புலிகளைப் பாதுகாக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு?

காட்டுயிர் -மனித பிணக்கு குறித்த செய்திகள் ஊடகங்களில் வருவது இப்போது சாதாரண விஷயமாகிவிட்டது. கோவை, வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளை ஒட்டியமைந்த மனித வாழிடங்களிலும் விவசாய நிலங்களிலும் காட்டுயிர்கள் குறிப்பாக யானைகள் புகுந்து ‘‘அட்டகாசம்’ செய்வதாக தமிழ் ஊடகங்களில் ‘சுவாரஸ்ய’ செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆங்கில ஊடகங்களில் மட்டுமே காட்டுயிர்-மனித பிணக்கு குறித்த கன்சர்வேஷன் நோக்கிலான கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தமிழ் ஊடகவியலாளர்களின் காட்டுயிர்கள் மீதான வார்த்தை வன்முறை குறித்து சு.தியடோர் பாஸ்கரனும் ச. முகமது அலியும் எவ்வளவோ முறை பேசியிருக்கிறார், ஒருவருக்கும் அது எட்டவில்லை போலும். இத்தகையதொரு சூழலில் முதுமலை வனப்பகுதி கடந்த ஜனவரி 2009 முதல் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதும் அதையொட்டி அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தரிவித்து போராட்டம் நடத்தியதும் ‘யானைகள் அட்டகாச செய்திகளுக்கு நடுவே வெளியானது. சுற்றுலாவுக்குப் பெயர் போனது இந்தப் பகுதி. புலிகள் சரணாலய அறிவிப்பால் எங்கே தங்களுடைய பிழைப்புக்கு இடைஞ்சல் வந்துவிடுமோ என்றுதான் இந்தத் தொழிலை நம்பியிருக்கும் பெரும்பாலான மக்கள் இதை எதிர்த்தார். இப்போது உச்சநீதி மன்றம் புலிகள் சரணாலயப் பகுதிகள் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது. காட்டுயிர் ஆர்வலர் இந்த இடைக்கால தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு புலிகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முதுமலை ஊட்டியிலிருந்து 67 கிமீ தொலைவிலும் மைசூரிலிருந்து 90 கிமீ தொலைவிலும் இருக்கிறது. முதுமலை தேசியப் பூங்கா 321 சதுர கிமீ பரப்பில்  இருக்கிறது. புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு, செந்நாய், காட்டுப்பன்றி, தேவாங்கு,குரங்கு, மான்களில் புள்ளி மான், அன்டிலோப் உள்ளிட்ட விலங்கினங்களும் நன்னீர் முதலை, மலைப்பாம்பு, நாகம் போன்ற ஊர்வன வகைகளும் இந்நிலத்திற்குரிய பூர்வாங்க பறவையினமான இருவாச்சி உள்ளட்ட 200 வகையான பறவைகளும் அறிய தாவர வகைளும் சிறு உயிரினங்களும் நீர்நிலைகளும் அடங்கிய இயற்கையின் தொகுப்பு முதுமலை.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களின் எல்லைப்பகுதிகளும் ஒன்று சேரும் இடத்தில் இருக்கிறது. முதுமலை வனச்சரணாலயம். ஒருபுறம் கர்நாடகத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்காவும் மற்றொரு புறம் வயநாடு சரணாலயமும் இருக்கின்றன. பந்திப்பூர், வயநாடு வனப்பகுதிகள் புலிகள் சரணாலயங்களாக மாற்றப்பட்டு சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

நிர்வாக வசதிகளுக்காக இவ்வனப்பகுதிகள் பிரிக்கப்பட்டனவே அன்றி இவை மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளின் தொடர்ச்சியானவையே. தமிழக பகுதியான முதுமலை வனப்பகுதியில் புலிகள் வாழ்வதற்கான உயிர்ச்சூழலும் அவற்றின் எண்ணிக்கை ஆரோக்கியமான நிலையில் இருந்தபோதும் அது நீண்ட வருடங்களாக புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவில்லை. காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்களின் தொடர்ந்த முயற்சிகளால் முதுமலை வனப்பகுதி ஜனவரி 2009ல் புலிகள் சரணாலயமாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
பந்திப்பூர், முதுமலை ஒட்டிய பகுதிகளில் காட்டுயிர் ஆராய்ச்சியளராக செயல்பட்டவர் உல்லாஸ் கரந்த். அவர் தன்னுடைய அனுபவங்களை The Way of the Tiger  என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். காட்டுயிர், சூழலியல் மீது ஆர்வம் உள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம். சு. தியடோர் பாஸ்கரன் ‘கானுறை வேங்கை’ என்ற பெயரில் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார்.

கான்கிரீட் நகரத்திற்கு நடுவே பசும் காடு!

கண்ணை மூடித் திறப்பதற்குள் தேவதை ஒருத்தி உருவாக்கிய பசும் வெளியாக, கான்கிரீட் நகரத்திற்கு நடுவே பரந்து கிடக்கிறது அந்தக் காடு! நான்கு பக்கமும் வாகன இரைச்சல் காடுகளைக் கிழித்துக் கொண்டிருக்க…சற்றே சாலையிலிருந்து விலகி உள்ளே சென்றால் நிசப்தமான பசும்வெளியில், எங்கோ ஒரு மூலையில் இருந்து வரவேற்கின்றன முகம்தெரியா பறவைகளின் ‘கீச்’ குரல்கள்… நீங்கள் வியப்பதற்கு இன்னுமொரு விஷயம் இருக்கிறது. இந்தக் காடு இருப்பது வறட்சிக்குப் பெயர்போன சென்னையில்!

தாம்பரத்தை அடுத்த மேடவாக்கம், சந்தோஷபுரம் பகுதிகளுக்கு நடுவே இருக்கிறது நன்மங்கலம். அரசால் ‘காப்புக் காடுகள்’ என்று அறிவிக்கப்பட்ட பகுதி நன்மங்கலம். இந்த இடத்தில் இப்படியொரு காடு இருக்கிறது என்பதை இந்தப் பகுதி வாசிகளே அறிந்திருக்க மாட்டார்கள். இன்னும் தெரியாத பல விஷயங்களை தனக்குள்ளே அடக்கி வைத்திருக்கிறது அந்தக் காடு.
‘‘நன்மங்கலத்தோட ஸ்பெஷலே எந்த சூழ்நிலையிலும் மாறாத அதன் பசுமைதான். எப்போதும் ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கிறதால பட்டாம்பூச்சிகள் நிறைய வருது. பட்டாம்பூச்சி போன்ற சிறு பூச்சி இனங்களை சாப்பிடற பறவைகள். அதைச் சாப்பிடற பருந்து. இப்படி பேலன்ஸான சூழல் நிலவுற இடம் இது.
20 வருஷமா எங்களைப் போல சூழலியல் ஆர்வலர்கள் இந்த காட்டை கண்காணிச்சுட்டு வர்றோம். மற்ற இடங்கள்ல காடுகள் அழிக்கப்பட்டு, அங்க இருக்கிற உயிரினங்கள் காணமல் போயிட்டு இருக்கு. ஆனா இங்க நாளுக்கு நாள் இயற்கை வளம் அதிகமாயிட்டே வருது. முழுவதும் அழிஞ்சிடுச்சினு நினைச்ச இந்திய கொம்பு ஆந்தைகள் பத்துக்கும் மேல இங்க இருக்குங்கிறதை நாங்க கண்டுபிடிச்சிருக்கோம்.

இந்தியாவின் முன்னோடி பறவையியல் ஆராய்ச்சியாளரான சலீம் அலி ஒரே ஒரு கொம்பு ஆந்தையை மட்டுமே பார்த்ததா தன்னோட ஆராய்ச்சி குறிப்பில சொல்றார்.
சில வருஷங்களுக்கு முன்னாடி இங்க ஆறு குவாரிகள்ல கருங்கல் எடுத்துட்டு இருந்தாங்க. ஆழமா வெட்டப்பட்ட அந்த குவாரிகளோட இடுக்குகள்லதான் ஆந்தைகள் வசிக்குது. குவாரிகள்லேயும் புதர்கள்லேயும் வசிக்கிற எலிகள்தான் ஆந்தையோட முக்கியமான உணவு. சில சமயம் முயல், காட்டுப்பூனைகளையும் ஆந்தைகள் சாப்பிடறதுண்டு.

கொம்பு ஆந்தைகளைத் தவிர, அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய கானான் கோழிகளை சமீபத்திலே இங்கே பார்த்தோம். இவை தவிர, செம்பகப் பறவை, சுடலை குயில், கள்ளி புறா, மஞ்சள் குருகு, கோகிலம், வெண்மார்பு மீன்கொத்தி, சிரல் மீன்கொத்தி,, மாங்குயில், நாகணவாய் மைனா என்று கிட்டத்தட்ட 83 வகையான பறவைகள் இங்கே வாழுது.

குவாரிகள்ல தேங்கிருக்கிற மழைத்தண்ணீர் கோடை காலங்களிலும் வறண்டு போகாமல் இருக்கிறதால, அந்த இடத்திலும் நிறைய நீர் வாழ் உயிரினங்கள் பெருக ஆரம்பிச்சிருக்கு. ஆபூர்வமான உயிரினமாகிட்ட நன்னீர் ஆமைகள், இங்க நிறைய இருக்கு. இன்னும் மூலிகைச்செடிகள், பூச்சியினங்கள்…இப்படி பட்டியல் போட்டா நீண்டுக்கிட்டே போகிறமாதிரி ஏராளமான விஷயங்கள் 320 ஹெக்டேர் பரப்பளவு உள்ள இந்த மினி காட்டுல வாழ்ந்துட்டு இருக்கு’’ என்கிறார் சூழலியல் ஆர்வலர் திருநாரணன்.

இப்படியொரு உயிர்சூழல் பற்றித் தெரியாமல், அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் குளிப்பதற்காகவும் வாகனங்களை கழுவதற்காகவும் இங்கே வந்துகொண்டிருக்கிறார்கள். சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து இந்தக் காட்டைப் பாதுகாப்பதன் அவசியத்தை வனத்துறையினரிடம் எடுத்துச் சொன்னதன் விளைவாக மக்கள் வருவதற்கு தடை போட்டிருக்கிறார்கள்.
‘‘மனுஷன் புழங்க ஆரம்பிச்சா எப்படிப்பட்ட வளமான காடும் இருக்கிற இடம் தெரியாம போயிடும். மக்களுக்கு இந்த விஷயத்துல விழிப்புணர்வு தேவை. குறைந்தபட்சம் 200 வகையான பறவைகள், விலங்கினங்கள் இருந்தாதான் அந்த இடத்தை உயிரியல் பூங்காவா அறிவிப்பாங்க. வனத்துறையினரும் மக்களும் அக்கறையோட ஒத்துழைச்சா இருக்கிறதை தக்கவைக்கிறது மூலமா உயிரினங்களைத் தேடி வர வைக்கலாம்.
இங்க வளர்ச்சிப் பணிங்கிற பேர்ல என்ன செய்தாலும் அது இயற்கைக்கு அழிவு தருகிற வேலையாதான் இருக்கும். சென்னைங்கிறது செங்கல்பட்டு வரைக்கும் நீண்டுக்கிட்டு இருக்கு. இந்த நிலைமைல இன்னும் பத்து வருஷத்துல நன்மங்கலம் காடு இருக்குமான்னு கேட்டா இருக்கும்னுதான் நம்பிக்கையோடு சொல்வேன்’’ என்கிறார் திருநாரணன்.
2007 தினகரன் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை இது.