்மொழி அடைந்திருக்கும் இப்பேறு அதன் வரலாற்றில் துருத்தும் மருவாக அல்ல, ஒளிரும் மணியாக அமையும் என்று நம்புகிறேன். இவ்விருதுக்குக் காரணமான அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இயற்கையின் இயல்புக்கு மாறாகப் பெருமாள் முருகனின் நிழலாக மட்டுமே தங்கி உலவும் நான் பெருமைமிகு தருணமாக இதை உணர்கிறேன். இவ்விருதை எல்லாம் வல்ல இறையாகிய மாதொருபாகனின் பாதக் கமலங்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

பல மாதங்களுக்குப் பிறகு ஊடகங்களில் அறிவிப்பு வழியாக பேசியிருக்கும் பெருமாள் முருகன், இனி எழுதுவதில்லை என்ற முடிவை மாற்றிக்கொள்வாரா? பெருமாள் முருகனின் பெருவாரியான நூல்களை வெளியிட்டிருக்கும் காலச்சுவட்டின் பதிப்பாளர் கண்ணனிடம் இது குறித்துக் கேட்டபோது.

“அவர் எழுதுவாரா என்பது குறித்து தெரியவில்லை. எழுதுவீர்களா என நானும் கேட்கவில்லை. சென்னை வந்த பிறகு அவர் அமைதியான மனநிலைக்குத் திரும்பியிருக்கிறார். இப்போது அவர் மீண்டும் படிக்க ஆரம்பித்திருக்கிறார்.” என்றார்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் என்ற எழுத்தாளரைத் தாக்கிய சாதியம், கோகுல்ராஜ் என்ற மாணவரின் படுகொலை, விஷ்ணுப் பிரியா என்ற காவல் அதிகாரியின் மரணம் வரை இழுத்துச்சென்றுள்ளது. கொங்கு மண்டலத்தில் கிளம்பிய இந்த சாதியத்தை உணர்ந்ததால்தான் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதுவதையே நிறுத்திக் கொள்கிறேன் என அறிவித்தார் என்கிறார் கண்ணன்.

“மாதொருபாகனுக்கு எதிராக சாதிய அமைப்புகள் கிளம்பியபோது பெருமாள் முருகன் தேவையில்லாமல் அச்சப்படுகிறாரோ என பலர் பேசினர். சூழல் மோசமாகிவிட்டதை உணர்ந்ததால்தான் அவர் அப்படி அச்சப்பட்டார். இன்று அது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது” என்றவர், பெருமாள் முருகனின் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளர் என்ற முறையில் தங்களையும் சிலர் மிரட்டினார்கள் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

“இந்த பிரச்சினை கிளம்பிய நேரத்தில் காலச்சுவடு அலுவலகத்துக்கு நிறைய மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்தன. என்னிடம் பேச பலமுறை முயன்றார்கள். என் செல்பேசி எண்ணை எப்படியோ தெரிந்துகொண்டு ஒருவர் அழைத்தார். ‘வணக்கம் இந்து துரோகியே!’ என்பதுதான் அவர் பேசிய முதல் வார்த்தை. நான் கடுமையாக பேசிவிட்டு பேசியை அணைத்தேன்.

சேலம் ஆர்எஸ்எஸ் என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் தன்னைப் பற்றி குறிப்பிட்டிருந்த ஒருவர், என் மனைவியின் முகநூல் பக்கத்தில் ‘திருச்செங்கோடு கோயிலில் நடைபெறும் திருவிழாவில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கமெண்ட் போட்டிருந்தார். இப்படி அந்த சந்தர்ப்பத்தில் நிறைய சந்திக்க வேண்டியிருந்தது” என்கிறார்.

இன்னும் சில நாட்களில் எழுத்தாளர் பெருமாள் முருகன் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கின் தீர்ப்புக்குப் பிறகுதான் எழுதுவது குறித்து அவர் பேசுவார் என சொன்ன கண்ணன், தற்போது பெருமாள் முருகனின் நூல்களை மறுபதிப்பு செய்வதையும் நிறுத்தி வைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நண்பரும் கவிஞருமான சிபிச்செல்வன், வழக்கு முடியும்வரை பெருமாள் முருகன் பொதுவெளியில் பேசுவதில்லை என முடிவெடுத்திருப்பதாகக் கூறினார். வழக்கின் முடிவைப் பொறுத்தே அவர் எழுதுவாரா, இல்லையா என்பது தெரிய வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் கிடைத்திருக்கும் மன அமைதியும் விருது பெற்றிருக்கும் மகிழ்ச்சியும் அவரை ஃபீனிக்ஸ் பறவைபோல சாம்பலில் இருந்து மீண்டெழ வைக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம்!

மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்காக ஒரு இதழ்!

பல மொழிகளில் இருக்கும் பேசப்பட்ட படைப்புகளை அந்த மொழிகளைத் தெரியாத மற்றவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அந்த வகையில் சமீப காலமாக மொழிபெயர்ப்பு இலக்கியம் என்ற புதிய கிளையே உருவாகி வளர்ந்து வருகிறது. இதில் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியாக மொழி பெயர்ப்பு இலக்கியத்துக்கென்றே பிரத்யேகமாக ‘திசையெட்டும்’ என்ற காலாண்டிதழை 2003 முதல் நடத்திவருகிறார் குறிஞ்சிவேலன். மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் இவர்.

குறிஞ்சிவேலன்

குறிஞ்சிவேலன்

‘‘மொழிபெயர்க்கறதோட நோக்கமே பல மொழிகள்ல இருக்கிற நல்ல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு அதன்மூலமா நம் படைப்புகள் செழுமையாகணும் என்பதற்காகத்தான். மலையாள, வங்க இலக்கியங்கள் இந்திய அளவில் பேசப்படுவதற்குக் காரணம், அவை மற்ற மொழிகள்ல அதிகமா மொழிபெயர்க்கப்படறதுதான். தமிழில் எவ்வளவோ உன்னதமான படைப்புகள் இருக்கு. ஆனா அவற்றை மொழிபெயர்க்கறதுக்கு யாரும் மெனக்கெடலை. இந்த நிலை மாறணுங்கிறதுக்காக ஒரு சின்ன அசைவா ‘திசையெட்டும்’ பத்திரிகையைத் தொடங்கினேன். திசையெட்டிலும் இருக்கிற பல மொழிகளைச் சேர்ந்த படைப்புகளை தமிழுக்கு கொண்டுவரணும். அது மூலமா தமிழில் இருக்க படைப்புகள் மற்ற மொழிகள்லேயும் மொழிபெயர்க்கப்படணும். அதுதான் பத்திரிகையோட நோக்கம். வட இந்திய மொழிகள், தென் இந்திய மொழிகள்னு கிட்டத்தட்ட 14 மொழிகள்ல இருக்கிற கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற படைப்புகளை மொழிபெயர்த்து இதழ்ல வெளியிடறோம். எல்லா மொழி இலக்கியங்களையும் அந்த மொழியில் இருந்தே நேரடியா தமிழுக்கு கொண்டு வர்றோம். படைப்போட தரம் குறையக்கூடாதுன்னு ஆங்கிலம் வழியா வர்ற மற்ற படைப்புகளை மொழிபெயர்ப்புகளை நாங்கள் வெளியிடறதில்லை. மைதிலி, அஸ்ஸாமி, மணிப்பூரி போன்ற அதிகம் மொழிபெயர்க்கப்படாத மொழிகளோட படைப்புகளை சிரத்தையோடு வெளியிடறோம். பொதுவா சிறுபத்திரிகைகளுக்கு நிறைய பொருளாதார சிக்கல் வரும். ஆனா, அந்த மாதிரி சிக்கல் எதுவும் இல்லாம தொடர்ந்து ‘திசையெட்டும்’ வந்துக்கிட்டிருக்கு.

எல்லாத்துக்கும் மேலே மொழிபெயர்ப்புக்குன்னு தனி இதழ் ஆரம்பிக்கணுங்கிறது என்னோட நாற்பது வருஷ கனவு. இந்திய அளவில் மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்காக வெளிவரும் ஒரே இதழ் திசையெட்டும்’’ என்கிற குறிஞ்சிவேலன், கால்நடை ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்தை வைத்துதான் இதழ் வெளியீட்டைத் தொடங்கியிருக்கிறார். இவருடைய இயற்பெயர் ஆ. செல்வராசு. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் குறிஞ்சிவேலன் என்கிற பெயரை புனைந்ததாக சொல்கிறார்.

‘‘எழுத்தாளர் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த ‘செம்மீன்’ நாவல்தான் நான் படித்த முதல் மொழிபெயர்ப்பு படைப்பு. அது எனக்குள்ள பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுக்குப்பிறகு நிறைய மொழிபெயர்ப்புகளை தேடி படிச்சேன். நேரடியா அந்த மொழிகள்லேயே படிச்சா இன்னும் நல்ல வாசிப்பு அனுபவம் கிடைக்கும்னு மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, வங்காளம் போன்ற மொழிகளை கத்துக்கிட்டேன். பெரும்பாலும் என்னுடைய மொழிபெயர்ப்புகளை மலையாளத்திலிருந்துதான் செய்திருக்கேன்.
நா. பார்த்தசாரதி வெளியிட்ட ‘தீபம்’ இதழ்ல என்னோட பல மொழிபெயர்ப்பு கட்டுரைகள், சிறுகதைகள் வெளிவந்திருக்கு. மலையாள எழுத்தாளர் ‘பொட்றேகாட்’ எழுதிய ‘விஷக்கன்னி’ நாவலை மொழிபெயர்த்ததற்குத்தான் எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைச்சது. நனவோடை உத்தி, நாவடகம் (நாவலும் நாடகமும் சேர்ந்த வடிவம்), மேஜிக்கல் ரியலிசம்னு பல புதிய வடிவங்களை தமிழுக்கு ஆரம்ப காலத்திலேயே அறிமுகப்படுத்தியிருக்கேன்.’’ என்கிற குறிஞ்சிவேலன் 65 வயதிலேயும் தளராது மொழிபெயர்ப்புகளை செய்து கொண்டிருக்கிறார். ‘நல்லி திசையெட்டும்’ விருதுகள் மூலமாக வருடம்தோறும் சிறந்த மொழியாக்க படைப்பாளிகளுக்கு ரூ. ஒன்றரை லட்சம் அளவில் பல்வேறு பிரிவுகளில் விருது கொடுக்கிறார். இதுவரை 84 படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கி இருக்கிறோம் என்கிறார் குறிஞ்சிவேலன். ‘Tranfire‘ என்ற பெயரில் ஆங்கில மொழியாக்க காலாண்டிதழ் ஒன்றை 2011 ஆகஸ்டில் இருந்து வெளியிட்டு வருகிறார். ‘திசையெட்டும்’ தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் சிறந்த சிற்றிதழ் விருது பெற்றிருக்கிறது.