பாடகர் கோவனின் கைதும் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளும்

ஓய்ந்திருந்த மதுவிலக்குப் போராட்டத்துக்கு உயிர்கொடுத்திருக்கிறது தமிழக அரசு. மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்டிருந்த பாடகர் கோவன் கைதுக்குக் காரணமாக இருந்த “மூடு டாஸ்மாக்கை மூடு, ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்களும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன் யூட்யூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டவை.

வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் இசைப் பாடகர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு காவல்துறை அவருக்கு உடைக்கூட மாற்றிக்கொள்ள நேரம் தராமல் கைது செய்திருக்கிறது. அவர் மீது 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 ஏ சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக காவல் துறை சொல்கிறது.

மக்கள் கலை இலக்கியக் கழகமும் அது சார்ந்த அமைப்புகளும் இந்தப் பாடல்களை தெருமுனைக் கூட்டங்களில் பாடி வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் எடுக்கப்படாத கைது நடவடிக்கை இப்போது ஏன் எடுக்கப்பட்டுள்ளது என்கிற கேள்வி எழுகிறது. அதோடு மக்கள் திரளில் பாடும் ஒரு பாடகரை தலைமறைவுக் குற்றவாளியைக் கைது செய்வதுபோல அதிகாலை கைதை அரங்கேற்றுவதன் அவசியம் ஏன் ஏற்பட்டது என்ற கேள்வியும் வருகிறது.

மக்கள் கலை இலக்கியக் கழகமும் அது சார்ந்த அமைப்புகளும் கட்சி அரசியலை, இந்திய ஜனநாயக அமைப்பின் மீது கடுமையான விமர்சன நிலைப்பாட்டை உடையவை. பிரச்சாரங்கள், மக்களை சென்றடையும் கலை வடிவங்கள் மூலம் தங்களுடைய நிலைப்பாட்டை மக்களுக்கு அவை கொண்டு செல்கின்றன.

இந்நிலையில் இந்த அமைப்புகள் கடந்த காலத்தில் கடுமையாக விமர்சித்த அரசியல் கட்சிகள் அனைத்தும் இப்போது கோவனின் கைது நடவடிக்கையைக் கண்டித்திருக்கின்றன.

கோவனின் கைதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் திங்கள்கிழமை சென்னை தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

மதுவினால் ஏற்படும் தீமைகளையும், சமூக அவலங்களையும், அதிமுக ஆட்சியின் சட்ட விரோதச் செயல்களையும் கண்டித்து ஊருக்கு ஊர் பாடல்கள் மூலம் பிரச்சாரம் செய்த பாடகர் கோவனின் கைது, ஜனநாயக விரோதச் செயல் என்று கண்டித்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. கோவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோவன் பாடிய “மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மக்களிடத்தில் வரவேற்பு பெற்று விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியதை பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டையும், பிரிவினைவாத குற்றச்சாட்டையும் கூறி கைது செய்திருப்பதாக விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலக்கூட்டு இயக்கமும் கோவனின் கைதைக் கண்டித்திருக்கிறது. வைகோ ஒரு படி மேலே போய், கோவனின் பாடலைப் பாடிக் காண்பித்து முடிந்தால் என்னைப் பிடித்துப் பாருங்கள் என அறைகூவல் விடுத்திருக்கிறார்.

கோவன் கைது விவகாரத்தில், முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். டாஸ்மாக்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்த கோவன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், தமிழக காவல்துறையின் இந்த செயல் நியாயமற்றது என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல பாமக நிறுவனர் ராமதாஸ், சீமான் ஆகியோரும் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எதிர்எதிர் நிலைப்பாடுகளுடன் விமர்சிக்கப்பட்ட பாஜககூட கோவனின் கைதை கண்டித்திருக்கிறது என்பதற்கான காரணம் மதுவிலக்குக்கு எதிராக கோவன் பாடல்களைப் பாடினார் என்பதே! அடித்தட்டு மக்களுக்கு டாஸ்மாக் சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதைக் கண்டறிந்து, தொடர் பிரச்சாரமாக டாஸ்மாக்கை மூட வலியுறுத்திவரும் மகஇக போன்ற மக்கள் இயக்கங்களின் உழைப்பை, வெட்கமே இல்லாமல் தேர்தலில் அறுவடை செய்யும் யுத்திதான் இந்த ‘ஆதரவு’நிலைப்பாடு.

இவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டாலும் இதே காவல்துறை இதுபோன்ற அடக்குமுறை கைதுகளைச் செய்யும் என்பதை நாம் நினைவில் வைக்கத்தான் வேண்டும். அதிமுக அரசின் கைது நடவடிக்கை எந்தளவுக்கு கண்டிக்கத்தக்கதோ, அதே அளவுக்கு கோவனின் கைதில் அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகளின் செயல்களும் கண்டிக்கத்தக்கவை.

சாதிக் கட்சித் தலைவர் யுவராஜ், காவல்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவருக்கும் சவால்விட்டபடி, நூறு நாட்களுக்கும் மேல் இளைய வீரப்பனாக வலம் வந்தார் அவரை ஸ்காட்லாண்ட் யார்டுக்கு நிகரான காவல்துறையால் கைது செய்ய முடியவில்லை. அவராக வந்து சரணடைந்தார். அவர் பேசிய பேச்சும், அவர் சரணடைவதற்கும் முன் நடத்தப்பட்ட நாடகமும் சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்தும் பிரிவின் கீழ் வருமா வராதா?

தண்ணீர் தராத கர்நாடகமும் கேட்காத தமிழகமும்

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய 27.557 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடகத்தை வலியுறுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த மழைப்பொழிவைக் காரணம் காட்டி தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்திருக்கிறது கர்நாடகம்.

குறித்த காலத்தில் கர்நாடகத்திடம் தமிழகம் தண்ணீர் கேட்பதில்லை என்கிற குற்றச்சாட்டி எந்தளவுக்கு உண்மை?

தப்பிய வடகிழக்கு பருவமழை – இடம் மாறிய பூநாரைகள்!

படம்

நளினமும் அழகும் மிக்க பறவையினங்களில் ஒன்று பூநாரை! சென்னைக்கு அடுத்துள்ள பழவேற்காடு பகுதி பூநாரைகளுக்கு ரொம்பவும் பிடித்த இடம்.  இது ஒரு சூழலியல் சுற்றுலா தளமும்கூட. கடலை ஒட்டியிருக்கும் கழிமுகப் பகுதிகளில் கிடைக்கும் பாசியும் இறாலும் அதிகப்படியாக கிடைப்பதால் இந்தப் பகுதியில் சீசனின்போது ஆயிரக்கணக்கான பூநாரைகளின் அணிவகுப்பைப் பார்க்கலாம்.
பொதுவாக பூநாரைகளின் சீசன் ஏப்ரல் மாதத்துக்கு மேல்தான் ஆரம்பிக்கும். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே பூநாரைகள் வரத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார் சூழுலியல் செயல்பாட்டாளர் திருநாரணன். தி நேச்சர் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பை நிறுவி பல்வேறு சூழலியல் சார்ந்த பணிகளைச் செய்துவரும் இவர், அதன் ஒரு பகுதியாக பழவேற்காடு போன்ற பகுதிகளில் களஆய்வு மேற்கொள்கிறார்.
‘‘வருடா வருடம் பழவேற்காடு பகுதிகளில் எங்கள் அமைப்பு சார்பாக களஆய்வு செய்து வருகிறோம். இந்த ஆண்டு நாங்கள் ஆய்வில் கவனித்த விஷயம்…ஜனவரியிலேயே பூநாரைகளை அதிக அளவு பார்க்க முடிந்ததுதான். பழவேற்காடு ஆந்திர_தமிழக எல்லையில் அமைந்திருக்கும் பகுதி. வழக்கமாக நவம்பரில் வரத்தொடங்கும் பூநாரைகள் ஆந்திர மாநில எல்லைகளான சூலூர்பேட்டை, தடா பகுதிகளில் இருக்கும். அங்கு தண்ணீர் வற்றத் தொடங்கியது. தமிழகத்தின் அண்ணாமலைச் சேரி, பொன்னேரி பகுதிகளுக்கு வரத்தொடங்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் ஆந்திர எல்லையோர நீர்நிலைகள் வற்றிப்போய், இப்போதே தமிழக பகுதிகளுக்குள் வர ஆரம்பித்துவிட்டன.

படம்

இப்படி மழை தவறி பெய்வது அல்லது சரியான மழை பொழியாதது தொடர்ந்தால் வரும் காலங்களில் பூநாரைகள் இந்தப் பகுதிகளுக்கு வருவதை நிறுத்திவிடும் வாய்ப்பும் இருக்கிறது’’ என்நு எச்சரிக்கை மணி அடிக்கிறார் திருநாரணன்.

படங்கள் : தி நேச்சர் டிரஸ்ட்

 

தொடர்புடைய பதிவுகள்

வெளிர் சிவப்பு ஓவியம்!

சிலந்திகளின் படையெடுப்பு பருநிலை

மாற்றத்தின் அறிகுறி?!