தத்தளிக்கும் காங்கிரசை கரை சேர்ப்பது யார்?

கடந்த ஒருவாரமாக மகாராஷ்டிரத்தில் அரங்கேறிக்கொண்டிருந்த அரசியல் த்ரில்லர் நாடகம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பதன் மூலம், தாராளவாத ஜனநாயகவாதிகளின் வாழ்த்துக்களை பெற்றுவருகிறது சிவ சேனா என்னும் பாசிச மதவாத, பிரிவினை வாத கட்சி. ஜனநாயகத்தின் யாரும் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்கிற ஃபார்முலா படி, சரத் பவார்தான் இந்த அரசியல் த்ரில்லரின் இயக்குநர் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள். எனில், காங்கிரசின் இடம் என்னவாக உள்ளது என்கிற முக்கியமான கேள்வி எழுகிறது. சிவ சேனாவுக்கு ஆதரவா இல்லையா என்கிற முடிவெடுக்கவோ துணிந்து களத்தில் இறங்கவோ காங்கிரஸ் மேலிடம் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போன நிலையில் பாஜக முந்திக்கொண்டு ஆட்சியமைக்க முயன்றது.

மாலுமி இல்லாத கப்பலைப் போல காங்கிரஸ் இந்திய அரசியல் களத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது என்பதையே மகாராஷ்டிரத்தில் நடந்தவை சுட்டிக்காட்டுகின்றன. பொது நோக்கத்துக்காக இயங்கும் ஒரு அமைப்புக்கு தலைவர் வேண்டும் அல்லது உறுதியான ஒரு சித்தாந்தம் வழிநடத்த வேண்டும். பாஜகவை வலதுசாரி சித்தாந்தம் வழிநடத்துகிறது. கம்யூனிஸ்டுகளை இடதுசாரி சித்தாந்தம் வழிநடத்துகிறது. ஆனால், காங்கிரஸ் தனது சித்தாந்தம் குறித்த தெளிவற்ற நிலையில், ஒரு தலைமையை மட்டுமே நம்பியுள்ளது. அந்தத் தலைமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள காங்கிரசில் யாருமில்லை. அல்லது காங்கிரசின் வாரிசு தலைமை அந்தப் பொறுப்பை மற்றவர்களுக்கு விட்டுத்தர தயாராக இல்லை.

2014-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்த நேரத்தில் அவருக்குத் தெரியாமலேயே காங்கிரசின் இரண்டாம் கட்ட தலைவர்கள் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என அறிவித்தார்கள். காங்கிரஸ் துணை தலைவராகவும் எம்.பி. யாகவும் இருந்த ராகுல் காந்தியை முதன்மைப்படுத்தி 2014-ஆம் ஆண்டின் பிரச்சாரங்கள் இருந்தன. ஆனால், ஐ.மு.கூ. ஆட்சியின் மீது இருந்த பல்வேறு ஊழல் புகார்கள், பாஜக முன்வைத்த ‘வளர்ச்சி’ என்கிற முழக்கம் காரணமாக காங்கிரஸ் வெறும் 44 இடங்களை மட்டுமே வெல்லும் நிலைமைக்குச் சென்றது.

‘மோடி’ அலை காரணமாகவே இந்த வீழ்ச்சி என காங்கிரசார் சொல்லிக்கொண்டார்கள். தோல்விக்கான காரணங்களை கூட்டாகவோ, தனிப்பட்ட முறையிலோ அவர்கள் அலசவில்லை. பதவியில்லை; சற்று ஓய்வெடுக்கலாம் என்கிற மனநிலையே காங்கிரசாரிடம் இருந்தது. இந்த ஓய்வு மனநிலையில், எல்லாம் தலைமை பார்த்துக்கொள்ளும் என ராஜீவ் குடும்பத்திடம் பொறுப்புகளை தள்ளிவிட்டார்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள். சோனியா காந்தி உடல்நிலை காரணங்களால் அரசியலில் முழுமையாக ஈடுபட முடியாத நிலையில், ராகுல் காந்தி தலைவர் பதவியில் அமரவைக்கப்பட்டார்.

ராகுல் காந்தியை அரசியல் வாரிசாக அந்தப் பதவியில் அமர்ந்தாலும், அத்தனை எளிதாக அவருடைய முயற்சிகளை புறம்தள்ளிவிட முடியாது. தங்களுடைய கடந்த கால அரசியல் தவறுகளுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதாகட்டும், மதவாத அரசியலை கடுமையான நிலைப்பாட்டுடன் எதிர்ப்பதாகட்டும் அவர் நேருவிய மதப்பீடுகளை சற்றேனும் உள்வாங்கியவராகத்தான் தெரிந்தார். தன்னளவில் அவர் உறுதியாக இருந்ததுபோல, தன் கட்சியினர் முக்கியமாக இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களுக்கு இந்த உறுதியை வலியுறுத்தவில்லை என்கிற அளவில் ராகுலின் தலைமைப் பண்பு கேள்விக்குறியாகிறது.

உதாரணத்துக்கு, திரிபுரா மாநிலத்தை எடுத்துக்கொள்வோம். இடது முன்னணி 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது காங்கிரஸ். அம்மாநிலத்தில் தனது இருப்பை தக்க வைக்கவோ, ஆட்சியைப் பிடிப்பதற்கோ காங்கிரஸ் மேலிடம் வழிமுறைகளை வகுத்து தந்திருக்க வேண்டும். தனது மாநிலங்களை நழுவவிட்டதைப் போல, திரிபுராவையும் கைகழுவியது காங்கிரசின் டெல்லி மேலிடம். காங்கிரசிலிருந்து திரிணாமூல் காங்கிரசுக்குத் தாவிய எட்டு எம்.எல்.ஏக்கள், 2018 சட்டப் பேரவை தேர்தலுக்கு முன், பாஜக-வில் இணைந்தார்கள். சுவடே இல்லாத பாஜக, ஒரே தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது! காங்கிரஸ் தலைமை மறைமுகமாக அதற்கு உதவியது! 10 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த காங்கிரசின் சுவடுகூட திரிபுராவில் இல்லை.

அதுபோல, சோனியாவுக்கும் – ஜெகன் மோகனுக்கும் – சந்திரசேகரராவுக்குமான ஈகோ யுத்தம் காரணமாக ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் சுவடில்லாமல் அழிந்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். கர்நாடகத்தில் இன்று பாஜக தலைமை ஆள்கிறதென்றால் அதற்குக் காரணமும் விலைபோன காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்தான். சமீபத்திய உதாரணமான மகாராஷ்டிர மாநிலத்தில்கூட இரண்டு தேர்தல்களுக்கு முன்னால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இன்று வெறும் 44 எம்.எல்.ஏக்களுடன் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.

அதாவது, தனிநபராக ராகுல் காந்தி, தாராளவாத ஜனநாயகவாதியாக மதவாதத்தை எதிர்ப்பவராக இருந்தாலும், அதை தனது கட்சியினருக்கு கடத்தும் அளவுக்கும் ஆளுமை உள்ளவராக வளரவில்லை. இதை உணர்ந்ததாலோ என்னவோ தானாகவே 2019 தேர்தல் முடிவுகளை ஏற்று பதவி விலகியிருக்கிறார். தனது போதாமைகளை அவர் உணர்ந்திருக்கலாம். ஆனால், காங்கிரசின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ராஜீவ் குடும்பத்திடமிருந்து தலைமை பொறுப்பை வேறு ஒருவருக்கு போவதை பிரயத்தனத்துடன் தடுத்துக்கொண்டிருக்கிறது. சோனியாவும் ராகுலுமே தங்களுடைய பதவிகளை விட்டுத்தருவதாக வெளிப்படையாக அறிவித்தாலும் அதை செயல்படுத்துவோர் யாரும் இல்லை.

மாநிலங்களில் காங்கிரசின் தலைமை பதவிகளில் பெரும்பாலும் கட்சி தலைவர்களின் வாரிசுகளே அலங்கரிக்கும் நிலையில், டெல்லி தலைமையில் வாரிசு அல்லாதவர்கள் வந்தால், எங்கே தங்களுடைய வாரிசுகளின் பதவிகளும் பறிபோய்விடுமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள். கட்சி எப்படி போனாலும்சரி, நாடு எப்படி போனாலும்சரி நம்முடைய பதவி தப்ப வேண்டும் என்கிற மானப்பான்மை காங்கிரசாரின் பொதுவான குணமாகியுள்ளது.

அண்மையில் மத்திய பிரதேச காங்கிரசின் வாரிசு இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்திய, தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி குறிப்பில் காங்கிரஸ்காரர் என்ற பதத்தை நீக்கினார். முன்னதாக, பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறியிருந்த நிலையில், இது பரபரப்பாக பேசப்பட்டது. பாஜகவுக்கு தாவப்போகிறாரா என்றெல்லாம் வதந்திகள் வந்த நிலையில், வதந்திகளைவிட அவர் அளித்த விளக்கம் மோசமானதாக இருந்தது; காங்கிரசின் பரிதாப நிலையைக் காட்டுவதாகவும் இருந்தது. அதாவது, தன்னைப் பற்றிய முக்கியமானவற்றைப் பற்றி மட்டும் கூறிக்கொண்டதாகவும், நீளமாக இருந்ததால் காங்கிரஸ்காரர் என்பதை வெட்டி விட்டதாகவும் விளக்கம் கொடுத்தார்.

பாரம்பரியமாக காங்கிரஸ்காரர்கள் குடும்பத்திலிருந்து வரும் வாரிசு இளம் தலைவர் காங்கிரசை எவ்வளவு துட்சமாக மதிக்கிறார் என்பதை சுட்டிக்காட்டியது அவருடைய விளக்கம். அயோத்தி தீர்ப்பை ஒரு சில காங்கிரசார் விமர்சிக்கிறார்கள்; பலர் வரவேற்கிறார்கள். இதுபோல பாஜகவின் மதவாத அரசியலுக்கு ஆதரவான கருத்துக்களை காங்கிரசார் சொல்வது அவ்வவ்போது பரபரப்புக்குரிய செய்தியாகிறது. இத்தகையவர்களை வைத்துக்கொண்டு காங்கிரஸ் எப்படி இந்தியாவை இறுகப் பற்றியிருக்கும் மதவாத அரசியலை வேரறுக்க முடியும்? திறந்த மனதுடன் தற்போதிருக்கும் தலைமை ஒரு தலைவரை, ராஜீவ் குடும்பத்தைச் சாராத ஒருவரை (தனது போதாமைகளை வளர்த்துக்கொள்ள ராகுலுக்கு கால அவகாசத்தை கொடுத்துவிட்டு) அனுமதிக்குமா?

“நாம் அனைவரும், நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சம உரிமை, சலுகைகள் மற்றும் கடமைகளைக் கொண்ட இந்தியாவின் குழந்தைகள். வகுப்புவாதத்தையோ அல்லது குறுகிய மனப்பான்மையையோ நாம் ஊக்குவிக்க முடியாது, ஏனென்றால் சிந்தனையிலோ அல்லது செயலிலோ குறுகிய மக்களைக் கொண்ட எந்தவொரு நாடும் சிறந்த நாடாக இருக்க முடியாது”.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு ஆற்றிய முதல் உரையில் இடம்பெற்ற முழக்கம் இது. நேரு முதல் பிரதமர் மட்டுமல்ல, மதசார்பின்மையை என்னும் பாதையை வலுவாக போட்டு, இந்தியாவை கட்டமைத்த தலைவர்களில் ஒருவர். காங்கிரஸ்காரராக அதைச் செய்தார். இன்றைய காங்கிரஸ் தலைமை அவர் காட்டிய வழியில் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்குமா? அல்லது தனது சுயநலனுக்காக நாட்டையும் அதன் பாரம்பரியத்தை மதவாதத்திடம் அடகு வைக்குமா?

இந்தியாவின் எதிரி பாகிஸ்தான் தானா?

“மோடி, நவாஸ் ஷெரீஃப்புடன் ஒரு கப் டீக்காக, ஏழு இந்திய உயிர்களை பலிகொடுக்க வேண்டியிருக்கிறது. உலக ஒற்றுமைக்காக பாடுபடும் முன், இந்தியா மீது கவனம் கொள்வது நல்லது” சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சாம்னா பத்திரிகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து எழுதிய வார்த்தைகள் இவை.
கடந்த மூன்று நாட்களாக இந்தியாவின் பாஞ்சாப் மாநில எல்லை வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள், பதன்கோட் விமான படை தளத்துக்குள் நுழைந்து சுட ஆரம்பித்தனர். இந்தத் தாக்குதலில் ஏழு இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். ஆறு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடந்த வாரம், ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்ப இருந்த மோடி திடீர் பயணமாக பாகிஸ்தானுக்குச் சென்றார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லச் சென்றதாக பிறகு பிரதமர் அறிவித்தார்.  ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு, காஷ்மீர் விவகாரம், எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்தது.
பாகிஸ்தான் – இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது என்று எதிர்க்கிற இயக்கங்கள் பதன்கோட் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஒரு மாதம் முன்பு பஞ்சாப்பில் ஒரு காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத் தகுந்தது. முதல் கட்ட தகவலில் பஞ்சாப் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையோரத்தில் கண்காணிப்பு குறைவே தீவிரவாதிகள் ஊருவக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்த எல்லைப் பகுதியில் கடுமையான நிலப்பகுதி காரணமாக தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட முடியாத நிலை இருந்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், பாதுகாப்பில் குறைபாடு எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிறது பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தத் தாக்குதல் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது, குழுவின் அறிக்கையில் என்ன காரணம் என்று தெரிந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், மோடியின் நடவடிக்கைகளே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என எதிர்க்கட்சிகளும் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சிவ சேனாவும் கடுமையாக தாக்கிவருகின்றன. குறிப்பாக பாகிஸ்தானியர் இந்தியாவுள் சுற்றுலாப் பயணிகளாக வருவதற்குக் கூட எதிர்ப்பு தெரிவிக்கும் சிவ சேனா, இந்திய பிரதமரின் ‘திடீர்’ பயணத்தை கடுமையாகத் தாக்கியது. பாகிஸ்தானை நம்ப வேண்டாம் என்று தாங்கள் எச்சரித்தது இப்போது உண்மையாகிவிட்டது என உத்தவ் தாக்கரே சீறுகிறார்.
பாகிஸ்தானிய முன்னாள் அமைச்சரை பத்திரிகை வெளியீட்டு அழைத்த சுதீந்திர குல்கர்னி மீது கருப்பு மை வீசியது, பாகிஸ்தான் பாடகரை மும்பையில் பாட அனுமதிக்க மாட்டோம் என அவரைத் துரத்தியது, சுற்றுலா வந்த பாகிஸ்தான் பயணிகளுக்கு ஹோட்டலில் இடம் தரக்கூடாது என ஹோட்டல்காரர்களை மிரட்டி சொல்ல வைத்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் வர்ணனையாளர்களை விரட்டியது என சிவசேனா தனது பழைய ‘எதிரி பாகிஸ்தான்’ என்கிற அரசியலை கையில் எடுத்திருக்கிறது. மகாராஷ்டிராவில் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ள சிவ சேனாவுக்கும், சிவ சேனாவின் ஆதரவில் ஆட்சியமைத்திருக்கும்  பாஜகவுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டிருக்கிறது. தன்னை முதன்மையாக காட்டிக்கொள்ளும் விதத்தில் மீண்டும் கையிலெடுத்திருக்கும் ‘எதிரி பாகிஸ்தான் அரசியலு’க்கு உரமூட்டக்கூடியதாக இருக்கிறது பதன்கோட் தாக்குதல்.
பாகிஸ்தானின் அல்லது பாகிஸ்தானின் பேரைச் சொல்லிக்கொண்டு இந்தியா மீது நடக்கு தாக்குதல்களுக்கு பாகிஸ்தானின் குடிமக்கள் எந்தவகையிலும் பொறுப்பாக முடியாது. ஆனால், சிவசேனா போன்ற அரசியல்வாதிகள்  பாகிஸ்தான் என்கிற பெயரிலிருந்து எல்லாமே நமக்கு எதிரிகள்தான் என்பதுபோல பொதுமக்கள் மனதில் விதைக்க ஆரம்பிக்கிறார்கள்.
‘இந்துத்துவத்தை நிலைநிறுத்த வாஜ்பாயிக்கு கார்கில் யுத்தம் தேவைப்பட்டதுபோல, மோடிக்கு பாகிஸ்தானுடன் இன்னொரு யுத்தம் தேவையாக இருக்கலாம்’ என்கிறார்கள் சில அரசியல் நோக்கர்கள். பாகிஸ்தானிய அடிப்படைவாதிகளின் எழுச்சி இடமளிக்கும் வகையில் இந்திய அரசியல்வாதிகள் இந்துத்துவ அடிப்படைவாதத்தைக் கையில் எடுக்க நினைக்கிறார்கள். அதற்கு இந்திய அரசு துணைபோகக்கூடாது. பாகிஸ்தானிய அடிப்படைவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவதைத் தடுப்பது எவ்வளவு முக்கியமோ அதைப்போல இந்திய அடிப்படைவாதத்தையும் வளரவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், பாஜக அரசு தனது சக கூட்டாளியான சிவ சேனாவின் வாயைக் கட்டுப்படுத்துமா என்பது கேள்வியாகவே இருக்கும்!

தினச்செய்தி (5-1-2016) நாளிதழில் வெளியான கட்டுரை..

சோட்டா ராஜன்,சிவ சேனா,பாஜக

Untitled

இந்தியாவால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன், இந்தோனேசியா நாட்டின் பாலித் தீவில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆள் கடத்தல், ஆயுத கடத்தல், போதைப் பொருள் விற்பனை, வட்டித்தொழில் என அத்தனை கிரிமினல்தனங்களும் செய்து வந்த இவர் மிகப் ‘புகழ்’ பெற்றது காண்ட்ராக்ட் கில்லிங் எனப்படும் கொலைத் தொழிலுக்காகத்தான்! மும்பை பாலிவுட் சினிமாக்களுக்கு ஃபைனான்ஸ் செய்ததால் பாலிவுட்காரர்கள் இவரின் கதையை படங்களாக எடுத்தார்கள். ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளிவந்த ‘கம்பெனி’ இவருடைய கதையை தழுவியது.

ரவுடிகளை, கொலைக்காரர்களை ஹீரோவாக்கும் சினிமாக்காரர்கள், அவர்கள் செய்த குற்றங்களுக்கு நியாயம் கற்பிக்கும்வகையில் காரணம் தேடிக்கொண்டிருப்பார்கள். நிஜ வாழ்வில் எல்லா குற்றங்களுக்கும் காரணம் இருப்பதில்லை. சோட்டா ராஜனின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், அவர் தொடர் குற்றங்களில் ஈடுபடுவதற்கு எவ்வித காரணகாரியமில்லை என்பது தெரியவரும். சோட்டா ராஜன் எப்படி கிரிமினல் ஆனார்?

ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி என்ற சோட்டா ராஜன், மும்பை செம்பூர், திலக் நகர் பகுதியில் மராத்தி குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர். 80களில் சினிமா தியேட்டர்களில் பிளாக் டிக்கெட் விற்பதிலிருந்து தன்னுடைய ‘தொழிலை’ ஆரம்பித்தார் சோட்டா ராஜன். பிறகு படிப்படியாக பிக்பாக்கெட் அடிப்பது, கள்ளச்சாராயம் விற்பது என முன்னேறினார். படா ராஜன் என்ற பிரபல தாதாவிடம் கிரிமினல்தனங்கள் குறித்து பாடம் படிக்கிறார் ராஜன். படா ராஜன் தாதாக்களுக்கிடையேயான யுத்தத்தில் கொல்லப்படவே, ராஜன் ‘சோட்டா’ ராஜனாக முடிசூட்டிக்கொள்கிறார்.

சோட்டா ராஜனுடன், பின்னாளில் புகழ்பெற்ற மேலும் இரண்டு தாதாக்களான தாவூத் இப்ராஹுமும் அருண் கவுலியும் சேர்ந்துகொள்கிறார்கள், காண்ட்ராக்ட் கொலைகளில் முத்திரை பதிக்கிறார்கள். போதைப் பொருள் கடத்தல் டீல் தொடர்பாக கவுலியின் தம்பி கொல்லப்படுகிறார். பிறகு, இந்த மூவர் கூட்டணி உடைகிறது. சோட்டா ராஜன், துபைக்குச் சென்றுவிடுகிறார். இதன் பிறகும் தாவூத்-ராஜன் நட்பு தொடர்கிறது. 1993-ஆம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால், தாவூத் இப்ராஹிமுக்கும் அவருக்கும் மோதல் வெடித்தது. இருவரது ஆதரவாளர்களும் பரஸ்பரம் ஒருவரையொருவர் கொலை செய்யத் தொடங்கினர். இதையடுத்து, சோட்டா ராஜனைக் கைது செய்யும் முயற்சியில் மும்பை காவல் துறை இறங்கவே, இந்தியாவில் இருந்து நிரந்தரமாக வெளியேறி அவர் தலைமறைவானார்.

2000-ஆம் ஆண்டு பாங்காக்கில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சோட்ட ராஜனை கொல்லும் முயற்சியில், தாவூத் அனுப்பிய சோட்டா ஷகில் ஈடுபட்டதும், அந்தத் தாக்குதலில் இருந்து சோட்டா ராஜன் தப்பியதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

பல கிரிமினல் வழக்குகளுக்காக சோட்டா ராஜன் இந்தியாவால் தேடப்படும் நபராக இன்டர்போல் அமைப்பால் “ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த சோட்டா ராஜன், மோகன் குமார் என்ற போலி பெயரில் சிட்னியில் இருந்து பாலித் தீவுக்கு வந்தபோது இண்டர்போல் போலீசிடம் பிடிபட்டார்.

இந்தோனேசியாவில் சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சிபிஐ இயக்குநர் அனில் சின்ஹாவும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இந்நிலையில், பல ஆண்டுகளாக சோட்டா ராஜனின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக சொல்லியிருக்கும் சிபிஐ, இந்தச் சமயத்தில் சோட்டா ராஜனை கைது செய்திருப்பதற்குக் காரணம் இருக்கிறது. பாஜக தலைவர் சுப்ரமணியன் சாமி ட்விட்டரில் பகிரங்கமாக மத்திய அமைச்சர் வி.கே.சிங், சோட்டா ராஜனுடன் பேசினார் என்று குறிப்பிடுகிறார்.

swam tweets

சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடி தரும் சிவ சேனைக்கு பதிலடி கொடுக்கத்தான் சோட்டா ராஜனின் கைது நடவடிக்கை. சோட்டா ராஜனுக்கும் சிவ சேனைக்கும் உள்ள தொடர்பு ஊரறிந்த ரகசியம்!

”அருண் ஜேட்லி இந்துவே அல்ல”

arun-jaitley

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கும் ஆதரவளித்த சிவ சேனா கட்சிக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியை பாட அனுமதிக்க மாட்டோம் என மிரட்டல் விடுத்தது, பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரின் புத்தக வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த சுதீந்திர குல்கர்னி மீது கருப்பு மைவீசியது என சிவ சேனா கட்சியினர் கையில் எடுத்திருக்கும் வெறுப்பு அரசியல் மாநில, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், திங்கள் கிழமை இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்துக்கு வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வர்ணையாளர் மற்றும் பயிற்சியாளரை, அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டி வெளியேற்றியிருக்கிறார்கள் சிவ சேனா கட்சியினர்.

இதுகுறித்து கடுமையான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி. “கருத்து வெளிப்பாடு என்ற பெயரில் வன்முறையைக் கையாளுபவர்கள், தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நாட்டின் ஜனநாயகம் மேம்படுமா என்பதையும் இந்தியாவின் மீது உலக நாடுகள் வைத்துள்ள நன்மதிப்பு குறையுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாட்டின் நலன் குறித்து அக்கறை கொள்ளும் நல்லெண்ணம் கொண்டவர்கள் அனைவரும், வன்முறை நடவடிக்கைகளை அரங்கேற்றுவதிலிருந்து விலகி இருக்க வேண்டும். மாறுபட்ட கருத்துகளின் மீதான சகிப்புத்தன்மை குறைந்து வருவதும், வன்முறை நடவடிக்கைகள் அதிகரிப்பதும் கவலையளிக்கும்படியாக உள்ளது.

அண்டை நாடுகளுடனான சில பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமாகவும், ஆக்கப்பூர்வமான விவாதத்தின் வாயிலாகவும் மட்டுமே தீர்க்க வேண்டும். இதை அனைத்துக் கட்சிகளும், குறிப்பாக எனது நண்பர்களான சிவசேனைக் கட்சியினரும் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசிலும், மகாராஷ்டிர மாநில அரசிலும் அங்கம் வகிக்கும் சிவசேனைக் கட்சியினருக்கு சில பொறுப்புகள் உள்ளன என்பதை அவர்களிடத்தில் வலியுறுத்த மட்டுமே என்னால் முடியும்” என்று பேசியிருந்தார் அருண் ஜேட்லி.

இந்தக் கருத்தை முன்வைத்தும் சிவ சேனா கட்சியினரின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து புதிய தலைமுறைத் தொலைக்காட்சி செவ்வாய் அன்று நேர்படப்பேசு நிகழ்ச்சியில் விவாதம் நடத்தியது. அருண் ஜெட்லி பேசியது குறித்து சிவ சேனா கட்சி சார்பில் கலந்து கொண்ட ராதாகிருஷ்ணனிடம் நெறியாளர் தியாகச் செம்மல் கருத்து கேட்டார். அதற்கு ராதாகிருஷ்ணன், ‘அருண் ஜெட்லி நல்ல இந்துவே அல்ல, நல்ல இந்துஸ்தானியும் அல்ல, இன்னும் சொல்லப்போனால் நல்ல இந்துவே அல்ல, அவர் சொல்வதையெல்லாம் கேட்கமுடியாது’ என்றார்.