நாம் எதிரெதிராக நிற்க வேண்டியவர்கள்தானா?

அண்மைக்காலமாக தமிழகத்தில் தலைவர்கள் சிலைகள் சேதப்படுத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக அம்பேத்கர், பெரியார் போன்ற சாதி ஒழிப்பு பேசியவர்களை, பார்ப்பனியத்தை விமர்சித்தவர்களை தாக்குவது அதிகரித்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கரின் சிலை பார்ப்பனிய சாதிவெறி ஏற்றப்பட்ட கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அதை முன்வைத்து சமூக ஊடகங்களில் பெரும்பாலான தமிழக மக்கள் சாதிவெறியர்களின் கொடுஞ்செயலைக் கண்டித்தனர். மறுநாள் அதிகாலையில் அதே இடத்தில் அண்ணலின் சிலை மீண்டும் நிறுவப்பட்டது. வடமாவட்டம் ஒன்றில் பெரியார் சிலை உடைக்கப்பட்டபோதும், உடனடியாக மீண்டும் பெரியார் அதே இடத்தில் அமர்த்தப்பட்டார். பெரியோர்களின் சிலை உடைக்கப்படுவதும் நிறுவப்படுவது தொடர்ந்து நிகழும் சம்பவங்களாகிவிட்டன. சில இடங்களில் தலைவர்கள் கம்பி வளைக்குள் நிறுத்தப்படுவதும் நடந்துகொண்டிருக்கிறது.

சிலை உடைப்பு சம்பவங்களுக்கும் அதற்குப் பிறகான முற்போக்கு சமூகத்தின் கொந்தளிப்புகளுக்கும் சாதி வெறி கூச்சல்களுக்கும் சாதி ஒழிப்பு யோசனைகளுக்கும் அப்பால் நாம் சிந்திக்க வேண்டியவை ஏராளமாக உள்ளன. அடையாள அரசியல் பேசும் பலர் இதை பேசுவதில்லை. சாதிக்கு ஒரு தலைவர் தேவைப்படுகிறார். அரசியல்வாதிகளுக்கு அது போதும். ஆனால், சமூக யதார்த்தம் வேறுமாதிரியாக உள்ளது.

பட்டியின மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வர்க்கப் பின்னணி என்ன? சமூகப் பிண்ணனி என்ன? ‘இந்து மதம்’ என இவர்களையெல்லாம் ஒன்றிணைக்கிற மதம் இவர்களை எத்தகைய சமூக சூழலில் வைத்துள்ளது? அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ன? அரசு நிர்வாகத்தில் முடிவெடுக்கக்கூடிய இடத்தில் உள்ள சாதி எது? இவர்களுடைய கலாச்சாரம் என்ன? உணவுப் பழக்கம் என்ன? இத்தனை கேள்விகளுக்கு விடை தேடினால், சமூக யதார்த்தம் நம் கண்முன் வந்து நிற்கும். அது தலித்-பகுஜன் சமூகங்களின் ஒற்றுமையை பறைசாற்றி நிற்கும்.

பார்ப்பனியத்தின் சாதி படிநிலையை ஆங்கிலேயர்கள் ‘இந்து’ மதமாக்கியதாக பிரபல கன்னட தலித்திய எழுத்தாளர் தேவனூர மகாதேவா எழுதியிருப்பார். நூற்றுக்கணக்கான இந்திய ஒடுக்கப்பட்ட சாதிகளை, நான்கு வர்ண அமைப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களை ‘தலித்’ என்ற வார்த்தையால் அழைத்தவர் மகாத்மா ஜோதிபா பூலே. அதை பிரபலமாக்கியவர் அண்ணல் அம்பேத்கர். பார்ப்பனிய மதம் தீண்டத்தகாதவர்களாகவும் சூத்திரர்களாகவும் ஒதுக்கியவர்கள்தான் இன்று எதிரெதிராக நின்று சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சிலையின் தலையை துண்டாக்கும் சூத்திரர்களுக்கும் சேர்த்துதான் அம்பேத்கர் பேசினார். ஜோதிபா பூலேயும் பெரியாரும் இயக்கங்களை நடத்தினார்கள். இத்தனைப் போராட்டங்களுக்குப் பிறகும், முற்போக்கு மரபைக் கொண்டிருக்கும் தமிழகத்திலும் ஏன் பிற்படுத்தப்படுத்த சமூகம், தலித்துகளுக்கு எதிராக நிற்கிறது?

தலித் பகுஜன் ஒற்றுமையை வலியுறுத்திவரும் எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா இதற்கு பதில் சொல்கிறார்…“ஒவ்வொரு தனிநபர் மற்றும் சமூகத்துக்கு மதம் என்பது முக்கியமானது. நான் ஏன் இந்துவல்ல என சொல்லியிருக்கிறேன். அதுபோல, சூத்திரர்களும் அதாவது பிற்படுத்தப்பட்ட மக்களும் படிக்கவோ, பரப்பவோ ஒரு அமைப்பாக்கப்பட்ட மத வாழ்க்கையை கொண்டிராதவர்கள். இந்துயிசத்தில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. உற்பத்தி அல்லாத நல்ல வாழ்க்கையை வாழும் பனியாக்களும் சத்திரியர்களும் பார்ப்பனியத்துடன் சேர்ந்துகொள்வார்கள். ஆனால் தலித்துகளுக்கும் சூத்திரர்களுக்கும் ஆன்மிக எழுத்துக்களை படிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை. தலித்துகள் இதைப் புரிந்துகொண்டு பவுத்தத்திற்கும் கிறித்துவத்திற்கும் மாறினார்கள். தங்களுடைய வழிபடும் உரிமையை அவர்கள் பெற்றார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அவர்களுடைய வாழ்க்கை சூழல் மாறுகிறது. ஆனால் பார்ப்பனியத்தை தலித்துகள் கேள்வி எழுப்பியதைப் போல சூத்திரர்கள் எதிர்க்கவில்லை. இதுதான் பிற்படுத்தப்பட்ட மக்களை பல நூற்றாண்டுகளுக்கு முடக்கி வைத்துவிட்டது” என்கிறார்.

காஞ்சா அய்லய்யா, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக ஆய்வாளர். இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் அவருடைய எழுத்துக்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. காஞ்சா அய்லய்யா சொன்னதன் சாரத்தை, வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் எழுதிய சிலர் முன்வைத்தனர். சிலையை உடைத்தவர்கள் தங்களுடைய சமூக படிநிலையை உயர்த்திக்கொண்டார்களா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

பார்ப்பனிய இந்து மதத்தின் ஒற்றை கொள்கையை நாடு முழுவதும் பரப்ப முயற்சி நடந்துகொண்டிருக்கும் வேளையில், தன்னுடைய நிலையை மறந்து, சாதி பெருமையை தூக்கி சுமக்க தமிழகத்தில் பலர் தயாராக உள்ளனர். கிட்டத்தட்ட பார்ப்பனியத்துக்கு அடியாள் வேலை பார்ப்பது போன்றது இது.

மிகச் சமீபத்தில் தருமபுரி அருகே ஒரு கிராமத்தில் இருந்த முனியப்பன் சாமி சிலைக்கு கயவர்கள் சிலர் வன்முறையை தூண்டும் நோக்கத்தில் செருப்பு மாலை அணிவித்திருக்கின்றனர். ஊரில் நடந்த விசாரணையின்போது, மதத்தின் பெயரால இயங்கும் ஒரு அமைப்பைச் சேர்ந்த சிலர் முனியப்பன் சாமி சிலை அருகே ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டுள்ளனர். முனியப்பனுக்கும் ஜெய் ஸ்ரீராமுக்கும் என்ன தொடர்பு? பெரும்பான்மையினரின் சாமி எது? எது இறக்குமதி செய்யப்பட்ட சாமி? எந்த மதத்துக்காக சொந்த சாமிக்கே அவர்கள் செருப்பு மாலை அணிவித்திருக்கிறார்கள்? இந்தக் கேள்விகளை சாதி பெருமிதம் பேசி, தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொள்கிறவர்கள் அலச வேண்டும்.

மேலாதிக்கம் மிக்க ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரின் மதத்தை, கலாச்சாரத்தை தனது மதமாக, கலாச்சாரமாக சொல்லிக்கொள்வதில் எந்தப் பெருமையும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, நம்முடைய பண்பாட்டை, கலாச்சாரத்தை, நமது ஆன்மீகத்தைத்தான் நாம் இழந்து நிற்கிறோம். அந்த வகையில் அய்லய்யா குறிப்பிடுவதைப் போல தலித்-பகுஜன் கலாச்சாரமும் வாழ்நிலையும் ஒன்றே. அவர் உனது தலைவர், இவர் எனது தலைவர் என பிரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் எதிரிகளாக நிற்பது, நம்மை ஆதிக்கம் செய்வோருக்குத்தான் சாதகமாக அமைகிறது. எதற்காக இதைச் செய்கிறோம் என தெரியாமல்கூட வெற்று ஆதாயங்களுக்காக நாம் எதிரெதிராக நிற்கத்தான் வேண்டுமா?

நாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்?: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை

நாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்?

‘‘பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளை, அச்சுறுத்தல்களை, உடல் ரீதியான துன்புறுத்தலை வெளியே  கொண்டுவருவதற்காக தொடங்கப்பட்டதே ‘மீ டூ’ இயக்கம். இந்த இயக்கத்தின் மூலம், உலகம் முழுக்க பல்வேறு துறைகளில் ஆண்களால்  ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்கள் தொடர்புடைய சம்பவங்கள் நடந்து பல ஆண்டுகள் ஆன போதும் இப்போது வெளியே சொல்கிறார்கள்.  தனியாக ஒலிக்கும் குரலுக்கு இத்தனை வீரியம் இருந்திருக்காது; கூட்டுக்குரலாக ஒலிக்கும்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதை வெறுமனே பாலியல் சுரண்டலுக்கு எதிரான குரலாக மட்டுமே பார்த்து, ‘எனக்கு நடக்கவில்லை’  அல்லது ‘எங்கள் குடும்பத்தில் யாருக்கும் நடக்கவில்லை’ என பலர் ஒதுங்கிப் போகக்கூடும். தமிழகத்தில் பேசுபொருளாகியிருக்கும் மீ டூ  இயக்கத்தின் மூலம், பல முகம் காட்ட விரும்பாத பெண்கள், பொதுவெளியில் தங்களுக்கு நேர்ந்த அச்சுறுத்தல்களை  முன்வைத்திருக்கிறார்கள். இது வெறுமனே பிரபலங்களுக்குள் நடக்கும் பிரச்னை அல்ல.  நம் வீட்டுப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை  என்பதை நாம் உணர வேண்டும்.

பெரும்பாலும் 90 சதவீதம் பெண்கள் இத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். சிலர் தங்களுக்குள்ளாகவே இத்தகைய  ஒடுக்குமுறைகளைப் பேசி கடந்துவிடுகிறார்கள். சிலர் கூட்டாக இணைந்து அத்துமீறல் செய்யும் ஆண்களிடமிருந்து தங்களை  பாதுகாத்துக்கொள்கிறார்கள். சிலர் வேலைக்குச் செல்வதே வேண்டாம் என முழுக்குப் போடவும் செய்கிறார்கள். இறுதியில் இத்தகைய  நடவடிக்கைகளில் இறங்கும் ஆண்கள் தொடர்ந்து இதையே அடுத்து வருகிற பெண்களுக்கும் செய்ய துணிகிறார்கள்.பெண்களின் மீது ஈர்ப்பு  கொள்வது ஆண்களின் இயல்பு. பணிபுரியும் இடங்களில் பாலின ஒடுக்குமுறைகள் நிகழத்தான் செய்யும் என சிலர் வாதிடுகிறார்கள்.  இதில் முதல் பாதி மட்டுமே உண்மை. ஆண்களிடம் ஈர்ப்பு கொள்வது பெண்களுக்கும்  இயல்பாக நிகழக்கூடியது. அதை பெண்கள் எப்படி  கையாள்கிறார்கள். ஆண்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பாலின ஒடுக்குமுறை என்பது ஆணுக்கு கிடைக்கும் அளவற்ற அதிகாரத்தின் விளைவாக நடப்பது. இதை தொடர்புடைய ஆண்கள்  அவமானமாகக் கருத வேண்டும் என்பதாலேயே மீ டூ இயக்கத்தை ‘பெயர்களை சொல்லுதல் – அவமானம் கொள்ளச் செய்தல்’ என  அழைக்கிறார்கள். தனக்காக தன் குடும்பத்துக்காக பணிபுரிய வருகிற ஆணுக்கு இருக்கும் அதே நிர்பந்தமும் லட்சியமும் பெண்ணுக்கும்  இருக்கும். பஞ்சாலைக்கு தின சம்பளத்துக்கு செல்கிற பெண்ணுக்கும், ஐ.டி. நிறுவனத்தில் மாதச் சம்பளம் வாங்கும் பெண்ணுக்கும்  அவரவர்க்குரிய வாழ்வியல் நிர்பந்தங்கள் இருக்கத்தான் செய்யும். அதை அதிகாரத்தால் சிதைக்க நினைப்பதே ஆணாதிக்கம். இந்த  ஆணாதிக்க சூழலை மாற்ற முனைந்திருக்கும் கூட்டுக்குரல் ‘மீ டூ’.

மீ டூ இயக்கத்தில் பேசப்பட்ட இத்தகைய ஒடுக்குமுறை விஷயங்கள் எவை?

Abuse(துன்புறுத்தல்)- ஒரு நபர் இன்னொருவர் மீது உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, உளவியல்ரீதியாகவோ, பொருளாதாரரீதியாகவோ  துன்புறுத்துவது. உதாரணத்துக்கு, அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஆண், ஒரு பெண்ணை அவருடைய விருப்பத்துக்கு மாறாக இணங்க  வற்புறுத்தி அதை அந்தப் பெண் மறுக்கும்போது, அவளுடைய இன்கிரிமென்ட், ப்ரோமோஷனில் கை வைப்பதுகூட துன்புறுத்தல் வகையைச்  சேர்ந்ததுதான்.

Boys’ club – (பணியிடத்தில் ஆண்கள் மட்டும் ஒரு குழுவாக இயங்குவது) பெரும்பாலான பணியிடச் சூழலில் இது நடக்கும். இவர்கள்  சேர்ந்து அலுவலக பெண்களைக் கிண்டலடிப்பார்கள், பாலியல் ஜோக்கடித்து பெண்களை மோசமாகப் பேசி சிரிப்பார்கள். பெண்களை  மதிக்காது; எல்லா இடமும் ஆணுக்கானதுதான் என நிறுவ முயல்வதும் ஒடுக்குமுறையே!

Male entitlement – (ஆண் என்ற தகுதியே சமூக அந்தஸ்துகளை பெற போதுமானது எனக் கருதுவது) பணியிடங்களில் குறிப்பிட்ட பணியை ஆணால் மட்டுமே செய்ய முடியும் எனச் சொல்வார்கள். ஊடகங்களில் புலனாய்வு நிருபர் பணிக்கு பெண்களை  சேர்க்காமல் இருப்பதைச் சொல்லலாம்.

Mansplaining (ஆண்களுக்கு எல்லாம் தெரியும்) தனக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போல அறிவுரைகளை கூறுவார்கள். பொதுவாக,  பெண்களை நெருங்குவதற்காக ஆண்கள் இதைச் செய்வார்கள்.

Molesting – (விருப்பமில்லாமல் அழைத்தல்) ஒரு பெண்ணை அவளுடைய விருப்பம் இல்லாமல் நிராகரித்த பிறகும் பாலியல் உறவுக்கு  அழைப்பது.

Negative questioning – (எதிர்மறையாகக் கேட்பது) இதை நிறையப் பெண்கள் எதிர்கொண்டிருக்கலாம். இரட்டை அர்த்தத்தில் பேசிவிட்டு,  பதிலை எதிர்பார்ப்பார்கள்.

Negging – (உணர்வுரீதியான துன்புறுத்தல்) ஒருவரின் தன்னம்பிக்கையை குறைக்கும் வகையில் எதற்கெடுத்தாலும் குறை  சொல்லிக்கொண்டிருப்பது.

Policing – (கண்காணித்தல்) ஒரு நபரின் செயல்பாடுகளில் விருப்பம் இல்லாமல் ஒரு பெண் ஒதுங்க விரும்பினாலும் அந்தப் பெண்ணை  கண்காணித்துக்கொண்டே இருப்பது. இதை செய், அது கூடாது என கட்டுப்படுத்த நினைப்பது.

ஏதோ கிசுகிசு போல எண்ணி  நகர்ந்துவிடாமல், இந்த இயக்கத்தை ஆதரிப்பது நமது கடமை. ஏனெனில்,  பணியிடங்களில் பாலியல் சமத்துவம் என்பது நமக்கு பின்னால்  வருகிற அடுத்தடுத்த தலைமுறை பெண்களுக்கு நாம் பெற்றுத்தர வேண்டிய உரிமை.’’

நன்றி: குங்குமம் தோழி

கட்டுரையில் த வயரில் வந்த கட்டுரை ஒன்றிலிருந்து ஒடுக்குமுறை சொல்லாடல்கள் சிலவை எடுத்தாளப்பட்டுள்ளன.

முகப்புப் படம் நன்றி: நியூயார்க்கர்

எழுத வாய்ப்பளித்த தோழர் மகேஸ்வரிக்கு அன்பும் நன்றியும்.

தற்கொலை அரசியல்!

எந்தவொரு நாகரிக சமூகமும் ‘தற்கொலை’யை ஆயுதமாக எடுக்காது. தலைவனின் கட்டளைக்காக கண்மூடித்தனமாக கழுத்தறுக்கொள்ளும் காட்டுமிராண்டியின் செயல் ‘தற்கொலை’. வாழ்க்கையை நேர்கொள்ளும் திராணியற்றவர்கள் தற்கொலையை புனிதப்படுத்தும், கொண்டாடும் வேலையை செய்துவருகிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதை விட்டுவிட்டு, அதிமுக எம்பிக்கள் ‘தற்கொலை’ நாடகம் ஆடுகிறார்கள். ஒருகாலத்தில் இந்த தற்கொலை நாடகம், நிஜமாகப்போவதில்லை. உணர்வுகளைத் தூண்டி அப்பாவிகள் எவராவது தற்கொலை செய்துகொள்ள வேண்டும், அதை வைத்து பிண அரசியல் நடத்தக்கூடும் என நான் சந்தேகிக்கிறேன். அப்பட்டமான திசைதிருப்பல் இது.

போதாக்குறைக்கு அய்யாக்கண்ணு, தற்கொலை செய்வோம் என்கிறார். தயவுசெய்து இவர்களை நம்பாதீர்கள். கடந்தகால தற்கொலைகளால் எதுவும் நடந்துவிடவில்லை, தற்கொலையைத் தவிர, பிற அத்தனை வழிகளையும் சிந்தியுங்கள்.

அரசுகள் நம்மை ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஏமாற்றுகிறவர்களிடம் தற்கொலையை ஆயுதமாக பயன்படுத்த முடியுமா? அவர்களிடம் குறைந்தபட்ச இரக்கத்தையாவது பெற முடியுமா? காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்… அவர்களின் தற்கொலைகளுக்கு நீதி கிடைத்துவிட்டதா?

ஏலியன்…இலுமினாட்டி… பாரிசாலன்..

ஹிஸ்டரி சேனலில் ‘ஏன்சியன்ட் ஏலியன்ஸ்’ என்றொரு இலுமினாட்டி நிகழ்ச்சி. மனிதர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை, எல்லாவற்றையும் ஏலியன்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்பதை நிறுவுவதே நிகழ்ச்சியின் நோக்கம்.

நம்மவூர் பாரிசாலன் டைப் ஆட்கள் வளர்ந்த நாடுகளில், பெஸ்ட் செல்லர் புத்தகம் எழுதி விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை பேச விட்டு, 20 நிமிட நிகழ்ச்சி ‘சுவாரஸ்யமாக’ போகும். அத்தனை எபிஸோடுகளையும் பார்த்திருக்கிறேன். எனது பகுத்தறிவை சோதிக்க கிடைத்த நிகழ்ச்சி அது.

இலுமினாட்டிகள் எப்படி உருவாகிறார் என இங்கே படிக்கலாம்…

கபாலி புரட்டிப்போடும் சாதி சர்ச்சைகள்!

இன்றைக்கு சமூக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக மாறிப்போயிருக்கிறது சாதி. சாதி ஒழிப்பு பிரச்சாரம் நடந்த மண்ணில் சாதியை பின் ஒட்டாக வைத்து முகநூல் குழுக்கள் தோன்றுகின்றன.  அவை சாதி பெருமையைப் பேசுவதோடு நின்றுவிடுவதில்லை; வன்மத்தை கக்கும் குழுக்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அரசியல் வாழ்க்கைக்கு சாதியே பிரதானமாகிவிட்டச் சூழலில் இத்தகைய குழுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் அரசுகள் எடுப்பதில்லை.  சமூக ஊடகங்கள்  சாதிய சமூகத்தின் கண்ணாடிகளாக மாறிப்போயிருக்கும் இந்தச் சூழலில் இன்னொரு குறிப்பிடத் தகுந்த தகவல் ஒன்றையும் சொல்ல வேண்டும். இணைய தேடு பொறிகளில் தமிழில் தேடப்படும் விஷயங்களில் நடிகர்களின் சாதி எது என்பது குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்திருக்கிறது.

தங்களுக்குப் பிடித்த அல்லது பிடிக்காத நடிகர்களின் சாதியைத் தெரிந்துகொள்ள இணையவாசிகள் ஏன் விரும்புகிறார்கள்? சாதிய சமூகம் ஒரு காரணம் என்றாலும் வெகுஜென கலைவடிவமான சினிமா மீது சாதிய கண்ணோட்டத்தை  ஏற்படுத்தியது இதே கலைத்துறைச் சார்ந்தவர்கள்தான். நடிகர் கமல்ஹாசனின் தேவர் மகனிலிருந்து பாரதிராஜாவின் தேவர் பெருமை பேசும் இடைக்காலப் படங்களிலிருந்து கே. எஸ். ரவிக்குமார், உதயகுமார் ஆகியோரின் கவுண்டர் பெருமை பேசும் படங்களிலிருந்து சாதிய நிழல் சினிமா மீது  படர்ந்தது எனச் சொல்லலாம். இவர்களின் அடிகளை பின்பற்றி நூறு படங்களாவது வந்திருக்கும்.

சமகாலத்தில் தேவர் சாதியினரின் பங்களிப்பு அதிகமாக இருப்பதாலோ என்னவோ, தேவர் சாதி பெருமை பேசும் சினிமாக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. சாதிய கொலைகளும் சாதி பெண்கள் மீது செலுத்து வன்முறையும் பெருமைக்குரிய, வீரம் செறிந்த கதைகளாகப் பதிவு செய்யப்படுகின்றன. தேவர் மகனில் வந்த ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்ற பாடல் சாதி வெறியேற்றும் வகையில் ஆதிக்க சாதிகளின் விழாக்களின் ஒலிக்க வைக்கப்படுகின்றன. இந்த வரிசையில் கொம்பன், சுந்தர பாண்டியன் இன்னும் பல படங்களின் பாடல்கள், சாதி கலவரத்தைத் தூண்டும்வகையில் தலித் சாதியினரை உசுப்பேற்றும் வகையில் ஒலிக்க வைக்கப்படுவதாக பல பதிவுகள் ஆங்கில செய்தி ஊடகங்களில் பதிவாகியுள்ளன.

இத்தகையதொரு சூழலில் தலித் என்கிற அடையாளத்துடன் பா. ரஞ்சித் திரைப்படத்துறைக்கு வருகிறார்; முதல் படமாக ‘அட்டைக்கத்தி’ காதலைப் பற்றிப் பேசினாலும் அது தலித் வாழ்வியலின் அடித்தளத்தில் அமைந்திருந்தது. திணிப்பாக இல்லாமல் மிக இயல்பாக அதை பா. ரஞ்சித் செய்திருந்தார். அவருக்கு அதில் வெற்றியும் கிடைத்தது. வெற்றி என்பது அனைத்து ‘சாதி’யைச் சார்ந்த ரசிகர்கள் கொடுத்தது தானே? பா. ரஞ்சித்தின் தலித் அடையாளம் அட்டகத்தியின் வெற்றிக்குப் பிறகுதான் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது. ‘மெட்ராஸ்’ படத்துக்குப் பின் சமூக ஊடகங்களில் தலித் மக்கள், தங்கள் சமூகத்தின் வெற்றி முகமாக ரஞ்சித்தை கொண்டாடினார்கள்.

ஆயிரம் ஆண்டுகாலமாக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்த ஒருவர் வெற்றியாளராக நிற்கும்போது அவரை, அவர் சார்ந்த சமூகம் கொண்டாட நினைப்பது இயல்பான ஒன்றே. தங்களை ஒடுக்க நினைக்கும் போதெல்லாம், தங்களுக்குக் கெதிரான வன்முறைகளைக்  கட்டவிழ்க்கும் போதெல்லாம் சாதிய சினிமாப் பாடல்களை ஒலிக்கவிடும் ஆதிக்க சாதியினரின் செயல்கள், தங்களுக்காகவும் தங்களை பிரதிநிதிப்படுத்தவும் ஒருவர் வந்திருக்கிறார் என உவகை கொள்வது இயல்பாக நடக்கக் கூடிய ஒன்றுதான். நமக்காக ஒருவர்,  என்கிற நினைப்புக்கும் நாம்தான் எல்லாம் என்கிற நினைப்புக்கு பாரதூர வித்தியாசம் இருக்கிறது. ஒடுக்கும் சாதியின் பெருமையை பதிவு செய்யும் சினிமாவுக்கும் ஒடுக்கப்படும் சாதியின் வாழ்வியலை பேசும் சினிமாவுக்குமான வித்தியாசமாக அதைச் சொல்லலாம்.

ஆனால், இங்கே நடப்பது என்ன? தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகர், அவருக்காக திரையுலகமே ஏங்கிக் காத்துக்கிடக்கும், நடிகர் ரஜின்காந்தை வைத்து ‘தலித்’ இயக்குநர் பா. ரஞ்சித் படம் இயக்குகிறார். முந்தைய படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக வாழ்வியலையும் அரசியலையும் காட்சிப் படுத்திய ரஞ்சித், இந்தப் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லா மட்டங்களிலும் இருக்கத்தான் செய்தது. ட்ரெய்லர் வந்தது, ‘கபாலின்னா முறுக்கு மீசை, மச்சத்தை வெச்சிக்கிட்டு, கூப்ட உடனே சொல்லுங்க எஜமான்னு வந்து நிப்பேன்னு நினைச்சியா? கபாலிடா’ என்ற வசனங்கள் அனலைக் கிளப்பின.  சமூக ஊடகங்களில் அறிவுஜீவிகள் கபாலியின் குறியீட்டைப் பற்றி பேசி சிலாகித்தார்கள். இதுஒரு கொண்டாட்ட மனநிலைதான். அதுவே முகநூலில் இயங்கும் சாதிய குழுக்களை கிளப்பிவிட்டிருக்கலாம்.

கபாலி பாடல்கள் வெளியானபோது ஒரு பாடலில் ஒலித்த ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என்று வருவதை வைத்து மிகப் பெரிய சர்ச்சை முகநூலில் எழுந்தது. இந்த வரியை வைத்து பா. ரஞ்சித்தின் சாதியுடன் பிணைத்து வன்மமாக எழுதினார்கள். ‘பற’ என ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புது பொருள் தந்தார்கள். அவர் சார்ந்த சாதி மக்களின் தொழிலுடன் தொடர்பு படுத்தி இவரும் அந்த வேலைகளுக்குத்தான் லாயக்கு என்று எழுதினார்கள். வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அத்தனை தகுதியும் இந்தப் பதிவுகளை எழுதியவர்கள் கொண்டிருந்தார்கள். சில நடுநிலைமைவாதிகள் ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என இவர்களும் வன்முறைப் பாதையை கையில் எடுப்பதா என்றார்கள். ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெப்போம்’ என அடிமைத்தனத்தை பெருமிதத்துடன் சொன்ன பாடல்களையெல்லாம் நீங்கள் ரசிக்கவில்லையா? ஆண்டைகளின் கதை முடிப்பான் என்ற வரிகள் ஏன் உங்களை கதி கலங்க வைக்கின்றன என்று முற்போக்குவாதிகள் சிலர் பா. ரஞ்சித்தின் தரப்பில் பேசினார்கள்.

இப்படியாக விவாதங்கள் கனன்று கொண்டிருக்கும் வேளையில், நமக்கு ஒரு அடிப்படையான கேள்வி எழுகிறது? நாம் எப்போது கலைஞர்களிடம் சாதி பார்க்க ஆரம்பித்தோம்? நம்முடைய பொழுதுகளை இனிமையாக்கும், நம் துயரங்களை தங்கள் திறமையால் சில மணிநேரங்கள் மறக்க வைக்கும் சினிமா கலைஞர்களுக்கு சாதி சாயம் பூசுவது சரியானதுதானா? உங்கள் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் உங்களுக்கு எதிரான சமூகத்தின் பெருமை பேசினார்/ பேசுகிறார் என்பதற்காக, அவரை ஒதுக்கினீர்களா/ஒதுக்குவீர்களா? அப்படித்தான் பா. ரஞ்சித்தையும் ஒரு கலைஞனாகப் பாருங்கள், அவருடைய சாதியைப் பார்க்காதீர்கள்!

ஜூன் மாதம் இதழ் ஒன்றில் எழுதியது.