Tag Archives: சாதி
நாங்கள் எந்த ஊடக அறத்தோடும் செயல்படவில்லை..!
விஷ்ணுப் பிரியாவுக்கு செந்தில்குமார் கொடுத்த டார்ச்சர்…
விஷ்ணுப் பிரியா தற்கொலை வழக்கில் விஷ்ணுப் பிரியாவின் குடும்பத்தினராலும் அவருடைய தோழி மகேஸ்வரியாலும் குற்றம்சாட்டப்படும் நபர் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். ஆர். செந்தில்குமார். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் குமார், 2002ல் துணை கண்காணிப்பாளராக காவல்துறை பணியில் சேர்ந்தார். திருத்தணி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் பணியாற்றினார். 2010ல் பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றினார். கள்ளச் சாராய விற்பனையை குறைத்ததற்காக உத்தமர் காந்தி விருது பெற்றவர். அதன் பிறகு 2012ல் மதுரை மாவட்டத்தில் துணை ஐஜி- ஆக பணியாற்றினார். மீண்டும் கிருஷ்ணகிரிக்கு மாற்றலாகி, 6-2-2014ல் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அவர் நியமிக்கப்பட்ட ஆரம்ப நாட்களிலேயே சட்டவிரோதமாக மணல் அள்ளும் மாஃபியாக்களுக்குத் துணைபோவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதை எதிர்த்த தன்னார்வலர்கள் மீது பொய் வழக்குப் போடுவதாகவும் சொல்லப்பட்டது. “சட்ட விரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை எதிர்த்த தகவல் உரிமைச் சட்ட செயல்பாட்டாளர் மதியழகன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் ஐந்து வழக்குகளைத் தொடுத்தார். அதெல்லாம் பொய் வழக்குகள் என்பதை நிரூபித்து அவரை வெளியே கொண்டுவந்தோம். பொய் வழக்குப் போடுவது என்பது எஸ்.பி செந்தில்குமாருக்கு கைவந்த கலை என்கிறார்” சமூக செயல்பாட்டாளர் முகிலன்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றியபோது தனக்குக் கீழே பணியாற்றியவர் மீது அதிகாரத்துடன் நடந்துகொண்டதாக அவருக்குக் கீழே பணியாற்றிய காவலர் ஒருவர் தெரிவித்தார். ஒருமையில் பேசுவது, பொது மக்கள் மத்தியில் கெட்ட வார்த்தைகளால் திட்டுவது என அடாவடித்தனமாக அவர் நடந்துகொள்வார் என்றும் அந்தக் காவலர் சொன்னார்.
“சட்ட விரோதமாக மணல் திருடி பொதுவழிகளில் செல்லும் லாரிகள் குறித்து ஆதாரப் பூர்வமாக சமூக ஆர்வலர்கள் நிரூபித்தபோது, செந்தில்குமார் என்ன செய்தார் தெரியுமா? பொதுவழியில் செல்வதைத் தடுத்து கிராமங்கள் வழியாக மண்பாதைகளில் அந்த லாரிகளை எல்லாம் திருப்பிவிட்டார். மணல் திருட்டு மஃபியாக்களுக்கும் அதில் தொடர்புடைய ஆளும் கட்சியினருக்கும் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறார் செந்தில்குமார்” என்கிற குற்றச்சாட்டை சொல்கிறார்கள் நாமக்கல் மாவட்ட சமூக ஆர்வலர்கள்.
ஆளும் கட்சிக்கு ஆதரவான செயல்பாடு என்று சொல்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் பார்க்கும்போது கண்காணிப்பாளர் செந்தில்குமார், விஷ்ணுப் பிரியாவுக்கு என்ன மாதிரியான அழுத்தம் கொடுத்திருப்பார் என யூகிக்க முடிகிறது. அரசிடம் ‘நல்ல’ பேர் வாங்கவே அவர் கோகுல்ராஜ் கொலைக் குற்றத்தில் தொடர்பில்லாத நபர்கள் மேல் வழக்குப் போடும்படி அழுத்தம் கொடுத்தாரா? அல்லது தனக்கு வேண்டப்படாத நபர்கள் மேல் உள்ள பழியைத் தீர்த்துக் கொள்ள பொய் வழக்குப் போடும்படி வற்புறுத்தினாரா? அல்லது உண்மையான கொலையாளிகளைத் தப்பிக்க வைக்க பொய் வழக்குகளைப் போடச் சொன்னாரா என்கிற கேள்விகளும் எழுகின்றன.
“செந்தில்குமார் அடாவடியான ஆளாக அறியப்பட்டவர்; அதனுடன் மேலும் இரண்டு விஷயங்கள் சேருகின்றன. விஷ்ணுப் பிரியா பெண் என்பதும், அவர் தலித் என்பதும் அவரை டார்ச்சர் செய்ய போதுமான விஷயங்கள். கோகுல்ராஜ் கொலை குற்றத்தில் தலைமறைவாக இருக்கும் யுவராஜ் பகிர்ந்திருக்கும் சமீபத்திய ஆடியோவில் வலுக்கட்டாயமாக விஷ்ணுப் பிரியா கொலைக்கு செந்தில்குமார்தான் காரணம் என சொல்கிறார். இது செந்தில்குமாருக்கும் எனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று யுவராஜ் சொல்லவதற்காக பகிரப்பட்டதாகவே தோணுகிறது. விஷ்ணுப் பிரியா மரணத்தில் செந்தில்குமார், யுவராஜ் கூட்டு பங்கு இருக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் ஒருவர்.
சாதி இந்திய சமூகத்தின் இயல்பான மனநோய்!
ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை முன்வைத்து…
சமீபத்தில் மகாத்மா புலேவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் படித்தேன். 19ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் இந்திய சமூகத்தில் வேறோடிப் போயிருக்கும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து, கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் விமர்சனப் போக்கில் எழுதியிருப்பார். அந்த நேரத்தில் சாதி ஒடுக்குமுறைகளை குறித்து ஆட்சியாளர்களுக்கு அறிவிக்கும்பொருட்டும் ஒடுங்கிக் கொண்டிருந்த மக்களின் உரிமைகளை உணர்த்தும் பொருட்டும் சமூக நீதிக்கான பாதையை வகுத்துக் கொடுத்தது அவர் எழுத்து. புலேவின் தொடர்ச்சியாக ஆதவன் தீட்சண்யாவின் எழுத்தைப் பார்க்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து பலரும் எழுதுகிறார்கள், அவையெல்லாம் இந்த மக்களின் அவலங்கள், பாடுகள் குறித்துதான் அதிகம் பேசுகின்றன. இத்தகைய அவலங்கள், பாடுகளுக்கான சமூக காரணிகளை இவை பேசுவதில்லை.
ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ முன் அட்டையில் தொடங்கி பின் அட்டை வரை நந்தஜோதி பீம்தாஸ் என்கிற எழுத்தாளர் வழியாக, சமகால சமூக அரசியல் சார்ந்து தனித் தனி களங்களுக்கு படிப்பவரை இட்டுச் செல்கிறது.
மகாத்மா புலே, அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார் என நம் புரட்சியாளர்கள் சாதி குறித்த பெருமிதங்களை உடைத்தெறிந்துவிட்டார்கள். நூறாண்டுகளாக தொடரும் இந்த சாதி வேரை பிடிங்கி எறியும் பனி இன்னமும் முடிவு பெறும் கட்டத்தை அடையவில்லை. இன்றைய கட்சி அரசியல் சூழல் சாதிக்கு குளிர் நீரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் ரத்தத்தையும் சத்தாக அளிக்கிறது. புரட்சியாளர்கள் சடங்குக்குரிய கற்சிலைகளாக மட்டும் இன்று நினைக்கப்படுகிறார்கள். சாதி இல்லை, சாதியெல்லாம் இப்ப யாரு பார்க்கிறா? போன்ற பேச்சுக்கள் அதிகபட்சம் 1% க்கும் கீழே உள்ள மெட்ரோவில் வசிக்கும் மேல்தட்டு வர்க்கம் கோபித்துக் கொள்கிறது. 1%த்துக்கும் குறைவான இந்த மக்கள் சாதியை விட்டொழித்தவர்கள் என்று எண்ணி விடுவதற்கு வாய்ப்பு உண்டு, உண்மையில் இவர்களை சாதியைக் கண்டு கொள்ளாதவர்கள் என வகைப்படுத்தலாம். எனக்கென்ன, எனக்கொன்றும் சாதியால் பாதிப்பில்லை என்பது இவர்களுடைய மனோபாவம். இந்த 1%த்தினரில் தலித் இருக்கலாம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பார்ப்பனர் என எந்த சாதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். இவர்கள் ஒன்று படுவது வர்க்க அடிப்படையில், அதாவது மேல்தட்டு வர்க்கம் என்ற அடிப்படையில்.
இந்த 1 சதவீதத்தினர் குறித்து நாம் ஏன் இவ்வளவு ஆராய வேண்டி இருக்கிறது என்றால், இவர்கள்தான் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள், கொள்கைகள், திட்டங்கள் போடுபவர்களாக இருக்கிறார்கள், இவர்களின்றி அதிகாரத்தின் ஓர் அணுவும் அசையாது! இவர்கள் கண்ணைக் மூடிக்கொண்டு சதா வசதிகளில் திளைத்துக்கொண்டு எல்லாம் நல்லதாகவே நடக்கிறது, நல்லதாகவே நடக்கும் என்று மந்திர வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அம்பேத்கர் பாடலை ரிங் டோனாக வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக ஒரு தலித் இளைஞன், ‘சாதி’ இந்துக்களால் அடித்து, நொறுக்கப்பட்டு, நெடுஞ்சாலைகளில் வாகனங்களால் மீண்டும் மீண்டும் நசுக்கப்படும் விபத்துக்குள்ளான ஒரு பிராணியைப் போல, ‘சாதி’ இந்துக்களின் இரு சக்கர வாகனங்களால் நசுக்கப்பட்டு கொல்லப்படுகிறான். இப்படியான கொடூரத்திலும் கொடூர மனநிலை, மனநோய் இந்திய சாதிய சமூகத்தின் இயல்பான குணங்களாக இன்று வரைக்கும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
சுதந்திர போராட்ட காலகட்டத்தில் பேசப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் சுதந்திரத்திற்குப் பிறகு, கட்சிகளின் அரசியல் அதிகார போதையில் மறக்கடிக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவின் ‘வளர்ச்சி’ திட்டங்களுக்கிடையே திறந்துவிடப்பட்ட முதலாளித்துவ கதவுகள், உலகமயமாக்கலின் நவீன வசதி வாய்ப்புகள் சமூக சீர்திருத்தங்களிலிருந்து பெரும்பான்மை மக்களை தள்ளி வைத்துவிட்டன. தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் மீதான ஒடுக்குதல்கள் சுதந்திரத்துக்கு முன் இருந்த இந்தியாவின் நிலையைப் போல இன்றும் ஒத்துப் போகின்றன. இன்னமும் கிராமங்களில் சேரிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ‘சட்டப்படி’ தடை செய்யப்பட்ட பலதார மணமுறை இன்னமும் வட இந்திய பகுதிகளில் கோலுச்சுகிறது. நீர்குடங்கள் சுமப்பதற்காகவே இரண்டு, மூன்று ‘தண்ணீர்’மனைவிகள் ஒரு ஆணுக்குத் தேவைப்படுகிறார்கள். அமைச்சர்கள் பாலியல் வன்கொடுமைகள் பரஸ்பர ஒப்புதலுடனே நடப்பதாக அறிவிக்கிறார்கள். (பாலியல் வன்கொடுமை செய்வதை பொழுதுபோக்காக கொண்ட அந்த கால ஜமீன் மைனர்களின் வாரிசுகள்) பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும் அனுபவத்தின் வாயிலாகத்தான் இத்தகைய முடிவுகளுக்கு வரமுடியும். அக்ரஹாரங்களில் நுழைவதற்கே தகுதி வேண்டும் என்பதைப் போல ஐஐடி போன்ற இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவனங்கள் நவீன அக்ரஹாரங்களாக உள்ளன. அக்ரஹாரத்தில் கீழ்சாதிகள் நுழைவது தடை செய்யப்பட்டதைப்போல அம்பேத்கரும் பெரியாரும் இன்று தடை செய்யப்படுகிறார்கள். ஆக, சுதந்திரம் யாருக்கு வந்தது என்பது குறித்தும் எது சுதந்திரம் என்பது குறித்தும் நிறையவே எண்ணத் தோன்றுகிறது.
கடத்தப்பட்டும் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பிக்கவும் இலங்கைக்குச் சென்ற தலித்துகளின் அசாதாரண மரணங்கள், இன்று உலகம் முழுக்கவும் அகதிகளாக பயணிக்கும் மக்கள் படும் துயரங்களுடன் ஒத்துப்போகிறது. உதாரணமாக மியான்மரின் ரொஹியாங்கா முஸ்லீம்களின் நிலை, நாவலில் சொல்லப்படும் மலையகத் தமிழர்களுடம் பொருந்திப் போகிறது.
தலித்துகளின் மீதான வன்முறைகள், சாதிய படிநிலைகளை தீவிரமாக்கும் போக்கு, ஒடுக்கப்பட்ட மக்கள் அடிப்படை வாழ்வாதாரத்துக்காக சந்திக்கும் நெருக்கடிகள் சமீப காலங்களில் அபாய நிலையை எட்டியுள்ளன. சமூக செயல்பாட்டாளர்கள் தீவிரமாக செயல்பட்டாக வேண்டிய நேரத்தில், அதற்கொரு முன்னுரையை அமைத்துக் கொடுத்திருக்கிறது இந்நாவல்.
ஒரு புனைவு உங்களுக்கு சமூகத்தின் பல்வேறு இடர்பாடுகளை அழுத்தங்களை அடக்குமுறைகளை இனம் காட்டுகிறதென்றால் அது புனைவு என்கிற வரையறைத் தாண்டி வேறொன்றை அடைகிறது. . ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை வாசித்த பிறகு அதை சீர்திருத்த எழுத்து என்று வரையறை செய்கிறேன். ‘இஸங்கள்’ ‘கூறுகள்’ பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது, நான் ஒரு வாசகி, நான் வாசிக்கின்ற ஒன்று எத்தகையது என்று கருத்து சொல்லும் உரிமை எனக்குள்ளதாக நினைக்கிறேன்.
நாவலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ஆன் லைனில் வாங்கலாம்..
பெண்ணியவாதிகள், பகத்சிங், கபீர் கலா மஞ்சில்…
இதுநாள்வரையில் எனக்குள் இருந்த பெண்கள் பற்றிய மிகை மதிப்பீடுகளை சமீப காலமாக உடைத்தெறிந்து வருகிறேன். இரும்பு பெண்களாகவும் பெண்ணியவாதிகளாகவும் அடைமொழிகளுக்குள் அடங்கிக் கொண்டிருந்தவர்களின் உண்மையான முகம் முதலாளித்துவத்தையும் சர்வாதிகாரத்தையும் ஒன்றாக கலந்தத் தன்மை உடையது. இவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை… சீமாட்டிகளாகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பின்னணி கொண்டவர்களாகவும் இருப்பது. சிந்தனையும் செயல்பாடும் அவரவர் வளர்ந்த வர்க்க பின்னணியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. நிலப்புரத்துவ பின்னணியில் வளர்ந்த பெண்ணியவாதி, ஆணுக்கு நிகரான ஊதியத்தை பெண்ணுக்கும் நிர்ணயிப்பார் என எதிர்பார்க்க முடியாது(சொந்த அனுபவம்!). இப்போதெல்லாம் பெண்ணியவாதிகள் என்றாலே கையில் மதுக்கோப்பையும் சிகரெட்டும் ஏந்திய பெண்களே நினைவுக்கு வருகிறார்கள். இது பொதுபுத்தி அல்ல, மேட்டிக்குடி சிந்தனையாளர்களின் பெண்ணியவாதிகள் பற்றிய கட்டமைப்பு இத்தகையதுதான். தீர்மானிப்பதற்குரிய அதிகாரம் தனக்கிருந்தும் சமத்துவத்தை விரும்பாத இத்தகையவர்கள் போற்றப்படுவதை ஆண்மைய சமூகம் விரும்புகிறது, அவர்கள் வரலாற்றில் போற்றப்படுகிறார்கள். இந்திரா காந்தி, மார்க்கெரட் தாச்சர், தெரஸா வகையறா முதல் ஜெயலலிதா போன்ற பெண்களை சில உதாரணங்களாகக் கொள்ளலாம். இவர்கள் மட்டுமல்ல அதிகாரத்தில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான்.
……………………………………………………………………………………….
பகத்சிங் ஆய்வாளர் Chaman Lal பகத் சிங் உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவின் லெனினாக வந்திருப்பார் என்கிறார். லெனின், மாவோ, பிடல், சே குவேரா போல பகத் சிங்கும் மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் என்கிறார் லால். புதிய ஜனநாயகம் மே இதழில் இவருடைய நேர்காணல் இடம்பெற்றிருக்கிறது. படிக்க வேண்டிய ஒன்று. வினவு தளத்தில் புதிய ஜனநாயகம் இதழை டவுன்லோடு செய்து படிக்கலாம்.. http://www.vinavu.com/…/05/puthiya-jananayagam-may-20151.pdf
பேராசிரியர் சமன் லாலில் வலைத்தளத்தில் பகத் சிங்கிற்கு ஆதரவாக ஜின்னாவின் பேச்சு குறித்த கட்டுரை இன்று வாசித்ததில் முக்கியமான ஒன்று. சமன் லால் குறித்த தேடலில் இணையத்தில் கிடைத்த வலைத்தளம் கபீர் கலா மஞ்சில் . மகாராஷ்டிராத்தில் செயல்படும் மக்கள் கலைக் குழு இது. இந்த கலைக் குழுவைச் சேர்ந்த பல கவிஞர்கள், இசைக் கலைஞர்கள் அரசின் தீவிரவாத ஒழிப்பு படையினரால் அரசியல் குற்றவாளிகளாக சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் மராத்தியில் பாடி சில பாடல் https://soundcloud.com/kractivist/devhar-bajula-sarle-poetகளின் மொழிபெயர்ப்பைப் படித்தேன். அந்த வரிகளில் சாதீய, சமூக விமர்சனங்கள் தவிர வேறொன்றும் இல்லை. கர சேவகர்களின் கை ஓங்கியிருக்கும் மகாராஷ்டிரா போன்ற மாநிலத்தில் சமூக விமர்சனங்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். அதனால்தான் மக்கள் கலைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்கூட நக்ஸலைட்டுகளாகத் தெரிகிறார்கள்.
இந்தக் குழுவைச் சேர்ந்த ஷீத்தல் தலித் படுகொலைகள், பெண்சிசுக் கொலை, சாதியம், விவசாயிகள் தற்கொலை குறித்தும் புலே, ஷானு, அம்பேத்கர் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறார். இதற்காக இவர் கைதும் செய்யப்பட்டார். இவருக்கு தற்போது கிடைத்திருப்பது தலைமறைவு வாழ்க்கை!
மேற்சொன்ன அதே கருப் பொருட்களில் போலியாக சில பெண்கள் பேசியும் எழுதியும் வருகிறார்கள். அவர்களுக்கு ஆகச் சிறந்த அங்கீகாரம் கிடைக்கிறது எனில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சமூகம் கண்டுகொள்ளட்டும்!