‘‘இலக்கியவாதிகளுக்கு சூழலியல் பற்றி எதுவும் தெரியாது!’’

ச.முகமதுஅலி

ச.முகமதுஅலி

உலகம் சூடாகிறது என்று சொன்னாலும் சொன்னார்கள் சுற்றுச்சூழல் பற்றி பேசுவது இன்று பலருக்கு ஃபேஷனாகிவிட்டது. இயற்கைப் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் சரியாக புரிந்து கொண்டு பேசுபவர்கள் இங்கே ரொம்பவும் குறைவு. இயற்கையியலாளர் ச. முகமது அலி அப்படிப்பட்டவர்களுள் ஒருவர். இவர் பேச ஆரம்பித்தால் நாம் எவ்வளவு தூரம் இயற்கையைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம் என்று பொட்டில் அடித்தமாதிரி தெரிகிறது. மேட்டுப்பாளையத்தில் உள்ள அவருடைய வீட்டில் அவரைச் சந்தித்தேன். கிட்டத்தட்ட 4 மணி நேரம் பேசினார். அதிலிருந்து சில துளிகளைத் தொகுத்திருக்கிறேன்.
‘‘வெறுமனே மரம் நடறது மட்டும்தான் இயற்கையைக் காப்பாத்தறதுக்கான ஒரே வழிங்கறமாதிரி இப்போ நிறையபேர் செயல்பட்டுட்டு இருக்காங்க. அதுல எத்தனைபேர் மரம் நட்ட பிறகு அது வளர்ந்திருக்கான்னு பார்ப்பாங்கன்னு தெரியாது. எனக்கு தெரிஞ்சி பல செடிகள் நட்ட உயரத்திலேயே காணாமல் போயிருக்கு.
இயற்கையை போற்றி அதோட பின்னிப் பிணைந்திருந்த பாரம்பரியம் நம்மோடது. ஆனா, தமிழ் பாரம்பரியங்கற பேர்ல எதை எதையோ பேசிக்கிட்டிருக்கோம். 400, 500 வருஷமா அந்த பாரம்பரியத்தை தொலைச்சிட்டு நிற்கிறோம். வெளிநாட்டுக்காரன் ‘குளோபல் வார்மிங்’ பத்தி சொன்னாதான் நமக்கு சுற்றுச்சூழல் காப்பாத்தறது பத்தி நினைப்பு வருது.
பெரிய பெரிய இலக்கியவாதிகளிலிருந்து உலகமெல்லாம் சுத்திவந்த அரசியல்வாதி வரைக்கும் ‘ஆண்சிங்கம்’ங்கிற அடைமொழி கொடுக்கிறோம். உண்மையில் பெண் சிங்கம்தான் வேட்டைக்குப் போகும். ஆண்சிங்கம் இயற்கையிலேயே சோம்பேறியான உயிரி. அது அதோட இயல்பு. அதேபோல ஆண் குயிலுக்குத்தான் இனிமையான குரல் உண்டு. ஆனா பெண் பாடகிகளுக்கு ‘இசை குயில்’னு அடைமொழி கொடுக்கிறோம்.
நம்முடைய எழுத்தாள மெதாவிகளுக்கு உயிரினங்கள் பற்றி  எந்த அறிவும் கிடையாது. பெயர் தெரியாது. வகையும் தெரியாது. பொதுமக்கள் மத்தியில் வனஉயிரினங்களைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்புறதில இவங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. ‘பயங்கரமான காடு’, ‘சூழ்ச்சி செய்யும் நரி’னு எவ்வளவோ தவறான உதாரணங்களை தந்துகிட்டு இருக்காங்க.

குயில் குடும்பத்துல மட்டும் 127 வகைகள் இருக்கு. அன்னப்பறவை இந்தியாவிலேயே இல்லை. வானம்பாடின்னு ஒரு பறவையே கிடையாது. 250 வகை இந்திய பாம்புகள்ல 3 வகை பாம்புகளுக்கு மட்டுமே விஷம் இருக்கு. இப்படி அடிப்படையான விஷயங்கள் தெரியாம எதிர்கால சந்ததிகளுக்கு இந்த எழுத்தாளர்கள் தவறான தகவல்களைத்தான் தந்துகிட்டு இருக்காங்க. இந்த நிலையில எப்படி இயற்கை சூழல் காப்பாத்தப்படும்?
சங்க இலக்கியங்கள்ல பறவைகள், விலங்குகள் பற்றி நுணுக்கமான விஷயத்தைகூட பதிவு பண்ணியிருக்காங்க. அத்தனைக்கும் அழகான தமிழ்பெயர் வச்சிருக்காங்க. எல்லாத்தையும் மறந்துட்டு இன்னைக்கு ஆங்கிலப் பெயர்களை அப்படியே தமிழ்ல எழுதற வேலையைச் செய்துட்டு இருக்கோம். குரங்குக்கும் மந்திக்கும் நமக்கு வித்தியாசம் தெரியறதில்லை. யானையைத் தொட்டு பார்த்த குரங்கு கதையாத்தான் நாம இயற்கையைப் புரிஞ்சிவச்சிருக்கோம்.’’அனலாக வார்த்தைகள் வந்து விழுந்தாலும், இவருடைய அக்கறை இயற்கையை காப்பதற்காக மட்டுமே. 20 ஆண்டுகளாக இவர் ‘காட்டுயிர்’ என்ற பத்திரிகையை நடத்தி வருகிறார். பொள்ளாச்சியில் இயற்கை வரலாற்று அறக்கட்டளையை நிறுவி, சூழலில் காப்பதன் அவசியத்தை மக்களுக்கு சொல்லிவருகிறார்.

Untitled-7

‘‘நமக்கு பயன்படக்கூடிய உயிரினங்கள் மட்டும் இந்த உலகத்துல இருந்தா போதாதாங்கிற கேள்வி பலருக்கு வர்றதுண்டு. உண்மையில் இயற்கைளோட ஒவ்வொண்ணும் பிணைந்துதான் இருக்கு. உதாரணத்துக்கு நீலகிரி மலையில வசிக்கிற இருவாசிப் பறவை அழிஞ்சதுன்னா அதோட தொடர்புடைய பத்து வகையான மரங்களும் அழிஞ்சிடும். காரணம், இருவாசிப் பறவை சாப்பிட்டு வெளியேற்றுகிற விதைகளுக்குத்தான் முளைக்கும் திறன் இருக்கு.அதனாலதான் மரங்கள் செழித்து வளருது. இப்படி நம்மைச் சுற்றியிருக்கி பல்லுயிர்களும் செழிப்பா இருந்தாதான் நாமும் செழிப்பா இருக்கமுடியும்’’ என்கிற ச.முகமதுஅலி, ‘யானைகள் அழியும் பேருயிர்கள்’ ‘நெருப்புக் குழியில் குருவி’ ‘பறவையியலாளர் சாலிம் அலி’ போன்ற தமிழில் வந்திருக்கும் முக்கியமான சூழலியல் நூல்களின் ஆரியரும் கூட.