கருத்து கணிப்புகள் நம்பக்கூடியவையா?

தேர்தல் காலத்தில் கருத்து கணிப்புகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்துள்ளன. தங்களுக்கு சாதகமாக இருந்தால் கொண்டாடுவதும், எதிராக இருந்தால் வெளியிட்ட ஊடகங்கள் மீது சேற்றை வாரிப் பூசுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. கருத்து கணிப்புகள் நடைபெற இருக்கும் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை செலுத்தப் போகின்றன? கருத்து கணிப்புகள் மெய்யாகின்றனவா? என்பதை பேசும் முன் கருத்து கணிப்பு குறித்து இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றின் சமீபத்திய அனுபவத்தைப் பார்ப்போம்.
“உலகளாவிய அளவில் கருத்து கணிப்புகள் பொய்த்து வருகின்றன. கிரீஸ், துருக்கி, பிரிட்டன் என சமீபத்தில் தேர்தல் நடந்த நாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் தவறாகியிருக்கின்றன. கருத்து கணிப்பும் தேர்தல் முடிவும் தொடர்பில்லாமல் வந்திருக்கிறது. நாங்கள் செய்த கருத்து கணிப்பும் இப்படியான எதிர் முடிவை எட்டியிருக்கிறது. அதற்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம்” என்று அறிவித்தார் இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர்.
அவர் வேறு யாருமல்ல, என் டி டீவியின் பிரணாய் ராய். அவர் மன்னிப்புக் கேட்டது, சென்ற ஆண்டு நடந்த பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் கருத்து கணிப்பும் முடிவும் முற்றிலும் வேறாக இருந்தது என்ற காரணத்துக்காக.
பீகார் தேர்தல் மட்டுமல்ல, கடந்த மக்களவைத் தேர்தல் கருத்து கணிப்புகளும் கூட முடிவுகளுடன் ஒப்பிடும் போது முரண்பட்டவையாகவே இருந்தன.  பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் சொல்லவில்லை. பாஜகவை தீவிரமாக ஆதரித்த ஒரு சில ஊடகங்களும் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்றுதான் கூறின.
இந்தப் பின்னணியில்தான் நாம் வரவிருக்கிற தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் கணிப்புகளையும் பார்க்க வேண்டும். சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி, மூன்று செய்தித் தொலைக்காட்சிகளும் அரசியல் வார இதழ்களும் சில ஊடக அமைப்புகளும் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒருவகையில் மாறுபடுகின்றன. எல்லா கருத்து கணிப்புகளுக்கும் உள்நோக்கம் இருக்கிறது என குற்றம்சாட்ட முடியாது. அதேவகையில் எல்லா கருத்து கணிப்புகளும் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்றும் சொல்லிவிட முடியாது.
கருத்து கணிப்புகளை வெளியிடும் நபர்களின் நிறுவனங்களின் பின்னணிகளை மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே, உண்மையில்லாத ஒன்றைச் சொன்னால், எளிதாக அவற்றை மக்கள் நிராகரித்துவிடுவார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மக்களின் நம்பகத்தன்மையை இழப்பார்கள்.
கருத்து கணிப்புகளை வெளியிடுபவர்களின் பின்னணி வெளிப்பட்டாலும் கருத்து கணிப்புகள் என்பவை எதன் அடிப்படையில், எத்தகைய அறிவியல்பூர்வமான நடைமுறைகளில் எடுக்கப்படுகின்றன? கோடிக்கணக்கான வாக்காளர்களின் பிரதிபலிப்புகளாக எப்படி 5 ஆயிரம் பேர் இருப்பார்கள்? எப்போதோ எழுதி வைத்த ஜோதிட கட்டங்களைப் பார்த்து, இன்று பிறந்த குழந்தையின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று சொல்வதுபோலத்தான், இந்தக் கருத்து கணிப்புகளும். உங்கள் மகள் ஐடி படித்து அமெரிக்க போவாள் என்று சொன்ன ஜோதிடத்தை நம்பி ஐடி படிக்க அனுப்பப்பட்ட எத்தனை பேருக்கு குறைந்தபட்சம் உள்நாட்டிலாவது வேலை கிடைத்தது? அதுபோலத்தான் தேர்தல் கருத்து கணிப்புகளும். ஒரு வேளை நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம்.
தேர்தல் முடியும்வரை ஊடகங்கள் தேர்தல் கால சுவாரஸ்யமாக கருத்து கணிப்புகளை வெளியிடும், அவற்றின் சாதக பாதகங்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ளும் கட்சிகள் கூடுதலாக உழைத்தால் வெற்றிக்கனியைப் பறிப்பார்கள். இதில் மக்களுக்கான பயன், நல்ல பொழுதுபோக்கு என்பது மட்டும்தான்!

கொள்கையே இல்லாமல் ஆட்சிக் கனவு!

பதின் பருவத்தில் கல்யாண ஆசை வருவதுபோல, தேர்தல் காலத்தில் பலருக்கு கட்சி ஆரம்பித்து, ஆட்சியைப் பிடிக்கும் ஆசை வந்துவிடுகிறது. நேர்மையான அதிகாரி என பெயரெடுத்த சகாயத்தை அரசியலுக்கு வரவேண்டும் என பலர் இயக்கம் நடத்தினார்கள், பேரணி நடத்தினார்கள். அவர் தெளிந்தவர் என்பதால் ஒதுங்கிக் கொண்டார். ஆனால் சகாயத்துக்குக் கிடைத்த முகநூல் இளைஞர்களின் ஆதரவைப் பார்த்து,  தனக்கு முகநூலில் இருக்கும் 30 ஆயிரம் ஃபாலோயர்களைப் பார்த்து நாமும் தலைவனாகிவிடலாம் என களமிறங்கியிருக்கிறார் அப்துல்காலமின் தனி ஆலோசகர் பொன்ராஜ். இவர் ஆரம்பித்திருக்கும் கட்சியின் பெயர் ‘அப்துல் கலாம் இலட்சிய இந்திய கட்சி’!

அப்துல்கலாமின் 2020 என்ற கனவை நனவாக்கவும் தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள குப்பை அரசியலை தூய்மையாக்கும் அரசியலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கிறார் பொன்ராஜ். மேலோட்டமாக பொதுமக்களுக்கு இருக்கும் அரசியல் கட்சிகள் மீதான வெறுப்பு, இன்னொருவருக்கு வெற்றியை பெற்று தந்துவிடும் என்ற அதே மேலோட்டமான கணிப்பில் பொன்ராஜ் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

இந்திய கட்சிகளின் வரலாற்றை எடுத்துப் பார்த்தோமேயானால் எந்தக் கட்சி வெகுமக்களின் உணர்வுகளுடன் ஒத்திசைந்து இயங்கியிருக்கிறதோ, அந்தக் கட்சிகளே நிலைத்து நின்றிருக்கின்றன. மக்களுக்கான சமூகப் போராட்டங்களை, தேசத்தின் விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்த கட்சிகளே மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கின்றன. இன்று மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் பாஜக, அதற்காக 30 ஆண்டுகள் ‘உழைக்க’ வேண்டியிருந்தது.

தமிழகத்தில் திமுக தனக்கான இடத்தைப் பிடிக்க எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்தது; ஆண்டுகள் பலவற்றை விலையாகக் கொடுத்தது. டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மியின் சமீபத்திய உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசில் ஊழல் முறைகேடு ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருந்த சமயத்தில் தொண்டு நிறுவனம் வைத்து நடத்திக்கொண்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் காந்தியவாதி அன்னா அசாரே, மனித உரிமை செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் போன்றோருடன் இணைந்து மாபெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார். அந்தப் போராட்டத்துக்கு ஊழலால் மனம் வெதும்பியிருந்த மக்கள் ஆதரவு அவரை அடுத்த கட்டம் நோக்கி யோசிக்க வைத்தது.

ஊழலற்ற அரசாங்கம் என்ற கோரிக்கை அவர்களை டெல்லியில் ஆட்சியில் அமர்த்தியது. வெறுமனே இந்த ஒரு கோஷத்தை வைத்து மட்டும் அவர்கள் ஆட்சி அமைக்கவில்லை. தொண்டர்களை ஒருங்கிணைத்து மக்களின் குறைகளை வீடுவீடாகச் சென்று கேட்டார்கள். ஃபேண்டஸியான திட்டங்களை முன்வைக்காமல், எதைச் செய்ய முடியுமோ அதைச் சொன்னார்கள். அவர்களுக்குப் பலன் கிடைத்தது. மேலும் டெல்லி என்கிற சிறிய மாநிலத்தில், யூனியன் பிரதேசத்தில் அவர்களால் மக்களிடம் குறைந்த காலத்தில் (இரண்டாண்டுக்கும் குறைவில்லாத) செல்ல முடிந்தது.

ஆனால், இங்கே தேர்தல் வர இன்னும் இரண்டே மாதங்கள் உள்ள நிலையில் கட்சி ஆரம்பிக்கிறோம்; ஜெயிக்கிறோம்; ஆட்சியைப் பிடிக்கிறோம் என்று சொல்வது நல்ல நகைச்சுவை துணுக்காகத்தான் இருக்க முடியும்! தன்னுடைய தனிப்பட்ட பதவியால் கிடைக்கும் ஒரு சிறு பகுதி மக்களின் ஆதரவை வைத்து ஒரு தொகுதியில் டெபாசிட் கூட வாங்க முடியாது என இவர்கள் உணர வேண்டும்.

விளம்பர நடிகர்களை நடிக்க வைத்து தெரிந்த வேட்பாளர் நமக்குள் ஒருவர் என்ற முழக்கத்துடன் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று அடிக்கடி தொலைக்காட்சிகளில் வருகிறது. யார் இந்தக் கட்சியின் தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர், இத்தனை பகட்டான, செலவு பிடிக்கும் விளம்பரம் வருவதன் பின்னணி எதையுமே தெரிவிக்காமல் விளம்பரம் மட்டும் வந்துகொண்டே இருக்கிறது. இவர்கள் எந்த அடிப்படையில் மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறார்கள்? வெறுமனே சமூக வலைத்தளங்களில் தற்போதைய அரசியல் கட்சிகளை கேலி செய்து ஸ்டேடஸ் போடும் இளைஞர்கள் எல்லாம் தங்களுக்கு வாக்களித்து விடுவார்கள் என்பதுதான் இவர்களுடைய நினைப்பா?

மக்கள், இன்றைய அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் மீது வெறுப்புடன் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அந்த வெறுப்பு இவர்களுக்கு சாதகமாக மாறிவிடும் என்று நினைத்து இன்று கட்சி, நாளை ஆட்சி என கனவு இவர்கள் கனவு காண்கிறார்கள். உண்மையில் இது போன்ற கொள்கையற்ற ‘திடீர்’ கட்சிகளைப் பார்த்தால் நிச்சயம் மக்களுக்கு இன்னும் வெறுப்பு கூடுமே தவிர, இவர்கள் மேல் எள்ளளவும் நம்பிக்கை வராது.

மக்களுக்கு நல்லது செய்ய விரும்பு நல்ல நோக்கம் உள்ளவர்கள் குறுகிய காலத்திலேயே ஆட்சியை பிடித்துவிட முடியாது. அதற்காக உழைக்க வேண்டும்; திராவிட கட்சிகளின் 40 ஆண்டுகால அரசியலை மக்கள் மனதில் இருந்து அகற்றி அந்த இடத்தில் அமர, வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். மற்றபடி, உங்களின் அற்ப ஆசைகளுக்காக மக்களின் வெறுப்புணர்வை கிளறிப் பார்ப்பது, உங்களுக்குத்தான் இழப்பைக் கொடுக்கும்.

தினச்செய்தி நாளிதழில் வெளியானது

தேர்தல் நேர காளான்கள்!

அனைத்திந்திய எம் ஜி ஆர் கட்சி, அனைத்திந்திய திராவிடர் சமத்துவ கழகம், அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம், அனைத்து மக்கள் முன்னேற்ற கழகம், அன்பு உதயம்  கட்சி, அப்பாம்மா மக்கள் கழகம், பாரத சமத்துவ மக்கள் கழகம், பாரத மக்கள் காங்கிரஸ், பாரதிய திராவிட மக்கள் கட்சி, பாரதிய டெமாக்ரடிக் தள், தேச மக்கள் முன்னேற்ற கழகம்…
இப்படி ஆங்கில எழுத்து ஏயில் ஆரம்பித்து இஸட் வரை நாம் கேள்விப்படாத புது புது பெயர்களைத் தாங்கிக் கொண்டிருக்கும்  180க்கும் மேற்பட்ட கட்சிகள் இப்போதை(2014ன் படி)க்கு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொண்டுள்ள கட்சிகள், ஆணையத்தின் அங்கீகாரத்துக்கு காத்திருக்கும் கட்சிகள்.

மதத்தின் பெயரால் தொடங்கப்பட்ட கட்சிகள், சாதியை பெயரில் தாங்கியிருக்கும் கட்சிகள், கொள்கைகளை பெயராக கொண்ட கட்சிகள், கொள்கைகளே இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் என தேர்தல் நேரத்தில், மழை நேர காளான்களைப் போல கட்சிகள் புதிதுபுதிதாக முளைக்க ஆரம்பிக்கின்றன.

குறிப்பிட்ட பகுதியில் பிரபலமாக இருப்பவர், சாதித் தலைவர்கள், பொருளாதார செல்வாக்கு இருக்கிறவர் இதில் எதுமே இல்லையென்றால் எனக்கு பத்து பேரைத் தெரியும் என்பவர்கூட ஒரு பெயரை வைத்துக்கொண்டு கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட முடியும். ஆனால், ஆங்கீகாரம் பெறுவது அவ்வளவு எளிதானதல்ல.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டுமானால் சில பல சட்ட திட்டங்கள் உண்டு. அதில் ஒன்று முந்தைய தேர்தல்களில் கட்சி 6% வாக்குகளையாவது பெற்றிருக்க வேண்டும். நீண்ட திட்டத்துடன் அரசியலில் களம் இறங்கிறவர்களுக்குத்தான் இந்தக் கவலை. காளான்கள் இதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். பெரும்பாலான காளான் கட்சிகளின் நோக்கம் குறுகியது.

அதாவது ‘எங்களிடம் இத்தனை ஆதரவாளர்கள் இருக்கிறார்கள், அவை எல்லாம் ஓட்டுகள் ’என்று பெரிய கட்சிகளிடம் பணம் பறிப்பது அல்லது அதிகாரத்தின் நிழலில் ஒதுங்கிக் கொள்ளும் நோக்கத்தில் தான்  இவர்கள் கட்சி தொடங்குகிறார்கள். அணு உலை எதிர்ப்பு போராளி சுப. உதயகுமாரன் தொடங்கியிருக்கும் பச்சைத் தமிழகம் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் கட்சி. ஆனால், இவர் போன்றோரைப் பொருத்தவரை வெகுமக்களின் ஆதரவு பெற முடியுமா என்பதே பிரச்சினை. எந்தவொரு கட்சியும் ஆரம்பிக்கப்படும் போது சிறிய அளவிலான வெற்றிகளையே பெருகிறது. தாக்குப் பிடிக்கும் திறன், அரசியல் செய்யும் பாங்கு இவற்றின் அடிப்படையில்தான் அது முன்னோக்கிச் செல்ல முடியும்.

திராவிட கட்சிகளின் எழுச்சி, காங்கிரஸின் வீழ்ச்சியில் ஆரம்பித்தது. திராவிட கட்சிகளின் வீழ்ச்சிக்கான காலம் நெருங்கிவிட்டது; மக்கள் புதிய அலை கட்சிக்காக ஏங்குகிறார்கள் என சில அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். திராவிட கட்சிகள் சரிவை சந்தித்திருப்பது உண்மைதான். ஆனால் அதுவும் சித்தாந்த அடிப்படையில். இந்த இரண்டு கட்சிகளையும் திட்டிக்கொண்டே, ரெண்டில் ஒன்றைத் தொடுகிற மனப்பான்மையில்தான் வெகுமக்கள் இருக்கிறார்கள். திடீர் என்று ஒரு கட்சி தோன்றி தமிழ் தேசியத்தையோ, மதவாதத்தையோ முன்வைத்து ஆட்சியை பிடித்துவிட முடியும் என்கிற கனவு இன்றைய தமிழக சூழலில் கனவாகத்தான் இருக்க முடியும்.

தலைமுறைகளும் வாழ்க்கைச் சூழலும் மாறிக்கொண்டிருக்கும் சூழலில் பழையன கழிதலும் புதியன வருதலும் இயல்பே. இருக்கிற கட்சிகள் தங்களை புதுப்பித்துக் கொள்ளாத வரை, புதிய கட்சிகளின் எழுச்சி நடந்தே தீரும். அது எதன் அடிப்படையில் அமையும் என்பது காலத்தின் புதிர்!

பின்குறிப்பு: மாற்றம் முன்னேற்றத்தை முன்னெடுக்கும் பாமகவும் கூட்டணி ஆட்சிக்கு அடித்தளம் அமைக்கப்போவதாகக் கூறும் மதிமுகவும் விடுதலை சிறுத்தைகளும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள்.

தினச்செய்தி நாளிதழுக்காக எழுதியது.

வேட்பாளர் நேர்காணல் என்பது ஏமாற்று வித்தையா?

இன்னும் கூட்டணி குழப்பமே முடிவுக்கு வரவில்லை; அதற்குள் சில கட்சிகள் மும்முரமாக வேட்பாளர் விண்ணப்பங்களை விநியோகித்து, நேர்காணலையும் நடத்த ஆரம்பித்துள்ளன. மேலோட்டமாகப் பார்த்தால், உள்கட்சி ஜனநாயகம் தழைத்தோங்குவதாகப் பார்க்கலாம். தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் தாமாகவே முன்வந்து விருப்பத்தை தெரிவிப்பதும் அவர் தகுதியான வேட்பாளர்தானா என கட்சித் தலைமை முடிவெடுத்து அவரை கட்சியின் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிட வைப்பதும் பாராட்டப் பட வேண்டிய நடைமுறைகள்தான். உண்மையில் அப்படித்தானா?
பெரிய கட்சிகள் முதல் இப்போது தொடங்கிய கட்சிகள் வரை வேட்பாளர் விண்ணப்பிக்கும்போது பொதுத் தொகுதிகளுக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் தனித் தொகுதிகளுக்கு ரூ. 2500 முதல் ரூ. 15 ஆயிரம் வரையிலும் செலுத்த வேண்டும் என நிர்ணயித்திருக்கிறார்கள்.
ஒரு தொகுதியில் 20 பேர் போட்டியிட விண்ணப்பித்து, அவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் மற்றவர்களின் பணம் திரும்ப அளிக்கப்படமாட்டாது. போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருக்கும் தொகுதி, கூட்டணி கட்சிக்குப் போகும்பட்சத்தில் மட்டுமே, விண்ணப்பித்தவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும். இதை பொருட்களை விற்கும் நிறுவனங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று அறிவிப்பார்களே அதுபோல, கட்சிகளும் முன்பே சொல்லிவிடுகின்றன.
இது என்ன மோசடியாக இருக்கிறதே? என்று கோபப்படுவர்களுக்கு கட்சிகள் சொல்லும் விளக்கம், ‘தேர்தல் செலவுகளை கட்சி தானே செய்கிறது; அதை கட்சிக்கு அளிக்கும் தேர்தல் நிதியாகத்தான் கருத வேண்டும்’. அப்படியென்றால் தேர்தல் நிதி வசூல் என்ற பெயரிலேயே ஒன்று திரட்டப்படுகிறது அது என்ன? திராவிட கட்சிகள் உருவாக்கிவைத்திருக்கும் கட்சி நிதி கொள்ளை வழிகளில் இதுவும் ஒன்று. அதை நாங்கள் மாற்று என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகளும் பின்பாற்றுகின்றன என்பதை அழுத்திச் சொல்ல வேண்டும்.
சரி, இடதுசாரிகளின் வேட்பாளர் தேர்வு ஜனநாயக முறையில் நடக்கிறதா என்று பார்ப்போம். இடதுசாரி கட்சிகளில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வேண்டுமென்றால், அவர் படிப்படியாக கட்சியில் உயர்ந்தவராக இருக்க வேண்டும். போராட்டங்களில் பங்கேற்றவராக, மக்களின் செல்வாக்கைப் பெற்றவராக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாவட்ட பிரதிநிதிகள் தயாரித்துக் கொடுக்கும் முதல் கட்ட பெயர் பட்டியலை உயர்மட்டக் குழு இறுது செய்யும். வேட்பாளர் படிவ விண்ணப்பம், நேர்காணல் இந்த வழிமுறையெல்லாம் இல்லை. ஆனால் இவர்கள் மீதும் வேட்பாளர்களை முன்கூட்டியே தேர்வு செய்துவிட்டு ஒப்புக்கு மாவட்ட பிரநிதிகளிடம் பரிந்துரை கேட்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு.
சிறு கட்சிகளைப் பொறுத்தவரை  எத்தனை தொகுதியில் போட்டியிடப் போகிறோம் என்பதே தெரியாத நிலையில், 234 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தப்படுகிறது. எதன் அடிப்படையில் இப்படியான முடிவு என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
ஆக, தெளிவாகப் புரிவது இவைதான். பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள், திராவிட கட்சிகள், கம்யூனிஸ்டுகள் என எல்லோரும் வேட்பாளர் தேர்வை மேலிடத்தின் முடிவுக்கே விட்டுவிட்டு, வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் நேர்காணல் என ஜனநாயக சக்திகளாக வேஷம் கட்டுகின்றன.

தினச்செய்தி(23-02-2016)நாளிதழில் வெளியானது.

மோடி ஃபார்முலாவில் சமூக ஊடகங்களில் தமிழகக் கட்சிகளின் பிரச்சாரம்!

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார உத்தியில் தெரு முனைக் கூட்டங்கள் எல்லாம் பழங்கதைகளாகிக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்களில் பிரச்சாரம்தான் இனி தங்களுடைய வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போகின்றன என்பதை தமிழக கட்சிகளும் உணர ஆரம்பித்துவிட்டன. 2014-ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலின் போது இந்த டிரெண்டை இந்தியாவில் தொடங்கி வைத்த பெருமைக் குரியவர் நரேந்திர மோடி.  பாஜக பெரும்பான்மை இடங்களைப் பெற சமூக ஊடங்களின் பங்களிப்பு முக்கியமானது. மோடியின் வெற்றிக்காக சமூக ஊடக உழைக்க வைத்தது ஒரு நிறுவனம். மேலை நாடுகளில் பிரபலமான தகவல் தொடர்பு நிறுவனங்கள் நடத்தி தரும் தேர்தல் போல, மோடியும் நடத்திக் காட்டினார். அதில் வெற்றியும் பெற்றார்.

மோடி ஃபார்முலா என்று உருவாகிவிட்ட அதைத்தான் இந்திய அரசியல்வாதிகள் பலரும் பின்பற்ற நினைக்கிறார்கள். நிதிஷ்-லாலு-காங்கிரஸின் மெகா கூட்டணி வெற்றி பெற கிஷோர் என்ற தகவல் தொடர்பு நிபுணரின் உதவி முக்கியமானது என்று ஆங்கில ஊடகங்கள் எழுதின. கிஷோர் மோடிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தவர். இந்தியாவில் இந்த ஆண்டு வரவிருக்கிற தேர்தலுக்காக கிஷோரை வலைவீசி பல மாநில அரசியல்வாதிகள் காத்துக்கொண்டிருக்கிறார்களாம். அதில், திமுகவும் அதிமுகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டின் தேர்தலின் வெற்றி தோல்வியை இளம் வாக்காளர்கள்தான் நிர்ணயிக்க இருக்கிறார்கள் என்பதால் தமிழகத்தின் கட்சிகள் அவர்களை குறிவைத்து சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கின்றன. இந்த பிரச்சாரத்தை முதலில் தொடங்கியது பாமக. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த கையோடு, சமூக ஊடக பிரச்சாரத்தையும் தொடங்கியது பாமக. இந்த பிரச்சாரத்தை கவனித்துக் கொள்ள தனி பிரிவே இருக்கிறது.

அடுத்து, திமுக ’நமக்கு நாமே’ பயணத்தை மு.க. ஸ்டாலின் தொடங்கிய வேளையில் தனி வலைத்தளம், ஃபேஸ்புக், ட்விட்டரில் ஸ்டாலின் பயணம் பற்றிய தகவல்கள் உடனடியாக பதியப்பட்டன. திமுக தலைவர் கருணாநிதிக்கென்றும் தனி வலைத்தளம் திறக்கப்பட்டது. அதிமுகவும் தன்னுடைய சமூக ஊடக பிரச்சாரத்துக்கென்று தனி பிரிவை அமைத்திருக்கிறது. அதிமுக அரசின் விடியோக்கள், ஆடியோக்கள் என வெளியிட்டு தாங்களும் கடமையாற்றுகிறார்கள்.

மக்கள் நலக் கூட்டணி சளைத்ததா என்ன? மதிமுகவுக்கு என்று தனி வலைத்தளம் இருக்கிறது. மக்கள் நலக் கூட்டணிக்கு பிரத்யேகமாக வலைத்தளம் அமைத்திருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், ஃபேஸ்புக்கில் ஆர்வமாக பங்கெடுக்கிறார். இவர் திங்கள்கிழமை பதிவிட்ட மக்கள் நலக் கூட்டணி செல்ஃபி வைரல் ஆனது! மதுரை மாநாட்டுக்குப் பிறகு, மக்கள் நலக் கூட்டணிக்கு மவுசு கூடியிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதற்கு முன்பு வரை ஜி. ராமகிருஷ்ணன் பக்கத்தை கட்சித் தோழர்கள் மட்டும்தான் பார்த்து வந்தார்கள். இன்று அவர் போடும் ஒவ்வொரு பதிவும் பலரால் பகிரப்படுகிறது.

இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக உள்ள அரசியல்வாதி கருணாநிதிதான். ஃபேஸ்புக்கில் தினமும் பதிவிடக்கூடியவராகவும் அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்பவராகவும் கருணாநிதி இருக்கிறார்.

இளைஞர்களுக்காக அரசியல்வாதிகளும் தங்களை நவீனப்படுத்திக் கொண்டது சரிதான். ஆனால், கொள்கைகள் இளைஞர்களைக் கவரும் விதமாக இருக்க வேண்டுமே!

தினச்செய்தி(10-02-2016) நாளிதழில் வெளியானது.