சாகித்ய அகாடமியை துறக்க தமிழ் எழுத்தாளர்கள் ஏன் முன்வரவில்லை?

Shashi Deshpande

பகுத்தறிவுவாதிகள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோரும் தாத்ரியில் முகமது அக்லாக்கும் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தனது சாகித்ய அகாடமி விருதை திரும்ப ஒப்படைத்தார் பிரபல எழுத்தாளர் நயன்தாரா செகல். இதேபோன்று கவிஞர் அசோக் பாஜ்பாயியும் விருதினை திருப்பி அளித்தார்.

பகுத்தறிவாளர் கல்புர்கி கொலை உண்டதை அடுத்து, இதன் பின்னணியில் இருக்கும் இந்துத்துவ அரசியலைக் கண்டித்து, கர்நாடகாவில் ஆறு எழுத்தாளர்கள் மாநில அரசு தங்களுக்குக் கொடுத்த விருதினை திருப்பி அளித்திருக்கிறார்கள்.

பகுத்தறிவுக்குப் பெயர்போன தமிழகத்தில் சாதியமும், மத சகிப்பின்மையும், உணவு அரசியலும் அதிகரித்துவரும் வேளையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களும் தங்களுடைய எதிர்ப்பை மத்திய அரசுக்குக் காட்டுவார்களா? என்கிற விவாதம் சமூக வலைத்தளங்களில் எழுந்திருக்கிறது.

மோடியின் முகத்தில் இந்த விருதை விட்டெறியும் எழுத்தாளர்களுக்கு, அந்த விருதுடன் தரப்படும் பணத்தை தாங்கள் உண்டியல் ஏந்தி வசூலித்துத் தருவதாக அறிவித்திருக்கிறார்கள் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த கருணாவும்.

“தமிழ்நாட்டில் நேரடி படைப்புக்காகவும் மொழிபெயர்ப்புக்காகவும் 12 பேருக்கும் மேல் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார்கள். மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் உணவு உரிமைக்குள் உள்ள தலையீட்டைக் கண்டித்தும் அறவுணர்வோடு நியாயமான கோபத்தை, எதிர்ப்பை இவர்கள் விருதை திருப்பித் தருவதன் மூலம் காட்டலாம்” என்கிறார் ஆதவன் தீட்சண்யா.

இந்நிலையில் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி தன்னுடைய முகப்புத்தகத்தில், “மோடி அரசின் மதவெறி ஆதரவைக் கண்டித்து நயன்தாராவும் அசோக் பாஜ்பாயியும் சாகித்ய அகாதமி விருதுகளை திருப்பித் தந்ததைப் பாராட்டும் தமிழக முற்போக்குத் தோழர்கள் பாராட்டுவது போதாது. தமிழக இடதுசாரி எழுத்தாளர்கள் சு.வெங்கடேசன் முதலானோரையும் விருதைத் திருப்பித்தரச் சொல்லவேண்டும்” என்று எழுதியிருக்கிறார்.

இதுகுறித்து, முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ச. தமிழ்ச்செல்வனிடம் பேசியது.

“சாகித்ய அகாடமி விருதை இந்த எழுத்தாளர்கள் திருப்பித் தந்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், நாங்கள் இதை ஒரு போராட்ட வடிவமாகப் பார்க்கவில்லை. வகுப்புவாதத்துக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். சாதியத்தால் தாக்குதலுக்குள்ளான எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக வழக்குத் தொடுத்து போராடியதும் நாங்கள்தான். அத்தனை போராட்ட வடிவங்களிலும் நாங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறோம். இந்தப் போராட்ட வடிவங்களில் தங்கள் எதிர்ப்பைக் காட்ட முடியாதவர்கள், விருதைத் திருப்பித் தந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

கல்புர்கி படுகொலை தொடர்பாக கிட்டத்தட்ட 100 இடங்களில் தெருமுனை கூட்டம் நடத்தியிருக்கிறது தமுஎச. அதனால் அமைப்பு ரீதியாக விருதைத் திருப்பித் தரும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதில்லை. சாகித்ய அகாடமி மட்டுமல்ல, மத்திய அரசின் விருதுகள் அனைத்து துறையினருக்கும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் எழுத்தாளர்களை மட்டும் திருப்பித் தர வலியுறுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை, ஏனென்றால் நாங்கள் இந்த விஷயங்களுக்காக எப்போதுமே போராடிக்கொண்டுதானே இருக்கிறோம். ஒருவேளை எங்கள் அமைப்பைச் சேர்ந்த, சாகித்ய அகாடமி விருது பெற்ற மூவரும் விருதைத் திருப்பித் தர முன்வந்தால் வரவேற்போம். அவர்களால் பணமுடிப்பை திருப்பித் தர இயலாதபட்சத்தில் அந்த பணத்தை நாங்கள் தரவும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற சில எழுத்தாளர்களை இதுகுறித்து கருத்து கேட்க அணுகியது. சிலர் இதுப்பற்றி வேண்டாமே என்று சொன்னார்கள். சிலர், பிறகு நானே கூப்பிடுகிறேனே என சொல்லி அழைப்பைத் துண்டித்தார்கள்.

 

 

“கருத்து வேற்றுமைகளை துப்பாக்கி குண்டுகள் தீர்க்காது”

நீண்ட மவுனம் என்கிற தன்னுடைய படைப்புக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர் கர்நாடகாவைச் சேர்ந்த சசி தேஷ்பாண்டே. சாகித்ய அகாடமியின் பொதுக் குழு உறுப்பினரான இவர், பேராசிரியரும் எழுத்தாளருமான எம். எம். கல்புர்கி கொலையைக் கண்டிக்காமல் சாகித்ய அகாடமி மவுனம் காக்கிறது என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து சாகித்ய அகாடமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “2012-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு என்னை பரிந்துரைத்தபோது, நான் சிறப்பிக்கப்பட்டதாக உணர்ந்தேன். சாகித்ய அகாடமியின் பணியை நான் எப்போதும் மதித்து வந்திருக்கிறேன். இந்தியாவின் பல்வேறு மொழிகளை நிறுவனமாக ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்த பெருமை உடையது அகாடமி.

இன்று, பேராசிரியர் கல்புர்கியின் கொலையில் அகாடமி தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதைக் கண்டு நான் துவண்டுபோயிருக்கிறேன். கல்புர்கி,சாகித்ய அகாடமி விருது வென்றவர். அவர் இறப்பதற்கு சில காலம் முன்புவரைகூட அகாடமியின் பொதுக்குழுவில் இருந்தவர்.

இந்தியாவின் முதன்மை இலக்கிய அமைப்பாக இருக்கும் சாகித்ய அகாடமி, ஒரு எழுத்தாளரின் படுகொலையைக் கண்டிக்காமல் இருப்பது நல்லதல்ல. தன் அமைப்பைச் சேர்ந்தவரின் மரணத்தில் காக்கும் மவுனம், தேசம் முழுவதும் பரவிவரும் சகிப்பின்மையை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?

கருத்துவேற்றுமைகளை துப்பாக்கி குண்டுகளால் தீர்க்க முடியாது. நாகரிக சமூகம், கருத்து வேற்றுமைகளை பேசியும் விவாதித்துமே தீர்த்துக்கொள்ளும். எழுத்தாளர்கள் அறிவுஜீவிகளாக இனி கருதப்படுவதற்கு வாய்ப்பில்லை, அவர்கள் மக்களின் மனசாட்சியாக இருக்க வேண்டும். உண்மையில் எழுத்தாளர்கள் தங்களுடைய குரல்களை உயர்த்திப் பிடிக்க இதுதான் தருணம். ஆனால் இத்தகைய குரல்கள் தனியாக ஒலிப்பதைவிட குழுவாக ஒலிப்பது பலனைத் தரும். எழுத்தாளர்களின் ஒருமித்த குரல்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக சாகித்ய அகாடமி உள்ளது.

ஆனால், அதை அகாடமி செய்யத் தவறியிருக்கிறது. அவநம்பிக்கைக் காரணமாக நான் பதவியிலிருந்து விலகுகிறேன். கூட்டங்களை நடத்துவது, விருதுகளைத் தருவது மட்டும் அகாடமியின் பணியல்ல. எழுத்தாளர்களின் எழுத்து, பேச்சு சுதந்திரம் பாதிப்புக்குள்ளாகும்போது அதற்காக எழுந்துநிற்பதும் அகாடமியின் பணியே” எனத் தெரிவித்துள்ளார்.

மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்காக ஒரு இதழ்!

பல மொழிகளில் இருக்கும் பேசப்பட்ட படைப்புகளை அந்த மொழிகளைத் தெரியாத மற்றவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அந்த வகையில் சமீப காலமாக மொழிபெயர்ப்பு இலக்கியம் என்ற புதிய கிளையே உருவாகி வளர்ந்து வருகிறது. இதில் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியாக மொழி பெயர்ப்பு இலக்கியத்துக்கென்றே பிரத்யேகமாக ‘திசையெட்டும்’ என்ற காலாண்டிதழை 2003 முதல் நடத்திவருகிறார் குறிஞ்சிவேலன். மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் இவர்.

குறிஞ்சிவேலன்

குறிஞ்சிவேலன்

‘‘மொழிபெயர்க்கறதோட நோக்கமே பல மொழிகள்ல இருக்கிற நல்ல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு அதன்மூலமா நம் படைப்புகள் செழுமையாகணும் என்பதற்காகத்தான். மலையாள, வங்க இலக்கியங்கள் இந்திய அளவில் பேசப்படுவதற்குக் காரணம், அவை மற்ற மொழிகள்ல அதிகமா மொழிபெயர்க்கப்படறதுதான். தமிழில் எவ்வளவோ உன்னதமான படைப்புகள் இருக்கு. ஆனா அவற்றை மொழிபெயர்க்கறதுக்கு யாரும் மெனக்கெடலை. இந்த நிலை மாறணுங்கிறதுக்காக ஒரு சின்ன அசைவா ‘திசையெட்டும்’ பத்திரிகையைத் தொடங்கினேன். திசையெட்டிலும் இருக்கிற பல மொழிகளைச் சேர்ந்த படைப்புகளை தமிழுக்கு கொண்டுவரணும். அது மூலமா தமிழில் இருக்க படைப்புகள் மற்ற மொழிகள்லேயும் மொழிபெயர்க்கப்படணும். அதுதான் பத்திரிகையோட நோக்கம். வட இந்திய மொழிகள், தென் இந்திய மொழிகள்னு கிட்டத்தட்ட 14 மொழிகள்ல இருக்கிற கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற படைப்புகளை மொழிபெயர்த்து இதழ்ல வெளியிடறோம். எல்லா மொழி இலக்கியங்களையும் அந்த மொழியில் இருந்தே நேரடியா தமிழுக்கு கொண்டு வர்றோம். படைப்போட தரம் குறையக்கூடாதுன்னு ஆங்கிலம் வழியா வர்ற மற்ற படைப்புகளை மொழிபெயர்ப்புகளை நாங்கள் வெளியிடறதில்லை. மைதிலி, அஸ்ஸாமி, மணிப்பூரி போன்ற அதிகம் மொழிபெயர்க்கப்படாத மொழிகளோட படைப்புகளை சிரத்தையோடு வெளியிடறோம். பொதுவா சிறுபத்திரிகைகளுக்கு நிறைய பொருளாதார சிக்கல் வரும். ஆனா, அந்த மாதிரி சிக்கல் எதுவும் இல்லாம தொடர்ந்து ‘திசையெட்டும்’ வந்துக்கிட்டிருக்கு.

எல்லாத்துக்கும் மேலே மொழிபெயர்ப்புக்குன்னு தனி இதழ் ஆரம்பிக்கணுங்கிறது என்னோட நாற்பது வருஷ கனவு. இந்திய அளவில் மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்காக வெளிவரும் ஒரே இதழ் திசையெட்டும்’’ என்கிற குறிஞ்சிவேலன், கால்நடை ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்தை வைத்துதான் இதழ் வெளியீட்டைத் தொடங்கியிருக்கிறார். இவருடைய இயற்பெயர் ஆ. செல்வராசு. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் குறிஞ்சிவேலன் என்கிற பெயரை புனைந்ததாக சொல்கிறார்.

‘‘எழுத்தாளர் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த ‘செம்மீன்’ நாவல்தான் நான் படித்த முதல் மொழிபெயர்ப்பு படைப்பு. அது எனக்குள்ள பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுக்குப்பிறகு நிறைய மொழிபெயர்ப்புகளை தேடி படிச்சேன். நேரடியா அந்த மொழிகள்லேயே படிச்சா இன்னும் நல்ல வாசிப்பு அனுபவம் கிடைக்கும்னு மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, வங்காளம் போன்ற மொழிகளை கத்துக்கிட்டேன். பெரும்பாலும் என்னுடைய மொழிபெயர்ப்புகளை மலையாளத்திலிருந்துதான் செய்திருக்கேன்.
நா. பார்த்தசாரதி வெளியிட்ட ‘தீபம்’ இதழ்ல என்னோட பல மொழிபெயர்ப்பு கட்டுரைகள், சிறுகதைகள் வெளிவந்திருக்கு. மலையாள எழுத்தாளர் ‘பொட்றேகாட்’ எழுதிய ‘விஷக்கன்னி’ நாவலை மொழிபெயர்த்ததற்குத்தான் எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைச்சது. நனவோடை உத்தி, நாவடகம் (நாவலும் நாடகமும் சேர்ந்த வடிவம்), மேஜிக்கல் ரியலிசம்னு பல புதிய வடிவங்களை தமிழுக்கு ஆரம்ப காலத்திலேயே அறிமுகப்படுத்தியிருக்கேன்.’’ என்கிற குறிஞ்சிவேலன் 65 வயதிலேயும் தளராது மொழிபெயர்ப்புகளை செய்து கொண்டிருக்கிறார். ‘நல்லி திசையெட்டும்’ விருதுகள் மூலமாக வருடம்தோறும் சிறந்த மொழியாக்க படைப்பாளிகளுக்கு ரூ. ஒன்றரை லட்சம் அளவில் பல்வேறு பிரிவுகளில் விருது கொடுக்கிறார். இதுவரை 84 படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கி இருக்கிறோம் என்கிறார் குறிஞ்சிவேலன். ‘Tranfire‘ என்ற பெயரில் ஆங்கில மொழியாக்க காலாண்டிதழ் ஒன்றை 2011 ஆகஸ்டில் இருந்து வெளியிட்டு வருகிறார். ‘திசையெட்டும்’ தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் சிறந்த சிற்றிதழ் விருது பெற்றிருக்கிறது.