சித்தாந்த எதிரியை எதிர்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறதா காங்கிரஸ்?

அண்மையில் கூடிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கத்துக்குப் பிறகு, அம்மாநிலம் முடக்கத்துக்கு உள்ளாகியிருப்பது, காஷ்மீர் தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக்காவலில் இருப்பது, பொருளாதார மந்தநிலை, ஐஐடியில் தொடரும் மரணங்கள் இப்படி சூடான பல விசயங்களை விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி. ஆர். பாலு ஒரு விசித்திரமான பிரச்சினையோடு நாடாளுமன்றம் வந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு விடுதலை புலிகளால் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரினார் டி. ஆர். பாலு.

மிகச் சமீபத்தில் சோனியா, ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டது மோடி அரசு. சுமார் 3000 பேரைக் கொண்ட இந்த சிறப்பு பாதுகாப்பு குழு, தேர்ச்சி பெற்ற கமாண்டோக்களைக் கொண்டது. இப்போது அளிக்கப்பட்டிருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பில் டெல்லி போலீசைச் சேர்ந்த 100 மட்டுமே இருப்பர். காலம்காலமாக அதிஉயர் பாதுகாப்பில் இருந்த காந்தி குடும்பத்துக்கு, சிறப்பு பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தற்போது கூடியிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் பல காங்கிரஸ் எம்.பிக்கள் பேசினர். ராகுல் காந்திக்கும் ப்ரியங்கா காந்திக்கும் அச்சுறுத்தல் இருந்ததாலேயே சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பு கொடுக்கப்பட்டதாக பலரும் பேசினார்கள். அவர்கள் விடுதலை புலிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக சொல்லவில்லை. ஆனால், டி. ஆர். பாலு பேசும்போது விடுதலை புலிகளால் அச்சுறுத்தல் என அமைப்பின் பெயர் குறிப்பிட்டு பேசினார்.

சர்வதேச அளவில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒரு ஆயுதம் தாங்கிய அமைப்பு, இப்போது பெயரளவில் கருத்தியல் ரீதியாக மட்டும் வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர் சிலர் இணைந்து விடுதலை புலிகள் அமைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட செத்துப்போன ஒரு இயக்கத்தை காரணம் காட்டி, சோனியா காந்திக்கு பாதுகாப்பு கேட்கிறார் டி.ஆர். பாலு என இந்த விவகாரத்தை சமூக ஊடகங்களில் மக்கள் கேலி செய்தனர்.

உண்மையில் காங்கிரசுக்கும், அதனுடன் கூட்டணியில் உள்ளவர்களுக்கும் காலம் 2008-ஆம் ஆண்டிலேயே நின்றுவிட்டதோ என கேள்வி எழுப்புகிறது மேற்படியான விவகாரத்தில் இவர்கள் நடந்துகொள்ளும் விதம். தொடர்ச்சியான வெற்றிகள், பதவிகள் கண்ட மிதப்பு இவர்களை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

மிக முக்கியமான காலக்கட்டத்தில் நாடு இருக்கும்போது, ஒரு எதிர்க்கட்சிக்குரிய பணியை காங்கிரஸ் செய்கிறதா? பாஜக அசுரத்தனமாக வளர்ந்துகொண்டிருக்கும் வேளையில் காங்கிரஸ் எந்தப் பாதையில் பயணிக்கிறது? 70 ஆண்டுகாலமாக பேணிக்காத்த மதச்சார்பின்மை – பன்மைத்தன்மை எனும் சித்தாந்தங்களை அழித்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மைவாதத்தை எப்படி காங்கிரஸ் எதிர்கொள்ளப் போகிறது?

காங்கிரசும் வாரிசு அரசியலும்

2013-ஆம் ஆண்டு அப்போதைய குஜராத் முதலமைச்சரான நரேந்திர மோடியை பாஜக, பிரதமர் வேட்பாளராக களமிறக்கியபோது,‘பரம்பரை பரம்பரையாக அதிகாரத்தில் உள்ளவர்களின் வாரிசு பிரதமராக வேண்டுமா, மக்களில் ஒருவராக சாதாரண டீக்கடைக்காரராக வாழ்க்கையைத் தொடங்கிய ஒருவர் பிரதமராக வேண்டுமா’ என பாஜக தரப்பில் முழக்கம் வைக்கப்பட்டது. அப்போதுதான் 2014-ஆம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்து ராகுல் காந்திக்கு காங்கிரசில் துணை தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தது. ராகுல் காந்தியை குறிவைத்தும் தன்னை எளியவராகக் காட்டிக் கொண்டும் மோடி ஆட்சியைப் பிடித்தார்.

எனவே, காங்கிரசின் வாரிசு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டதா; ஒட்டுமொத்தமாக இந்தியாவிலேயே வாரிசு அரசியல் ஒழிக்கப்பட்டுவிட்டதா என்றெல்லாம் விவாதங்கள் எழுந்தன. வாரிசு அரசியல் என மூச்சுக்கு முந்நூறு முறை சொன்ன பாஜகவில்தான் இப்போது வாரிசு அரசியல் தலைவிரித்தாடுகிறது என்பது தனிக்கதை. இங்கே நாம் பேச வேண்டியது வாரிசு அரசியலால்தான் காங்கிரஸ் தோற்றதா என்பதைத்தான்.

இந்தியா போன்ற வளரும் நிலையில் உள்ள ஜனநாயக நாடுகளில் வாரிசு அரசியல் தவிர்க்க முடியாதது என்றே உலகளாவிய அரசியல் திறனாய்வாளர்கள் கருதுகிறார்கள். ஜனநாயகத்தின் அடுத்தக்கட்டத்தில் அதுதானாகவே உதிர்ந்து விழும் என்பது அவர்களுடைய கருத்து. ஆக, காங்கிரசின் தோல்வி என்பது ஒரு சித்தாந்தம் அசுரத்தனமாக எழுந்து நின்றதால் ஏற்பட்ட பக்க விளைவு. அது பாஜகவின் பெரும்பான்மை வாதம், இந்து தேசியவாதம் எனும் சித்தாந்தம்.

பெரும்பான்மை வாதத்தை, இந்து தேசியவாதத்தை காங்கிரஸ் இனம் கண்டதா?

பாஜகவின் இந்து தேசியவாதம் குறித்து மிதப்பான நிலையிலேயே கடந்த 30 ஆண்டுகாலமும் காங்கிரஸ் அணுகியது. காங்கிரசில் இருந்தவர்களே கூட அந்த சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களாக இருந்தனர். மதச்சார்பின்மைக்கும், பெரும்பான்மைவாதத்துக்குமான வேறுபாட்டை தெளிவுபடுத்த அங்கே சரியான ஆட்கள் இல்லையோ என்ற கேள்வியும் எழுகிறது. சோனியா காந்தியை வெளிநாட்டவர், அவர் இந்திய பிரதமராக பதவி ஏற்கக்கூடாது என பாஜக தரப்பினர் பிரச்சாரத்தை மேற்கொண்டபோதே, காங்கிரஸ் தலைமை விழித்துக்கொண்டிருக்க வேண்டும். இறுதியில் அந்த பிரச்சாரம் வென்று, சோனியா பிரதமராகவே முடியவில்லை என்பது நினைவுகூறத்தக்கது. பெரும்பான்மை தேசியவாதம் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருப்பதைக் காட்டிய முக்கியமான குறிகாட்டி இது. அதிலும் காங்கிரஸ் கோட்டை விட்டது.

இன்னொறு முக்கியமான விசயம், பாஜகவை பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருந்த இந்து அமைப்புகளின் வளர்ச்சி, அவர்களுடைய திட்டங்களை முறியடிக்க காங்கிரஸ் தவறியதைக் கூறலாம். பசுவளைய மாநிலங்களில் பெருநகரம், நகரம், கிராமம், மலைக்கிராமம் என பல்வேறு சூழல்களில் பல்கிப் பெருகிக்கொண்டிருந்த இந்து அமைப்புகளை காங்கிரஸ் குறைத்து மதிப்பிட்டு விட்டது. பாஜக என்ற கட்சியின் பெயரைக்கூறாமலேயே உள்ளூர் மக்களை மதத்தின் பெயரால் திரட்டி வைத்திருந்தன இந்த அமைப்புகள்.

இசுலாமிய தீவிரவாதம், இடது அமைப்புகளின் தீவிரவாதம் இவை மட்டுமே நாட்டுக்கு அச்சுறுத்தல் என நம்பிக்கொண்டிருந்தது காங்கிரஸ். இவை அனைத்தையும் காட்டிலும் நாட்டையே அடியோடு மாற்றும் பெரும்பான்மை வாதம் படுவேகமாக வளர்ந்து வருவதை அந்தக் கட்சி கவனிக்கவில்லை. இதன் பாரதூரமான விளைவுகளை முதன்முறையாக 2014-ஆம் ஆண்டில் பாஜக பெற்ற அபார வெற்றி சுட்டிக்காட்டியது. நீண்ட காலம் ஆட்சியில் இருந்தோம்; இப்போது ஓய்வெடுத்துக் கொள்வோம் என்பதுபோல, தோல்வியை குறித்து ஆய்வு செய்யாமல் காங்கிரஸ் ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றது.

ராகுலின் எதிர்ப்பு போதுமானதாக இல்லை!

இந்து பெரும்பான்மைவாத சித்தாந்த பின்னணியில் அபார வெற்றியுடன் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது பாஜக. மெதுவாக தன்னுடைய சித்தாந்தத்தை அமலாக்கத் தொடங்கியது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள், பசுமாட்டை முன்னிறுத்திய கும்பல் வன்முறைகள், தலித்துகள் – பெண்களுக்கு எதிராக பாஜக தலைவர்களின் அவதூறு பேச்சுகள், பாஜகவை சித்தாந்த ரீதியாக எதிர்த்த செயல்பாட்டாளர்களின் படுகொலைகள் நாட்டை உலுக்கின. தூக்கத்தில் இருந்த காங்கிரஸ் விழித்தது. பாஜகவின் சித்தாந்தமே எதிரிதான் என்பதை அறியாவிட்டாலும், அதன் மதவாத ஆதரவு நிலைப்பாட்டுக்கு அவ்வவ்போது எதிர்வினையாற்றியது காங்கிரஸ்.

காந்தியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தமே காரணமாக இருந்தது என ராகுல் காந்தி மேடைகளில் பேசினார். இது நீதிமன்ற வழக்காக மாறியது. ராகுல் நீதிமன்றத்துக்கு அலைகழிக்கப்பட்டபோதும், தனது கருத்தை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனாலும், இந்து தேசியவாதத்தை எதிர்ப்பது எங்கே பெரும்பான்மை இந்துக்களை எதிர்ப்பதாகிவிடுமோ என பயந்தது காங்கிரஸ். வட மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களின்போது, கோயில்களுக்குச் சென்றார் ராகுல். கோயில்களுக்குச் செல்வது இந்துக்களை கவரத்தான் என பாஜக தரப்பு அதை கேலி செய்தது. எதைச் செய்தால் மக்களின் மனங்களைப் பிடிக்கலாம் என்பதில் பாஜகவின் பாணியை பின்பற்றலாம் என காங்கிரஸ் நினைத்திருக்கலாம். அதுவும் கைகூடவில்லை. பெரும்பான்மைவாதத்துக்கு எதிர் பெரும்பான்மைவாதம் ஆகிவிடாது. இது எளிய சூத்திரம்.

பாஜகவின் இரண்டாவது வெற்றியில் காங்கிரஸ் பாடம் கற்றுக்கொண்டதா?

முதல் வெற்றியைக் காட்டிலும் பாஜக இரண்டாவதாக பெற்ற வெற்றி, இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றக்கூடும் என எவரும் எதிர்ப்பார்த்திருக்க முடியாது. சங்க பரிவாரங்களின் நீண்ட நாளைய கனவான ‘இந்து அரசு’ இரண்டாவது வெற்றியில் சாத்தியமாகிக் கொண்டு வருகிறது. நிர்வகித்து வந்த காஷ்மீரை அம்மக்களின் உணர்வுகளையும் மீறி தனதாக்கிக் கொண்டது, அயோத்தியில் ‘இந்து பெரும்பான்மைவாத’த்தின் அடிப்படையில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது, அதை இஸ்லாமிய மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்தது, அஸ்ஸாமில் முசுலீம்களை வெளியேற்றும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருப்பது என முழு ‘இந்து அரசு’க்கான நிலையை நோக்கி பாஜக வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.

இந்திய சுதந்திரத்தின்போது ‘பன்மைத்துவம்தான் இந்தியாவின் ஆன்மா’ என காங்கிரஸ் தலைவர்கள் உறுதியோடு நின்றது இன்று வெறுமனே வரலாறாக மட்டுமே எஞ்சும் நிலைக்கு நாடு சென்றுவிட்டது. வரலாற்று நூல்கள், பாடப்புத்தகங்களிலிருந்து இந்த வாக்கியமும்கூட பெரும்பான்மைவாத அரசால் நீக்கப்படலாம். சோசலிச இந்தியாவை கனவு கண்ட நேரு, இன்றிருக்கும் ஆட்சியாளர்களால் ஒரு எதிரி போலவே காட்டப்படுவது, காலக்கொடுமை! காந்தி தற்செயலாக இறந்தார் என பாடப்புத்தகங்களின் படிக்க ஆரம்பித்திருக்கிறோம். பிரிட்டீஷாரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி, இறுதி வரை விசுவாசமாக இருப்பேன் என்றவருக்கு ‘பாரத ரத்னா’ விருது தரக் காத்திருக்கிறது ஆளும் அரசு.

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத, பார்க்காத இந்தியாவை இனி வரும் காலங்களில் நாம் பார்க்க இருக்கிறோம். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, பெரும் தொண்டர் படையைக் கொண்ட ஒரு கட்சியாக காங்கிரஸ் இதை முறியடிக்க, தனது மூதாதையர்களின் இந்தியாவை தக்க வைக்க என்ன திட்டம் வைத்திருக்கிறது? சில்லறைத்தனமான விசயங்களில் கவனம் செலுத்தாமல், ஆக்கப்பூர்வமாக காங்கிரஸ் எப்போது சிந்திக்கும்? வாரிசு அரசியல், ஊழல் அரசியல் (இவை இரண்டிலும் காங்கிரஸைக் காட்டிலும் பாஜக மோசமானது) என்பதை ஒதுக்கிவிட்டு, காங்கிரஸை இன்னமும் நம்பிக்கையாக மக்கள் பார்க்கிறார்கள். மக்களின் உயிர்வாழும் சுதந்திரம், அவரவர் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம், பன்மைத்துவத்தைக் காப்பாற்றும் பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. இதை காங்கிரஸ் எப்போது உணரப் போகிறது?

காஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்?

இந்திய சுதந்திரத்தின் போது இணைக்கப்பட்ட ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு தரப்பட்டிருந்த சிறந்த அந்தஸ்த்தை மோடி அரசாங்கம் நீக்கி நாற்பது நாட்களாகிவிட்டன. இந்திய அரசியலமைப்பு பிரிவு 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் மற்ற இந்திய மாநிலங்களுக்கு இல்லாத சிறப்பை காஷ்மீருக்கு அளித்திருந்தன. காஷ்மீர் இந்தியாவின் ஆளுகைக்குள் இருந்த தனிநாடாகவே செயல்பட்டுவந்தது. காஷ்மீர் மக்களின் விருப்பமும் இந்திய அரசின் விருப்பமும் வேறு வேறாக இருந்ததால் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்னும் அம்மாநில மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாமலேயே இருந்தது.

பிரச்சினையின் மையப்புள்ளி இந்திய அரசு, காஷ்மீர் முழுவதையும் தனதாகக் கருதியதே. ஆனால், அம்மக்களின் விருப்பம் அது இல்லை. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான பட்டேலிடம் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்துக்கொள்ளலாம் என பரிந்துரைத்தார். 1950-ஆம் ஆண்டு மவுண்ட் பேட்டனின் கூற்றை நினைவு படுத்தி கடிதம் எழுதிய பட்டேல், அவர் சொன்னது எத்தனை தீர்க்கதரிசனமானது என்பதை நிகழும் சம்பவங்கள் எடுத்துரைப்பதாக கூறினார்.

வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுவதுபோல், 370வது பிரிவை நீக்கி காஷ்மீரை இந்திய அரசு தனதாக்கிக் கொண்ட பிறகு பிரச்சினை ஓய்ந்தபாடில்லை; ஓயப்போவதும் இல்லை.

பிரிவு 370வது நீக்கப்பட்ட பின் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பிரதமர் சொல்லும் பாதுகாப்பு எப்படிப்பட்டது? கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரின் நான்கு வீடுகளுக்கு ஒரு வீரர் என்ற அளவில் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். முன்னாள் முதலமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்கள், அரசியல்வாதிகள், கிளர்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள் என பலர் வீட்டுச் சிறையிலும் விடுதிகளிலும் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்துக்கும் மேலாக ‘கல்லெறிகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பதின்பருவ, பள்ளி மாணவர்களை பாதுகாப்புப் படை கைது செய்து சிறையில் அடைக்கிறது. அதுவும் பொது அமைதி பாதுகாப்பு சட்டப்பிரிவின் கீழ் கைது செய்கிறது. விசாரணை இல்லாமலேயே இந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறவர்களை ஆறு மாதம் வரையில் சிறையில் வைத்திருக்க முடியும்.

இப்படி கைதாகும் சிறுவர்களில் பலர், தாங்கள் செய்யாத குற்றத்துக்காகவே கைதாகிறார்கள். ஸ்ரீநகரின் மத்திய சிறைச்சாலை முன்பு காத்திருக்கும் குடும்பத்தினர், தங்கள் மகன் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை அல்லா அறிவார் என கதறிக்கொண்டிருக்கிறார்கள். நள்ளிரவு ரோந்துகளின்போது கைதான பலரைப் பற்றிய தகவலைக்கூட அளிக்க மறுக்கிறது போலீசு. ‘முன்பு கல்லெறிதலில் ஈடுபட்டதற்காக முன்னெச்சரிக்கையுடன் கைது செய்யப்பட்டிருக்கும் சிறுவர்கள், வெளி மாநில சிறைகளுக்கு அனுப்பப்படுவார்கள்’ பகிரங்கமாக அறிவிக்கிறது காவல்துறை.

கைது, ஆறு மாத காலை விசாரணை இல்லாத கட்டாய சிறை ஆகியவை மட்டும்தானா? பிபிசி, வாஷிங்டன் போஸ்ட் போன்ற சர்வதே ஊடகங்கள் இந்திய படைகள் காஷ்மீரிகளை கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாக்குவதாக ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுவருகின்றன.

“அவர்கள் ஓயாமல் மூன்று மணி நேரம் என் பின்புறத்தின் தாக்கினார்கள்; மின்சார அதிர்ச்சி கொடுத்தார்கள். எங்களை கொன்றுவிடுங்கள் என கெஞ்சினோம். அப்போதும் அவர்கள் விடவில்லை. அழுக்கையும், சாக்கடை நீரையும் குடிக்க வைத்தார்கள்” என காஷ்மீரைச் சேர்ந்த பஷீர் அகமது கூறியதாக செய்தி நிறுவனமான ஏபி பதிவு செய்துள்ளது. கிளர்ச்சியாளர்களுடன் அவர்கள் சேர்ந்துவிட்டதாக சந்தேகப்பட்டு அவர்களை இப்படி சித்ரவதை செய்துள்ளது பாதுகாப்புப் படை. இதேபோன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாங்கள் சித்ரவதைக்குள்ளானதை கூறியுள்ளனர்.
.
அதுபோல, கடுமையான பாதுகாப்பையும் மீறி தங்கள் உரிமை பறிப்பை எதிர்த்து வெறும் முழக்கம் எழுப்பி போராடும் மக்கள் மீது பெல்லட் குண்டுகளால் தாக்குவதையும் பாதுகாப்புப் படை செய்துவருகிறது. இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட காரணத்துக்காக அரசியல் செயல்பாட்டாளர் ஷெஹ்லா ரசீது மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றம் சென்ற அவர் கைது நடவடிக்கைக்கு தடை வாங்கியிருக்கிறார்.

தகவல் தொடர்புகள் ஒரு மாதமாக முடக்கப்பட்டிருந்த நிலையில் ஆங்காங்கே மீண்டும் இணைக்கப்பட்ட பிறகு, முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் காஷ்மீர் குறித்து எழுதுவதற்கு தடை செய்துள்ளது அரசாங்கம்.

பிரதமர் தனது சுதந்திர தின உரையில் களிபொங்க கூறிய ‘காஷ்மீரிகளின் பாதுகாப்பு’ மேற்கண்ட நிலையிலேயே உள்ளது. பாதுகாப்பு ஆலோசகர் ஒருபடி மேலே போய், காஷ்மீரிகள் மத்திய அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாக கூறினார். காஷ்மீரிகள் முடிவை வரவேற்கிறார்கள் எனில், ஏன் இத்தனை பாதுகாப்பு? இத்தனை சித்ரவதைகள்? கைதுகள்? இந்திய அரசுக்கு ஆதரவாக இதுநாள்வரை செயல்பட்ட காஷ்மீர் அரசியல்வாதிகள் ஏன் இன்னமும் விடுவிக்கப்படவில்லை? ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவதும், சுதந்திரமாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் முடக்கப்படுவதும் ஏன்?

‘தேசபக்தி’யின் பெயரால் இந்தக் கேள்விகளுக்கான விடையை அளிக்க மறுக்கிறது அரசாங்கம். ‘நாடு பிடிக்கும் போட்டியினென’ வீழ்ந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்தைப் பற்றிய கவலை கொள்ளாமல் பொது சமூகம் ‘காஷ்மீரை பிடித்துவிட்டோம்’ என குதூகலிக்கிறது. பக்கத்துவீட்டுக்காரரின் விருப்பம் இல்லாமல் அடாவடியாக அவருடைய வீட்டை பிடிங்கிக் கொள்வது போன்றது ‘காஷ்மீரை பிடித்துவிட்டோம்’ என குதூகலிப்பது.

காஷ்மீரில் வசிக்கும் பெரும்பான்மை முசுலீம் மக்களால் தங்களுடைய பண்டிகையைக் கூட கொண்டாட முடியவில்லை. பக்ரீத்தில் தொடங்கிய அதிர்ச்சி, மிலாது நபி வரை தொடர்ந்தது. இந்திய அரசியலமைப்பு வழிபடுதலை அடிப்பை உரிமை என்கிறது. அதையும்கூட பறித்துக்கொண்டு தொழுகைக்காக கூடுவதையும் குற்றம் என்கிறது மத்திய அரசாங்கத்தின் கெடுபிடி.

இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது உறுதியளிக்கப்பட்ட அரசியலமைப்பு உரிமையை மீறி எதேச்சதிகாரமாக நடந்துகொண்டிருக்கும் மத்திய அரசாங்கள் கிட்டத்தட்ட அனைத்து உரிமைகளையும் முடக்கி வைத்துள்ளது. ‘காஷ்மீரிகளுக்கு விடுதலை’ என்ற பெயரில் காஷ்மீரை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கடுமையாக எழுதுகிறார்கள். சமீப ஆண்டுகளில் இல்லாத இத்தகைய கடுமையான முடக்கம் இன்னும் 20 -25 நாட்களுக்கு தொடரும் என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

விஜயகாந்த் படங்களில் வருவதுபோல, காஷ்மீரிகள் தீவிரவாதிகளும் அல்ல, இந்தியர்கள் அவர்களை ஒழிக்க வந்த ஆபத்பாந்தவர்களும் அல்ல. பொதுபுத்தியில் உருவாகியிருக்கும் இத்தகைய கருத்துக்கள் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். காஷ்மீரிகள் தங்கள் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களுடைய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.

இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் காஷ்மீர் விவகாரம் குறித்து இந்திய மக்கள் என்ன எதிர்வினை ஆற்றுகிறார்களோ அதைப் பொருத்துதான் அமையும் என பத்திரிகையாளர் ஜோ அதிலே கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார். அரசியலமைப்பு கொடுத்த உறுதி மீறப்படுகிறது எனில் அங்கே ஜனநாயகமும் சோதனைக்குள்ளாவதாகத்தான் பொருள். காஷ்மீரிகள் போராட்டத்தோடு வாழ்பவர்கள். அவர்கள் ஒடுக்குமுறையை 70 ஆண்டுகாலம் எதிர்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆழ்ந்த அமைதி நிலவுகிறதென்றால், அங்கே பெருவெடிப்பு காத்திருக்கிறது என்பது மற்றொரு பொருள்.

அனைத்துக்கும் மேலாக, பொது சமூகமாகிய நாம் ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படும்போது மவுனம் காத்தால், நமது அடிப்படை உரிமைகளையும் இழந்து குரலற்றவர்களாகிவிடுவோம். பெரும்பான்மைவாதத்துக்கு ஜனநாயக நெறிமுறைகள் மட்டும் வேண்டாதவையல்ல, அடிப்படை உரிமைகளை கேட்கும் குரல்களும் வேண்டாதவைதான்.

தினச்செய்தி (13-09-2019) நாளிதழில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை.