அண்மைக்காலமாக தமிழகத்தில் தலைவர்கள் சிலைகள் சேதப்படுத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக அம்பேத்கர், பெரியார் போன்ற சாதி ஒழிப்பு பேசியவர்களை, பார்ப்பனியத்தை விமர்சித்தவர்களை தாக்குவது அதிகரித்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கரின் சிலை பார்ப்பனிய சாதிவெறி ஏற்றப்பட்ட கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அதை முன்வைத்து சமூக ஊடகங்களில் பெரும்பாலான தமிழக மக்கள் சாதிவெறியர்களின் கொடுஞ்செயலைக் கண்டித்தனர். மறுநாள் அதிகாலையில் அதே இடத்தில் அண்ணலின் சிலை மீண்டும் நிறுவப்பட்டது. வடமாவட்டம் ஒன்றில் பெரியார் சிலை உடைக்கப்பட்டபோதும், உடனடியாக மீண்டும் பெரியார் அதே இடத்தில் அமர்த்தப்பட்டார். பெரியோர்களின் சிலை உடைக்கப்படுவதும் நிறுவப்படுவது தொடர்ந்து நிகழும் சம்பவங்களாகிவிட்டன. சில இடங்களில் தலைவர்கள் கம்பி வளைக்குள் நிறுத்தப்படுவதும் நடந்துகொண்டிருக்கிறது.
சிலை உடைப்பு சம்பவங்களுக்கும் அதற்குப் பிறகான முற்போக்கு சமூகத்தின் கொந்தளிப்புகளுக்கும் சாதி வெறி கூச்சல்களுக்கும் சாதி ஒழிப்பு யோசனைகளுக்கும் அப்பால் நாம் சிந்திக்க வேண்டியவை ஏராளமாக உள்ளன. அடையாள அரசியல் பேசும் பலர் இதை பேசுவதில்லை. சாதிக்கு ஒரு தலைவர் தேவைப்படுகிறார். அரசியல்வாதிகளுக்கு அது போதும். ஆனால், சமூக யதார்த்தம் வேறுமாதிரியாக உள்ளது.
பட்டியின மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வர்க்கப் பின்னணி என்ன? சமூகப் பிண்ணனி என்ன? ‘இந்து மதம்’ என இவர்களையெல்லாம் ஒன்றிணைக்கிற மதம் இவர்களை எத்தகைய சமூக சூழலில் வைத்துள்ளது? அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ன? அரசு நிர்வாகத்தில் முடிவெடுக்கக்கூடிய இடத்தில் உள்ள சாதி எது? இவர்களுடைய கலாச்சாரம் என்ன? உணவுப் பழக்கம் என்ன? இத்தனை கேள்விகளுக்கு விடை தேடினால், சமூக யதார்த்தம் நம் கண்முன் வந்து நிற்கும். அது தலித்-பகுஜன் சமூகங்களின் ஒற்றுமையை பறைசாற்றி நிற்கும்.
பார்ப்பனியத்தின் சாதி படிநிலையை ஆங்கிலேயர்கள் ‘இந்து’ மதமாக்கியதாக பிரபல கன்னட தலித்திய எழுத்தாளர் தேவனூர மகாதேவா எழுதியிருப்பார். நூற்றுக்கணக்கான இந்திய ஒடுக்கப்பட்ட சாதிகளை, நான்கு வர்ண அமைப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களை ‘தலித்’ என்ற வார்த்தையால் அழைத்தவர் மகாத்மா ஜோதிபா பூலே. அதை பிரபலமாக்கியவர் அண்ணல் அம்பேத்கர். பார்ப்பனிய மதம் தீண்டத்தகாதவர்களாகவும் சூத்திரர்களாகவும் ஒதுக்கியவர்கள்தான் இன்று எதிரெதிராக நின்று சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சிலையின் தலையை துண்டாக்கும் சூத்திரர்களுக்கும் சேர்த்துதான் அம்பேத்கர் பேசினார். ஜோதிபா பூலேயும் பெரியாரும் இயக்கங்களை நடத்தினார்கள். இத்தனைப் போராட்டங்களுக்குப் பிறகும், முற்போக்கு மரபைக் கொண்டிருக்கும் தமிழகத்திலும் ஏன் பிற்படுத்தப்படுத்த சமூகம், தலித்துகளுக்கு எதிராக நிற்கிறது?
தலித் பகுஜன் ஒற்றுமையை வலியுறுத்திவரும் எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா இதற்கு பதில் சொல்கிறார்…“ஒவ்வொரு தனிநபர் மற்றும் சமூகத்துக்கு மதம் என்பது முக்கியமானது. நான் ஏன் இந்துவல்ல என சொல்லியிருக்கிறேன். அதுபோல, சூத்திரர்களும் அதாவது பிற்படுத்தப்பட்ட மக்களும் படிக்கவோ, பரப்பவோ ஒரு அமைப்பாக்கப்பட்ட மத வாழ்க்கையை கொண்டிராதவர்கள். இந்துயிசத்தில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. உற்பத்தி அல்லாத நல்ல வாழ்க்கையை வாழும் பனியாக்களும் சத்திரியர்களும் பார்ப்பனியத்துடன் சேர்ந்துகொள்வார்கள். ஆனால் தலித்துகளுக்கும் சூத்திரர்களுக்கும் ஆன்மிக எழுத்துக்களை படிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை. தலித்துகள் இதைப் புரிந்துகொண்டு பவுத்தத்திற்கும் கிறித்துவத்திற்கும் மாறினார்கள். தங்களுடைய வழிபடும் உரிமையை அவர்கள் பெற்றார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அவர்களுடைய வாழ்க்கை சூழல் மாறுகிறது. ஆனால் பார்ப்பனியத்தை தலித்துகள் கேள்வி எழுப்பியதைப் போல சூத்திரர்கள் எதிர்க்கவில்லை. இதுதான் பிற்படுத்தப்பட்ட மக்களை பல நூற்றாண்டுகளுக்கு முடக்கி வைத்துவிட்டது” என்கிறார்.
காஞ்சா அய்லய்யா, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக ஆய்வாளர். இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் அவருடைய எழுத்துக்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. காஞ்சா அய்லய்யா சொன்னதன் சாரத்தை, வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் எழுதிய சிலர் முன்வைத்தனர். சிலையை உடைத்தவர்கள் தங்களுடைய சமூக படிநிலையை உயர்த்திக்கொண்டார்களா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
பார்ப்பனிய இந்து மதத்தின் ஒற்றை கொள்கையை நாடு முழுவதும் பரப்ப முயற்சி நடந்துகொண்டிருக்கும் வேளையில், தன்னுடைய நிலையை மறந்து, சாதி பெருமையை தூக்கி சுமக்க தமிழகத்தில் பலர் தயாராக உள்ளனர். கிட்டத்தட்ட பார்ப்பனியத்துக்கு அடியாள் வேலை பார்ப்பது போன்றது இது.
மிகச் சமீபத்தில் தருமபுரி அருகே ஒரு கிராமத்தில் இருந்த முனியப்பன் சாமி சிலைக்கு கயவர்கள் சிலர் வன்முறையை தூண்டும் நோக்கத்தில் செருப்பு மாலை அணிவித்திருக்கின்றனர். ஊரில் நடந்த விசாரணையின்போது, மதத்தின் பெயரால இயங்கும் ஒரு அமைப்பைச் சேர்ந்த சிலர் முனியப்பன் சாமி சிலை அருகே ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டுள்ளனர். முனியப்பனுக்கும் ஜெய் ஸ்ரீராமுக்கும் என்ன தொடர்பு? பெரும்பான்மையினரின் சாமி எது? எது இறக்குமதி செய்யப்பட்ட சாமி? எந்த மதத்துக்காக சொந்த சாமிக்கே அவர்கள் செருப்பு மாலை அணிவித்திருக்கிறார்கள்? இந்தக் கேள்விகளை சாதி பெருமிதம் பேசி, தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொள்கிறவர்கள் அலச வேண்டும்.
மேலாதிக்கம் மிக்க ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரின் மதத்தை, கலாச்சாரத்தை தனது மதமாக, கலாச்சாரமாக சொல்லிக்கொள்வதில் எந்தப் பெருமையும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, நம்முடைய பண்பாட்டை, கலாச்சாரத்தை, நமது ஆன்மீகத்தைத்தான் நாம் இழந்து நிற்கிறோம். அந்த வகையில் அய்லய்யா குறிப்பிடுவதைப் போல தலித்-பகுஜன் கலாச்சாரமும் வாழ்நிலையும் ஒன்றே. அவர் உனது தலைவர், இவர் எனது தலைவர் என பிரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் எதிரிகளாக நிற்பது, நம்மை ஆதிக்கம் செய்வோருக்குத்தான் சாதகமாக அமைகிறது. எதற்காக இதைச் செய்கிறோம் என தெரியாமல்கூட வெற்று ஆதாயங்களுக்காக நாம் எதிரெதிராக நிற்கத்தான் வேண்டுமா?