“கருத்து வேற்றுமைகளை துப்பாக்கி குண்டுகள் தீர்க்காது”

நீண்ட மவுனம் என்கிற தன்னுடைய படைப்புக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர் கர்நாடகாவைச் சேர்ந்த சசி தேஷ்பாண்டே. சாகித்ய அகாடமியின் பொதுக் குழு உறுப்பினரான இவர், பேராசிரியரும் எழுத்தாளருமான எம். எம். கல்புர்கி கொலையைக் கண்டிக்காமல் சாகித்ய அகாடமி மவுனம் காக்கிறது என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து சாகித்ய அகாடமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “2012-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு என்னை பரிந்துரைத்தபோது, நான் சிறப்பிக்கப்பட்டதாக உணர்ந்தேன். சாகித்ய அகாடமியின் பணியை நான் எப்போதும் மதித்து வந்திருக்கிறேன். இந்தியாவின் பல்வேறு மொழிகளை நிறுவனமாக ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்த பெருமை உடையது அகாடமி.

இன்று, பேராசிரியர் கல்புர்கியின் கொலையில் அகாடமி தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதைக் கண்டு நான் துவண்டுபோயிருக்கிறேன். கல்புர்கி,சாகித்ய அகாடமி விருது வென்றவர். அவர் இறப்பதற்கு சில காலம் முன்புவரைகூட அகாடமியின் பொதுக்குழுவில் இருந்தவர்.

இந்தியாவின் முதன்மை இலக்கிய அமைப்பாக இருக்கும் சாகித்ய அகாடமி, ஒரு எழுத்தாளரின் படுகொலையைக் கண்டிக்காமல் இருப்பது நல்லதல்ல. தன் அமைப்பைச் சேர்ந்தவரின் மரணத்தில் காக்கும் மவுனம், தேசம் முழுவதும் பரவிவரும் சகிப்பின்மையை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?

கருத்துவேற்றுமைகளை துப்பாக்கி குண்டுகளால் தீர்க்க முடியாது. நாகரிக சமூகம், கருத்து வேற்றுமைகளை பேசியும் விவாதித்துமே தீர்த்துக்கொள்ளும். எழுத்தாளர்கள் அறிவுஜீவிகளாக இனி கருதப்படுவதற்கு வாய்ப்பில்லை, அவர்கள் மக்களின் மனசாட்சியாக இருக்க வேண்டும். உண்மையில் எழுத்தாளர்கள் தங்களுடைய குரல்களை உயர்த்திப் பிடிக்க இதுதான் தருணம். ஆனால் இத்தகைய குரல்கள் தனியாக ஒலிப்பதைவிட குழுவாக ஒலிப்பது பலனைத் தரும். எழுத்தாளர்களின் ஒருமித்த குரல்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக சாகித்ய அகாடமி உள்ளது.

ஆனால், அதை அகாடமி செய்யத் தவறியிருக்கிறது. அவநம்பிக்கைக் காரணமாக நான் பதவியிலிருந்து விலகுகிறேன். கூட்டங்களை நடத்துவது, விருதுகளைத் தருவது மட்டும் அகாடமியின் பணியல்ல. எழுத்தாளர்களின் எழுத்து, பேச்சு சுதந்திரம் பாதிப்புக்குள்ளாகும்போது அதற்காக எழுந்துநிற்பதும் அகாடமியின் பணியே” எனத் தெரிவித்துள்ளார்.