இந்த மல்லியின் பெயர் என்ன?

DSCN0928

சிறு செடியாக

ஆறு மாதங்களுக்கு முன் இந்த காக்கடாம் பூ செடியை வாங்கினேன். தற்போது புதர்போல வளர்ந்துவிட்டது. சிறுசெடியாக வாங்கியபோதே இரண்டு பூக்கள் பூத்திருந்தன. தற்போது புதர்ச்செடியாக வளர்ந்து நிற்கிறது. கடந்த வார மழைக்குப் பிறகு, நேற்று இது பூ பூத்தது. மொட்டு இளங்சிவப்பு நிறத்திலும் பூ வெண்மையாகவும் இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிறைய இடங்களில் இந்த மலர் சாகுபடி நடக்கிறது. எனக்கு இது பழக்கப்பட்ட பூ, எனக்குத் தெரிந்தவரை இதை காக்கடாம் பூ என்பார்கள். மல்லிகை குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனம் இது. பூக்கும்போது மட்டும் வாசனையாக இருக்கும். அடுத்த நாள் காலை வரையில் வாடாமல் (இது வாடாமல்லி அல்ல, வாடாமல்லி மல்லிகை குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் அல்ல) இருக்கும்.

DSCN0209

வெண்மையான பூ

 

DSCN0211

செடியின் கிளைகள்

 

மேலதிக தகவல்களுக்கு இணையத்தில் தேடினேன். இதன் உயிரியல், தமிழ்ப்பெயர்களை சரியாக அடையாளம் காண முடியவில்லை.

Jasminum multiflorum என்ற அறிவியல் பெயர்தான் இதைக் குறிக்குமா என விவரம் தெரிந்தவர் சொல்லவும். தமிழில் வேறுபெயர்கள் இருக்கிறதா?

வறட்சி பொங்கிவழிகிறது!

சென்ற மாதம் என் பூர்விக கிராமமான தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆதனூருக்குச் சென்றிருந்தேன். தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்துகொண்டிருந்தது. காவிரி  நீர் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் மேட்டூர் அணை நிரம்பி, அதிகப்படியான நீரை திறந்துவிட்டிருப்பதாகவும் அறிந்தேன். காவிரி  அழகு முகமான ஓகேனக்கல்லில் புதுநீர் பாய்ந்தோடியதை தொலைக்காட்சியில் பார்த்தேன். மழை உற்சாக மனநிலையைக் கொடுத்தது. அதே மனநிலையுடன் எங்கள் ஊரும் மழையால் செழித்திருக்கும் என்று கனவுகளோடு சென்றேன். வானம் பார்த்த பூமியான எங்களூர் வறண்டு கிடந்தது. சிறு மழையை நம்பி விதைக்கப்பட்டிருந்த கேழ்வரகு, கம்பு, சோளம்,அவரை, துவரை, எள், காராமணி செடிகள் முளைத்து வளர போதிய தண்ணீர் இல்லாமல் வாடிக்கிடந்தன.

DSCN0136

DSCN0137

DSCN0125

உழுத நிலத்தில் பூச்சி புழுக்களைத் தேடும் தவிட்டுக் குருவிகள்

தமிழக அளவிலான சிறுதானிய உற்பத்தியில் 40% தருமபுரி  மாவட்டத்தில்தான் உற்பத்தியாகிறது. கிணறுகளிலும் நீர் இல்லை. தென்னைமரங்கள் காய்ந்துபோய், பட்டுப்போகும் நிலையில் இருந்தன. காலம்காலமாக இங்கே குடிநீர் பிரச்னை, காலை 6 மணிக்கு பொதுக்குழாயில் வரும் தண்ணீருக்காக, நாலரை, ஐந்து மணிக்கெல்லாம் காலி குடங்களுடன் காத்திருக்கிறார்கள். இந்த பொதுக்குழாய்கூட ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்துதான். அதற்கு முன்பு கையடி பம்புகளில்தான் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நீர் குடிப்பதற்கு ரொம்பவும் உவர்ப்பாக(ஃப்ளோரைடு அதிகம்) இருக்கும்.

நூறாண்டுகாலமாக இந்த மாவட்ட மக்களின் குறைந்தபட்ச குடிநீர் தேவையைக்கூட இதுவரை ஆண்ட அரசாங்கங்களால் நிறைவேற்ற முடியவில்லை. தருமபுரி, கிருஷ்ணகிரி  மாவட்டங்களில் 145 கி.மீ.தொலைவுக்கு 6755 குடும்பங்களின் தண்ணீர் தேவையை தீர்க்கும் வகையில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் இன்னும் முழுமையாக முடிந்தபாடில்லை. திட்டத்தை இன்றைய முதல்வர் ஜெயலலிதா இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கிவைத்தார். தண்ணீரே வராத குழாய்களை எதற்காக அவர் இவ்வளவு அவசரத்துடன் திறந்துவைத்தார் என்று தெரியவில்லை. வறட்சிக்குப் பெயர் போன தருமபுரி மாவட்டத்தில்தான் காவிரி  பொங்கிவழிகிறது!