மருதாணிப் பூசிச் சிவந்த கைவிரல்கள் காட்டும் நாட்டிய முத்திரைப்போல அழகுடைய பூ செங்காந்தள்! தமிழ்நாட்டின் மலர். இன்றைய தலைமுறையில் பலர் இந்தப் பூவைப் பார்த்திருக்கமாட்டார்கள்; கேள்விப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கூட ஏரிக்கரைகளில் புதர்மண்டிய இடங்களில் செங்காந்தள் கொடி படர்ந்திருக்கும், அதில் ஆங்காங்கே சிவந்த பூக்கள் பூத்திருக்கும். அதை ரசிக்காமல் யாரும் அதைத் தாண்டிச் சென்றிருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை தாம்பரம், சோழிங்கநல்லூர் போன்ற சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் இந்தச் செடிகளைப் பார்த்திருக்கிறேன். இப்போது எங்கும் கான்கீரிட் மயம். வனங்களுக்குப் போகும்போதுதான் செங்காந்தளை ரசிக்க முடிகிறது.
செங்காந்தள் கிழங்கு மருத்துவ குணமுடையது என்பதால் சில விவசாயிகள், அதைப் பயிர் செய்கிறார்கள். வீட்டித் தோட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மலர்ச்செடிகள் வளர்ப்பதை பலர் பெருமையாக நினைக்கின்றனர். இப்படி இறக்குமதியான பல தோட்டச் செடிகள் களைகளாக வனத்துக்குள் புகுந்து இம்மண்ணுக்கே உரிய செடிவகைகளை, உயிர்ச்சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றன.
உயிர்ச்சூழல் ஒரு வலைப்பின்னல் போன்றது. நம் மண்ணுக்குரிய செடிகளை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று கேட்கலாம். இந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் வளரும் இந்தச் செடிகளை நம்பி பூச்சிகள், இந்தப் பூக்களில் தேனெடுக்க வரும் வண்டுகள், சிட்டுகள் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. செடிகள் இல்லாமல் போகும்போது அவற்றின் உணவுச் சங்கிலி தடை படுகிறது. நேரடியாக இது மனிதனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், சூழலியலில் இது எதிர்மறை மாற்றத்தை உண்டாக்கும். செங்காந்தள் போன்ற அழகு நிறைந்த, நம் சூழலுக்கு ஏற்ற நம் மண்ணின் செடிகளை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்க மக்கள் முன்வர வேண்டும்.
பச்சைப் புறாக்கள் என்று குறிப்பிடப்படும் மரகதப் புறாக்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊர்ப்புறங்களில் காணக் கிடைத்தன. இன்று அடர் வனங்களில் மட்டுமே இவை வாழ்கின்றன. கட்டுக்கடங்காமல் வேட்டையாடப்பட்டதுதான் இவை இல்லாமல் போகக் காரணம்.
நீலகிரி வரையாடு
இதுபோல நீலகிரி வரையாடும் அதிகளவில் வேட்டையாடப்பட்டதாலேயே இன்று அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இமயமலை மலைத்தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மட்டுமே வரையாடுகள் உள்ளன. செங்குத்தான மலைகளே இவற்றின் வசிப்பிடங்கள். நீலகிரி மலைகளில் வசிப்பதால் இந்த வரையாடு, நீலகிரி வரையாடு என சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை இந்திய காட்டுயிர் வாரம் கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் சூழலியல், காட்டுயிர் சார்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல கருத்தரங்கங்கள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாம் இந்த ஆண்டின் காட்டியிர் வார விழாவில் நம் தமிழ்நாட்டின் மலரான செங்காந்தள், மாநில பறவையான மரகதப் புறா, மாநில விலங்கான நீலகிரி வரையாடு போன்றவற்றை நினைவு கூர்வோம். நம் மண்ணுக்கே உரிய சிறப்பான இந்த காட்டுயிர்களை நினைவுக் கொண்டு இந்த ஆண்டின் காட்டுயிர் வாரத்தைக் கொண்டாடுவோம்!
காட்டுயிர் செயற்பாட்டாளர் திருநாரணனின் உதவியுடன் இணையதளம் ஒன்றுக்காக எழுதப்பட்ட பத்தி. மீள் பிரசுரம்.
முகப்புப் படம்: திருநாரணன்
திருநாரணன் தொடர்புக்கு:
KVRK THIRUNARANAN
FOUNDER
THE NATURE TRUST
G-3, KRISH VIEW APPTS.,
EAST TAMBARAM
CHENNAI-600059.
044 22393959
9444477358
9176893949