இது மக்களாட்சி என சொல்ல இன்னும் ஏதேனும் மிட்சம் இருக்கிறதா?

மகாராஷ்டிரத்தில் ஏதும் செய்யாமல் இருக்கிறார்களே என அரசியல் நோக்கர்கள் ஏமாந்து போன ஒரு தருணத்தில், நள்ளிரவு ஆட்டத்தை அதிரடியாய் அரங்கேற்றியிருக்கிறார்கள் நவீன ‘சாணக்கியர்கள்’. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவ சேனாவுடன் கூட்டணி முடிவாகிவிட்டதென்றும் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாகவும் நாட்டின் பெரும்பான்மையான நாளிதழ்கள் சனிக்கிழமை காலையில் செய்தி வெளியிட்டிருந்தன. செய்தித்தாளில் வந்தது உண்மையா அல்லது காலையில் வந்துகொண்டிருக்கு பிரேக்கிங் நியூஸ் உண்மையா என ஒரு கணம் மக்கள் குழம்பிப் போனார்கள். ஆனால், தேசியவாத காங்கிரசின் அஜித் பவாருடன் நள்ளிரவு கூட்டணி அமைத்து அதிகாலை ஐந்தரை மணிக்கு முதலமைச்சர் – துணை முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்ய வைத்த டெல்லி சாணக்கியர்கள் இந்தக் குழம்பிய நிலையைக் கண்டு சிரித்திருக்கக்கூடும்.

சமீபத்தில் நடந்துமுடிந்த மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஒரு கூட்டணியிலும் பாஜக – சிவசேனா கட்சிகள் மற்றொரு கூட்டணியிலும் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் தேசியவாத காங்கிரசுக்கு 54 இடங்களும் காங்கிரசுக்கு 44 இடங்களும் கிடைத்தன. ஆக, பாஜக தலைவர்கள் காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கத்தை முன்வைத்து இந்து தேசியவாத பிரச்சாரத்தை முடுக்கிவிட்டபோதும், அமோக வெற்றியை பாஜக கூட்டணியால் பெறமுடியவில்லை. ஆட்சியமைக்கத் தேவையான 145 எம்.எல்.ஏக்கள் போதும் என்றாலும் பாஜகவால் 105 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

ஆட்சியமைக்க சிவசேனாவின் தயவு பாஜகவுக்கு அவசியமாகத் தேவைப்பட்டது. ஆனால், கடந்த காலத்தைப் போல வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுக்க சிவசேனா தயாராக இல்லை. துணை முதலமைச்சர் பதவி, முக்கிய அமைச்சரவைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அதில் உறுதியாக நின்றது சிவசேனா. சித்தாந்த பங்காளிகளான பாஜகவும் சிவ சேனாவும் எப்படியும் சேர்ந்து ஆட்சியமைத்து விடுவார்கள் என்றே அனைத்து தரப்பினரும் எதிர்ப்பார்த்தனர். இழுபறி நீடித்துக்கொண்டிருந்த வேளையிலும்கூட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அமைதி காத்தன.

ஒருகட்டத்தில் சிவ சேனாவை பாஜகவுடன் இனி பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்கிற நிலைக்கு வந்தது. சித்திரங்கள் மாறின… ‘அரசியல் வேறுபாடுகளை’ மறந்து சிவ சேனாவுடன் தே.வா. கா. – கா பேச்சு வார்த்தை நடத்தின. நீண்ட இழுபறிக்குப் பின், உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் ஆட்சியை நடத்த குறைந்தபட்ச செயல்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் சரத் பவார் தரப்பு கூறியது.

தேர்தல் முடிவுகள் செப்டம்பர் 24 அன்று வெளியாகி, சரியாக இரண்டு மாதங்கள் கழித்து நீண்ட இழுபறிக்குப் பிறகு, மகாராஷ்டிரத்தில் அரசு அமைந்துள்ளதாக பெருமூச்சு விட்ட நிலையில், ‘டெல்லி சாணக்கியர்கள்’ புதிய திரைக்கதையுடன் காட்சியை மாற்றியமைத்துவிட்டனர்.

டெல்லி சாணக்கியர்களின் மாற்றியமைத்த திரைக்கதையின் ஜனநாயக தன்மை குறித்து அலசும் முன் ஒரு ட்விட்டர் பதிவுடன் பிளாஸ் பேக்கை அறிந்துகொள்வோம். பாஜக -சிவ சேனாவுடன் நடத்திய இழுபறி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே, தே.வா. கா. உடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான செய்திக்கு பதிலளிக்குவிதமாக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஒரு ட்விட்டர் பதிவை எழுதியிருந்தார்.

“பாஜக நிச்சயம் ஒருபோதும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைக்கப் போவது இல்லை, இல்லை..இல்லை.. மற்றவர்கள் அமைதியாக இருந்தபோது, அவர்களுடைய ஊழலை நாங்கள்தான் வெளிக்கொண்டுவந்தோம்” என்றது பட்னாவிஸின் ட்விட்.

பாஜகவுக்கும் முந்தைய காங்கிரஸ் – தே. வா. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது ரூ. 70 ஆயிரம் கோடி மதிப்பிலான பாசன திட்டத்தில் முறைகேடு நடந்ததாகவும், அதில் அஜித்பவாருக்கு முக்கிய இடம் இருந்ததாகவும் குற்றச்சாட்டை எழுப்பியது பாஜக. இதை முன்வைத்து பிரச்சாரம் செய்த பாஜக ஆட்சியைப் பிடித்ததும் 2014-ஆம் ஆண்டு பாசன ஊழலை விசாரிக்க உத்தரவிட்டப்பட்டது. விசாரணை இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. மேலும் பாவர் குடும்பத்தினர் மீது கூட்டறவு சங்க முறைகேடு குற்றச்சாட்டும் காத்திருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் டெல்லி சாணக்கியர்கள் புதிய திரைக்கதையை அமைத்துள்ளனர்; அஜித் பாவரை மத்திய அரசாங்கத்தின் அனைத்து ஆற்றல்களையும் பயன்படுத்தி இணைத்துள்ளனர். யார் யாருடனும் கூட்டணி சேரலாம், இதுதான் ஜனநாயகம். சரிதான்… ஜனநாயகம் என்ன பாடுபட்டிருக்கிறது என்பதையும் பார்ப்போம்.

பட்னாவிஸுக்கும் அஜித் பவாருக்கும் அதிகாலை 5.30 மணிக்கு அவசர அவசரமாக பதவி பிரமாணம் செய்து வைத்து ஆளுநர் பகத் சிங் கோசியாரி, பாஜகவின் திட்டத்தை செயல்படுத்துபவராக நடந்துகொண்டிருக்கிறார். முன்னதாக, மகாராஷ்டிர பாஜகவின் அங்கமாக, பாஜகவின் நடவடிக்கைகளுக்கு மட்டுமே இவர் இசைவாக நடந்துகொண்டார் என்பதும் நினைவு கூறத் தக்கது.

பாஜக ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மையை திரட்ட முடியாத நிலையில், தனது பதவியை நவம்பர் 9-ஆம் தேதி பட்னாவிஸ் ராஜினாமா செய்தார். அவருக்கு 48 மணி நேரம் வழங்கியிருந்த ஆளுநர், சிவ சேனா 24 மணி நேரம் ஆட்சியமைக்க கால அவகாசம் கேட்டபோது மறுத்தார். தேசியவாத காங்கிரசுக்கு 24 மணி நேரம் அளித்து, அது முடியும் முன்னரே குடியரசு தலைவர் ஆட்சி மாநிலத்தில் அமலாக்கப்படுவதாக அறிவித்தார். பொம்மை தலைமையிலான உச்சநீதிமன்ற தீர்ப்பை வெளிப்படையாக மீறியது இந்த அமலாக்கம்.

மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏக்களை குதிரை பேரத்தில் வாங்க, பாஜகவுக்கு அவகாசம் வழங்கவே இந்த குடியரசு தலைவர் ஆட்சி அமலாக்கத்தைக் கொண்டுவந்தார் ஆளுநர். அதுபோல, நினைத்தது நடந்தது. தேசியவாத காங்கிரஸ் உடைக்கப்பட்டு அஜித் பவாரும் அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது. எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரிக்கிறார்கள், அவர் யார் என்கிற விவரம் எதையும் ஆளுநர் மாளிகை வெளியிடவில்லை. அவர்களுடைய கையெழுத்து, அவர்கள் ஆதரவளிப்பதாக சொன்னது உண்மைதானா என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் எவ்வித விசாரணையும் ஆளுநர் செய்யவில்லை.

இதில், உச்சகட்ட ஜனநாயக படுகொலையாக, ஆளுநரும் குடியரசு தலைவரும் டெல்லி சாணக்கியர்களின் கைப்பாவைகளாக இந்த விசயத்தில் செயல்பட்டிருப்பதைச் சொல்லலாம். முந்தைய நாள் ஒரு கூட்டணி தங்களிடம் பெரும்பான்மை உள்ளதாக அறிவிக்கிறது. இரவோடு இரவாக மாநிலத்தில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்படுகிறது. குடியரசு தலைவர் ஆட்சி நீக்கப்படுவதற்கு முன் மத்திய அமைச்சரவை கூடி தனது பரிந்துரையை குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும். அந்த பரிந்துரையின் அடிப்படையில் குடியரசு தலைவர், ஆளுநருக்கு உத்தரவை அனுப்புவார். இதெல்லாம் நள்ளிரவில் எப்போது நடந்தது?

பிரிவு 12-ஐப் பயன்படுத்தி, அவசர கால நிலை காரணமாக பிரதமர், குடியரசு தலைவர் ஆட்சியை மாநிலத்திலிருந்து திரும்பப் பெறலாம். இந்தப் பிரிவைப் பயன்படுத்தியிருப்பதாக அரசு சொல்கிறது. ஆனால், அப்படியென்ன அவசர நிலை என்பது குறித்து விளக்கப்படவில்லை.

பாஜக ஆட்சி தொடர, 36 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும். இந்த எம்.எல்.ஏக்களை அஜித் பவார் எங்கிருந்துகொண்டுவருவார் என்பது டெல்லி சாணக்கியர்களுக்கே வெளிச்சம். பாஜகவின் அரசியல் தந்திரங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் காங்கிரசால் என்ன செய்ய முடியும்? கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏக்கள் மீது பாய்ந்த வழக்குகள் ஆண்டுகணக்கில் நீதிமன்றத்தில் தூங்கும்போது சரத் பவாரால் என்ன செய்துவிட முடியும்?

“அஜித் பவார் ரூ. 70 ஆயிரம் கோடியை பாசன திட்டத்துக்காக பயன்படுத்தினார். அந்தப் பணம் எங்கே போனது? அந்த தண்ணீர் எங்கே போனது? ஒரு சொட்டுகூட தண்ணீர் இல்லையே?” என உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அனல் பறக்கும் பேச்சின் தகிப்பு இன்னமும் மறையவில்லை.

கர்நாடகா, கோவா, அஸ்ஸாம், மணிப்பூர் மாநிலங்களில் பெரும்பான்மையே பெறாமல், அல்லது முன்னாள் எம்.எல்.ஏக்களை வாங்கி தனது சுவடே இல்லாத திரிபுராவில் ஆட்சியமைக்க திட்டம் தீட்டி செயல்படுத்திக் காட்டிய ‘சாணக்கியர்’, ஊழல் குறித்து ஏன் இத்தனை தூரம் அலட்டிக்கொள்ளப்போகிறார்?

காங்கிரசின் ஊழல் ஆட்சி, குடும்ப ஆட்சி குறித்து பேசியே ஆட்சியைப் பிடித்தது பாஜக. பயங்கரவாதிகளிடம் கருப்புப் பண புழக்கத்தை ஒழிப்பேன் என சொல்லி பணமதிப்பழிப்பு நடவடிக்கையை கொண்டுவந்த பாஜக, பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமிடம் தேர்தல் நிதி வாங்கியிருப்பதாக ஆதரத்துடன் வெளியாகியிருக்கிறது. ஆக, பாஜகவிடன் எந்த அறமும் பாக்கியில்லை.

பல கட்சி ஜனநாயகத்தில் எந்தக் கட்சியும் யாருடனும் கூட்டு சேரலாம் என்பதைச் சொல்லி சொல்லியே மக்களை இத்தகைய கீழிறங்கிய நிலையைக் காணப் பழக்கப்படுத்திவிட்டார்கள். ஒருமுறை வாக்களித்தபின், மக்களின் ஜனநாயக கடமை முடிந்துவிடுகிறது. எத்தகைய பொய் வாக்குறுதிகளை கூறினாலும், எத்தகைய தகிடு தத்தங்களை செய்தாலும் மக்களால் அதன்பிறகு எந்தக் கேள்வியும் கேட்க முடியாது. மக்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இது மக்களாட்சி என சொல்ல இன்னும் ஏதேனும் மிட்சம் இருக்கிறதா? ‘சர்வாதிகார ஜனநாயகம்’ என சொல்வதே சரியாக இருக்கும். இனியும் ஏன் பூசி மொழுக வேண்டும்? வெளிப்படையாகவே அறிவித்துவிடுங்கள்.