வெள்ளம் விட்டுச் சென்ற துயரம் எல்லோருக்குமானது

வெள்ளம் சூழ்ந்த வசிப்பிடம், கையில் பொருளில்லை, சரியான உணவில்லை, மின்சாரம் இல்லை, தொலைத் தொடர்புகள் இல்லை…மழை விட்டுச் சென்ற அசாதாரண சூழ்நிலை, வாழ்வின் துயரங்களோடு கூட்டுச் சேர்ந்துவிட்டது.  ஆனால் நம்மின் நிலைமை மேல் என்பதே நேரில் கண்ட வெள்ளத் துயரங்கள் உணர்த்தின.

எங்களுக்கு உணவளித்த உள்ளங்கள்

எங்களுக்கு உணவளித்த உள்ளங்கள்

அலுவலகம் செல்லலாம் என்று கடந்த வியாழன் அன்று மகனுடன் தி.நகர் புறப்பட்டேன். பேருந்து நடத்துனர் டிக்கெட் தரும்போதே வள்ளுவர் கோட்டம் வரைதான் பேருந்து செல்லும், அதற்கு மேல் செல்லாது எனச் சொல்லி விட்டார். வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது; சரி அங்கிருந்து ஆட்டோவில் அலுவலகம் சென்று விடலாம் எனக் கிளம்பினோம். மழை தூறல் ஆரம்பித்தது.

This slideshow requires JavaScript.

அண்ணாநகர் சாந்தி காலனியை அடுத்த பிரிவரி சாலையை ஒட்டி ஓடும் கூவம் ஆறு பாலத்தைத் தொட்டு ஓடியது. பிரிவரி சாலை முழுவதும் மூழ்கியிருந்தது.  ஆற்றின் இருபுறமும் இருந்த குடிசைகளின் கூரைகள் மட்டுமே தெரிந்தன.  இருப்பிடங்களை விட்டு வெளிறிய மக்கள் சாலைகளில் அகதிகளாக குவிந்திருந்தனர்.  ஒரு சிறுவன் தெருவில் தேங்கிய வெள்ளத்தில் நீந்தி வந்துக்கொண்டிருந்தான்.

அண்ணா வளைவு சாலையிலும், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் வீடுகளை விட்டு வெளியேறிய அமைந்தகரை மக்கள் நிரம்பியிருந்தனர்.  சூளைமேட்டை தொட்டுச் செல்லும் கூவம் ஆறு ஆக்ரோஷமாகப் பாய்ந்துக் கொண்டிருந்தது பயத்தைக் கொடுத்தது.

சூளைமேட்டில் கரை தொட்ட கூவம் ஆறு

சூளைமேட்டில் கரை தொட்ட கூவம் ஆறு

சிறு வயதில் குட்டை நீரைக் கண்டால்கூட அலறுவேன். கிருஷ்கிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் மழைக்காலத்தில் ஏரிகள் பெருக்கெடுத்து ஓடும். எங்கும் வெள்ளம் புரண்டுகொண்டிருக்கும்.  ஏரிக்கரைகளில் அமைக்கப்பட்ட சாலைகளை பேருந்து கடக்கும்போது நான் கண்களை மூடிக் கொள்வேன். இப்போது தேவலாம்.

கரையைத் தொட்டு ஓடிய கூவம் ஆறு என்னுடைய சிறு வயது பயத்தைக் கிளறிவிட்டது.  சூளைமேட்டின் வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள், ரயில்வே பாலத்தை ஒட்டியிருந்த அரசு நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். நல்ல உள்ளத்துடன் அவர்களுக்கு சிலர் உணவளித்துக் கொண்டிருந்தார்கள்.

பேருந்து வள்ளூவர் கோட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பயணிகள் ஒவ்வொருவராய் இறங்கிக் கொண்டிருந்தார். நடத்துனர் தி. நகர் முழுதும் வெள்ளம் என்றார். என் மகனை இருகப் பற்றிக் கொண்டு வீடு திரும்ப முடிவு செய்தேன்.

வெள்ள நிவாரணப் பணிகளில் களமிறங்கிய தன்னார்வலர்கள்!

வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அரசை மட்டும் நம்பியில்லாமல், தங்களால் இயன்றதை கரிசனத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலர் செய்துகொண்டிருக்கிறார்கள். தனிநபர்களாகவும் குழுக்களாகவும் இவர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

சென்னையின் வெள்ளப் பகுதியில் வாழும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்குவது மூலம் பசியாற்றிக் கொண்டிருக்கிறது ஃபேஸ் புக்கில் இயங்கும் ஃபுட் பேங்க் குழு. சென்னை தி. நகர், கோவிளம்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் திங்கள்கிழமை இவர்கள் 547 உணவுப் பொட்டலங்களை விநியோகித்திருக்கிறார்கள்.

 

மிதக்கும் சென்னை: தவறு செய்பவர்கள் நாமும்தான்!

12243392_962822207113264_8850497505961453809_n

தேர்தல் நெருங்கும் காலத்தில் நாட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அதற்கான முழுப்பழியையும் ஆளும் கட்சி மீது போடுவது எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் வழக்கமாகிப் போய்விட்டது. ஒருவித ஆட்டுமந்தை மனோபாவம் நமக்கு. அதுவும் நமக்கான ஊடகமாக சமூக வலைத்தளங்கள் ஆகிவிட்டநிலை, ஒரு ஆடு ஆளும் கட்சியை கலாய்த்து எழுதினால் போதும், மற்ற ஆடுகளும் அதேபோல ‘ம்மே’ என கத்திக்கொண்டு ஓட ஆரம்விடும். அதுபோலத்தான் இங்கேயும் நடக்கிறது.

வேளச்சேரியில் மிதக்கிறது இந்தக் கார்...
வேளச்சேரியில் மிதக்கிறது இந்தக் கார்…

தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட அதிமுக காரணமாக திமுக காரணமா என்பது இருக்கட்டும். நான் காரணமா இல்லையா என்பதை அவரவர் ஒருமுறை கேட்டுக் கொள்வோம்.

எத்தனைப் பேர் குப்பையை அதற்கென்று ஒதுக்கப்பட்ட குப்பைத் தொட்டியில் போடுகிறீர்கள்? குப்பைத் தொட்டியே உள்ளூர் நிர்வாகம் வைக்கவில்லை என்றால் என்றாவது குப்பைத் தொட்டி வையுங்கள் என்று கேட்டிருக்கிறீர்களா? இன்று மழைநீர் தேங்க முதன்மையான காரணம் என்ன தெரியுமா? மழை நீர் வடியும் இடங்களை அடைத்துக் கொண்டிருக்கும் குப்பைகள்; குறிப்பாக பிளாஸ்டிக் காகிதங்களே காரணம்.

காஞ்சிபுரத்தில் இந்தக் காட்சி...
காஞ்சிபுரத்தில் இந்தக் காட்சி…

நம்மைப் போல ஒரு மனிதன்தான் இதை அள்ளப் போகிறான் என்பது பற்றி எந்த கூச்சநாச்சமும் இல்லாமல் போகிறபோக்கில் குப்பை வீசுகிற நமக்கு இயற்கை தரும் தண்டனையாகத்தான், இந்த வெள்ள நீர் தேக்கத்தைப் பார்க்க வேண்டும். ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய புறநகர்ப்பகுதிகளைத் தவிர்த்து, அனைத்து இடங்களிலும் நீர் வடிவதற்கான கால்வாய் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் அந்தக் கால்வாய்களை குப்பையைப் போட்டு நிரப்பிவிட்டு, மழை நீர் போக வழியில்லை வெள்ளக்காடாகிவிட்டது என்று இப்போது பதறுகிறோம்.

‘எனக்கு என்ன’ என்கிற மேட்டிமை சுபாவம்தான் நகர வாழ்க்கையில் பிரதான குணமாகிவிட்டது. நாப்கின்களை குப்பைத் தொட்டியில் போட கஷ்டப்பட்டு டாய்லெட்டில் பிளஷ் செய்கிற அபார்ட்மெண்ட் வாசிகளின் வாசல் சில மாதங்களில் நாறும். காரணம் கழிவுநீர் குழாயை அடைத்துக் கொண்டிருக்கும் நாப்கின்கள். அதை யாரோ ஒரு மனிதர் கையைவிட்டு எடுத்து அடைப்பை நீக்கி சரிசெய்வார். குப்பையில் வீசப்பட்ட நாப்கினைப் பார்த்தபடியே அடுத்த முறையும் நாப்கினை டாய்லெட்டுக்குள் போடுவார். அதுதான் அடைப்பு எடுத்தாகிவிட்டதே?

இதை மேட்டிமை சுபாவம் என்று மட்டும் சொல்லக்கூடாது, மனிதநேயமற்ற செயல் என்றே சொல்ல வேண்டும். நம்மைப் போன்றவர்களால்தான் ஒழிக்கப்பட வேண்டிய, ஒழிக்கப்பட்டதாகச் சொல்லும் கழிவுகளை அகற்றும் பணிகளுக்கு சகமனிதர்களை பயன்படுத்தும் வழக்கம் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அவ்வவ்போது அது மனித உயிர்களையும் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது.

நகரெங்கும் நாம் போட்டு வைத்த குப்பைகள், வெள்ளத்தை வடியவிடாமல் தடுக்கொண்டிருக்கின்றன. முன்னர் ஆட்சியில் இருந்த கருணாநிதியோ, இப்போது ஆட்சியில் இருக்கிற ஜெயலலிதாவோ, மேயர் துரைசாமி அல்லது வார்டு உறுப்பினரோ வந்து வெள்ளத்தை வடியவைக்கப்போவதில்லை. நம்முடைய குப்பைகளை, நம்முடைய அழுக்குகளை சுத்தம் செய்யப்போவது ஒரு அடிமட்டத் தொழிலாளிதான் செய்யப்போகிறார்.

ஆனாலும் நாம் வெட்கமே இல்லாமல் அடுத்தவரை குற்றம் சொல்ல பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கும் வெள்ளத்துக் காரணம் ஜெயலலிதாவா? கருணாநிதியா? என்று.