வலைத்தளங்களில் வளரும் தீவிரவாதம்

நாட்டில் நிலவும் சகிப்பின்மையை சுட்டிக்காட்டி தங்களுடைய விருதுகளையும் அரசு பட்டங்களையும் துறந்தனர் பல அறிவுஜீவிகள். இது நாட்டை கேவலப்படுத்துவதாகவும் நாட்டில் சகிப்புத்தன்மைக்கு எந்த குந்தகமும் நிலவவில்லை என்று கூறி பாலிவுட் நடிகர் அனுபம் கேர் தலைமையில் சிலர் அரசுக்கு ஆதரவாகப் பேரணி கடந்த சனிக்கிழமை நடத்தினர். இந்தப் பேரணி பற்றிய செய்தி சேகரிக்க NDTV தொலைக்காட்சியைச் சேர்ந்த நிருபர் பைரவி சிங்.

பேரணியில் பங்கேற்றிருந்தவர்களிடம் அங்கிருந்த நிருபர்கள் பலர் கேள்விகள் கேட்டனர். பைரவி சிங்கும் அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தார். நாட்டில் சகிப்புத்தன்மை உள்ளதாக பேரணி நடத்தியவர்கள் தாங்கள் கட்டிக்காத்த சகிப்புத்தன்மையை மீறும் வகையில் கடுமையான வார்த்தைகளால் பைரவி சிங்கை திட்டித் தீர்த்தனர்.

இந்தத் தாக்குதல் குறித்து டெல்லி முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். பைரவி சிங்கை தைரியமான பத்திரிகையாளர் என்று பாராட்டவும் செய்திருந்தார். இந்தப் பேரணியை முன்நின்று நடத்திய அனுபம் கேர் இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்புக் கேட்டார்.

இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் முடிந்த நிலையில் தன்னைப் பற்றி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து அவதூறுகளை இவர்கள் செய்து வருவதாக தெரிவித்துள்ளார் பைரவி. இதுகுறித்து தனது வலைத்தள பதிவில் விரிவாக எழுதியிருக்கிறார்…

“ஆர் எஸ் எஸ் அமைப்பின் கலாச்சார பிரிவு ஏற்பாடு செய்திருந்த சகிப்புதன்மைக்கு ஆதரவான அந்த பேரணியை அனுபம் கேர் தலைமை ஏற்று நடத்தினார். கொடும் கனவாக மாறிய அந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் முடிந்திருக்கிறது. ஆனாலும் என்மீது வசைமாரி பொழிவது நின்றபாடில்லை.

நான் ‘தலால்’(அன்பு நிறைந்த பெண் என்று பொருள்), காசுக்கு வாங்கும் பத்திரிகையாளர், பாலியல் தொழில் செய்பவர், சாஸ் பகு ஹீரோயின்(பிரபல ஹிந்தி சீரியல் மாமியார் மருமகள் பற்றிய கதை), அவளை பாகிஸ்தானுக்குக் கடத்தி தலையை வெட்ட வேண்டும்,ட்விட்டரில் ஃபாலோயர்களை அதிகப்படுத்த நாடகம் போடுகிறார்…இப்படி இன்னும் நிறைய பேசிவருகிறார்கள்.

மாற்றுக் கருத்துக்களை சொல்வதிலும், அதை வலியுறுத்தி பேரணி நடத்துவதிலும் என்னைப் பொறுத்தவரை எந்தத் தவறும் இல்லை. அவரவர் கருத்துக்களை சொல்வதில் அனைவருக்கும் உரிமை உள்ளது. எனக்கு நடந்தவைகளுக்கு பேரணியை ஏற்பாடு செய்திருந்தவர்களும் அதை வழிநடத்தியவரும் பொறுப்பாக முடியாது.

பேரணியை நோக்கி நான் செய்தி சேகரிக்க சென்று கொண்டிருந்தேன். நிறைய பேர் அங்கே குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள், குடும்பங்கள் எனப் பலர். என் அம்மாவின் வயதை ஒத்த ஒரு பெண் என் அருகே வந்து, “கட்சி சேனல் நடத்தி காசு வாங்கும் பத்திரிகையாளர் இங்கே வரக்கூடாது. இங்கே நிற்காதே ஓடிப் போய்விடு. இன்னொரு வேலையைத் தேடிக்கொள், உன் வேலை போகப்போகிறது” என்று என்னைப் பார்த்து கத்தினார். நான் பொறுமையாக இருக்கும்படி கூறினேன். சில நிமிடங்களில் ஒளிப்பதிவு செய்துவிட்டு கிளம்பிடுவோம் என்று கூறினேன்.

ஆனால், அதற்கு அவர்கள் வாய்ப்பளிக்கவே இல்லை. என்னை சூழ்ந்துகொண்டு ஆளாளுக்குப் பேச ஆரம்பித்தார்கள். என்னைக் கடந்து போன ஒருவர், என்னை விபச்சாரி என்று சொல்லிவிட்டுப் போனார். இப்படி பேசிய அவர் கூட்டத்துக்குள் நுழைந்துகொண்டார். நான் வெளியே வரும்படி கூறினேன். கூட்டம் என்னை மொய்க்க ஆரம்பித்தது. என் கைகள் உதறல் எடுத்தன. முதலில் பேசினாரே அந்தப் பெண், நான் பொய் சொல்கிறேன் என கூச்சலிட ஆரம்பித்தார். என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

என்னுடைய நிலைமையை மற்ற ஊடகக் காரர்கள் படம்பிடிக்க விடவேண்டாம் என்று என்னுடைய ஒளிப்பதிவாளரை கேட்டுக் கொண்டேன். ஆனால் அது தவறு என்பதை இப்போதுவரை உணர்கிறேன். என்னுடைய தனிப்பட்ட விவகாரம் ஊடகங்களில் வரவேண்டாம் என்பதற்காகவே அதைச் செய்தோம். ஆனால் நான் கடுமையாக தாக்கப்பட்டதை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.

என்னுடைய இறுதியான வாதமெல்லாம் இதுதான்…நான் சொல்வதை நீங்கள் மறுக்கலாம். அதுவே பாதுகாப்பாக சமூக வலைத்தளங்களில் ஒளிந்துகொண்டு என்னைத் தாக்குவதற்கும் வீராவேசம் பேசுவதற்கும் மிரட்டுவதற்கும் உரிமமாகிவிடாது”

கடந்த செவ்வாய்கிழமை திப்பு சுல்தான் பிறந்த நாளை, அரசு விழாவாகக் கொண்டாடியது கர்நாடக அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து சேனா உள்ளிட்ட அமைப்புகள் பேரணி நடத்தின. இந்தப் பேரணி நடந்த கல்வீச்சு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இந்து அமைப்புகள் தேவையில்லாமல் சர்ச்சையில் ஈடுபடுகின்றன என்று மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். திப்பு சுல்தான் சுதந்திரப் போராட்டத்தை துவக்கிவைத்த மாவீரன் என்றும் அவர் புகழாரம் சூட்டியிருந்தார். திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவில் பேசிய நாடகாசிரியரும் நடிகருமான கிரீஷ் கர்னாட்,

“திப்பு சுல்தான் மட்டும் இந்துவாக இருந்திருந்தால் மாவீரன் சிவாஜிக்கு இணையாகப் போற்றப்பட்டிருப்பார். மகாராஷ்டிராவின் மும்பை விமான நிலையத்துக்கு சிவாஜியின் பெயர் சூட்டப்படுகிறது. கொல்கத்தா விமான நிலையத்துக்கு நேதாஜியின் பெயர் சூட்டப்படுகிறது. அதுபோல பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு திப்பு சுல்தான் பெயர் சூட்டப்பட வேண்டும். கெம்பேகவுடா பெங்களூரு நகரத்தை நிர்மாணித்தவர் என்றாலும் அவர் சுதந்திர போராட்ட வீரர் அல்ல” என்று தெரிவித்திருந்தார்.

கெம்பேகவுடா பெயரை எப்படி மாற்றச் சொல்லலாம் என்று கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கெம்பேகவுடாவை அவமதிப்பது இந்துக்களையும் அவர் சார்ந்த ஒக்கலிகா சாதியினரையும் அவமதிப்பதாகும் என்று சில அமைப்பினர் கிரீஷ்ஷுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தன்னுடைய கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்பதாக கிரீஷ் புதன்கிழமை தெரிவித்தார்.

இந்நிலையில், ட்விட்டர் பதிவு மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கிரீஷ் தெரிவித்துள்ளார். அதில் கெம்பேகவுடாவை அவமதிக்கும் வகையில் பேசினால் கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்டதுபோல நீங்களும் சுடப்படுவீர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்தப் பதிவு நீக்கப்பட்டது.

இந்து சமய நடைமுறைகளை விமர்சித்தற்காக பேராசிரியரும் எழுத்தாளருமான கல்புர்கி கடந்த ஆகஸ்ட் மாதம் சுடப்பட்டார். நாடு முழுவது கண்டனங்களை எழுப்பிய இந்தப் படுகொலையை அடுத்து எழுத்தாளர்கள் இந்து அமைப்பினரின் மதவாத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுகளை திரும்ப அளித்தனர்.