”ஹெல்மெட் அணிந்துகொண்டா டி வி நிகழ்ச்சிகளில் விவாதிக்க முடியும்?”

tv debates

பாகிஸ்தானுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவ சேனா கட்சியினர் வன்முறை நடவடிக்கைகள் குறித்து புதிய தலைமுறைத் தொலைக்காட்சி செவ்வாய் அன்று நேர்படப்பேசு நிகழ்ச்சியில் விவாதம் நடத்தியது. அதில் பத்திரிகையாளர் ஞாநி, காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, பாஜக சார்பில் சுப்ரமணியம் பாலாஜி, சிவ சேனா கட்சி சார்பில் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். விவாதத்தின் ஆரம்பம் தொட்டே ராதாகிருஷ்ணன் மை பூசியதை நியாயப்படுத்தியே பேசி வந்தார். விவாதத்தின் ஒரு இடத்தில் பத்திரிகையாளர் ஞாநி, நான் பாகிஸ்தானும் இந்தியாவும் கலாச்சார ரீதியாக, அரசியல் ரீதியாக சுமூக உறவுடன் செல்ல வேண்டும் என்று விரும்புகிறவன். அதனால் என்மீது இவர்கள் மை பூசுவார்களோ என்ற பயத்துடன் என்னால் விவாதத்தில் பங்கேற்க முடியாது என்றார். அதற்கு ராதாகிருஷ்ணன், இந்துத்துவத்துக்கு எதிராக பேசினால் மை பூசுவோம் என்று பகிரங்கமாகச் சொன்னார். விடியோவில் பாருங்கள்..

இந்துத்துவ அமைப்புகளின் இத்தகைய பேச்சு குறித்தும் அதற்கு களம் அமைத்துக்கொடுப்பது சரியா என்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் சத்யநாரயணனுக்கு கடிதம் எழுதியிருக்கிறா ஞாநி. அந்தக் கடிதம்:

“தரம், சமூகப் பொறுப்பு, ஜனநாயகப் பண்பு, பொது நாகரிகம் ஆகியவற்றில் நம்பிக்கையுடன் இயங்கும் பல ஊடகவியலாளர்கள் பணியாற்றி வருவதால் உங்கள் தலைமையின் கீழ் இருக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சி பொதுமக்களிடையே ஒரு மதிப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த இடத்தை உங்கள் சேனல் அடைவதற்கு உங்கள் ஊழியர்களின் சிறப்பான உழைப்புடன் சேர்ந்து உதவியிருக்கும் மற்றோர் அம்சம், என்னைப் போன்ற பல பொதுநிலை கருத்தாளர்கள் தொடர்ந்து சேனலின் நிகழ்ச்சிகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்று வருவதுமாகும்.

நேற்று இரவு (அக்டோபர் 20) நேர்படப்பேசு விவாதப் பதிவை நீங்கள் வரவழைத்துப் பார்க்கும்படி கோருகிறேன். அதில் என்னுடன் பங்கேற்ற சிவசேனை பிரதிநிதி போன்றவர்கள் இனி விவாதங்களுக்கு அழைக்கப்படவேண்டுமா, அப்படி அவர்கள் அழைக்கப்படுவதானால், என்னைப் போன்றவர்கள் அழைக்கப்படவேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்கவேண்டிய வரலாற்றுத்தருணத்தில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். தங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்தை சொல்லும் ஒருவரின் முகத்தில் மை ஊற்றும் வன்முறையில் ஈடுபடுவோம், அது வன்முறையே அல்ல என்றும் நீங்கள் அப்படிப் பேசினால் உங்கள் மீதும் ஊற்றுவோம் என்றும் நிகழ்ச்சியிலேயே என்னிடம் அவர் பேசுகிறார். அதை நானோ நிகழ்ச்சித் தொகுப்பாளர் தியாகச் செம்மலோ கண்டித்ததை அவர் பொருட்படுத்தவே இல்லை என்பதைப் பதிவில் அவர் உடல்மொழியில் நீங்கள் பார்க்கலாம்.

இப்படிப்பட்ட நபர்கள் சேனல் விவாதங்களில் பங்கேற்பது இது முதல்முறையல்ல. பல்வேறு இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் விதவிதமான அமைப்புகளின் பெயர்களில் அவற்றின் பிரதிநிதிகளாக உங்கள் நிலைய நிகழ்ச்சிகளில் இவ்வாறு வந்து பேசுகிறார்கள். சிலருக்கு சமூக ஆர்வலர் என்று பெயர் சூட்டப்படுகிறது. சாராம்சத்தில் அவர்களிடையே வேறுபாடே இல்லை. இதில் பல அமைப்புகள் மக்கள் கவனத்தைப் பெறுவது என்பதே உங்கள் சேனலின் வழியே அவர்களுக்குக் கிடைக்கும் விளம்பரத்தினால்தான். இதே சலுகையை இதர மத அடிப்படைவாதிகளுக்கோ அரசியல் தீவிரவாதிகளுக்கோ உங்கள் சேனல் அளிப்பதில்லை அல்லவா. அப்படி அவர்களுக்கும் அளிக்கவேண்டும் என்று அவர்களும் கோரலாமல்லவா. அப்படித் தர ஆரம்பித்தால் நிலைமை என்ன ஆகும் என்று யோசியுங்கள்.

மாறுபட்ட கருத்துகள் எல்லாம் விவாதிக்கப்படும் களமாக உங்கள் சேனல் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதே என் போன்றோரின் விருப்பம். ஆனால் அப்படிப்பட்ட விவாதம், சமூக ஒழுங்கு, கண்ணியம், பேச்சு நாகரிகம் முதலியன உள்ளவர்கள் இடையில் நடந்தால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கமுடியும். எந்த நிமிடமும் விவாத அரங்கின் நடுவிலேயே பக்கத்திலிருப்பவர் என் மீது மை ஊற்றுவாரோ, தாக்குவாரோ என்ற சந்தேகத்துக்குரிய நபர்களுடன் உட்கார்ந்து விவாதிக்கமுடியாது. நானும் தற்காப்புக்காக ஹெல்மெட் அணிந்துகொண்டோ சோப்பு, டவல் எல்லாம் எடுத்துக் கொண்டோ அல்லது எதிர் தாக்குதலுக்காக நானும் கையில் மை புட்டியுடனோ வரவேண்டும் என்ற நிலையில் ஒரு சமூகக் களம், மீடியா களம் இயங்கும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.

இனி உங்கள் சேனலின் பொது விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க எப்படிப்பட்டவர்கள் அழைக்கப்படவேண்டும், அவர்களுக்கான நடத்தை விதிகள் என்ன என்பது பற்றி துல்லியமாக கறாராக நீங்கள் முடிவெடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து விரைவில் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். புதிய தலைமுறை தொடர்ந்து ஓர் ஆரோக்கியமான செய்தி விமர்சன சேனலாக இயங்கவேண்டும் என்பதே அதன் முதல் நாள் முதல் தொடர்ந்து அத்துடன் இணைந்து பணியாற்றுவரும் என்போன்றோரின் விருப்பம். இந்த நோக்கத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் தடங்கல்களை நீங்கள் விரைந்து களைவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்” என எழுதியிருக்கிறார்.

இந்நிலையில் விவாத நிகழ்ச்சிகளில் தீவிர கருத்துக்களைச் சொல்லும் இந்துத்துவ அமைப்பு சார்ந்த நபர்கள் பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பலர் எழுதிவருகிறார்.

ஃபிரண்ட்லைன் இதழின் ஆசிரியர் ஆர். விஜயசங்கர், “ஞானி மீது மை பூசுவோம் என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேரடியாக மிரட்டும் அளவுக்கு தமிழ்நாட்டில் தைரியமடைந்திருக்கிறது சிவசேனை என்னும் ரவுடி கும்பல். இது வன்மையான கண்டனத்திற்குரிய செயல். இனி விவாதங்களுக்கு இரும்புக்கவசம் அணிந்துதான் செல்லவேண்டும்” என்று தன்னுடைய முகப்பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

பேராசிரியர் அ. ராமசாமி, “உலகமயமாக்கலின் நேர்மறை அம்சங்களுள் ஒன்று கட்டற்ற செய்திப் பரிமாற்றம். நிறுவனங்களால் மட்டுமே தகவல்கள் செய்திகளாக்கப்படும் என்பதற்கு மாறாகத் தனிநபர்களும் செய்தியுருவாக்கத்தில் இறங்க முடியும் என்பதைச் சமூக ஊடகங்களின் வரவு நமக்குச் சொல்லியிருக்கிறது. அதே நேரத்தில் நிறுவனங்களின் உள்நோக்கங்களும் மறைக்கப்பட்ட தீர்மானங்களும் அங்கே பணியாற்றுபவர்களால் கூடப் புரிந்துகொள்ள முடியாதவை என்பதைக் கண்கூடாகக் காட்டிக் கொண்டிருக்கிறது புதியதலைமுறைச் செய்தி அலைவரிசை.

இனிப்பங்கேற்கவே மாட்டோம் எனக் கோபித்துக்கொண்டு போனவர்களோடு சமரசம் செய்துகொண்டு முதலில் தந்ததைவிடக் கூடுதல் வாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம், சட்டம், பொதுமரபு, விவாதமுறை, தனிநபர் சுதந்திரம் என எதிலும் நம்பிக்கையில்லாதவர்கள் தொடர்ந்து விவாதங்களில் பங்கேற்றுச் சூழலைக் கெடுக்கப் பார்க்கிறார்கள். அதைத் தாராளமாக அனுமதிக்கிறது அந்த அலைவரிசை.

இந்த அலைவரிசையில் பங்கேற்க மாட்டோம் எனப் போனவர்களோடு ஜனநாயகத்தின் பேரால் சமரசம் செய்துகொண்ட புதியதலைமுறை, இதுபோன்ற நபர்களை – அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைக்கமாட்டோம் என்ற முடிவை எடுக்கும்படி அதில் பங்கேற்கும் ஜனநாயக நம்பிக்கையாளர்கள் நெருக்கடி கொடுக்கவேண்டும். அதுவரை நாங்கள் பங்கேற்க மாட்டோம் என ஒதுங்கியிருக்கவேண்டும். மூத்த பத்திரிகையாளர் ஞாநி சந்தித்த அக்காட்சி இதை எழுதத்தூண்டியது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நோக்கம் புதிய சிந்தனைகளைப் பரப்புவதாக இல்லை. பழையனவற்றைத் திருப்பிக் கொண்டுவருவனவாக இருக்கின்றன” என்று கடுமையாக தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

 

 

காவிமயமாகும் ஊடகங்கள்

ஊடகங்களில் தொடர்ந்து துவேஷ கருத்துக்களைப் பரப்பிவரும் பாஜக ஆதரவாளர்கள் குறித்தும் அவர்களை என்ன நோக்கத்துக்காக ஊடகங்கள் பயன்படுத்துகின்றன என்பது குறித்தும் பேசுகிறது இந்தப் பதிவு. இப்போது.காமில் வெளியானது.