”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!”

”தெருவுக்கு ஒரு டீக்கடை இருப்பது போல பெண்கள் அமைப்புகளும் இன்று பெருகிவிட்டன. ஆனால், பெண்கள் தினத்தன்று கோலப் போட்டிகளும் சமையல் போட்டிகளுமே கோலாகலமான கொண்டாட்டமாக இருக்கும் அளவுக்குத்தான் சமூகத்தின் ‘பரந்து விரிந்த’ பார்வை இருக்கிறது. ஆண்களுக்குச் சமமான ஊதியமும் வேலையும் தரப்பட வேண்டும் என்பதற்காக கிளாரா ஜெட்கின் தலைமையில் மார்ச்- 8-ல் நடந்த புரட்சியை நினைவுகூரும் தினம்தான் பெண்கள் தினம். ஆனால், அதை தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்தலுக்குரிய தினமாக்கி, பெண்களை இன்னமும் பின்னுக்கு இழுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

33 சதவிகித இடஒதுக்கீட்டைக்கூடப் பெற்றுத் தர முடியாத ஓட்டுக் கட்சிகளால் ஒருபோதும் பெண் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.

பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை
புரட்சி இல்லையேல் பெண் விடுதலை இல்லை!’

இதுதான் எங்களின் முழக்கம். சமூகத்தில் சுரண்டப்பட்டுக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உறைந்துபோயிருக்கும் போர்க் குணத்தைத் தட்டி எழுப்புவதுதான் எங்கள் முதல் பணி. இதன் சாத்திய சதவிகிதத்தை வரும்காலம்தான் தீர்மானிக்கும்!” புரட்சி முழக்கமிடுகிறார்கள் பத்மாவதி, ரீட்டா, கீதா.

நக்ஸலைட்டுகள் என்ற முத்திரையோடு ‘பொடா’ சட்டத்தில் கைதாகி, இரண்டரை வருட சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தவர்கள் ‘புரட்சிகரப் பெண்கள் விடுதலை மையம்’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். அமைப்பின் செயலாளராக இருக்கும் பத்மாவதி அடித்தட்டு பெண்களிடையே அடிப்படைப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

‘எனக்குப் பூர்வீகம் ஆந்திரா. சென்னையில் என் பெரியப்பா வீட்டுக்கு படிப்பதற்காக வந்தேன். பெரியப்பாவுக்கு கம்யூனிஸ சிந்தனைகளில் ஆர்வம். அவரது இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டேன். ஐ.டி.ஐ. படிக்கும்போதிருந்து நேரடியான இயக்கப் போராட்டங்களில் கலந்துகொண்டேன். கம்யூனிஸத்தை, சோஷலிசத்தைச் சொல்கிற இயக்கங்களில்கூட பெண்களுக்குச் சமமான உரிமைகள் கிடைப்பதில்லை. இயக்கத்தில் உள்ளவர்கள் அவரவர்களுடைய வேலையை அவரவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஆண்கள் மட்டும் ஆணாதிக்கச் சிந்தனையில் இருந்து விடுபடாதவர்களாக புலம்பலோடுதான் அவர்களுடைய வேலைகளைச் செய்வார்கள். செயல்பட வேண்டிய தளங்களிலேயே மாற்றம் தேவை என்று சிந்தித்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான் நக்ஸலைட்கள் என்ற நற்சான்றிதழ்!

பொடா சட்டத்தின் அகோர வெறியை அத்தனை நெருக்கத்தில் எதிர்கொண்டது தகிக்க முடியாததாக இருந்தது. சிறையில் இருந்த காலங்களிலும் எங்கள் சிந்தனையை மழுங்கவிடாமல் இருந்ததன் விளைவாகத்தான் பெண்களுக்காகப் போராடும் இந்த அமைப்பை உருவாக்கினோம்” என்கிறார் பத்மாவதி.

கணவருடைய கம்யூனிஸ சிந்தனையில் ஈர்க்கப்பட்டு இயக்கச் செயல்பாடுகளில் இணைந்தவர் வாழப்பாடியைச் சேர்ந்த ரீட்டா. திருமணமான சில மாதங்களிலேயே பொடா வாசம்!

”கைதாகிச் சிறைக்குப் போன பல மாதங்களுக்குப் பிறகுதான் நாங்கள் ஏன் கைது செய்யப்பட்டோம் என்ற விவரத்தையே எங்களுக்குத் தெரியப்படுத்தினார். எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் சிறை நல்லதொரு ஆசான். அது எங்களுக்குப் பல விஷயங்களைக்கற்றுக் கொடுத்தது. தளராத தன்னம்பிக்கையையும், உலராத ஊக்கத்தையும் எங்களுக்குள் ஊட்டின பொடா நாட்கள்!” என்கிறார் ரீட்டா.

சேலத்தைச் சேர்ந்த கீதாவும் தன் கணவர் மூலம் இயக்கத்தில் இணைந்தவர். ”தலித் என்பதால் தனிக் கோப்பையில் தேநீர் வழங்கியவர்களிடம் சின்ன வயதிலேயே நான் சண்டைக்குப் போனதுண்டு. கலப்புத் திருமணம் செய்துகொள்வதை லட்சியமாகவே வைத்திருந்து, அப்படியே செய்தும் காட்டினேன். எனக்குப் போராடும் துணிவு இருந்தது. போராடினேன். போராடிக்கொண்டு இருக்கிறேன். துணிவு இருந்தும் அறியாமையில் தவிக்கும் பெண்களை விழிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் இப்போதைய லட்சியம்!” எனும் கீதா, இரண்டு குழந்தைகளுக்குத் தாய்.

”பெண்களின் சமூகச் சமத்துவத்துக்காகப் போராட வந்த எங்களுக்குப் பெண்களின் உரிமைகளை மீட்டுத் தருவது முதன்மையான விஷயமாகப்பட்டது. அதை உரக்கச் சொல்லத்தான் பெண்கள் தினத்தில் புரட்சிப் பாடகர் கத்தார் தலைமையில் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். ஒன்றுமே இல்லாத விஷயத்துக்காகப் பத்திரிகை அலுவலகத்தைக் கொளுத்தியவர்களால் கெட்டுப் போகாத சட்டம் – ஒழுங்கு எங்களால் கெட்டுப்போய்விடும் எனப் பயந்து, பொதுக் கூட்டத்துக்குத் தடை விதித்தது தமிழக அரசு.

ஆணாதிக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலே, ‘நாங்கள் ஆண்களுக்கு எதிரானவர்கள்’ என்று குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் பெண்ணியவாதிகளும் அல்ல, ஆண்களுக்கு எதிரானவர்களும் அல்ல, நாங்கள் கோருவது எல்லாம் ஆண்களுக்குச் சமமான வாழ்க்கையை, சுதந்திரத்தை. அதை முன்னெடுக்கத்தான் தோழர்களாகிய ஆண்களையும் துணைக்கு அழைக்கிறோம்!” – ஒரே குரலில் முழங்குகிறார்கள் மூவரும்!

ஆனந்த விகடன் 01-10-08 இதழில் நான் எழுதி வெளியானது