வெறுப்பு அரசியலுக்கு எதிராக மக்கள் தீர்ப்புகளை வழங்கினாலும் தீவிரத்துடன் செயல்படும் சில அமைப்புகள், மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிகளைக் கைவிடுவதில்லை. இந்தியாவின் தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்ந்து, அவருடைய பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று கட்டளை இடும் அமைப்புகள், இந்த தேசத்துக்காக உழைத்த தியாகிகளை மாற்று மதத்தவர் என்பதற்காகவே அவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து வருகின்றன.
முன்னோடி சுதந்திரப் போராட்ட வீரரான திப்பு சுல்தானின் பிறந்த நாளான செவ்வாய்கிழமை, கர்நாடகத்தில் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நடைபெற்ற திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவில், முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய சித்தராமையா, “திப்பு சுல்தான் மதச்சார்பற்ற மன்னராக திகழ்ந்தவர். ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கிய முன்னோடி போராட்டக்காரர். அதற்காக அவர் தன்னுயிரையும் இழந்தார்” என்று புகழாரம் சூட்டினார்.
விடுதலைப் போராட்ட வீரர் திப்பு சுல்தானின் பிறந்த நாளை கர்நாடக அரசு அரசு விழாவாக கொண்டாடி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் குடகு மாவட்டம் மடிகேரியில் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதாகவும் அதனால் விஎச்பி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பலியானதாகவும் சொல்கிறது தினமணி
திப்பு சுல்தான் இந்துக்களை இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்தவர், எனவே அவருக்கு அரசு சார்பில் பிறந்தநாள் விழா நடத்தக்கூடாது என வலியுறுத்தி விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் இன்று பேரணி நடத்தின.
பேரணியின் போது திடீரென்று ஏற்பட்ட கவலவரத்தில், விசுவ ஹிந்து பரிஷத்தின் குடகு மாவட்ட அமைப்புச் செயலர் குட்டப்பா (50) காயமடைந்தார். அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இக்கலவரத்தில் 30 விசுவ ஹிந்து பரிஷத் இயக்க தொண்டர்கள் காயமடைந்தனர்.
பேரணியின் போது விஷமிகள் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டதால் இக்கலவரம் ஏற்பட்டது என்றும், இதில் 20 கடைகளும், சில வீடுகளும் சேதமடைந்ததாக காவல் துறையினர் கூறினர் என்கிறது தினமணி செய்தி.
இந்துக்களுக்கு எதிரானவரா திப்பு சுல்தான்?
“மதங்களிடையே நல்லுறவு என்பதே புனித குர்ஆனின் அடிப்படைக் கோட்பாடு. மத விஷயங்களில் நிர்பந்தம் கூடாது. அவரவர் விருப்பத்தை மதிப்பதே புனித குர்ஆனின் வாக்கு. பிற மதங்களின் விக்கிரகங்களை அவமதிக்காதீர். அது இறைவனையே அவமதிப்பதாகிவிடும். இறைவன் விரும்பியிருந்தால் உலக மக்கள் அனைவரையும் ஒரே மதமாகப் படைத்திருப்பார் அல்லவா? எனவே ஒருவர் மற்றவரின் நற்காரியங்களுக்குத் துணை புரியுங்கள்” என்று தனது வீரர்களிடையே திப்பு சுல்தான் பிரகடனப்படுத்தினார். திப்புவின் படையில் இந்துக்களும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.