’இது முட்டாள்களின் தேசமாகிவிடும்’: அருந்ததி ராய் விருதால் விளாசினார்

arunthathi roy

விருதை திருப்பி அளிக்கும் போராட்டத்தில் இணைந்திருக்கிறார் எழுத்தாளர் அருந்ததி ராய். 1989-ஆம் ஆண்டு In Which Annie Gives It Those Ones என்ற படத்துக்காக சிறந்த திரைக்கதாசிரியரருக்கான தேசிய விருதை இவர் பெற்றிருந்தார். இந்த விருதைத் திருப்பி அளிப்பதாக தெரிவித்திருக்கிறார் அருந்ததி ராய்.

“நாட்டில் நிலவிவரும் சகிப்பின்மை காரணமாக இந்த விருதை நான் திருப்பி அளிக்கவில்லை. ஏனெனில் சகிப்பின்மை கண்டு நான் இப்போதுதான் அதிர்ச்சியடைந்தேன் என்று சொல்லமுடியாது. அடித்துக் கொல்வதை, சுட்டுக் கொல்வதை, எரித்துக் கொல்வதை வளர்ந்து வரும் சகிப்பின்மை என்ற சொற்களுக்குள் அடக்க முடியாது; அது தவறான பதம். இரண்டாவது இந்த சம்பவங்கள் அரங்கேறுவதற்கு முன்பே, அதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன. இந்த அரசாங்கம் பெரும்பான்மையுடன் அமரவைக்கப்பட்ட பிறகு, நடந்தவற்றை கண்டு அதிர்ச்சி அடைவதாக சொல்லமுடியாது.

இந்த நாட்டில் தலித்துகளும் பழங்குடியினரும் முஸ்லிம்களும் கிறித்துவர்களும் தீவிரவாத சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போது என்ன நடக்கும், யார் என்ன செய்வார்கள் என்கிற பயம்தான் மேலோங்கி இருக்கிறது.

இன்று ‘சட்டவிரோதமாக வெட்டுவது’ என்பதற்குப் பொருள், கற்பனையான பசுவைக் கொல்வது என்பதே. குற்றம் நடந்த இடத்தில் தடயங்களை எடுத்தார்கள் என்பதற்கான பொருள் குளிர்பதனப் பெட்டியில் கிடந்த இறைச்சி துண்டுகளை எடுத்தார்கள் என்பதே. அங்கே கொல்லப்பட்ட மனிதனுக்கு எந்த மதிப்பும் இல்லை.

நாம் வளர்ச்சி அடைந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்கிறோம். ஆனால் தலித்துகள் கழுத்தறுபட்டும் தலித் குழந்தைகள் எரிக்கப்பட்டும் கொல்லப்படும்போது, எந்த எழுத்தாளரும் அண்ணல் அம்பேத்கர் சொன்னரே ‘தீண்டத்தகாதவர்களுக்கு இந்துமதம் கொடூரத்தின் கூடாரம்’ என்று சொல்லத் துணிவு வரும்? அப்படியே சொன்னாலும் அப்படிச் சொன்னவர் அடிக்கப்பட்டோ, சுடப்பட்டோ அல்லது அடித்துக் கொல்லப்படவோ கூடும்.

இன்று எந்த இந்திய எழுத்தாளராவது சதத் அசன் மண்டோ எழுதியதுபோல ‘அங்கிள் சாமுக்கு கடிதம்’ எழுத முடியுமா? நாம் சொல்ல வந்த கருத்தைச் சொல்வதற்கு சுதந்திரம் இல்லையென்றால், நமது சமூகம் அறிவுக் குறைபாடுடைய, முட்டாள்களின் சமூகமாக மாறிவிடும்.

துணைக் கண்டத்தைச் சுற்றிலும் யார் கருத்துச் சுதந்திரத்தை பறிப்பது என்கிற போட்டி ஏற்பட்டுள்ளது. அதில் ‘புதிய இந்தியா’ உற்சாகத்துடன் இணைந்திருக்கிறது. இங்கேயும் கும்பல்களுக்கு தணிக்கை செய்யும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றிருக்கும் அரசியல் போராட்டத்தில் எப்போதோ நான் வாங்கிய விருதைத் திருப்பித் தருவதன் மூலம் நானும் பங்கேற்கிறேன்” என்று தெரிவித்திருக்கும் அவர், தனக்கு 2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை வாங்க மறுத்திவிட்டதாக தெரிவித்திருக்கிறார். அப்போது காங்கிரஸ் அரசாங்கம் மத்தியில் இருந்தது; விருதைத் திருப்பி அளிப்பவர்களை காங்கிரஸ் ஆதரவாளராக இருப்பார் என்று தன்னை விமர்சிக்க முடியாது என்பதை சொல்வதற்காக இந்தத் தகவலைச் சொல்வதாக அருந்ததி தெரிவித்திருக்கிறார்.

அருந்ததி ராய், தன்னுடைய காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ் நாவலுக்காக இலக்கிய உலகின் மிகப் பெரிய விருதான புக்கர் பரிசு பெற்றவர்.