சென்னையின் பெருமழையில் ஒரு பயணம்

CUgc0EpWUAAWjAk

நுங்கம்பாக்கத்தில் தேங்கிய நீரில் நீந்திச் செல்லும் பேருந்து

சென்னை மக்கள் திங்கள்கிழமை(23-11-2015) இரவை ஆயுசு முழுக்கவும் நினைவில் வைத்துக் கொள்வார். அப்படியொரு அனுபவம்; கொட்டித்தீர்த்த பெருமழையும் நகர முடியாமல் திணறிய வாகனங்களும் திங்கள் இரவை பேரிடர் நேர அனுபவமாக்கிவிட்டன.  அதிகபட்சம் ஒரு மணிநேரத்தில் போய் சேர்ந்துவிடக்கூடிய தொலைவில் இருக்கும் வீட்டுக்கு நான்கரை மணி நேரத்தில் போய் சேர்ந்தேன்.

விடாது துரத்திய மழையும், வழி நெடுக மக்கள் பட்ட பாடுகளும் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் நிறைந்துவிட்டன.  குறிப்பாக பெண்களின் அவஸ்தைகளை சொல்லியே ஆக வேண்டும். அதிகாலை 1 மணிக்கு, 4 மணிக்கு வீடு போய்ச் சேர்ந்த பெண்களின் அனுபவங்களைக் கேட்டபோது அவர்கள் மேல் அனுதாபம் கூடியது.

எனக்கிருந்த ஒரே பிரச்சினை என் மகன் பசியோடு காத்திருந்தான் என்பதுதான். ஒவ்வொரு அரை மணிநேரத்துக்கும் அவனைத் தொடர்பு கொண்டு ‘இதோ வந்துவிட்டேன்’ என சமாதானப்படுத்திக் கொண்டே இருந்தேன். ஒவ்வொரு முறையும் ‘நீ போம்மா அப்படித்தான் சொல்லுவ’ என்று சலித்துக்கொண்டு இணைப்பைத் துண்டிப்பான்.

பசிக்கிறதே என்று பிஸ்கெட் பாக்கெட்டுகளை பிரிக்கப் பார்த்து அதை பிரிக்கத் தெரியவில்லை என்றான். மனம் வலித்தது.  நல்லவேளையாக உணவகத்தில் தோசை கிடைத்தது. இருவரும் சேர்ந்து உண்டபோது மணி 11 ஆகியிருந்தது.

என் நிலைமை பரவாயில்லை என்றே தோன்றுகிறது. இரவு 1 மணி, 4 மணிக்கெல்லாம் வீடு போய் சேர்ந்தவர்களின் குழந்தைகள் எப்படி உண்டிருப்பார்கள்?  பெண் தான் வீட்டுக்கு வந்து சமைக்க வேண்டும்; குழந்தைகளுக்கு உணவிட வேண்டும் என்கிற நிலை இந்தக் காலத்திலும் நீடிப்பது சரிதானா? ஆண்கள் எப்போது தங்கள் வீட்டுப் பெண்களின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள்?

பெருமழையும் திங்கள்கிழமை இரவின் அசாதாரண பயணச் சூழலும் நீண்ட நாட்களாக எனக்குள் இருந்துகொண்டிருக்கும் இந்தக் கேள்விகளை  மீண்டும் கிளறிவிட்டிருக்கின்றன!

காய்கறித் தேவையை தீர்த்துவைக்கும் வீட்டுத்தோட்டம்

DSCN0954

மழைக்காலத்தில் காய்கறித் தேவையை தீர்த்துவைக்கும் வீட்டுத்தோட்டம் போடலாம். ஆலோசனை தருகிறார் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில்…

வடகிழக்குப் பருவமழை ஆரம்பமாகிவிட்டது. வறண்டு போயிருந்த நிலமெங்கும் பச்சை வண்ணம் போர்த்த ஆரம்பிக்கும். இந்தக் காலமே வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைக்க ஏற்ற காலம். சத்துமிக்க மழைநீர் செடிகளின் வளரும் திறனை ஊக்குவிக்கும். பருவநிலையில் செடிகளின் வளர்ச்சியைப் பராமரிக்கும். இதற்குப் பிறகு வரும் நான்கு மாதங்கள்தான் சென்னை போன்ற நகரங்களில் காலநிலைக்கு செடிகளை வளர்க்கக்கூடியதாக இருக்கிறது. கொளுத்தும் வெயில் நேரங்களில் செடிகளின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படுகிறது, பசுமை குடில்கள் அமைத்துதான் பாதுகாக்கப்பட வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, பருவம் பார்த்து பயிர் செய் என்பதற்கேற்ப இந்தக் காலக்கட்டத்தை வீட்டுத்தோட்டம் அமைப்பது அதன் மூலம் சிறிய காலக்கட்டத்திற்காவது ரசாயனங்கள் அற்ற காய்கறிகளை விளைவித்து உண்ணலாம்.

வீட்டுத்தோட்டம் போடும் முன் இது அவசியம்!

வீட்டைச் சுற்றியிருக்கும் நிலத்திலேயோ அல்லது மாடியில் தொட்டிகள் அமைத்தோ தோட்டம் அமைக்கலாம். இரண்டில் எது செய்வதனாலும் நிலத்தைவிட அரை அடி அளவுக்கு உயரத்தை உயர்த்தி அதன்மேல் தோட்டம் அமைக்க வேண்டும்.

மாடியில் செங்கல்லை அடுக்கி அதன் மேல் தொட்டிகள் அமைக்க வேண்டும். அதுபோல தரையில் மேல் மண்ணை நன்றாகக் கொத்திவிட்டு, அதை மேடாக அமைத்து பாத்தி போல உருவாக்க வேண்டும்.

விதைகள் நடும் முன் கட்டாயம் இதைச் செய்யுங்கள்!

விதைகள் அல்லது செடியை நடும் முன் தொட்டி மண்ணிலும் தரை மண்ணிலும் எருவைக் கலந்து வைக்க வேண்டும். மண்புழு உரம் அல்லது இயற்கை உரங்களை பயன்படுத்துவதே நலம். வீட்டுத் தோட்டம் அமைப்பதன் நோக்கமும் அதுதானே. அடுத்து, விதைகள் அல்லது செடி நடும் முன் நடவேண்டிய இடத்தில் சிறிதளவு சாம்பல் போடுவது நலம். சாம்பல் கிடைக்காதவர்கள் கடைகளில் கிடைக்கும் வறட்டியை எரித்து சாம்பலாக்கி பயன்படுத்தலாம். சாம்பலில் பொட்டாசியம், நைட்ரஜன் சத்துக்கள் அதிகம். இவை செடிகளின் முதல் கட்ட வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.

மூடாக்குப் போடுங்கள்!

காய்ந்த இலை, தழைகளை நட்ட விதைகளின் மேல் மூடாக்காகப் போடுங்கள். இந்த சருகுகள் மக்கி மண்ணில் நுண்ணுயிர்களை அதிகப்படுத்தும். நுண்ணுயிர்கள் மண் வளத்துக்கு அவசியமானவை. மண் வளமாக இருந்தால் செடியும் வளமாக வளரும்.

வீட்டிலேயே பயிர் வளர்ச்சி ஊக்கி தயாரிக்கலாம்

இப்போது பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இயற்கை முறையில் பயிர் வளர்ச்சி ஊக்கிகளை தயாரிக்கலாம். வீட்டில் பழுத்து வீணான பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது நன்கு பழுத்த பழங்களையும் எடுத்துக்கொள்ளலாம். அதில் சம அளவு வெல்லத்தைச் சேர்த்து நன்றாகக் கரைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கரைசலை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு 15 நாட்களுக்கு அடைத்து வையுங்கள். இந்தக் கரைசல் நுரைத்து வாயு வெளியேறும் அதனால் அவ்வவ்போது திறந்து மூடி வையுங்கள். 15 நாட்களுக்குப் பிறகு தெளிந்த கரைசல் உருவாகியிருக்கும். இந்தக் கரைசலை தேவையான நேரங்களில் சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலந்து செடிகளுக்குத் தெளிக்க வேண்டும். இதைப்போல தூக்கி எறியும் வீணான மீன் பாகங்களை வைத்து, இதேபோல் மீன் அமினோ கரைசல் தயாரிக்கலாம்.

தோட்டத்தில் என்னென்ன செடிகள் நடலாம்?

அடிக்கடி வீட்டில் உபயோகப்படுத்தும் தக்காளி, மிளகாய் போன்ற செடிகளை நடலாம். கத்தரி, வெண்டை, சுண்டைக்காய் போன்ற செடிகளை நடலாம்.

பூச்சிகள் வந்தால் என்ன செய்வது?

சத்துக்கள் கொடுத்தாகிவிட்டது; செடியும் வளர்ந்தாகிவிட்டது; பூச்சிகள் வந்தால் என்ன செய்வது? வேப்ப எண்ணெய்யுடன் சோப்பு கலந்தால் வெண்மையான கரைசல் உருவாகும். நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்… இந்தக் கரைசலை நீரில் கலந்துதான் செடிகள் மேல் தெளிக்க வேண்டும். செடிகள் மேல் தெளிப்பதற்கு முன் ஒன்றிரண்டு இலைகளில் அடித்து நான்கைந்து மணிநேரம் காத்திருங்கள். இலைகள் கருகாமல் இருந்தால் செடிகளுக்குத் தெளிக்கலாம். கருகினால் மேற்கொண்டு அந்தக் கரைசலில் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும்.

சாம்பாரும் ரசமும் மட்டுமல்ல, மாட்டிறைச்சியும் தமிழர் உணவுதான்

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம், உணவு எதையும் வெகுஜென ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. சாம்பாரும் ரசமும் தான் தமிழர்களின் பொது உணவாகியுள்ளது. சாம்பாரும் ரசமும் போலத்தான், இறைச்சியும் தமிழர்களின் உணவே. பத்தாண்டு கால ஊடக பணியில் முதன்முறையாக மாட்டிறைச்சி ரெசிபியை எழுதியிருக்கிறேன்.

கேரள சமையலில் மாட்டிறைச்சிக்கு முக்கியமான இடம் இருக்கிறது. ஆனால் தமிழக நடுத்தர மக்கள் மனதில் மாட்டிறைச்சி உண்பதில் பல மனத்தடைகள். தமிழகத்தில் 40சதவீதத்துக்கும் மேற்பட்ட வளர் இளம் பருவத்தினர் எடை குறைவு மற்றும் இரும்புச் சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வேகமான வாழ்க்கைச் சூழலில் பச்சைக்காய்கள் உண்பது மட்டும் அத்தனை சத்துக்களையும் தந்துவிடும் என்று நம்புவது மடமை. பண்ணைக் கோழி இறைச்சி உண்பதால் ஹார்மோன் மாற்றம், அதிக உடல் எடை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் சூழலில் விலை அதிகமான ஆட்டிறைச்சியையும் வாங்க முடியாத சூழல் நடுத்தர வர்க்க மக்களுக்கு இருக்கிறது. இதற்கொரு சிறந்த தீர்வு மாட்டிறைச்சி. வாரம் ஒரு முறையேனும் மாட்டிறைச்சி உண்பது, எடை இழப்பையும் சத்துக் குறைபாட்டையும் சரிசெய்ய உதவும்.

மாட்டிறைச்சியில் எல்லாவிதமான உணவுகளையும் தயாரிக்கலாம். கேரளாவில் மாட்டிறைச்சியில் ஊறுகாய்கூட தயாரிக்கிறார்கள். நாம் மாட்டிறைச்சியில் பிரியாணி செய்வது எப்படி என்று முதலில் பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்:

பாசுமதி அரிசி – அரை கிலோ
மாட்டிறைச்சி – அரை கிலோ
தக்காளி – 3
வெங்காயம் – 3
பச்சை மிளகாய்- 2
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு மேசைக் கரண்டி
பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் – தலா இரண்டு
மிளகாய்த்தூள் – இரண்டு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை- ஒன்றரை கைப்பிடி
புதினா இலை – ஒரு கைப்பிடி
தயிர் – அரை கப்
கல் உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

செய்வது எப்படி?

மாட்டிறைச்சியைக் கழுவி, சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் ஆறு விசில் வரை விட்டு வேகவைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

பாசுமதி அரிசியைக் கழுவி, அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களின் அளவுக்கேற்ற குக்கரை தேர்ந்தெடுத்து அடுப்பில் வைத்து சூடாக்கவும். அடுப்பில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை உள்ளிட்ட வாசனைப் பொருட்களைப் போடவும். பிறகு, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். இதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வாசனை மாறும் வரை வதக்கவும். பிறகு, தக்காளி, கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து தக்காளி குழைய வேகும்வரை வதக்கவும். இதில், தயிர்,கல் உப்பு, மிளகாய்த் தூள் போட்டு நன்றாகக் கிளறவும். இதனுடன் வேகவைத்த கறியைப் போட்டு ஒரு கொதிவரும் வரை வேகவிடவும்.

கொதி வந்தவுடன் ஊறவைத்த பாசுமதி அரிசையைச் சேர்த்து, லேசாகக் கிளறி, இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு குக்கரை மூடி போட்டு மூடவும். இரண்டு விசில்கள் போதும். சுவையான பிரியாணி தயார்!

வெள்ளரிக்காய் பச்சடி:

மாட்டிறைச்சி பிரியாணியுடன் வெள்ளரிக்காய் பச்சடியைச் சேர்த்து உண்ணலாம். தயிரில் வெள்ளரிக்காயைப் பொடியாக அரிந்துப் போட்டு, உப்புச் சேர்த்தால் வெள்ளரிக்காய் பச்சடியும் தயார்.

இன்னுமொரு ’சிறந்த பட்டியல்’!

News reader Poonguzhali

தமக்குத் தெரிந்தவர்கள், தமக்குத் தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் என தன் சுயத்தை சுற்றியிருப்பவர்களை மட்டும் பட்டியல் போடுவது எழுத்தாளர்கள், ஊடகக்காரர்களின் வழக்கமாகிவிட்டது. நியூஸ் மினிட் பட்டியல் எதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது எனத் தெரியவில்லை. பட்டியலில் உள்ளவர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்தான்.

ஆனால், பு.தலைமுறையின் ஜென்ராம், நியூஸ் 7 செந்தில், விஜயன் இவர்களின் பங்களிப்பை இந்தப் பட்டியல் புறக்கணித்துள்ளது. பூங்குழலி, வெங்கட பிரசாத்தின் மனைவி என்ற அளவிலே சுருக்கப்பட்டிருக்கிறார். பூங்குழலியின் தமிழ் உச்சரிப்பும் எளிமையும் என்னை மிகவும் ஈர்த்தவை. நியூஸ் 7 செந்தில், விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முன் அந்த தலைப்பு சார்ந்து உழைப்பது அவர், பங்கேற்பாளர்களிடம் முன்வைக்கும் கேள்விகளால் தெரிகிறது. எல்லா நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் கேள்வி எழுப்புகிறார்கள், மடக்குகிறார்கள். ஆனால் செந்திலின் கேள்விகளில் எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மேதைமை இருப்பதில்லை.

அதுசரி, ஏன் பிரைம் டைம் விவாத நிகழ்ச்சிகளை பெண் தொகுப்பாளர்கள் யாரும் தொகுப்பதில்லை? தொலைக்காட்சிகளிலும் பெண்ணுக்கு சமையல், சேமிப்பு, கல்வி, விவசாயம், விளையாட்டு என்கிற சஃப்டான துறைகள் மட்டும் ஒதுக்கப்படுவதன் பின்னணி என்ன?
பெண் தொகுப்பாளர்களுக்கு சர்ச்சையான அரசியல், சமூக விவாதங்களை தொகுக்கும் திராணி இல்லை என்று ஊடகங்கள் ஒதுக்குவதாக எடுத்துக் கொள்ளலாமா?

ஊடகப்பெண்களை சமையலறைக்கு துரத்தும் அராஜக ஆணாதிக்க கும்பல்!

சமீபத்தில் ஐந்தாண்டுகள் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவமுள்ள ஒரு பெண் பத்திரிகையாளர், தன்னுடைய பணியினை ராஜினாமா செய்யும் பொருட்டு மும்முரமாக இருந்தார். இன்னொரு நிறுவனத்திலிருந்து தற்சமயம் பணியாற்றிக்கொண்டிருந்த நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாதங்களே கழிந்திருந்த நிலையில்,அவருடைய ராஜினாமா சக ஊழியர்கள் மத்தியில் துப்பறிவதற்கும் விவாதிப்பதற்கும் உரிய விஷயமாக இருந்தது.
“என்னுடைய வருங்கால கணவருக்கு நான் வேலைக்குப் போவது பிடிக்கவில்லை” என்று தன்னுடைய நிலையை அவர் கூறியபோது ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது என்னவோ உண்மைதான். அதற்கு பின்னணியில் இருக்கும் நிதர்சனத்தை உணர்ந்தபோது அவர் எடுத்த முடிவும் சரி என்று தோன்றியது. தீர்க்கமான சிந்தனையோடு செயல்பட்டவராக இல்லாதபோதும், நேர்மையானவராகவும் பணியில் அக்கறை காட்டுபவராகவும் இருந்த அவருடைய இருப்பு முக்கியமானதாகவே கருதமுடியும். அவர் பத்திரிகையாளராக தொடர்ந்து இயங்கியிருக்கும் வேளையில், காலம் அவரது சிந்தனையையும் செயலையும் கூர்த்தீட்டியிருக்கலாம்.
ஆனால் அவர் ஒரு பெண் என்பதாலேயே பணியிடங்களில் அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களும் நிலை குலையச் செய்த கிசுகிசுக்களும் அவரை திருமணத்தின் பெயரில் பத்திரிகை துறையிலிருந்தே வெளியேறும் முடிவை நோக்கி தள்ளியிருக்கின்றன. இன்று அவர் பத்திரிகை துறையிலிருந்தே ஒதுங்கிப்போய் விட்டார். இது ஏதோ தனிப்பட்ட ஒருவரைச் சார்ந்த நிகழ்வாக நினைத்து ஒதுக்கிவிட முடியாது. கனவுகளோடும் நம்பிக்கையோடும் ஊடகத்துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் பல பெண்கள் அவநம்பிக்கையோடு வெளியேறியதன் பின்னணியை விவாதத்திற்கு உட்படுத்துவதும் பதிவு செய்வதும் உடனடியாக செய்தாக வேண்டிய பணியாகும். பத்திரிகையாளராக ஐந்தாண்டு கால அனுபவத்திலும் தமிழ் ஊடகங்களில் சகபணியாளர்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான அவதூறுகளை அத்துமீறல்களை எழுதுவது மற்ற எல்லாவற்றையும்விட அவசியமானதாகவே கருதுகிறேன்.

ஒரு பெண் பத்திரிகையாளர் மாற்றுச் சிந்தனையும் அரசியல் ரீதியிலான புரிதலும் உள்ளவராக இருந்தாலும் தமிழ் ஊடகங்களில் சமையல் குறிப்பு எழுதுவதற்கும் நடிகைகளின் ஆடை,அணிகலங்களை சிலாகிப்பதற்கும்தான் பணிக்கப்படுவார். அதிகபட்சமாக அரசியல்வாதிகளின் மனைவிகளை பேட்டி காணும் வாய்ப்பு கிட்டலாம்! பெண்ணின் பணிகளாக ஆணாதிக்கத்தால் உருவான இச்சமூகம் ஆண்டாண்டு காலமாக சொல்லிவரும் சமையல், வீட்டுப்பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றின் மெருகேற்றப்பட்ட வடிவங்கள் இவை. சமூகம் எப்படி இதையெல்லாம் மீறி வரக்கூடாது என்கிறதோ, அதையேதான் ஆணாதிக்க சிந்தனை பீடித்த ஊடகவாதிகளும் (அரசியல்-புலனாய்வு இதழ்களில் “பாதுகாப்பு” என்ற காரணம் காட்டி பெண்கள் அத்தகைய இதழ்களில் பணியாற்ற மறுக்கப்படுவதை இந்த பின்னணியில் வைத்துப்பார்க்க வேண்டும்) ஊடக பெண்களிடம் எதிர்ப்பார்க்கிறார்கள். இதை எதிர்க்கும் பெண் ஆசிரியர் குழுவால் திட்டமிட்டு ஒதுக்கப்படுவார். ஒருகட்டத்தில் மனஉளைச்சலுக்கு ஆளாகி பத்திரிகை துறையிலிருந்து ஒதுங்கிவிடுவார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் ஊட்டும்படியான மாற்றுச்சிந்தனையோடு ஒன்றிரண்டு கட்டுரைகளோடு காணாமல்போன பத்திரிகையாளர்கள் குடும்பம் என்னும் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போயிருப்பதை கண்கூடாகப்பார்க்க முடிகிறது.
இது ஒருபுறம் இருக்க சுயசிந்தனையும் ஊடகம் குறித்த புரிதலும் இல்லாத பெண்களுக்கு தமிழ் ஊடகங்களில் சிறப்பான வரவேற்பு கிடைப்பதையும் பார்க்க முடிகிறது. ஆண்களைப்போல சிந்திப்பதற்கும் ஆண்களின் ரசனைக்கேற்ப தங்களுடைய எழுத்தை வடிவமைத்துக்கொள்ளவும் இந்தப் பெண்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். சராசரி வாசகனும்கூட எழுதியவர் ஒருபால் விருப்பம் கொண்டவரோ என்று நினைக்கும் அளவுக்கு பெண் உடல் குறித்த கிளர்ச்சியூட்டும் வர்ணனைகள் வரும்படி அவர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள். தமிழ் மாத,வார,நாளிதழ்களைப் படிக்கும் எவருக்கும் இந்த முரண்பாடு தெளிவாகவே புரியும்.
குடும்பம், அரசியல் உள்ளிட்ட சமூகத்தின் மற்ற தளங்களில் பெண் எப்படி, ஆணின் சிந்தனைகளை உள்வாங்கி அதை செயல்படுத்தும் கருவியாக இருக்கிறாளோ அதைப்போலவே ஊடகப்பெண்ணும் செயல்படுகிறாள். அவளை அப்படியே வைத்திருப்பதில்தான் ஆணாதிக்கத்தின் இடம் தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. இப்படி சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட பெண்களே பாலியல் ரீதியிலான சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள். அறிவையும் உணர்வையும் அடிப்படையாகக் கொண்ட பணியில் உடல் முன்னிறுத்தப்படுகிறது. வழமையாக பெண்ணின் உடல் முன்னிறுத்தப்படும்போது கட்டமைக்கப்படும் அதிகாரம் இங்கேயும் நிகழ்கிறது. உடல் அதிகாரத்தை கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் ஆணின் செயல்பாடு ஒரு பெண்ணோடு நின்று விடுவதில்லை. அது ஒரு தொடர்கதை.

குறுஞ்செய்தியோடு ஆரம்பிக்கும்,பிறகு உடல் சமிக்ஞைகள், இரட்டை பொருள்தரும் பேச்சு, தான் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்று அதிகாரத்தை காட்டுவது எதற்கும் வளையவில்லை எனில் பிரச்சினை ஆரம்பிக்கும். அடிமையைவிட கேவலமாக நடத்துவார்கள், அல்லது அலுவலக மேசையைப்போல அசையாத பொருளாக வைத்திருப்பார்கள். வளைந்து கொடுத்தால் பதவி உயர்வுகளும் இன்னபிற அங்கீகாரங்களும் தேடிவரும். அதிகாரத்தை கை கொண்டவனின் வழி இதுவெனில் இயலாமையில் துடித்துக்கொண்டிருக்கும் அவனுக்கு கீழ உள்ளவர்களின் பணி சுற்றி உள்ள பெண்கள் குறித்து அவதூறுகள் சொல்வதும் கிசுகிசுக்களை புனைவதும்தான். ஊடகங்களில் தங்களை ப்ரோ பெமினிஸ்டு(Pro-Femenist)களாக காட்டிக்கொள்ளும் பலரது முழு நேர பணியே இதுதான்.
இத்தகைய சுரண்டலையும் அவதூறுகளையும் சகிக்க முடியாத எந்த பெண்ணும், அவள் அறிவு ரீதியாக பலமானவளாக இருந்தபோதும் அவளது முடிவு ஊடகத்தை விட்டு ஒதுங்குவதாகத்தான் இருக்கும். ஒதுங்குதலும் ஒதுக்குதலும் இயல்பாக நடந்தேறியபின் ஆணாதிக்கம் எக்காளமிட்டுச் சிரிக்கும்!