செங்காந்தள் மலரும் மரகதப் புறாவும்

மருதாணிப் பூசிச் சிவந்த கைவிரல்கள் காட்டும் நாட்டிய முத்திரைப்போல அழகுடைய பூ செங்காந்தள்! தமிழ்நாட்டின் மலர். இன்றைய தலைமுறையில் பலர் இந்தப் பூவைப் பார்த்திருக்கமாட்டார்கள்; கேள்விப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கூட ஏரிக்கரைகளில் புதர்மண்டிய இடங்களில் செங்காந்தள் கொடி படர்ந்திருக்கும், அதில் ஆங்காங்கே சிவந்த பூக்கள் பூத்திருக்கும். அதை ரசிக்காமல் யாரும் அதைத் தாண்டிச் சென்றிருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை தாம்பரம், சோழிங்கநல்லூர் போன்ற சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் இந்தச் செடிகளைப் பார்த்திருக்கிறேன். இப்போது எங்கும் கான்கீரிட் மயம். வனங்களுக்குப் போகும்போதுதான் செங்காந்தளை ரசிக்க முடிகிறது.

செங்காந்தள் கிழங்கு மருத்துவ குணமுடையது என்பதால் சில விவசாயிகள், அதைப் பயிர் செய்கிறார்கள். வீட்டித் தோட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மலர்ச்செடிகள் வளர்ப்பதை பலர் பெருமையாக நினைக்கின்றனர். இப்படி இறக்குமதியான பல தோட்டச் செடிகள் களைகளாக வனத்துக்குள் புகுந்து இம்மண்ணுக்கே உரிய செடிவகைகளை, உயிர்ச்சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றன.

kanthal

உயிர்ச்சூழல் ஒரு வலைப்பின்னல் போன்றது. நம் மண்ணுக்குரிய செடிகளை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று கேட்கலாம். இந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் வளரும் இந்தச் செடிகளை நம்பி பூச்சிகள், இந்தப் பூக்களில் தேனெடுக்க வரும் வண்டுகள், சிட்டுகள் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. செடிகள் இல்லாமல் போகும்போது அவற்றின் உணவுச் சங்கிலி தடை படுகிறது. நேரடியாக இது மனிதனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், சூழலியலில் இது எதிர்மறை மாற்றத்தை உண்டாக்கும். செங்காந்தள் போன்ற அழகு நிறைந்த, நம் சூழலுக்கு ஏற்ற நம் மண்ணின் செடிகளை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்க மக்கள் முன்வர வேண்டும்.

மரகதப் புறா

பச்சைப் புறாக்கள் என்று குறிப்பிடப்படும் மரகதப் புறாக்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊர்ப்புறங்களில் காணக் கிடைத்தன. இன்று அடர் வனங்களில் மட்டுமே இவை வாழ்கின்றன. கட்டுக்கடங்காமல் வேட்டையாடப்பட்டதுதான் இவை இல்லாமல் போகக் காரணம்.

நீலகிரி வரையாடு

இதுபோல நீலகிரி வரையாடும் அதிகளவில் வேட்டையாடப்பட்டதாலேயே இன்று அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இமயமலை மலைத்தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மட்டுமே வரையாடுகள் உள்ளன. செங்குத்தான மலைகளே இவற்றின் வசிப்பிடங்கள். நீலகிரி மலைகளில் வசிப்பதால் இந்த வரையாடு, நீலகிரி வரையாடு என சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை இந்திய காட்டுயிர் வாரம் கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் சூழலியல், காட்டுயிர் சார்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல கருத்தரங்கங்கள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாம் இந்த ஆண்டின் காட்டியிர் வார விழாவில் நம் தமிழ்நாட்டின் மலரான செங்காந்தள், மாநில பறவையான மரகதப் புறா, மாநில விலங்கான நீலகிரி வரையாடு போன்றவற்றை நினைவு கூர்வோம். நம் மண்ணுக்கே உரிய சிறப்பான இந்த காட்டுயிர்களை நினைவுக் கொண்டு இந்த ஆண்டின் காட்டுயிர் வாரத்தைக் கொண்டாடுவோம்!

காட்டுயிர் செயற்பாட்டாளர் திருநாரணனின் உதவியுடன் இணையதளம் ஒன்றுக்காக எழுதப்பட்ட பத்தி. மீள் பிரசுரம்.

முகப்புப் படம்: திருநாரணன்

திருநாரணன் தொடர்புக்கு:

KVRK THIRUNARANAN
FOUNDER
THE NATURE TRUST
G-3, KRISH VIEW APPTS.,

PLOT NO 45-A, VALMIKI ST.,
EAST TAMBARAM
CHENNAI-600059.

044 22393959
9444477358
9176893949

 

 

சென்னைக்கு மிக அருகில் ஃபிளாட் வாங்கணுமா?

பள்ளிக்கரணையைச் சுற்றிலும் 31 இயற்கை நீர்த் தொட்டிகள் அமைந்துள்ளன. ஏரிகளாகவும் கால்வாய்களாகவும் உள்ள இந்த நீர்த்தொட்டிகளை சீரமைத்து பாதுகாத்தாலே மழைக் காலங்களில் அதிகப்படியான நீர் கடலுக்குள் சென்று கலப்பதை தடுத்து சேமிக்கலாம். பள்ளிக்கரணைக்கு நீர் வரத்தைத் தரும் வேளச்சேரி ஏரி தற்போது ஆக்கிரப்புகளாலும் பராமரிப்பின்மையாலும் பாழடைந்து வருகிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சில கட்டடங்கள் இதோ…

* போக்குவரத்துக் கழக பணிமனை 92 ஹெக்டேர் பரப்பளவில்

* ஃபெப்ஸி சினிமா தொழிலாளர் சங்கத்துக்கு சொந்தமான இடம் 34 ஹெகடேரில்

* லதா ரஜினிகாந்தின் ஆஷ்ரம் டிரஸ்டுக்கு சொந்தமான நிலம் 5 ஹெக்டேரில்

* தமிழ்நாடு வேளாண் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான இடம் 12 ஹெக்டேரில்

* டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 8 ஹெக்டேரில்

* சட்ட கல்வியகம் 6 ஹெக்டேரில்

* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பிரிக்கும் சாலை 13 ஹெக்டேரில்

* சட்டப்படி வழங்கப்பட்ட பட்டாக்கள் 2 ஹெக்டேர்

* ஐஐடி, சென்னை 17 ஹெக்டேரில்

* முன்னாள் ராணுவ பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் 61 ஹெக்டேர்

* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜி, 20 ஹெக்டேர்

சென்னை பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இவை. இதில் பெரும்பாலானவை அரசு நிறுவனங்கள் என்பது முக்கியமானது. மெத்தப்படித்த அதிகாரிகளே தொலைநோக்குச் சிந்தனை சிறிதும் இல்லாமல் வடிகால் நிலத்தை ஆக்கிரமிப்பை அனுமதித்ததன் விளைவை ஒட்டுமொத்தமாக அந்தப் பகுதியில் உள்ள அனைவரும் அனுபவிக்கிறார்கள்.

அதுபோல, தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களின் வருகை காரணமாக, வேளச்சேரி-பழைய மகாபலிபுரம் சாலை முழுவதும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நிலத்தை ஆக்கிரமித்து விற்றன.

சென்னை புறநகர் பகுதிகளும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் ஊதிப் பெருக்கப்பட்டு 15 ஆண்டுகளில் கட்டிடங்களால் நிரம்பின. வாங்கும் வசதி படைத்தவர்கள் 2, 3 ஃபிளாட்டுகளை வாங்கினார்கள். இப்படி வாங்கப்பட்ட ஃபிளாட்டுகள் பலவை இன்னும் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வராதவை. தாம்பரம் பகுதியில் ஏரிக்கு நடுவே, சுற்றியும் நீர் சூழ கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நவீன அடுக்குமாடிக் குடியிருப்புகளை எப்போதும் காண முடியும். இப்போது அவற்றின் நிலைமை என்னவானதோ?

கிழக்குக் கடற்கரை சாலையில் முட்டுக்காடு கழிமுகப்பகுதியில் நீரின் கரையை ஒட்டி வானுயர்ந்த கட்டடங்கள் முட்டி நிற்கின்றன. வெயில் கொளுத்தும் சென்னைக்கு நீர் நிலையை ஒட்டி வீடிருந்தால் நன்றாக இருக்குமே என்கிற அழகான கற்பனையில் இந்த குடியிருப்புகள் உருவாகியிருக்கும். இந்த அழகான கற்பனை, கற்பனையாக இருப்பதே நல்லது! இந்த பெருவெள்ளத்தில் அந்தக் கட்டடங்களில் பாதி மூழ்கியிருக்கும். சுனாமி வந்தால் மொத்தமாக அள்ளிக் கொண்டு போகும்.

இப்போது.காமில் நான் எழுதியதன் சுருக்கப்பட்ட வடிவம்.

 

’பல லட்சம் கோடி முறைகேடு நடைபெற்ற மற்ற மாவட்டங்களிலும் சகாயம் விசாரிக்க வேண்டும்’

சென்னை உயர்நீதிமன்ற அமர்வு 2014-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் நாள் உத்திரவிட்டதன் அடிப்படையில் சகாயம் ஆய்வுக்குழுவினர் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகளை பற்றி 03-12-2014 முதல் முழுமையாக ஆய்வு செய்து 7 ஆயிரம் பக்க ஆவணங்கள், 600 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

சகாயம் ஆய்வுக்குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும், 32- மாவட்டத்திலும் நடைபெற்று உள்ள அனைத்து கனிமவள முறைகேடுகளையும் சகாயம் ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க உதவும் வகையிலும் கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க தமிழக ஒருங்கிணைப்பு குழுவினர் சில தீர்மானங்களை இயற்றியுள்ளனர். இதன் ஒருங்கிணைப்பாளரான முகிலன் இது பற்றிப் பேசினார்.

“தமிழக அரசு பல்வேறு முறையில் சகாயம் ஆய்வுக் குழுவிற்கு முழுக்க முழுக்க ஒத்துழைக்காமலும், பல்வேறு நெருக்கடிகளும் கொடுத்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் அணுகியே தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற்று ஆய்வுப் பணியை மேற்கொண்டனர் சகாயம் ஆய்வுக்குழுவினர். எதற்கும் அஞ்சாமல் உறுதியாக நின்று, மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகளை பற்றிய ஆய்வுப் பணியை முடித்த சகாயத்துக்கும் அவருடைய குழுவினருக்கும் வாழ்த்துக்களைச் சொல்கிறோம்.

தங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற அபாயகரமான நிலையிலும் கூட, சகாயம் ஆய்வுக்குழுவினரிடம் பல்வேறு உண்மைகளை தெரிவித்த அனைத்து பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோல, மதுரை மாவட்ட சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றவர்,

“சகாயம் ஆய்வுகுழு நீதிமன்றத்தில் தெரிவித்த அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்ட கிரானைட் முறைகேட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உயரதிகாரிகளுக்கும், ஆட்சி செய்தவர்களுக்கும் தொடர்பு இருந்து வருவதால், கனிம முறைகேடுகள் குறித்து விரைந்து விசாரிப்பதற்காக உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும், மேலும் கிரானைட் முறைகேடு குறித்து விரிவான விசாரணைகளை சுயேச்சையாக செயல்படும் நம்பிக்கையான சிறப்பு புலனாய்வு அமைப்பு மூலம் மேற்கொள்ள வேண்டும்” போன்றவற்றை தமிழக அரசு ஏற்றுச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

* இந்த கிரானைட் முறைகேடு பற்றி விசாரணையில் சாட்சி அளித்த மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சகாயம் குழு சொன்ன பரிந்துரையையும் தமிழக அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

* சகாயம் ஆய்வுகுழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள அறிக்கையை மக்களின் பார்வைக்கு தமிழக அரசு வைக்க வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு நியமித்த தாதுமணல் கொள்ளை தொடர்பாக ககன்தீப் சிங் பேடி அறிக்கையை வெளியிடாமல் மறைத்து வைத்தது போல் இதை மறைக்க முயற்சிக்க கூடாது.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு பின்பு சகாயம் அறிக்கையை வெளியே கொடுக்காமல், தமிழக அரசு தானே முன்வந்து இதை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என்று தங்களுடைய குழு தீர்மானமாக இயற்றியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் முகிலன்.

* சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவின் படி பல லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் தமிழகத்தின் 32- மாவட்டத்திலும் நடைபெற்று உள்ள அனைத்து கனிமவள முறைகேடுகளையும் சகாயம் சட்ட ஆணையராக இருந்து விசாரிக்க வேண்டும் என்றும் இந்தக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

யுனிலிவருக்கு எதிராக பாடகர் டி. எம். கிருஷ்ணா

இந்திய நுகர்வோர் சந்தையை பெருமளவில் கைப்பற்றி வைத்திருக்கும் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம், கொடைக்கானல் மலையில் தான் விட்டுச் சென்ற பாதரச கழிவுகளை 14 ஆண்டுகளாக அகற்றாமல் விட்டு வைத்திருக்கிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடந்த 2001ஆம் ஆண்டு, யுனிலிவரின் தெர்மாமீட்டர் தயாரிப்பு தொழிற்சாலை சுற்றுச்சூழல் விதிகளை மீறி கழிவுகளை கொட்டுகிறது எனக் கூறி மூடியது. திர்வயம் என்ற இடத்தில் 7.5 டன் பாதரசத்துடன் கூடிய உடைந்த தெர்மாமீட்டர்களை கொட்டியது யுனிலிவர். ஆனால் இதுவரை அதை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையிலும் யுனிலிவர் நிறுவனம் ஈடுபடவில்லை. மூளை நரம்புகளை அதுசார்ந்த செயல்பாடுகளையும் பாதிக்கும் பாதரசக் கழிவால் இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் என இங்கு களப்பணி செய்த பல சூழலியல் தொண்டு நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில் ஜட்கா என்ற சூழலியலுக்கான ஊடகம் தயாரித்த ‘கொடைக்கானல் அடங்காது’ என்ற ராப் பாடல் சமூக தளங்களில் வெளியாகி, இந்தப் பிரச்சினையை வெளி உலகத்துக்குக் கொண்டுவந்தது. கொடைக்கானல் பகுதியில் பரவியுள்ள பாதரசக் கழிவுகளை அகற்ற, அதற்குக் காரணமான யுனிலிவர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அந்நிறுவனத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.
இதையொட்டி நித்தியானந்த் ஜெயராமன் தலைமையிலான சூழலியல் செயல்பாட்டாளர்கள் ‘யுனிலிவர் பொருட்களை வாங்க மாட்டோம்’ என்ற முழக்கத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். யுனிலிவர் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பால் போல்மனை கொடைக்கானல் கழிவுகளை அகற்றுங்கள் என்று நேரடியாக சமூக வலைத்தளங்கள் மூலம் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கொடைக்கானல் பாதரசக் கழிவுகளை அகற்றுவதற்கு தரம் குறைந்த முறையை பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. யுனிலிவர் கொடைக்கானலில் பயன்படுத்தவுள்ள தரம் என்பது, பாதரச கையாளும் தரத்தை விட 25 மடங்கு குறைந்தது எனக் கூறப்படுகிறது. ‘உலக பெருவணிக நிறுவனம் இதே கழிவை இங்கிலாந்தில் அகற்ற பயன்படுத்த ஒரு முறையும் இந்தியாவில் அதைவிட தரம் தாழ்ந்த முறையும் பின்பற்றுவது இந்திய மக்களின் நலனில் எள்ளளவும் அது அக்கறை கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது’ என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன். மேலும் அவர்,

தெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணிபுரிந்து பாதிப்புக்குள்ளான டோமினிக்…
தெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணிபுரிந்து பாதிப்புக்குள்ளான டோமினிக்…
“டாமினிக் என்பவர் தெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணியாற்றியவர். பணியிடத்தில் பாதரசம் ஏற்படுத்திய விளைவால் அவருக்கு வலிப்பு நோய் வந்தது. நன்றாகப் பாடக்கூடிய இவரால் தற்போது இயல்பாகப் பேசக்கூட முடியாது. ஆனால் இந்நிறுவனமோ சுற்றுச்சூழல் மட்டும்தான் மாசடைந்ததாகவும் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை. தன் நிறுவனத்தின் விளம்பரங்களுக்கு மட்டும் வருடத்துக்கு 48 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கும் யுனிலிவர் நிறுவனம் கொடைக்கானல் பாதரசக் கழிவுகளை அகற்ற சில லட்சங்களை ஒதுக்கத் தயங்குகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் ஐக்கிய நாடுகள் அவையின் பசுமை விருதைப் பெற்றிருக்கிறது. இந்த விருதுக்கான தகுதியை நிறுவனம் பெற்றுள்ளதாக என்பதை நாங்கள் அந்நிறுவனத்திடம் கேட்கிறோம்” என்கிறார்.

“வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாக செயல்படும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்தத் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. யுனிலிவர் திட்டமிட்டிருப்பதைப் போல தரம் குறைந்த முறையில் அரைகுறையாக தூய்மைப்படுத்தப்பட்டால் கணிசமான அளவில் பாதரசக் கழிவு தொடர்ந்து தேங்கி கொடைக்கானல் ஏரிகளை மாசுபடுத்தும். அதுமட்டுமின்றி, அந்த ஏரிகளையும், வைகை நதியையும் நம்பியிருக்கும் மக்களையும் அது கடுமையாக பாதிக்கும். பாதரச பாதிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மினமாட்டா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதுடன், பாதரசக் கழிவுக்கான அனைத்து ஆதாரங்களையும் அகற்றுவதாகவும் உறுதி பூண்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசோ, மத்திய அரசோ கொடைக்கானல் கழிவுகளை அகற்ற இதுவரை அந்நிறுவனத்தை வலியுறுத்தவில்லை. பல ஆயிரம் பேரை பலிவாங்கிய போபால் விஷ வாயு விபத்து குற்றவாளிகளை தப்பவிட்டதுபோல யுனிலிவருக்கு அரசுகள் சாதகமாகவே இருக்கின்றன” என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.

மிதக்கும் சென்னை: தவறு செய்பவர்கள் நாமும்தான்!

12243392_962822207113264_8850497505961453809_n

தேர்தல் நெருங்கும் காலத்தில் நாட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அதற்கான முழுப்பழியையும் ஆளும் கட்சி மீது போடுவது எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் வழக்கமாகிப் போய்விட்டது. ஒருவித ஆட்டுமந்தை மனோபாவம் நமக்கு. அதுவும் நமக்கான ஊடகமாக சமூக வலைத்தளங்கள் ஆகிவிட்டநிலை, ஒரு ஆடு ஆளும் கட்சியை கலாய்த்து எழுதினால் போதும், மற்ற ஆடுகளும் அதேபோல ‘ம்மே’ என கத்திக்கொண்டு ஓட ஆரம்விடும். அதுபோலத்தான் இங்கேயும் நடக்கிறது.

வேளச்சேரியில் மிதக்கிறது இந்தக் கார்...
வேளச்சேரியில் மிதக்கிறது இந்தக் கார்…

தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட அதிமுக காரணமாக திமுக காரணமா என்பது இருக்கட்டும். நான் காரணமா இல்லையா என்பதை அவரவர் ஒருமுறை கேட்டுக் கொள்வோம்.

எத்தனைப் பேர் குப்பையை அதற்கென்று ஒதுக்கப்பட்ட குப்பைத் தொட்டியில் போடுகிறீர்கள்? குப்பைத் தொட்டியே உள்ளூர் நிர்வாகம் வைக்கவில்லை என்றால் என்றாவது குப்பைத் தொட்டி வையுங்கள் என்று கேட்டிருக்கிறீர்களா? இன்று மழைநீர் தேங்க முதன்மையான காரணம் என்ன தெரியுமா? மழை நீர் வடியும் இடங்களை அடைத்துக் கொண்டிருக்கும் குப்பைகள்; குறிப்பாக பிளாஸ்டிக் காகிதங்களே காரணம்.

காஞ்சிபுரத்தில் இந்தக் காட்சி...
காஞ்சிபுரத்தில் இந்தக் காட்சி…

நம்மைப் போல ஒரு மனிதன்தான் இதை அள்ளப் போகிறான் என்பது பற்றி எந்த கூச்சநாச்சமும் இல்லாமல் போகிறபோக்கில் குப்பை வீசுகிற நமக்கு இயற்கை தரும் தண்டனையாகத்தான், இந்த வெள்ள நீர் தேக்கத்தைப் பார்க்க வேண்டும். ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய புறநகர்ப்பகுதிகளைத் தவிர்த்து, அனைத்து இடங்களிலும் நீர் வடிவதற்கான கால்வாய் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் அந்தக் கால்வாய்களை குப்பையைப் போட்டு நிரப்பிவிட்டு, மழை நீர் போக வழியில்லை வெள்ளக்காடாகிவிட்டது என்று இப்போது பதறுகிறோம்.

‘எனக்கு என்ன’ என்கிற மேட்டிமை சுபாவம்தான் நகர வாழ்க்கையில் பிரதான குணமாகிவிட்டது. நாப்கின்களை குப்பைத் தொட்டியில் போட கஷ்டப்பட்டு டாய்லெட்டில் பிளஷ் செய்கிற அபார்ட்மெண்ட் வாசிகளின் வாசல் சில மாதங்களில் நாறும். காரணம் கழிவுநீர் குழாயை அடைத்துக் கொண்டிருக்கும் நாப்கின்கள். அதை யாரோ ஒரு மனிதர் கையைவிட்டு எடுத்து அடைப்பை நீக்கி சரிசெய்வார். குப்பையில் வீசப்பட்ட நாப்கினைப் பார்த்தபடியே அடுத்த முறையும் நாப்கினை டாய்லெட்டுக்குள் போடுவார். அதுதான் அடைப்பு எடுத்தாகிவிட்டதே?

இதை மேட்டிமை சுபாவம் என்று மட்டும் சொல்லக்கூடாது, மனிதநேயமற்ற செயல் என்றே சொல்ல வேண்டும். நம்மைப் போன்றவர்களால்தான் ஒழிக்கப்பட வேண்டிய, ஒழிக்கப்பட்டதாகச் சொல்லும் கழிவுகளை அகற்றும் பணிகளுக்கு சகமனிதர்களை பயன்படுத்தும் வழக்கம் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அவ்வவ்போது அது மனித உயிர்களையும் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது.

நகரெங்கும் நாம் போட்டு வைத்த குப்பைகள், வெள்ளத்தை வடியவிடாமல் தடுக்கொண்டிருக்கின்றன. முன்னர் ஆட்சியில் இருந்த கருணாநிதியோ, இப்போது ஆட்சியில் இருக்கிற ஜெயலலிதாவோ, மேயர் துரைசாமி அல்லது வார்டு உறுப்பினரோ வந்து வெள்ளத்தை வடியவைக்கப்போவதில்லை. நம்முடைய குப்பைகளை, நம்முடைய அழுக்குகளை சுத்தம் செய்யப்போவது ஒரு அடிமட்டத் தொழிலாளிதான் செய்யப்போகிறார்.

ஆனாலும் நாம் வெட்கமே இல்லாமல் அடுத்தவரை குற்றம் சொல்ல பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கும் வெள்ளத்துக் காரணம் ஜெயலலிதாவா? கருணாநிதியா? என்று.