ட்ரம்போவும் நானும்

‘Tumbo’ படத்தைப் பார்த்து முடித்தேன். ட்ரம்போவுடன் என்னை பல இடங்களில் பொறுத்திப் பார்க்க முடிந்தது. ஜேம்ஸ் டால்டன் ட்ரம்போ 40களில் முன்னணியில் இருந்த ஹாலிவுட் திரைக்கதாசிரியர். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த பலரை அன் அமெரிக்கன் அக்டிவிடீஸ் கமிட்டி பட்டியலிட்டு, அவர்களை பொது வாழ்க்கையிலிருந்து துரத்தியடித்தது. அவர்கள் வேலை இழந்தார்கள்; கடனால் அவதிப்பட்டார்கள்; சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். அதிக சம்பளம் வாங்கும் முன்னணி திரைக்கதாசிரியராக இருந்த ட்ரம்போ, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் (கம்யூனிஸ்டுகள் ரஷ்ய உளவாளி என்கிற பிரச்சாரத்தை அமெரிக்கா முன்னெடுத்தது) என்ற காரணத்தால், எவ்வித அரசு விரோத நடவடிக்கைகளிலும் இறங்காதபோதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். சினிமா மூலம் தங்களுடைய கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதற்காக கம்யூனிஸ்டுகளுக்கு சினிமாவில் இயங்க தடை விதிக்கப்பட்டது.

சிறை தண்டனைக்குப் பிறகு, தன்னுடைய வசதியான பண்ணை வீட்டில் விற்றுவிட்டு, நகரத்துக்குள் குடும்பத்துடன் குடியேறுகிறார் ட்ரம்போ. தன்னுடைய குடும்பம் எவ்விதத்திலும் துன்பங்களை அனுபவிக்க அவர் விரும்பவில்லை. முதல் நிலையில் இருந்த அவர், மூன்றாம் தரமான படங்களுக்கு திரைக்கதை எழுதுகிறார் சொற்ப சம்பளத்துக்காக. ஹாலிவுட்டில் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் புனைப் பெயர்களில் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் எழுதி குவிக்கிறார். அவர் புனைப் பெயரில் எழுதிய திரைக்கதைகளுக்கான 2 ஆஸ்கர் விருதுகளும் கிடைக்கின்றன. ட்ரம்போவிடம் பேசுவதைக்கூட அவமானமாக கருதி அவரை உதாசீனப்படுத்திய பலர், அவர் புனைப்பெயரில் எழுதிய திரைக்கதைகள் வெற்றியடைவதை மோப்பம்பிடித்து தங்களுடைய படத்துக்கும் திரைக்கதை எழுதித்தரும்படி கெஞ்சுகிறார்கள், ஆனால் புனைப்பெயரில்தான் எழுத வேண்டும் என்ற நிபந்தனையுடன். காலம் மெல்லச் சுழலுகிறது. எந்தவித குற்றமும் இழைக்காத ட்ரம்போவுக்கும் அவரைப் போன்ற கம்யூனிஸ்டுகளுக்கும் தண்டனை தந்த ஹாலிவுட்டுக்கு தன்னுடைய வெற்றியின் மூலம் பதிலடி தருகிறார் ட்ரம்போ. அவருடைய திறமையை உணர்ந்த இயக்குநர்கள் நடிகர்கள் அவருடைய பெயரை திரையில் போடுகிறார்கள். ஆஸ்கர் விருது பெற்ற திரைக்கதைகளை எழுதியது தான் தான் என ட்ரம்போ பகிரங்கப்படுத்துகிறார். காலம் தாழ்ந்து ஆஸ்கர் விருதுகள் அவரைத் தேடி வருகின்றன. தங்களுடைய தடைக்கு எதிராக சட்டரீதியாக போராடுவதைக் காட்டிலும் தன்னுடைய திறமையால் போராடுவதை நியாயப்படுத்துகிறார் ட்ரம்போ. திட்டமிட்டு ஒதுக்கப்பட்ட ஒருவனின் போராட்டம்-வெற்றி என்பது மட்டுமல்ல இந்தப்படம்.

ட்ரம்போவுடன் என்னை பல இடங்களில் பொறுத்திப் பார்க்க முடிந்தது என தொடக்கத்தில் சொல்லியிருந்தேன். ட்ரம்போ போல நான் கம்யூனிஸ்ட் அல்ல; கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்ளலாம். எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் கலந்துகொண்டதில்லை. அவரைப் போல புகழ்பெற்ற நிலையில் எல்லாம் இருந்ததில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் தமிழ் வெகுஜென இதழ்களில் எழுதிக்கொண்டிருந்த பெண்களில் எனக்கொரு தனித்த அடையாளம் இருந்தது. குங்குமத்தில் நான் எழுதிய கட்டுரைகளுக்காக என்னை பணியாற்ற அழைத்த ஆனந்தவிகடன் என்னை எட்டு மாதங்களில் வெளியே அனுப்பியது. வெளியேற்றுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்புவரைகூட என்னுடைய கட்டுரை கவர் ஸ்டோரியாக வந்திருந்தது. தலைமை பதவியில் இருந்தவர்களின் ஈகோவில் நான் பலியானேன். நான் வேலையே செய்வதில்லை என என்னை ஒதுக்கினார்கள். நான் ஒதுங்கிவிட்டேன்.

அடுத்தது, சன் நியூஸில் வேலை. செய்தி பிரிவில் உதவி ஆசிரியராக என்னை பணிக்குச் சேர்த்துக்கொண்டார்கள். செய்தி பிரிவின் ஆசிரியர் என்னை சும்மாவே உட்கார வைத்திருப்பார். எனக்கு ஜுனியராக இருந்த பெண்கள், அதிக சம்பளத்துடன் அங்கே சிறப்பு நிருபர்களாக இருந்தார்கள். சும்மா இருக்கப் பிடிக்காமல் அவர்களுக்கு ஐடியாவும் கொடுத்து ஸ்கிரிப்டும் எழுதிக்கொடுப்பேன். அதை செய்தி பிரிவின் ஆசிரியர் தன்னுடைய கேபினில் அமர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருப்பார். சிறப்பு நிருபர் ஒப்புதலுக்காக எடுத்துச் செல்லப்படும் அந்த ஸ்கிரிப்ட் உடனே ஓகே செய்யப்படும், சிறப்பு செய்தியாகவும் வந்துவிடும். ஆனால், எனக்கு எந்த வேலையும் தரமாட்டார். உலகச் செய்தி எழுதும் பணிகூட கிடைக்காது. தானாக முன்வந்து எழுதினாலும் படித்து பார்த்துவிட்டு, ஓரமாக வைத்துவிடுவார். மூன்று மாதங்கள் சம்பளமே வாங்காமல் அலுவலகம் வந்து போனேன். அப்போது ஸ்கராலிங் நியூஸ் எழுதிக்கொண்டிருந்தவர் போய்விட்டதால், என்னை அங்கு போட்டார். அது ஒரு தண்டனைக்குரிய பணி, நியூஸ் ரூமில் இருப்பதிலேயே மதிப்பற்ற பணி என்றுதான் அங்கே இருப்பவர்கள் பார்ப்பார்கள். சிறு தவறுகளுக்காகக்கூட எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்துவார் அந்த ஆசிரியர். ஆ.வியிலிருந்து வந்த பிறகு, நீண்ட நாட்கள் கழித்து நான் எழுதிய கட்டுரை பெயர் இல்லாமல் கவர் ஸ்டோரியாக வந்திருந்தது. அதே நேரத்தில் நியூஸ் ரூமில் இருந்தவர்கள் , செய்தி ஆசிரியர் என்னை எழுதத் தெரியவில்லை என கேலி பேசியபோது சிரித்தார்கள். வாழ்க்கையில் மறக்க முடியாத, மறக்கக் கூடாத தருணம் அது. செய்தி ஆசிரியர் ஏன் என்னிடம் அப்படி நடந்துகொண்டார்? என்னிடம் மட்டுமல்ல, என்னைப் போன்ற பல பெண்களின் கனவுகளை சிதறடிப்பதுதான் அவருக்கு முழு நேர வேலையே! என்னுடைய திறமையை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நிஜம் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் எழுதும் பணி, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு. எழுதத் தெரியாது என்று சொன்ன ஆசிரியர் சிறப்பாக எழுதியிருப்பதாக எல்லோர் முன்னிலையிலும் சொன்னார். என்னைப் பார்த்து சிரித்தவர்களும் ஒப்புக்கொண்டார்கள். சிறப்பாக எழுதினாலும் 5 எபிசோட் மட்டுமே வாய்ப்பு தரப்பட்டது. அதன் பிறகு வழக்கம்போல ஸ்க்ராலிங். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக சிதைந்தது.

வாழ்க்கைச் சூழலில் மீண்டும் உதவி ஆசிரியராக குமுதம் சிநேகிதியில் பணி. அரசியல்-சமூகம்-இலக்கியம் எழுதத் தெரிந்திருக்கலாம்; ஆனால் சமையல் குறிப்பு எழுதுவதே உங்களுக்கு வாய்க்கும். சமையல் குறிப்பு எழுதுவதை நான் கீழ்மையாகப் பார்க்கவில்லை. தமிழ் பத்திரிகை உலகம் அப்படித்தான் பார்க்கிறது. சமூகம் ஒன்றை எப்படி பார்க்கிறது என்பதைப் பொறுத்ததான், ஒன்றுக்கு பெருமையும் சிறுமையும் சேர்கிறது. மூன்று வருடங்கள் அந்த பணியில் கடுமையாக உழைத்த பின்னும், ஊழியராகக்கூட அங்கீகரிக்கவில்லை அந்நிறுவனம். என்னிலும் மூன்று வருடங்கள் சீனியராக பணியாற்றிய ஊழியருக்கும் அதே நிலைதான். 10 நிமிடங்கள் தாமதமாக பணிக்கு வந்தாலும் முழுநாள் சம்பளம் பிடித்தம் செய்வார்கள். அலுவலக நேரம் முடிந்த பிறகு பணியாற்றுவதெல்லாம் அவர்களுடைய கணக்கில் வராது. இரண்டு மூன்று ஊழியராக்குவது குறித்து பேசியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்ற நிலையில் வெளியேறினேன்.

வெளியேறிய நேரத்தில் மிகப்பெரும் கடன்சுமை இருந்தது. அம்மாவின் உழைப்பில் உருவான வீடு கடனில் மூழ்கிவிடும் அபாயத்தில் இருந்தது. தி இந்து தமிழ் ஆரம்பிக்க இருந்த நேரம், நானும் விண்ணப்பித்திருந்தேன். இரண்டு கட்ட தேர்வுக்குப் பிறகும் எனக்கு பணி கிடைக்கவில்லை. விசாரித்தபோது காரணம் என்ன என்பது நடுப்பக்க ஆசிரியருக்குத்தான் தெரியும் என்றார்கள். எனக்குத் தெரிந்தவரையில் அவர் வழியாக விண்ணப்பிக்காமல், வேறொருவர் மூலமாக விண்ணபித்ததுதான் நான் நிராகரிக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கும். என்னுடைய எழுத்தும் காரணமாக இருக்கலாம். கடன் பிரச்னை தீர்ந்துவிடும் என்று காத்திருந்த நேரத்தில் உங்களுக்கு அந்த வேலை கிடைக்காது, வேற பாருங்க என்ற பதில் வந்தால் இடிந்துபோய் உட்காருவோம். தலையில் கை வைத்து அமர்ந்தேன். நான் செய்த தவறுதான் என்ன?

அந்த நேரத்தில் அவள் விகடனுக்கு ஆட்கள் தேவை என்றார்கள். ஆசிரியரிடம் பேசினேன். நீங்கள் ஏற்கனவே பிரச்னை செய்துவிட்டு போனீர்கள் இல்லையா? (நான் எந்த பிரச்னையும் செய்யவில்லை. என்னை நீக்க முடிவு செய்திருந்தார்கள். அதை அறிந்து நானே விலகிவிட்டேன்) அந்த ஆசிரியரிடம் பேசுங்கள் என்றார். அந்த ஆசிரியரிடம் பேச முயற்சி செய்தேன். அவரை பேச விரும்பவில்லை போலும். அங்கே இருந்த நண்பர்களும்கூட உங்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பில்லை என்று விட்டார்கள். எப்படி கடனை அடைப்பேன்? இனி, நான் என்ன செய்வேன்? இரண்டு நாட்கள்தான் என்னுடைய துக்கம். மூன்றாவது நாள் நான் வாழத் தயாராகிவிட்டேன்.

எனக்கு எழுதத் தெரியவில்லையா? யாரிடமாவது காசு வாங்கி எழுதி மாட்டிக்கொண்டேனா? தனிப்பட்ட ‘ஒழுக்க’ பிரச்னைகளில் மாட்டிக்கொண்டேனா? எதுவுமே இல்லை. பிறகு ஏன் என்னை பிளாக்லிஸ்ட் செய்தார்கள்; செய்கிறார்கள்? நிச்சயம் இந்த நிறுவனங்களில் மீண்டும் நான் பணியாற்றப் போவதில்லை. இருந்தபோதும், அவர்கள் ஏன் என்னை ஒதுக்குகிறார்கள்?

இவர்களைப் பொறுத்தவரையில் நான் ஒரு தோற்றுப்போன பத்திரிகையாளர். பெண்கள் இதழ்களில் பணியாற்றிய அனுபவம் இருந்தாலும் என்னை அந்தப் பணிக்கு அழைக்க மாட்டார்கள். அப்படியே அழைத்தாலும் இரண்டாம் பட்சமான நிலையிலோ, ஆகக்குறைந்த சம்பளத்துக்கோ அழைப்பார்கள். எனக்கு நன்றாக எழுதத் தெரியும் என்று தெரிந்திருந்தும் கட்டுரை எழுதவோ, பத்தி எழுதவோ அழைக்க மாட்டார்கள்… அப்படியே வாய்ப்பு தந்தாலும் பெயர் போடுவதில் சீனியாரிட்டியை பின்பற்ற மாற்றார்கள், ஐந்து பக்கம் எழுதியிருந்தாலும் ஒரு பக்கம் எழுதியவரின் பெயருக்கும் பின்னால் போடுவார்கள். ஆமாம், இதெல்லாமும் இக்னோர் செய்வதுதான்.

கோஸ்ட் ரைட்டிங் போல, பிழைப்புக்காக நான் இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய தேவைகளை சுருக்கிக் கொள்கிறேன். என்னை ஏளனமாகப் பார்க்கிறவர்களை, பார்க்காதமாதிரி கடந்து போகிறேன். என்னுடைய மாத வருமானம் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம். இறக்கமுள்ளவர்கள் எனக்குப் பணி தருகிறார்கள். எழுதுவதன் மீதான காதலில் ஒரு இணையதளத்தை நடத்துகிறேன். ஒரு இதழ் முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன். ஆஸ்கர் விருது கிடைக்குமா? புக்கர் கிடைக்குமா? என்பதெல்லாம் இருக்கட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதே இங்கே மிகப்பெரிய எதிர் போராட்டம்தான். ட்ரம்போவைப் பார்த்தபிறகு, நான் உணர்ந்தது இது.

Gone Girl

இரண்டு மாத அலுவலக குப்பைகளை நேற்று எதிர்பாராத விதமாக சுத்தம் செய்ய நேரிட்டது. இரவு 10.30 வரை இடைவிட்டு இடைவிட்டு பணி. அயற்சியில் தூக்கம் வரும் என்று பார்த்தால் ம்ஹூம்.. சேனல் மாற்றிக்கொண்டிருந்தபோது Gone Girl படம் துவங்கியிருந்தது. கேள்விப்பட்ட படம். டேவிட் ஃபின்சர் இயக்கியது. The Social Network, The Girl with the Dragon Tattoo படங்களின் இயக்குநர். எனக்கு இரண்டு படங்களும் பிடித்திருந்தது. Gone Girl ஐ அவருக்காகப் பார்த்தேன்.

ஐந்து வருட திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கும் இடையே விரிசல். மனைவி ஒரு நாள் காணாமல் போகிறார். செயவதறியாது தவிக்கும் கணவர் அவராகவே காவலர்களிடம் செல்கிறார். துப்பறிவாளர்கள் விசாரிக்கிறார்கள். கணவரே மனைவியை கொன்றிருக்கலாம் என்கிற கோணத்தில் அவர்களுக்கு துப்பு கிடைக்கிறது. மனைவி ஒரு எழுத்தாளர். திருமணத்துக்கு முன் நிறைய எழுதிக்கொண்டிருந்தவர். சிறார் இலக்கியத்தில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர். திருமணத்துக்குப் பிறகு, நிறைய படிக்கிறார்; எழுதவில்லை. ஆனால் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து எழுதி வைக்கிறார். ஐந்தாண்டு காலத்தில் தங்களுக்குள் இருந்த காதல் எப்படி மெல்ல மெல்ல காணாமல் போகிறது என்பதை எழுதுகிறார். அந்த டைரியை, கணவரின் அப்பாவுக்குச் சொந்தமான வீட்டில் ஒரு ரகசிய இடத்தில் துப்பறிவாளர்கள் கண்டெடுக்கிறார்கள். தன்னை கணவர் எப்போது வேண்டுமானாலும் கொல்லலாம் என எழுதியதோடு டைரியின் கடைசி குறிப்பு முடிகிறது. டைரியை ஆதாரமாகக் கொண்டு கணவர் கைது செய்யப்படுகிறார்.

இதற்கிடையே கணவர் தன் மாணவி ஒருத்தியுடன் ரகசிய உறவில் இருப்பதும் அம்பலமாகிறது. தொலைக்காட்சிகள் கொடூர கணவர் என தீர்ப்பு எழுதுகின்றன. காவல்துறை கொலையான மனைவியின் சடலத்தை தேடிக்கொண்டிருக்க மனைவி, காரில் எங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய சுதந்திரத்தை, செல்வாக்கான வாழ்க்கையை இழக்கக் காரணமாக இருந்தவன், தனக்கு துரோகம் இழைத்தவனுக்கு தான் தக்க தண்டனை கொடுத்துவிட்டதாக சொல்கிறாள் அவள். கணவனை கொலை வழக்கில் சிக்க வைக்க தானே அனைத்து திட்டங்களையும் தீட்டியதையும் நினைத்துப் பார்க்கிறாள். துரோகம் இழைத்த கணவனுக்கு மனைவி கற்பித்த பாடம் என முடிகிறது போல நினைத்தால் படத்தின் ஒருபாதி தான் இது. (டேவிட் ஃபின்சரின் The Girl with the Dragon Tattoo படத்திலும் இப்படி முடிவது போன்று முடிந்து கதை நீளும்)

எந்தவொன்றும் இன்னொரு கோணம் இருக்குமல்லவா? அதுபோல படத்தின் அடுத்த பாதி இன்னொரு கோணத்தின் கதையை சொல்கிறது. இரண்டாம் பாதி விஷுவலாக செதுக்கப்பட்டிருக்கிறது. மனைவியாக நடித்த ரோஸ்மண்ட் பைக்கின் உடல்மொழி, பார்வையாளர்களை ஒன்றி இழுக்க வைக்கக்கூடியது. (சிறந்த நடிகைக்கான ஆஸ்கருக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது) வெகுநேரம் இந்த கதாபாத்திரத்தின் தாக்கம் எனக்குள் இருந்தது.

புனையும் திறனுள்ள ஒரு பெண், எப்படி தன்னை சுற்றியுள்ளவர்களையும் உலகத்தையும் ஒட்டுமொத்தமாக நம்பவைக்க முடிகிறது என்பதே மீதிக்கதை. படத்தை பார்க்கும்போது அது பிடிபடும். அவள் ஏன் அப்படி செய்கிறாள்? குழந்தை பருவத்தை பிடிங்கிக்கொண்ட வளர்ப்பு ஒரு காரணம். தன் சுயத்தை பிடிங்கிக்கொண்டு துரோகம் இழைக்கும் கணவன், மிக இக்கட்டான நிலையிலும் தன்னை வெறும் உடலாகப் பார்க்கும் காதலன் என அந்தப் பெண்ணை தேர்ந்த கிரிமனலாக மாற்றக் காரணங்கள் இருக்கின்றன. இறுதியில் அவள் தனக்கான நீதியை தானே தேடிக்கொள்கிறாள். அவளை சுற்றியுள்ளவர்கள் தண்டனை பெறுகிறார்கள். பார்க்கவேண்டிய படம்தான்!

சினிமாவை எப்படி இலக்கியத்தரமாக்கலாம்?: பாஸ்கர் சக்தி நேர்காணல்

பாஸ்கர் சக்தி, வெகுஜன வாசகர்களை சென்றடைந்த ஒரு எழுத்தாளர். செறிவுள்ள கதைகளைப் படைத்தவர். தமிழ் சினிமாவில் சொற்பமாக உள்ள வசனகர்த்தாக்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். எம்டன் மகன்,வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல,முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, பாண்டிய நாடு போன்ற படங்களுக்கு வசனங்கள் எழுதியிருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களுக்கு தொடர்ந்து வசனம் எழுதி வருகிறார். இவருடைய நாவல் ‘அழகர்சாமியின் குதிரை’ சுசீந்திரனால் இயக்கப்பட்டு தேசிய விருதுகளைப் பெற்றது. அந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியவரும் இவரே. இலக்கியத்திலிருந்து சினிமாவுக்கு வருவது பலமாக அமைந்ததா? இலக்கியங்களை சினிமாவாக்குவது தமிழ்ச் சூழலில் ஏன் பரவலாக இல்லை? என்பது போன்ற சில கேள்விகளுக்கு பதில் தந்தார் பாஸ்கர் சக்தி…

கேரளத்தில் சினிமாவும் இலக்கியமும் நெருக்கமாக இயங்குகின்றன. பல இலக்கியப் படைப்புகள் தொடர்ந்து சினிமாவாகின்றன. அங்கே ஒரு தொடர்ச்சி இருக்கிறது. தமிழில் அப்படியான ஒரு சூழல் இல்லை. இதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் இலக்கியத்துக்கான இடமும் கேரளத்தில் இலக்கியத்துக்கான இடமும் வேறுபடுகிறது. அங்கு எழுத்தாளர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு.  தமிழ்நாட்டில் பெரும்பாலும் எழுத்தாளர்களைக் கண்டுகொள்வதில்லை. அப்படியே பார்த்தாலும் யாரை எழுத்தாளர்களாக பார்ப்பார்கள் என்றால், வெகுஜன பத்திரிகையில் எழுதுகிறவர்களில் ஒரு சிலரைத்தான். உதாரணத்துக்கு சுஜாதா, பாலகுமாரன் போன்றோர்களுக்கு ஸ்டார் எழுத்தாளர்கள் அந்தஸ்து இருந்தது. அப்புறம் ஜெயகாந்தன் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை..நான் சிறுவனாக இருந்தபோது இரண்டு படங்கள் வந்தன. சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற இரண்டு படங்கள். அதில் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் ஹிட்டானது. அடுத்து  எடுத்த ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படம்  ஓடவில்லை. தமிழ்நாட்டில் வெற்றிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. நாளைக்கே பிரபலமான இலக்கியத்தை படமாக எடுத்து அது வசூல் ஆகிவிட்டது எனில், எல்லோரும் அதுபோல எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இது மாதிரி ஒன்று இங்கே நடக்கவேயில்லை.

இங்கே கதை பஞ்சம் எப்போதுமே இருக்கிறது. இலக்கியத்துக்குள் போனால் நிறைய கதைகள் கிடைக்கும். ஆனால் அதற்கான உழைப்பைச் செலுத்த யாரும் தயாராகயில்லை. இரண்டு வருடங்களில் எத்தனை பேய் படங்கள் வந்திருக்கிறது என்று உங்களுக்கே தெரியும்.  ரெண்டு, மூணு படங்கள் வசூலானது என்ற உடனே, எல்லாவிதமான பேய்ப்படங்களும் வர ஆரம்பித்துவிட்டன. பேய்-காமெடி அப்படியென்றால் ஹிட்.  தற்போது வெளியான தில்லுக்கு துட்டு என்ற படமும் அப்படித்தான் ஹிட்டாகிவிட்டது. இப்படியிருந்தால் வேறு மாதிரி கதைகள் எப்படி வரும்?. காலம்காலமாக டிரெண்ட்டை ஒட்டித்தான் இங்கே சினிமா செய்துகொண்டிருக்கிறார்கள். நாவல் படிப்பதற்கோ, சிறுகதை படிப்பதற்கோ அவர்களுக்கு நேரமில்லை. ஸ்கிரிப்டுக்காக மெனக்கெட தமிழ் சினிமாவில் பெரும்பாலானோர் தயாராக இல்லை. ஒருசில விதிவிலக்குகள் உண்டே தவிர, எல்லோரும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

இலக்கிய வாசிப்பு பழக்கமற்ற சமூகமும் இதற்கொரு காரணமில்லையா?

உண்மைதான். விசாரணை ஒரு தனிமனிதரின் அனுபவமாக இருந்தாலும் இலக்கிய பிரதி அது. அந்தப்படம் விருதெல்லாம் வாங்கியது, ஆனால் கமர்ஷியலாக ஹிட்டாகவில்லை. எப்போதாவது வரக்கூடிய முயற்சிகள் இப்படி ஆகிவிடுகின்றன. நாளை ஒரு இயக்குனர் ஒரு புத்தகம் பிடித்துப் போய் இந்தப் புத்தகத்தை படமாக எடுக்கலாம் யாராவது ஒரு தயாரிப்பாளரை அணுகினால், உடனே தயாரிப்பாளர் விசாரணைகூட கூட ஓடலையே என்று சொல்லி நிராகரித்து விடலாம்..எனவே விசாரணை போன்ற  முயற்சிகளை ஆடியன்ஸ்தான் ஆதரித்து நிலைமயை மாற்ற வேண்டும். ஆனால் நீங்கள் சொல்வது போல தமிழில் படிக்கிற பழக்கம் குறைந்துள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்றமாதிரி வாசகர் எண்ணிக்கை இல்லை. 15, 20 ஆண்டுகளில் நிறைய பேர் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். படிப்பென்றால் அதெல்லாம் பட்டம் வாங்குவதற்கான படிப்பாக மட்டுமே இருக்கிறது. வாசிப்பனுபவம் மிக மிக பலவீனமாக இருக்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மாதிரியான சமூக ஊடகங்கள் வந்தபிறகு, வாசிப்பு என்பது அந்த அளவில் தேங்கிப் போய்விடவும் வாய்ப்பிருக்கிறது.

பரந்துபட்ட சமூகம் நிறைய வாசிக்கிறதெனில், ரசனை கூடும். சினிமா மாதிரியான வடிவங்களிலும் அது பிரதிபலிக்கும்.  இலக்கியம் படிப்பதே குறைவு எனும்போது, இலக்கியம் எப்படி படமாக வரும்?

வசனகர்த்தாவாக கதைக்கு தகுந்த வசனங்கள் எழுதிக்கொடுத்தால் போதும் என்று உங்களிடம் கேட்கிறார்களா? அல்லது இலக்கியவாதிக்குண்டான சுதந்திரத்துடன் உங்களுக்கு பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுகிறதா?

என்னை ஒரு வசனகர்த்தாவாகத்தான் பார்க்கிறார்கள். அழகர் சாமியின் குதிரை ஒரு விதிவிலக்கு. அது என்னுடைய கதை. அதை சுசீந்திரன் படமாக்கியது தற்செயலாக நடந்தது. விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்தாலும் அதுவும்கூட கமர்ஷியலாக பெரிய வெற்றியடையாத படம்தான். அதனால்தான் அதுபோல அடுத்தடுத்து எதுவும் நடக்கவில்லை.

என்னிடம் வந்து இலக்கியத்தரமாக வசனம் எழுதிக்கொடுங்கள் என்று எவரும் கேட்பதில்லை. திரைக்கதைக்கு ஏற்றமாதிரி எழுதிக்கொடுங்கள் என கேட்பார்கள். ஒரு எல்லைக்குட்பட்டுதான் வசனம் எழுதிகொடுக்க முடியும். இதுதான் கதை, இந்த கதாபாத்திரம் இதைத்தான் பேசும் என்பதற்கான எல்லையுடனே எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அதைத்தாண்டி இலக்கியவாதியாக இருப்பதால் இலக்கியத்தரமாக கொடுங்கள் என யாரும் கேட்பதில்லை. எனக்கு மட்டுமல்ல ஜெயமோகன், எஸ். ரா போன்ற இலக்கிய வெளியில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்ற எழுத்தாளர்கள் கூட அவங்களுடைய முழுமையான திறமையை சினிமாவுக்குள் பிரதிபலிக்க முடியவில்லை. எல்லைக்குட்பட்டே அவர்களும் செயல்படுகிறார்கள்.
அழகர்சாமியின்  குதிரைக்கு எழுத்தில் இருந்த உயிர்ப்பு, சினிமாவிலும் வந்திருக்கிறதா?
ஒரளவுக்கு திருப்தியாக இருந்தது. என்ன காரணமென்றால் இந்தப் படத்துக்கு திரைக்கதை யில் சுசீந்திரனுடன் நானும் இருந்ததால்தான். அப்படத்தில் அசோசியேட்டாக வேலை செய்தேன். எழுதி முடித்த கதையில் சினிமாவுக்காக சிலதை சேர்க்க வேண்டியிருந்தது. குதிரைக்காரனின் பின்புலத்தை சேர்த்தோம். எழுதிய கதையில் இரண்டு வரிகளில்தான் அது சொல்லப்பட்டிருக்கும். நானும் சேர்ந்து இதைச் செய்ததால் திருப்தியாக இருந்தது. அழகர்சாமியின் குதிரை எழுத்தாளராக எனக்கு மகிழ்ச்சியைத்தந்த படம்தான்.  ஒரு எழுத்தாளராக திருப்தியானேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

குறு நாவலில் வரும் ரெண்டு, மூன்று இடங்கள்…குறிப்பாக காவல் நிலைய காட்சி, இறுதியில் ‘சாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிட்டா மழை பெயாது’ எனச் சொல்லும்போது மழை பெய்யும் காட்சி போன்றவை சினிமாவில் அழுத்தமாக வெளிப்பட்டன. மழை பெய்யும் காட்சியைப் பார்த்து தியேட்டரில் கைத்தட்டினார்கள். அதுதான் வெற்றி என நினைக்கிறேன். அழகர்சாமியைப் பொறுத்தவரை அது சரியாகவே உருமாற்றம் ஆகியிருந்தது.

இப்போது படம் இயக்கும் முயற்சிகளில் இருக்கிறீர்கள். உங்களுடைய சினிமாவில் இலக்கியத்தின் தாக்கம் எப்படியானதாக இருக்கும்?

ஆமாம், இப்போது நான் ஒரு திரைக்கதை எழுத்திக்கொண்டிருக்கிறேன்.  அதில் என்னுடைய பல சிறுகதைகளின் சாயல் இருக்கும். எனக்கு திருப்திகரமான திரைக்கதையாக அது அமையும் என நினைக்கிறேன். புதுமுகங்கள் வைத்து எடுக்கும்போது சுதந்திரமாக அதைச்  சிறப்பாக வெளிப்படுத்த முடியும் எனத் தோன்றுகிறது. ஆனால் எங்கு அது பிரச்சினையாகும் என்றால், இதை புதுமுகங்கள் வைத்து எடுக்க முடியாது, இதில் இந்த நடிகர்களைப் போடுங்கள் என சொல்லும் போது பிரச்சினையாகும்.  சின்ன சின்ன காம்ப்ரமஸை பண்ண வேண்டியிருக்கும். சினிமாவில் நூறு சதவீதம் திருப்தியாக செய்துவிடமுடியாது. வெளிப்புற தாக்கங்கள் நாற்பது, ஐம்பது சதவீதம் இருக்கும். எவ்வளவு அதிகபட்சமாக உங்களை வெளிப்படுத்துறீங்களோ, அந்தளவில் அது உங்களுக்கான வெற்றி என புரிந்துகொள்ள வேண்டும். இப்போதைய சூழல் அப்படித்தான் உள்ளது.

சினிமாவை எப்படி இலக்கியத்தரமாக்கலாம்?

இலக்கியத் தரம் என்கிற பிரயோகம் இங்கு பொருந்தாது.இலக்கியம் என்பது வேறு, சினிமா என்பது வேறு. சினிமா என்கிற மீடியம் வேறுபட்டது. அதன் தன்மை வேறுபட்டது.  இலக்கியம் என்பது தனி அனுபவம் ஒருத்தர் எழுதுகிறார் இன்னொருவர் படிக்கிறார். ரெண்டு பேருக்குமான அனுபவம் அது. அதை சினிமாவுக்கு நூறு சதவீதம் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. டிமாண்ட் என்னவாக இருக்கலாம் என்றால், நல்ல சினிமாவாக, நல்ல அனுபவமாக இருக்கலாம் என வைக்கலாம். இப்படிச் சொல்லலாம் ஏண்டா அந்தப் படத்தைப் பார்த்தோம். அல்லது நீங்கள் ஒரு படத்தைப் பார்த்து டி மாரலைஸ்டு ஆகி வரக்கூடாது.  அலுப்பூட்டுவது, சங்கட உணர்வை ஊட்டுவது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை குலைப்பது போன்ற நெகட்டிவ்வான விஷயங்களைத் தராமல், நல்ல அனுபவம் தருவதே நல்ல படத்துக்கான இலக்கணமாக நான் நினைக்கிறேன். கமர்ஷியல் படமாகக்கூட இருக்கட்டும். உங்களை மேலும் சீரழிக்காமல், நல்ல மனநிலையில் வைத்திருப்பதே நல்ல படம்தான். இலக்கியத்தரமான படம்தான் என்று சொல்வதைவிட நல்ல படம் என்று சொல்லலாம்.

இலக்கியத்தரம் என்பதை சினிமாவை சினிமா எனும் கலையாக பார்ப்பது என எடுத்துக்கொள்ளலாம் இல்லையா?

இலக்கியத்தில் எந்தவித சமரசங்களும் செய்யாமல் நான் ஒரு வாழ்க்கையை சொல்கிறேன், அதை வேறொரு வாழ்க்கை பின்புலத்தில் வாழ்கிற நீங்கள் அந்த வாழ்க்கைக்குள் போய் வாசிக்கிறீர்கள். ஒரு அனுபவம் கிடைக்கிறது. இதுதான் இலக்கியத்தின் செயல்பாடு. சினிமாவிலும் அதேமாதிரி வெறுமனே புனையப்பட்டதாக இல்லாமல், ஒரு வாழ்வியலை, ஒரு நெருக்கடி, பிரச்சினையை, காதலை வெளிப்புற சமரசங்கள் இல்லாமல் சொல்ல வேண்டும். அதில் ஒரு உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்று சொல்லலாம். கூடவே அது அழகியலோடும் இருக்கவேண்டும். இதை வேண்டுமானால் நீங்கள் சொல்ல வருகிற இலக்கியத்தரமான சினிமாவுக்கான வரையறை என்று வைத்துக் கொள்ளலாம்.

மலையாளத்திலிருந்து மறுஆக்கம் செய்யப்பட்ட ‘36 வயதினிலே’ படத்தின் ஒரு இடத்தில் ஜோதிகா கதாபாத்திரம் தன் அலுவலகத்தில் பேசுவதாக உரையாடல் வரும். அதில் புத்தகம், இலக்கியம் பற்றியெல்லாம் பேசிக்கொள்வார்கள். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தபோதும் அந்த உரையாடல் வெட்டுப்படாமல் வைத்திருந்தார்கள். ஆனால், தமிழ் படங்களில் இலக்கியம் குறித்தோ, புத்தகங்கள் குறித்தோ இப்படியான உரையாடல் வைப்பதற்கான சாத்தியங்களே இல்லை என்ற சூழல்தானே நிலவுகிறது?

அந்த படத்தின் வசனகர்த்தா விஜி. அவர் இலக்கிய ஆர்வம் உள்ளவர், நிறைய படிக்கக்கூடியவர். ரொம்ப சென்ஸிபிள் ஆன ரைட்டர்.வேறொருவராக இருந்தால் அந்த வசனமும் கூட இடம் பெற்றிருக்காது. மலையாள சூழலோடு தமிழ் சூழலை ஒப்பிடவே முடியாது. கதாநாயகியை மையப் பாத்திரமாக வைத்து வந்த அந்தப்படம் மலையாளத்தில் வெற்றியடைந்ததால்தான் தமிழுக்கு வந்தது. தமிழில் கதாநாயகியை மையப்படுத்திய கதையை ஒரு இயக்குனர் யோசிப்பதே அபூர்வம். நீங்கள் சினிமா படைப்பாளியாக இருக்கும்பட்சத்தில் இருக்கிற ட்ரெண்டுக்கு ஏற்றமாதிரிதான் படம் செய்ய வேண்டும் என்று உங்களை நீங்களே கட்டுப்படுத்திக்கொள்வீர்கள். எழுதும்போதே அப்படித்தான் எழுதுகிறோம். ஒரு திரைக்கதை எழுதிவிட்டு, அதற்கேற்ற தயாரிப்பாளரைத் தேடுவது மிக மிக சிரமமானது.  அவர்களுக்கு எது பிடிக்கும், டிரெண்டுக்கு ஏற்றாற்போல் எதைச் செய்தால் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்வார் என்பதற்கேற்பதான் கதை யோசிக்கிறார்கள்.

நிறைய இளைய இயக்குநர்கள் இலக்கியம் படிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் படம் இயக்க வரும்போது இன்றைய டிரெண்டுக்கு என்ன கதை சொன்னால் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்வார் என்றுதான் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் அது அவர்களுடைய வாழ்க்கைப் பிரச்சினை. வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன, படம் இயக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கும்போது ரிஸ்க் எடுக்க அவர்களாலும் முடியவில்லை. இது சூழலின் சிக்கல்தான்.

இந்த சூழல் மாறும் என நினைக்கிறீங்களா? ஏதேனும் புரட்சி நடக்க வாய்ப்பிருக்கிறதா?

இந்தப் புரட்சியெல்லாம் தமிழ் சூழலில் இப்போதைக்கு சாத்தியமே இல்லை. நமக்குக் கிடைக்கிற வெளியில் என்ன செய்ய முடியும் என பார்க்க வேண்டும். நான் எழுதும் வசனத்துக்குள் ஏதேனும் சொல்ல முடியுமா எனப் பார்ப்பேன், படம் செய்தால், முழு திருப்தி இல்லாவிட்டாலும் திருப்தியாக இல்லை என்று படம் செய்யக்கூடாது. பெரிய அளவில் புதுசாக நான்கைந்து இயக்குநர்கள் வருகிறார்கள், நம்பிக்கை தருகிறார்கள். ஆனால் அவர்களுமே இரண்டு படங்களுக்குப் பிறகு, ஒரு பெரிய ஹீரோவை வைத்து இயக்கும்போது வேறுமாதிரி ஆகிவிடுகிறார்கள்.

இலக்கிய பின்புலத்தில் சினிமாவுக்கு வருவது, உங்களுக்கு பலமாக இருக்கிறதா, பலவீனமாக இருக்கிறதா?

தற்செயலாதான் சினிமாவுக்கு வந்தேன். பர்சனலா இலக்கியவாதியாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. என்னுடைய எல்லை எது என்பதையும், வாழ்வு குறித்தும் வெற்றி தோல்வி பற்றிய எனது பார்வையையும் இலக்கியம் தெளிவு படுத்தி இருக்கிறது. என்னுடைய கதைகள்தான்  என்னுடைய அடையாளம். வாழ்க்கைக்காக சினிமா, சீரியல் வசனங்கள் எழுதுகிறேன்; இப்போது ஒரு படம் இயக்கும் முயற்சியிலும் இருக்கிறேன். இது இயல்பாக நடந்தது. சினிமாவுக்கு வரவேண்டும் என நான் வரவில்லை. கதை எழுதுகிறவர் என்பது திரைத்துறையில் எனக்கொரு மரியாதை அவ்வளவுதான். கதை எழுதி வருமானம் ஈட்டமுடியும் என்ற நிலை இல்லை. வசனம் எழுதித்தான் ஈட்ட முடிகிறது.

இலக்கியவாதியாக இருந்து சினிமாவுக்கு வசனம் எழுதுவது உதவிகரமாக இருக்கிறது. பலமாகவும் இருக்கிறது. புதிதாக வருகிறவர்களுக்கு நிறைய படிக்க வேண்டும் என நான் சொல்வேன். ஏனென்றால் வேறுபட்ட வாழ்க்கையை படிப்பதன் மூலம் நிறைய தெரிந்துகொள்ள முடியும். வாழ்க்கை இல்லாமல் படம் நன்றாக இருக்காது. வாழ்வியலை தெரியாமல், சமூகத்தையும் மனிதர்களையும் இங்கிருக்கும் அரசியலையும் புரிந்துகொள்ளவில்லையென்றால், அவன் செய்வது அனைத்தும் உள்ளீடற்ற விஷயமாகத்தான் இருக்கும். இது எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். சினிமா படிக்கிற மாணவர்களுக்கு இதை நான் வலியுறுத்தி சொல்வேன். இலக்கியம் தெரிந்த ஆள் உருவாக்குகிற ஒரு சினிமா, இலக்கியம் தெரியாதவர் உருவாக்குகிற சினிமாவைவிட சிறந்ததாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

தற்போது இயக்குவதற்காக எழுதிக்கொண்டிருக்கும் திரைக்கதை எதைப் பற்றியது?

தற்போது சமூகத்தில் பெரிய மாறுதல் நடந்து கொண்டிருக்கிறது. வேளாண்மை, நிலம் சார்ந்த பெரிய மாறுதல் கிராமங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த பிரச்சினைகளைப் பேசுகிற திரைக்கதை ஒன்றை எழுதி வருகிறேன். இதை அப்படியே சொல்லாமல் நகைச்சுவை கலந்த ஒரு திரைக்கதையாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அது எதை சொல்லும் என்றால் கிராமத்தில் நடக்கும் மாற்றங்கள், மதிப்பீடுகள் எப்படி மாறுகின்றன, உறவுகளின் அடிப்படை மாறுவது, பணம் என்பது எப்படி ஒரு பெரிய முக்கியமான பொருளாக சொல்லப்படுகிறது, அந்தப் பணம் நிம்மதியையும் சந்தோசத்தையும் ஏன் தருவதில்லை, கிராமங்களில் வெறுமை சூழ்ந்திருக்கிறது, கிராமத்தில் நிம்மதி இருக்கும் என்பார்கள் ஆனால் இப்போது அது இல்லை. இப்படியான் இந்த விஷயங்களை பேசியிருக்கிறேன். இதில் நகைச்சுவையும் காதலும் இருக்கும். இவை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஆனால் அது முடியாது.

சமீபத்தில் ‘திதி’ என்றொரு கன்னடப்படத்தைப் பார்த்தேன். இந்தப்படம் எனக்கு மிக நெருக்கமாக இருந்தது. கர்நாடகத்தில் அந்தப் படம் விருது வாங்கியிருக்கிறது. ஓரளவு ஓடவும் செய்திருக்கிறது. தமிழில் ஏன் அது சாத்தியமில்லை என்பது உண்மையில் எனக்குப் புரியவில்லை. அப்படியொரு படம் எடுத்தால் தமிழ்நாட்டில் அங்கீகரிப்பார்களா? ஓடுமா? முதலில் அதை திரையரங்குகளுக்கு கொண்டு சேர்க்க முடியுமா? என்கிற வருத்தமான சிந்தனைகள் தோன்றுகின்றன.

தற்போது வெளியாகியிருக்கும் ‘கபாலி’ படத்தில்  வரும் ‘ஆண்டை’ என்ற சொல் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஒரு வசனகர்த்தாவாக இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நாம் தொழிற்நுட்ப ரீதியாக நிறைய வளர்ந்திருக்கிறோம் என நினைக்கிறோம். ஆனால் நாம் சிந்தனையில் மோசமாக சீரழிந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. சவாலே சமாளி போன்ற பழைய படங்களில் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர் கதாநாயகனாக இருப்பார். அவர் பண்ணையாராக, ஆண்டையாக இருப்பவரின் மகளைக் காதலிப்பார். அதனால் பிரச்சினை வரும். கதாநாயகன் பண்ணையாரை எதிர்த்து நிற்பார். அவருடைய ஆண்டைத்தனத்தை கேள்வி கேட்பார். நசுக்கப்பட்ட மனிதன் நசுக்கிறவனை கேள்வி கேட்கும் எம்ஜிஆர் படங்கள் பல உண்டு..இப்படி தமிழில் அந்தக் காலக்கட்டத்தில் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. அப்போது அது ஒரு விஷயமாகவே இல்லை. ஆனால்  இப்போது அது பிரச்சினைக்குரியதாக மாறி இருக்கிறது.

ஆண்டை என்பது அடக்குமுறையைக் குறிக்கும் ஒரு சொல்லாக இந்தப் படத்தில் சொல்லப்பட்டதாகவே நான் பார்க்கிறேன். குறிப்பிட்ட எந்தவொரு சாதியையும் அந்த வசனம் குறிக்கவில்லை. ஒடுக்குகிற ஒருவனை ஒடுக்கப்படுகிற ஒருவன் நீ என்னை ஒடுக்குகிறாய் என சொல்கிறான் இதிலென்ன தவறு இருக்கிறது? இதற்கு எவ்வளவு விவாதங்கள். பேச்சுகள். ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் வந்துவிட்ட பிறகு இவ்வளவு வக்கிரமான ஆட்கள் இருக்கிறார்களா என்ற எண்ணம் வருகிறது. சாதியம் முன்னை விட அதிகமாகவே இங்கே பரவிக்கொண்டிருக்கிறதாகவே தோன்றுகிறது. இது வேதனைக்குரிய ஒன்று.

‘படச்சுருள்’ ஆகஸ்ட் 2016 இதழில் வெளியான நேர்காணல்.

முகப்புப் படம்: பாஸ்கர் சக்தியின் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.

அமீர்கான் நீக்கம் களங்கத்தைத் துடைக்குமா?

நாட்டில் நிலவிவரும் சகிப்புத்தன்மையற்ற சூழ்லுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுகளை திருப்பி அளிக்கும் போராட்டத்தில் அறிவுஜீவிகள் ஈடுபட்டிருந்த நேரத்தில், பாலிவுட் நடிகர் அமீர்கானும் அதில் இணைந்துகொண்டார். விருதைத் திருப்பி அளிப்பதில் நம்பிக்கை இல்லை என்றபோதும், நாட்டில் நிலவரும் அசாதார சூழல் தன் குடும்பத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசினார். பாலிவுட் நடிகர் ஷாரூக் கானும் இதே கருத்தை சொல்லியிருந்தார். ஆனால் அமீர்கான் அடுத்ததாக சொன்னதுதான் சர்ச்சையைக் கிளப்பியது. சகிப்புத்தன்மையற்ற சூழலைக் கருதி நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா என தன் மனைவி தன்னிடம் ஆலோசித்ததாக சொன்னார் அமீர்கான்.
சமூக ஊடகங்களில் உள்ள மோடி பக்தர்கள், இந்த வரிகளைப் பிடித்துக்கொண்டு அவரை ஓடஓட விரட்டியடித்தார்கள். அமீர்கான் தேசப்பற்றில்லாதவர் என வழக்கமான முத்திரையை அவர் மேல் குத்தினார்கள். அமீர்கான் தனது தேசப்பற்றை நிரூபிக்க, சீதையைப் போல நெருப்பில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சகிப்புத்தன்மை இல்லை என்று சொன்னது தனக்கே நடக்கிறது என நொந்துகொண்டார் அமீர்கான்.
இந்தச் சம்பவங்கள் நடந்து ஒரு மாதங்களுக்கும் மேலான நிலையில்,  பாஜக அரசு முக்கியமான முடிவை அறிவித்திருக்கிறது. இந்தியா சுற்றுலாத் துறையில் விளம்பரத் தூதராக இருந்த அமீர்கான் நீக்கப்பட்டுள்ளார். சகிப்பின்மை நிலவுவதாக பேசியதை அடுத்தே அவர் நீக்கப்பட்டதாக வட இந்திய ஊடகங்கள் பரபரத்தன. ஆனால் இதை மறுத்திருக்கிறார் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா. அமீர்கானை ஒப்பந்தம் செய்தது விளம்பர ஏஜென்ஸிதான், அந்த ஏஜென்ஸியின் ஒப்பந்தம்தான் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அமீர்கான் போன்ற  மக்களின் நம்பிக்கைக்குரிய முன்னணி நடிகர் வேண்டும் என்கிற அடிப்படையில்தான் இந்திய சுற்றுலாத் துறை அமீர்கானைத் தேர்ந்தெடுத்தது. ஏதோ ஒரு மாடல் விளம்பரத் தூதராக இருந்தால் போதும் என்ற அடிப்படையில் தூதர் தேர்வு நடந்திருந்தால் அமைச்சர் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால், நோக்கத்தோடு தேர்ந்தெடுத்துவிட்டு, அரசியல் காரணங்களுக்காக அவரை நீக்குவதை நியாயப்படுத்துகிறது மத்திய அரசு.
வழக்கமாக அரசியல் எதிரிகளைத்தான் ஆட்சிக்கு வந்ததும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு ஈடுபடும். ஆனால், மோடி அரசு தன்னை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தயவு தாட்சண்யமின்றி பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. அதேசமயத்தில் தனக்கு வேண்டியவர் என்றால் தகுதியே இல்லையென்றாலும், எதிர்ப்பையும் மீறி பணியில் அமர்த்துகிறது. இதற்கு உதாரணமாக புனே திரைப்படக் கல்லூரி தலைவராக புராண தொலைக்காட்சி நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதைச் சொல்லலாம்.
தற்போது இந்தியாவின் சுற்றுலாத் துறை விளம்பரத் தூதராக நடிகர் அமிதாப் பச்சனை நியமிக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன. மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அம்மாநில சுற்றுலா தூதராக 10களுக்கு மேலாக இருந்தவர் அமிதாப் பச்சன். அந்த ‘நட்பு’ காரணமாக பிரதமர் அலுவலகத்தின் பரிந்துரையின் பேரில் அமிதாப் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
உலகைக் கவர இந்தியா யாரை விளம்பரத் தூதராக நியமித்தாலும் உலக அரங்கில் கடந்த ஆண்டு ஏற்பட்ட களங்கம் மாறப்போவதில்லை. அமெரிக்காவில் இங்கிலாந்தில் மோடிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களே இதற்கு சாட்சி!

தினச்செய்தி நாளிதழில் வெளியானது.

காண்டம் குறித்து குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதில் என்ன தவறு?

‘மனிதர்கள் எல்லா நேரத்திலும் ஒரேமாதிரியாக நடந்துகொள்வதில்லை’ இந்த வாக்கியம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ராதிகா சரத்குமாருக்கு சரியாகப் பொருந்தும். அவருடைய சமீபத்திய நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன. சிம்புவின் பீப் பாடலை ஏற்றுக்கொள்கிற ராதிகா, வயது வந்த ஒரு இளைஞன், காண்டம் கேட்பதாக வைக்கப்பட்ட ஒரு திரைப்படக்காட்சியை பழமைவாதிகள் பாணியில், “அய்யோ அதெப்படி காண்டம் கேட்பதை படத்தில் வைக்கலாம்” என்று சீறுகிறார். “என் மகன் காண்டம் பற்றி கேட்டால் நான் என்ன சொல்வேன்” என 30 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறார்.

திராவிட இயக்கத்தின் மிகப் பெரும் கலைஞனாகக் கொண்டாடப்படும் எம். ஆர். ராதாவின் மகள் இப்படி கேட்பதை எம். ஆர். ராதா எப்படி பகடி செய்திருப்பாரோ? இருக்கட்டும். எம். ஆர். ராதாவின் மகளாகப் பிறந்து, லண்டனில் படித்த ராதிகா நிச்சயம் பிற்போக்குத்தனமான சிந்தனையுடையவர் என்று சொல்ல முடியாது. சினிமாவில் இருக்கும் சுயசிந்தனை உள்ள சில பெண்களில் இவரும் ஒருவர்.

எத்தனை சிறுவயது பெண்கள் வேண்டாத கர்ப்பத்தால் தங்களுடைய எதிர்காலத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அவர் அறியாமாட்டார் என்று நம்புவதற்கில்லை. பாலியல் கல்வியை பள்ளிகள் கற்றுத் தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துவதே இதன் பின்னணியில்தானே! வெளிநாடுகளில் பதின்பருவ பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும்போது புத்தகப் பையில் கட்டாயம் காண்டம் இருக்க வேண்டும். அப்படி காண்டம் வைத்து அனுப்பாத பெற்றோரை, ஆசிரியர்கள் கூப்பிட்டு, “நிங்களெல்லாம் நல்ல பெற்றோர்தானா ?” என்று கேட்பார்கள்.

நம்முடைய காலாச்சாரம் அந்த அளவுக்கு ‘தாராளமய’மாக்கப்படவில்லை என்றாலும், சமூக சூழல் மாறிவருவதை ஊடகத்தில் முக்கிய ஆளுமையாக இருக்கும் ராதிகாவும் தெரிந்து வைத்திருப்பார். மாறிவரும் சமூக சூழலுக்கு குழந்தைகள், பதின்பருவத்தினர் எப்படி தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை சொல்லித்தரும் பாலியல் கல்வி வேண்டும் கல்வியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

காண்டம் பற்றி என் மகன் கேட்டால் என்ன பதில் சொல்வேன்? என்று கேட்பதன் மூலம், அவருக்கும் விஷாலுக்குமான பிரச்சினையில் தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.  தன்னுடைய தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் பெண்களின் மனதில் தனக்கொரு தனித்த இடம் பிடித்திருக்கும் ராதிகா, இப்படிச் சொல்வதன் பெண்களின் நலனுக்கு எதிரான பார்வையை முன்வைக்கிறார்.

பீப் பாடலில் இல்லாத சமூக விரோதம், காண்டம் கேட்பதில் இருப்பதாக அவர் வெளிப்படுத்தி வருவது, அவருடைய தனிப்பட்ட மோதல்களை தீர்த்துக் கொள்ளவே என்பதை ராதிகாவை பின் தொடரும் பெண்களில் எத்தனை பேர் அறிவார்கள்? தன்னை ஆதர்ஷமாக நினைக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல, தன் சொந்த மகனின் நலனுக்குமே ராதிகாவின் சிந்தனைகள் நல்லதல்ல.

உங்கள் நல்ல தாயாக இருக்க வேண்டும் என்றால், நிச்சயம் காண்டம் என்றால் என்ன என்று சொல்லிக்கொடுங்கள் ராதிகா!

தினச்செய்தி(4-1-2016) நாளிதழில் வெளியானது.