’பல லட்சம் கோடி முறைகேடு நடைபெற்ற மற்ற மாவட்டங்களிலும் சகாயம் விசாரிக்க வேண்டும்’

சென்னை உயர்நீதிமன்ற அமர்வு 2014-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் நாள் உத்திரவிட்டதன் அடிப்படையில் சகாயம் ஆய்வுக்குழுவினர் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகளை பற்றி 03-12-2014 முதல் முழுமையாக ஆய்வு செய்து 7 ஆயிரம் பக்க ஆவணங்கள், 600 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

சகாயம் ஆய்வுக்குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும், 32- மாவட்டத்திலும் நடைபெற்று உள்ள அனைத்து கனிமவள முறைகேடுகளையும் சகாயம் ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க உதவும் வகையிலும் கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க தமிழக ஒருங்கிணைப்பு குழுவினர் சில தீர்மானங்களை இயற்றியுள்ளனர். இதன் ஒருங்கிணைப்பாளரான முகிலன் இது பற்றிப் பேசினார்.

“தமிழக அரசு பல்வேறு முறையில் சகாயம் ஆய்வுக் குழுவிற்கு முழுக்க முழுக்க ஒத்துழைக்காமலும், பல்வேறு நெருக்கடிகளும் கொடுத்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் அணுகியே தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற்று ஆய்வுப் பணியை மேற்கொண்டனர் சகாயம் ஆய்வுக்குழுவினர். எதற்கும் அஞ்சாமல் உறுதியாக நின்று, மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகளை பற்றிய ஆய்வுப் பணியை முடித்த சகாயத்துக்கும் அவருடைய குழுவினருக்கும் வாழ்த்துக்களைச் சொல்கிறோம்.

தங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற அபாயகரமான நிலையிலும் கூட, சகாயம் ஆய்வுக்குழுவினரிடம் பல்வேறு உண்மைகளை தெரிவித்த அனைத்து பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோல, மதுரை மாவட்ட சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றவர்,

“சகாயம் ஆய்வுகுழு நீதிமன்றத்தில் தெரிவித்த அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்ட கிரானைட் முறைகேட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உயரதிகாரிகளுக்கும், ஆட்சி செய்தவர்களுக்கும் தொடர்பு இருந்து வருவதால், கனிம முறைகேடுகள் குறித்து விரைந்து விசாரிப்பதற்காக உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும், மேலும் கிரானைட் முறைகேடு குறித்து விரிவான விசாரணைகளை சுயேச்சையாக செயல்படும் நம்பிக்கையான சிறப்பு புலனாய்வு அமைப்பு மூலம் மேற்கொள்ள வேண்டும்” போன்றவற்றை தமிழக அரசு ஏற்றுச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

* இந்த கிரானைட் முறைகேடு பற்றி விசாரணையில் சாட்சி அளித்த மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சகாயம் குழு சொன்ன பரிந்துரையையும் தமிழக அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

* சகாயம் ஆய்வுகுழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள அறிக்கையை மக்களின் பார்வைக்கு தமிழக அரசு வைக்க வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு நியமித்த தாதுமணல் கொள்ளை தொடர்பாக ககன்தீப் சிங் பேடி அறிக்கையை வெளியிடாமல் மறைத்து வைத்தது போல் இதை மறைக்க முயற்சிக்க கூடாது.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு பின்பு சகாயம் அறிக்கையை வெளியே கொடுக்காமல், தமிழக அரசு தானே முன்வந்து இதை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என்று தங்களுடைய குழு தீர்மானமாக இயற்றியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் முகிலன்.

* சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவின் படி பல லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் தமிழகத்தின் 32- மாவட்டத்திலும் நடைபெற்று உள்ள அனைத்து கனிமவள முறைகேடுகளையும் சகாயம் சட்ட ஆணையராக இருந்து விசாரிக்க வேண்டும் என்றும் இந்தக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

கிரானைட் முறைகேட்டை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க சகாயம் பரிந்துரை

sahayam

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரித்து வந்த சகாயம் தலைமையிலான சட்ட ஆணையம் திங்கள்கிழமை தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்தது.

நீதிமன்றம் அளித்த அவகாசத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய முடியாததால், நான்கு முறை கால நீட்டிப்பு அவகாசம் கேட்டது சகாயம் ஆணையம். 11 மாத விசாரணைக்குப் பிறகு அறிக்கை தயார் செய்யும் பணியில் சகாயம் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டது. அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்காக, சகாயம் கடந்த ஒரு வாரமாக இரவு முழுவதும் அலுவலகத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கிரானைட் குவாரிகளில் எந்த வகையான முறைகேடுகள் நடந்துள்ளன என்பது தொடர்பாக சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இந்த அறிக்கை சென்னை உயநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா தலைமையிலான அமர்வு முன், சகாயம் ஆணையத்தின் சார்பாக வழக்கறிஞர் சுரேஷ் இந்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

அடுத்து நடக்கப்போவது என்ன?

கிரானைட் முறைகேட்டில் அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு உள்ளதாக சகாயம் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் சுரேஷ் தெரிவித்துள்ளார். சகாயம் ஆணையம் நீதிமன்றத்தில் சில பரிந்துரைகள் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

* கிரானைட் முறைகேடு குறித்து தகவல் தந்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.
* முறைகேடு நடக்காமல் தடுக்க லஞ்ச ஒழிப்பு துறையை வெளிப்படுத்த வேண்டும்.
* சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும்.

அறிக்கை தாக்க செய்ய நீதிமன்றம் வந்திருந்த சகாயம், “விசாரணை வெற்றிகரமாக முடிந்தது. ஊடகங்களுக்கு நன்றி” என்றார்.

 

நரபலி பின்னணி என்ன?

கிரானைட் முறைகேடு விசாரணையில் சகாயம் தலைமையிலான சட்ட ஆணையம், பிஆர்பி நிறுவனத்தால் நரபலி கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் கீழவளவு கிராமத்தில் ஒரு குழந்தை உள்பட மூவரின் மண்டை ஓடு, எலும்புகளைத் தோண்டி எடுத்தது. கிரானைட் முறைகேட்டில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ள இந்த நரபலி விவகாரத்தில் 175க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார் சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த முகிலன். இதுகுறித்து அவர் இப்போது.காமுக்கு அளித்த நேர்காணல்…