சரஸ்வதி நதி… புராணங்களில் சொல்லப்படும் நதி. ரிக் வேதத்தில் சில இடங்களில் சரஸ்வதி நதி பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. புனித நதியாகக் குறிப்பிடப்படும் சரஸ்வதியைத் தேடி, இந்துத்துவவாதிகள் இப்போது கையில் செம்பட்டியும் கடப்பாரையுமாக களம் இறங்கியிருக்கிறார்கள்.
ஹரியாணாவை ஆண்டுகொண்டிருக்கும் பாஜக அரசும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, புராண நதியை நிஜத்தில் தேட பல கோடி ஒதுக்கி, பூமியைத் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சாமியார் உமா பாரதி, 2014-ஆம் ஆண்டு சரஸ்வதி நதியைக் கண்டுபிடிப்பதில் அரசு தனிச் சிரத்தையுடன் நடந்து கொள்ளும் என்று தெரிவித்தார்.
ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் (முஸ்லீம்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்றால் மாட்டுக்கறி உண்பதை நிறுத்த வேண்டும் என்றாரே,அவரேதான் ) கடந்த பிப்ரவரி மாதம், சரஸ்வதி நதியைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். அதன்படி மே மாதம், ஒரு இடத்தில் ஆய்வுக்குழுவினர், தோண்டிக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் தண்ணீர் வந்தது, உடனே சரஸ்வதி நதி கண்டறியப்பட்டு விட்டது என்று குதூகலித்தனர். அந்த இடத்தை வணங்க ஆரம்பித்தார்கள்.

சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையாக, இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தை நிறுவும் பொருட்டு இந்துத்துவவாதிகள் சரஸ்வதி நதியைத் தேடும் பணியைச் செய்துவருவதாக காட்டமான விமர்சனம் வைக்கிறார் வரலாற்று அறிஞர் இர்பாஃன் ஹபீப்.
ஹரியாணா அரசின் கூற்றுப்படி சரஸ்வதி நதி, இமயமலையில் உற்பத்தியாகி, ஹரியாணா வழியில் பாய்ந்து அரபிக் கடலில் கலந்ததாம். ஆனால் தொல்லியல் ஆய்வாளர்களும் வரலாற்று அறிஞர்களும் இப்படியொரு நதி, இந்தப் பாதையில் கடந்த 10ஆயிரம் ஆண்டுகளில் பாய்ந்திருப்பதற்கான எந்தச் சுவடும் இல்லை என்கிறார்கள். நதியல்ல, ஓடை ஓடியதற்கான சான்றுகூட இல்லை என்கிறார்கள்.
ஆனாலும், ஹரியாணா அரசு பின்வாங்குவதாக இல்லை. நிலத்தை ஆழமாகத் தோண்டும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. தோண்டிய பிறகு, நதி எதுவும் கிடைக்காவிட்டாலும் செயற்கையாக ஒரு நதியை உருவாக்கும் மாற்றுத் திட்டத்தை இவர்கள் வைத்திருக்கிறார்கள். ஹரியாணாவின் யமுனா நகர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு தோண்டி ஒரு ‘நதி’ப் பாதையை உருவாக்கியிருக்கிறார்கள். தொலைவில் உள்ள நீர்த்தேக்கத்திலிருந்து இந்த இடத்துக்கு நீரைக் கொண்டு வந்து சரஸ்வதி நதியாக ஓட விடுவார்களாம். சரஸ்வதி நதி நாகரீகம் மிகப் பழமையான நாகரீகம் என உலகத்துக்கு காட்டுவதற்கான ஏற்பாடு இது என்கிறது அரசு.
கடந்த 2014-ஆம் ஆண்டு மருத்துவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “யானையின் தலையுடன் விநாயகரின் தலையை ஒட்ட வைத்து அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அறிவியலில் முன்னோடியாக நமது முன்னோர்கள் திகழ்ந்திருக்கிறார்கள்” என்று பேசினார். ஒரு நாட்டின் பிரதமரே அறிவியலுக்கும் புராணத்துக்கும் வேறுபாடு தெரியாமல் பேசும்போது, அவர் வழி வந்த ஒரு மாநில அரசு இல்லாத நதியைத் தேடுகிறோம் என்று பூமியைக் குடைகிறது.
இல்லாத நதியைத் தேடுவதில் காட்டும் அக்கறை ‘இந்து’க்களின் பாவங்களைப் போக்கும் நதிகளாக போற்றப்படும் கங்கை, யமுனை இன்னும் பல இந்திய நதிகளைக் காப்பாற்றுவதில் ஏன் காட்டுவதில்லை? அதன் பெயர்தான் இந்துத்துவ அரசியல்!
Bloomberg.com ல் வந்த கட்டுரை அடிப்படையாகக் கொண்டு எழுதியது.
தினச்செய்தி(30-12-2015) நாளிதழில் வெளியானது.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...