’வெங்கட் சாமிநாதன் ஏன் இந்துத்துவ ஆதரவாளராக மாறினார்?’

venkat saminathan

தமிழின் முதன்மையான இலக்கிய விமர்சகர்களில் ஒருவரான வெங்கட் சாமிநாதன் செவ்வாய்கிழமை மரணமடைந்தார். வெங்கட் சாமிநாதனின் மறைவுக்கு பல தமிழ் எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இமையம்

1984ல் இருந்து வெங்கட் சாமிநாதனின் எழுத்துக்களை நான் அறிவேன். ‘கோவேறு கழுதைகள்’,’ஆறுமுகம்’, ‘செடல்’, ‘சாவு சோறு’, என்று என்னுடைய எழுத்துக்களை தொடர்ந்து படித்தவர். அதுகுறித்து எழுதியவர். நான் அவரை சென்னை க்ரியா அலுவலகத்திலும் டெல்லியிலும் சந்தித்திருக்கிறேன். இப்போதும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்பவர். அவ்வப்போது தொலைபேசியிலும் பேசி இருக்கிறேன். உண்மையைச் சொன்னால் தொடர்ந்து அவர் என்னுடைய எழுத்தை ஆதிரித்து வந்தவர். வெங்கட் சாமிநாதன் ஓயாமல் தமிழ் இலக்கிய உலகின் சர்ச்சைக்குரியவராக இருந்தார். அதே நேரத்தில் அவர் படிப்பதையும் எழுதுவதையும் நிறுத்தியதே இல்லை. வெங்கட் சாமிநாதனுடைய மரணம் மிகுந்த மன உளச்சலைத் தருகிறது. ஒருவகையில் என்னுடைய மரணத்தையும் அது நினைவூட்டுகிறது. வெங்கட் சாமிநாதன் எழுத்து வாழ்க்கையில் பெருவாழ்வு வாழ்ந்தவர் என்று நினைக்கிறேன். அவருக்கு என்னுடைய அன்பு. இப்போது அவருடைய எழுத்துக்களை படித்துகொண்டிருக்கிறேன். ஒரு வாசகனாக நான் அவருக்கு வேறு என்ன செய்ய முடியும்?

வெளி ரங்கராஜன்

வெங்கட் சாமிநாதன் காலமான செய்தி கிடைத்தது.அவருடன் தீவிரமான கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் ஒரு கட்டத்தில் தமிழின் போலியான populist mindset க்கு எதிரான மாற்றுக் கலைக்குரல்களை அவர் தீவிரமாக அடையாளப்படுத்தியது முக்கியமானது. அதேபோல் நுண்கலைகள், இசை, நடனம், நாடகம், கூத்து இவை பற்றி இவர் உருவாக்கிய சிந்தனைத்தளமும் தீவிரத்தன்மை கொண்டது. ஆனால் இலக்கியக் கோட்பாடுகளும், அணுகுமுறைகளும் மாற்றமடைந்து கொண்டிருந்த நிலையிலும் ஒரு இறுக்கத்துடன் அவைகளை கவனிக்க மனமில்லாதவராக இருந்தது ஒரு இடைவெளியை உருவாக்கியது. ஆனால் கடைசி காலத்தில் மனைவியின் மரணத்துக்குப் பிறகு உருவான தனிமையில் தன்னுடைய நம்பிக்கைகள் சார்ந்த உலகத்துக்கே உயிர் கொடுத்தபடி இருந்தார். இருந்தாலும் அவர் மறைவு ஒரு தீவிர அதிர்வை உருவாக்குகிறது.

ராஜன்குறை

நமது கருத்தியல் எதிரிகள் ஒருவகையில் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நண்பர்களைப் போன்றே அவர்களும் நமது சுய உருவாக்கத்தில், உருமாற்றத்தில் பங்கெடுக்கிறார்கள். அந்த வகையில் வெங்கட் சாமிநாதன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவது இன்றியமையாதது. அவரைப் போன்ற தீவிர நவீனத்துவ ஆதரவாளர்கள், இந்திய பாசிச வகைமாதிரியான இந்துத்துவ ஆதரவாளர்களாக மாற நேர்வதை புரிந்துகொள்வது நம் காலத்தினை எதிர்கொள்ள மிக அவசியமானது. கலை இலக்கியத்தில் கறாரான அழகியல் அளவுகோல்களை கொண்டு படைப்புகளை தரம் பிரித்து வெகுஜன ரசனையை கடுமையாக சாடி வந்தவருக்கு, சோ. ராமசாமியை அறிவுஜீவி என எப்படி கொண்டாட முடிந்தது? தன்னுடைய தொகுக்கப்பட்ட எழுத்துக்கள் நூல் வெளியீட்டு விழாவில் “உடையும் இந்தியா” பூச்சாண்டி அரசியல் புகழ் ஆர்.எஸ்.எஸ்.பிரசாரகர் அரவிந்தன் நீலகண்டன் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்த முடிந்தது? வெ.சா கொண்டாடிய நவீனத்துவ கலை. இலக்கிய வெளிப்பாடுகளை தீவிரமாக நேசிக்கும், கொண்டாடும் என் போன்றோருக்கு இந்த கேள்விகள் மிக முக்கியமானவை. யார் மறந்தாலும் வெங்கட் சாமிநாதனை நான் மறக்க முடியாது என்பதுதான் உண்மை.

அ. மார்க்ஸ்

மூத்த எழுத்தாளரும் விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் அவர்கள் மறைந்த செய்தி சற்றுமுன் அறிந்தேன். வருத்தங்களும் அஞ்சலிகளும்.

அவருடைய கருத்துக்கள் பலவற்றிலும் மாற்றுக் கருத்துக்கள் உண்டெனினும் சிற்றிதழ்ப் பாரம்பரியத்தில் நின்றவர் என்கிற வகையில் அவர் மீது எனக்கு மரியாதைகள் உண்டு. மார்க்சீய அணுகல்முறையைக் கிட்டத்தட்ட அவதூறு எனும் அளவிற்கு எதிர்த்தவர். அவருடைய இது தொடர்பான கருத்துக்களை மிகவும் ஆழமாகவும் வன்மையாகவும் பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மான் மறுத்துள்ளார்.

என்னையும் ஒரு சந்தர்ப்பத்தில் சற்றும் பொருத்தமின்றி போகிற போக்கில் கடுமையான வார்த்தகளைப் பயன்படுத்தித் தாக்கியுள்ளார். எல்லாவற்றிற்கும் அப்பால் இன்று அவரது மரணச் செய்தி துயரத்தை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்

ஞாநி சங்கரன்

விமர்சகர் வெங்கட் சாமிநாதன் இன்று (அக்டோபர் 21 புதன்) அதிகாலை பெங்களூரு மருத்துவமனையில் காலமானார் என்ற தகவல் வந்துள்ளது. என் அஞ்சலிகள். அவருடைய பல கருத்துகளுடனும் தனி நபர் தாக்குதல்களுடன எனக்கு உடன்பாடு இல்லையெனினும் அழுத்தமாக விடாப்பிடியாக கருத்தை முன்வைக்கும் உறுதியில் அவர் ஒரு முக்கியமான முன்னோடியாவார்.

அ. ராமசாமி

வெங்கட்சாமிநாதனின் மரணம் எழுப்பும் நினைவலைகள் தமிழின் பரபரப்பான விமரிசகர் ஒருவரின் மரணமாகவே அலைந்து கொண்டிருக்கின்றன. பாலையும் வாழையும், ஓர் எதிர்ப்புக்குரல், கலை – இலக்கியம் – வெளிப்பாடு எனப் பல நூல்களும் வாசிப்புச் சுவை தரக்கூடியன. அவரோடு நேரடித் தொடர்பும் தாக்குதலைச் சந்தித்த அனுபவங்களும் கூட உண்டு.

கடந்த 20 ஆண்டுகளில் முன்பு எழுதியனவற்றையே பூடகமின்றி வெளிப்படையாக எழுதிக் கொண்டிருந்தார். கருத்தியலிலும் சமூக நடப்பிலும் மாற்றங்களை முன்மொழியாத இந்தியக் கலைமரபுகளுக்காக வாதாடிய அவரது விமரிசனங்களை நவீனத்துவ விமரிசனமாக எப்போதும் நான் கருதியதில்லை. இந்தியா எல்லா ஞானமும் கொண்ட பாரத தேசம் என்ற இன்றைய அரசியல் கருத்தோட்டங்களுக்கான கலைப்பார்வைகளைத் தமிழ்நாட்டவர்க்குத் தந்தவர் என்ற வகையில் கவனிக்கப்பட்டார்; மரணத்திற்குப் பின்னும் கூடக் கவனிக்கப்படுவார். கவனிக்கத்தக்க மனிதர்களின் மரணம் வருத்தத்துக்குரியனவே.

உங்களின் வாதங்களின் வழியாக உங்களை நினைத்துக் கொள்கிறேன் வெ.சா. அவர்களே!

ஜெயமோகன்

நேற்று மதியம் சென்னையில் வெங்கட் சாமிநாதனைப்பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரது மூர்க்கமான பேரன்பு பற்றி. மூன்றுமுறை வெ.சாவிடம் என் நண்பர்களுக்கு வேலை கிடைக்க, பொருளியல் இக்கட்டை சமாளிக்க உதவும்படி கோரியிருக்கிறேன். ஒருவர் அவரை மோசமாக விமர்சித்து எழுதியவர். பிற இருவரையும் அவருக்கு எவரென்றே தெரியாது.

ஆனால், வெ.சா இறங்கிப் பணியாற்றி அவர்களுக்கு உதவினார். அவர்கள் வாழ்க்கையின் திருப்புமுனைகளுக்குக் காரணமாக அமைந்தார். ஏனென்றால் வெ.சாவை குருபீடத்தில் வைத்துள்ள பலர் உண்டு. அவருடன் மிக அணுக்கமான உறவுள்ளவர்கள் நிறையபேர். உதவிபெற்றவர்கள் ஒருசில மாதங்களில் அதை முற்றாக மறந்தனர், அவரை நிராகரிக்கவும் முயன்றனர். அது மானுட இயல்பு.

அதையும் வெ.சா அறிந்திருந்தார். வெடிச்சிரிப்புடன் ‘மனுஷன் வேற மாதிரி இருந்தா தெய்வங்கள்ளாம் கோவிச்சுகும்ல?” என்றார். அதிகாலையில் குறுஞ்செய்தி வெ.சா இறப்பை அறிவித்தபோது நான் அவரது அந்த சிரிப்பை நினைத்துக்கொண்டேன். சிறிய கண்கள் குறும்பாக இடுங்க சன்னமாக ஓசையிட்டபடி உடல் குலுங்கச் சிரிக்கும் அந்த முகம்.

முகப்புப் படம்: சேதுபதி அருணாசலம்